பெருந்துயரின் அரை நூற்றாண்டு: மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதத்தைப் பலிகொண்ட விமான விபத்து!

1973-ல் மோகன் குமாரமங்கலம், கே. பாலதண்டாயுதம் ஆகியோரைப் பலிகொண்ட தில்லி விமான விபத்து பற்றி...
பெருந்துயரின் அரை நூற்றாண்டு: மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதத்தைப் பலிகொண்ட விமான விபத்து!

மிகவும் துயரகரமான அந்த விபத்து நேரிட்டு இன்றுடன் அரை நூற்றாண்டு ஆகிறது!

1973, மே  மாதம் 31ஆம் நாள்.

சென்னையிலிருந்து புறப்பட்டு புது தில்லியில் தரையிறங்குவதற்கு சற்றுமுன் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் மத்திய உருக்குத் துறை அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் கே. பாலதண்டாயுதம் உள்பட 48 பேர் உயிரிழந்தனர்.

மோகன் குமாரமங்கலம், கே. பாலதண்டாயுதம்
மோகன் குமாரமங்கலம், கே. பாலதண்டாயுதம்

சென்னையிலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்ட அந்த இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 ரக விமானத்தில் 58 பயணிகளும் 7 பணியாளர்களும் இருந்தனர்.

நாள்தோறும் திருவனந்தபுரம் சென்று திரும்பிய பின் சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டுச் செல்லும் விமானம் இது. இரவு 9.52 மணிக்கு தில்லி பாலம் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம். ஆனால், கடைசி நேரத்தில் விமான நிலையத்துடன் தொடர்பு அற்றுப் போய்விட்டது. சுமார் அரை மணி நேரம் கழித்துதான் விமானம் விழுந்து நொறுங்கிய தகவல் கிடைத்தது.

தெற்கு தில்லியில் வசந்த விஹார் காலனிக்கு தெற்கேயுள்ள ஒரு சிறிய குன்றின் மீது மோதி நொறுங்கி விமானம் விழுந்தது. விமானம் எரிந்துகொண்டே விழுவதை வசந்த விஹார் காலனி மக்கள் பார்த்திருக்கின்றனர். விபத்து நேரிட்ட இடமோ விமான நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக்கும் குறைவே.

இடி மின்னலுடன் கூடிய புயல் காற்று வரக்கூடும் என்று விபத்துக்குள்ளான விமானத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டதாக விமான நிலையத்தினர் தெரிவித்தனர்.

விமானம் முற்றிலும் எரிந்துவிட்டது. விமான என்ஜின்கள் நிலத்துக்குள் புதைந்துவிட்டன. விபத்தில் சிக்கியபோது, மிகத் தாழ்வாக 25 அடி உயரத்தில் விமானம் பறந்திருக்கிறது என்று போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

'பாலம் விமான நிலையத்தை விமானம் நெருங்கிக் கொண்டிருக்கும்போது கண்ணை மறைக்கும் தூசுப் புயல் வீசியது. இடத்தை அறியும் கருவி வேலை செய்யவில்லை. திடீரென விமானம் கீழே தாழத் தொடங்கியது. பிறகு என்ன நடந்ததெனத் தெரியவில்லை' எனப் பின்னர் விமான கேப்டன் ஜி.பி.பி. நாயர் தெரிவித்தார்.

தரையில் விமானம் விழுவதற்கு முன் பெரும் ஓசையுடன் இரண்டாகப் பிளவுண்டதாக இதே விமானத்தில் பயணம் செய்தவரான செய்தியாளர் வி.கே. மாதவன் குட்டி தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அப்போது விபத்து நடந்த இடத்துக்குச் சென்ற மத்திய ரயில்வே அமைச்சர் எல்.என். மிஸ்ரா பெரும் பதற்றத்துடன் விசாரித்தது, மீட்கப்பட்டவர்களில் மோகன் குமாரமங்கலம் இருக்கிறாரா என்றுதான். ஆனால், நல்ல பதில் கிடைக்கவில்லை.

இந்த விபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.யான கே. பாலதண்டாயுதம், பஞ்சாப் முன்னாள் முதல்வர் குர்நாம் சிங், ஏஐடியுசி பொதுச்செயலர் சதீஷ் லும்பா  ஆகியோரும் இறந்தனர்.

இதையும் படிக்க | பாலன் என்றோர் மாமனிதன்!

மத்திய பாசனத் துறை துணை அமைச்சர் பாலகோவிந்த வர்மா, சிவகாசி தொகுதி எம்.பி.யான வி. ஜெயலட்சுமி, பானுசிங் பரூவா (எம்.பி.) ஆகியோர் தப்பிப் பிழைத்தவர்களில் சிலர்.

இந்த விமான விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. 48 பேரில் உடனடியாக 15 பேரை மட்டும்தான் அடையாளம் காண முடிந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர்கூட காப்பீடு செய்துகொண்டிருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் விமான பயண விபத்து காப்பீடு விருப்பத்தின் பேரில் இருந்திருக்கிறது.

விபத்தில் உயிரிழந்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தின் உடலுக்கு அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரி, பிரதமர் இந்திரா காந்தி உள்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் (மோகன் குமாரமங்கலத்தின் மகன்தான் மத்திய அமைச்சராக இருந்து மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம்).

