தியாகராஜர் வாழ்ந்த இல்லம்

திருவையாறு திருமஞ்சன வீதியில் வலது புற வரிசையில் ஐந்தாவதாக உள்ள இந்த வீடு 2011 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. 
திருவையாறில் தற்போது புதுப்பிக்கப்பட்டுக் காணப்படும் தியாகராஜர் வாழ்ந்த இல்லம்.
திருவையாறில் தற்போது புதுப்பிக்கப்பட்டுக் காணப்படும் தியாகராஜர் வாழ்ந்த இல்லம்.

தியாகராஜர் திருவாரூரில் உள்ள புதுத்தெருவில் 1767 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் பிறந்தார். ராமபிரம்மம் - தாய் சீதம்மா தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தியாகராஜர்.

தியாகராஜர் சிறுவயதில் இருந்தபோதே ராமபிரம்மம் குடும்பத்துடன் திருவாரூரிலிருந்து திருவையாறுக்குக் குடிபெயர்ந்தார். இது 1774 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தந்தை ராமபிரம்மத்துக்கு தஞ்சாவூர் மராட்டிய மன்னர் துளஜாஜி பசுபதி கோயிலில் கொஞ்சம் நிலமும், திருவையாறு திருமஞ்சன வீதியில் ஒரு வீடும் அன்பளிப்பாக அளித்தார். ராமபிரம்மம் தன் மகன்களுக்கு விட்டுச்சென்ற சொத்து இந்த நிலமும், வீடும்தான்.

ராமபிரம்மம் காலமானதும் வீட்டில் பாகப்பிரிவினை செய்யப்பட்டது. இதில் வீட்டின் வடக்குப் பகுதி தியாகராஜருக்கும், தெற்குப் பகுதி அவருடைய அண்ணன் ஜல்பேசன் என்கிற பஞ்சாபகேசனுக்கும் ஒதுக்கப்பட்டது.

இதே வீட்டில் தியாகராஜர் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தார். இவரது மனைவி 1845 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, தியாகராஜர் 1847 ஆம் ஆண்டு ஜன. 6-ம் தேதி மறைந்தார்.

இதனிடையே, தியாகராஜரின் ஒரே மகளான சீதாலட்சுமியை அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த குப்புசுவாமி அய்யருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு தியாகராஜன் என்ற மகன் பிறந்தார். பெரிய பாடகராகத் திகழ்ந்த இவர், இளம் வயதிலேயே சந்ததியின்றி மரணமடைந்தார். விதவையான இவரது மனைவி குருவம்மா தனது பிறந்த வீடான தஞ்சாவூருக்குச் சென்றார்.

இவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலமானார். தியாகராஜரின் நேரடி சந்ததி இவ்வாறு முற்றுப் பெற்றது.

ஜல்பேசனின் கொள்ளுப் பேரனான ராமுடு பாகவதர் வீட்டின் தென் பகுதியில் வசித்து வந்தார். இவருடைய பெண்ணும், பேரனும் பல ஆண்டுகள் இதே வீட்டிலேயே வாழ்ந்தனர். பிற்காலத்தில் இந்த வீடு கிரயம் செய்யப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தியாகப் பிரும்ம ஆராதனை மகோத்சவ சபையினர் இந்த வீட்டை மீட்டனர். இதன்பின்னர், இந்த வீடு இசை ஆர்வலர்களின் யாத்திரைக்குரிய தலமாக மாறிவிட்டது.

திருவையாறு திருமஞ்சன வீதியில் வலது புற வரிசையில் ஐந்தாவதாக உள்ள இந்த வீடு 2011 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட கோயில் காணப்படும் இந்த வீட்டைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com