மோகன் குமாரமங்கலம் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் இந்திரா காந்தி. அருகே மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் 
மோகன் குமாரமங்கலம் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் இந்திரா காந்தி. அருகே மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் 

கொடைக்கானலில் 10 நாள்கள் தங்கிக் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்தபோது, நிலக்கரி சுரங்கங்களைப் பற்றியொரு நூலை மோகன் குமாரமங்கலம் எழுதியிருக்கிறார். அவர் தன்னுடன் எடுத்துச்சென்ற அந்தக் கையெழுத்துப் பிரதியும் எரிந்தழிந்துவிட்டது. அவருடைய மையூற்றும் பேனா, காது கேட்கும் கருவி ஆகியவற்றின் உதவியுடன்தான் அவர் உடலை அடையாளம் காண முடிந்திருக்கிறது. விபத்தில் மோகன் குமாரமங்கலத்தின் உதவியாளர் என்.  ராமமூர்த்தியும் இறந்தார்.

விபத்தில் இறந்த கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை, ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறையில் கழித்தவர். பிரதமர் நேருவின் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிலிருந்த இவர், காமராஜர் முதல்வரானதும் விடுதலை செய்யப்பட்டார்.

அப்போதுதான் இலங்கை சென்றுவிட்டு சில நாள்கள் முன்னரே சென்னை திரும்பிய பாலதண்டாயுதத்துக்குத் தில்லி செல்ல கடைசி வரை டிக்கெட் உறுதியாகாமல் இருந்திருக்கிறது. இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவில் ஒருவராக ஹங்கேரி செல்ல வேண்டுமென்பதால் உடனே தில்லி புறப்பட விரும்பிய பாலதண்டாயுதம், நண்பர் ராதா என்பவருடன் விமான நிலையம் சென்றிருக்கிறார். இன்று கிடைக்காவிட்டால் நாளை என்று கூறிக்கொண்டு கவுன்டருக்கு சென்றபோது, டிக்கெட் கிடைத்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. அந்தப் பயணமே இறுதியானதாகிவிட்டது.

பயணத் தேதியை மாற்றியதால் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார் சுங்கத் துறை கலெக்டரான கௌசல்யா நாராயணன். நாட்டில் முதன்முதலாக இந்தப் பதவியை வகித்த பெண் என்ற பெருமையைப் பெற்றவர். நல்ல எழுத்தாளருமான இவர், அப்போது தினமணி கதிரில் 'வாழ்வைத் தேடி' என்றொரு தொடர் கதையை எழுதிக்கொண்டிருந்தார். இவருடைய மரணத்துடன் முற்றுப்பெறாமலேயே முடிந்துவிட்டது கதை. மே 27 ஆம் தேதியே இவர் தில்லி சென்றிருக்க வேண்டும். தன் உயர் அலுவலர் என். தாஸ் என்பவருக்காக பயண நாளை மாற்றினார். விபத்தில் எம்.ஜி. தாஸும் இறந்துவிட்டார்.

இவ்விபத்தில் பெண்ணாடத்திலுள்ள அருணா சர்க்கரை ஆலை மேலாளர் ஏ.கே. தேவராசன் என்பவரும் சேலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை மேலாளர் டபிள்யூ.எஸ். ராஜகோபாலன் என்பவரும் உயிரிழந்தனர். ராஜகோபாலனுக்கு இதுதான் முதல் விமான பயணம். விமானத்தில் வேண்டாம், ரயிலில் செல்லுங்கள் என்று அவருடைய மனைவி கேட்டுக்கொண்டாராம். ஆனால், மறுத்துப் புறப்பட்ட ராஜகோபாலன் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற டாக்டர் சி.டபிள்யூ. சாக்கோ, டாக்டர் ஜி. நடராஜன், சென்னை வழக்கறிஞர் அபிராமபுரம் எஸ்.சி. பட்டாச்சாரி, ராமநாதபுரம் மாவட்ட ஆயுத படைக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி. ஜெகதீசன், விமானப் பணிப்பெண் மோரிஸ், தேவகி கோபிதாஸ், கே.எஸ். ராமசாமி, எஸ்.எஸ். ராமசாமி, கணேஷ், வி. பாலகிருஷ்ணன், கே. செல்வராஜ், எஸ். சம்பத்குமார் ஆகியோரும் இறந்தனர்.

நல்லவேளையாக இவ்விபத்தில் சிக்காமல் கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான கே.பி. உன்னிகிருஷ்ணன் தப்பினார். திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு டிக்கெட் எடுத்திருந்த உன்னிகிருஷ்ணன், ஒரு நாள் ஓய்வுக்குப் பின் தில்லி செல்லலாம் என்று சென்னையில் இறங்கிவிட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவரையும் விமானத்தில் உடன்வருமாறும் பேசிக்கொண்டே செல்லலாம் என்றும் மோகன் குமாரமங்கலம் அழைத்திருக்கிறார். மறுத்ததால் தப்பித்தார் உன்னிகிருஷ்ணன்.

ஒவ்வொரு விபத்தின்போதும் இனி இப்படியொரு விபத்து நேரிடக் கூடாது என்றுதான் எல்லாரும் விருப்பப்படுகிறோம். ஆனால், இந்த 50 ஆண்டுகளில்தான் எத்தனை எத்தனை விமான விபத்துகள், எவ்வளவு உயிரிழப்புகள்!

[வரலாற்றின் பக்கங்களிலிருந்து]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com