கற்றாழை வளர்க்கிறார்கள் கலிபோர்னியாவில்! செழிக்கிறது செல்வம்!!

கற்றாழை வளர்ப்பின் மூலம் பணம் சம்பாதிப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் கலிபோர்னியா மக்கள்.  
கற்றாழை வளர்க்கிறார்கள் கலிபோர்னியாவில்! செழிக்கிறது செல்வம்!!

கற்றாழை என்பது ஆங்காங்கே தரிசு நிலங்களில் முளைத்திருக்கும் தாவரம் அல்லது அழகுக்காக வீட்டில் வளர்க்கப்படும் தாவரம் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கக் கூடிய மக்கள் கற்றாழை வளர்ப்பின் மூலம் லட்சக்கணக்கான டாலர்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, செங்கற்றாழை, சிறு கற்றாழை என பல வகைகள் உள்ளன. அதில் ஒன்றான நீலக்கற்றாழை வளர்ப்பின் மூலம் பணம் ஈட்டுவதுடன் மட்டுமல்லாமல், அவர்களுடைய சுற்றுச்சூழலையும் பாதுகாக்கின்றனர். வறட்சியால் கடும் நஷ்டத்தை எதிர்கொண்ட கலிபோர்னியா விவசாயிகள் தேர்ந்தெடுத்த மாற்றுவழியால் அவர்களுக்கு பெரும் லாபம் கிடைப்பதுடன், அவர்களுடைய நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுகிறது.

தெற்கு கலிபோர்னியாவில் வசிக்கும் லியோ ஒர்டேகா என்பவர் தனது வீட்டைச் சுற்றியுள்ள வறண்ட மலைப்பகுதிகளில் நீலக்கற்றாழைச் செடிகளை வளர்க்கத் தொடங்கினார். கடும் வறட்சியை எதிர்கொள்ளவும், நிலத்தடி நீர் வீணாவதைத் தடுப்பதற்கும் அவரும், அப்பகுதி மக்களும் நம்பிய நீலக்கற்றாழைச் செடிகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் வளர்ந்து அவர்கள் எதிர்பார்த்தது போலவே பலனளித்து வருகின்றன.

மெக்சிகோவில் டகீலா மற்றும் மெஸ்கால் போன்ற மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுகிற இந்த நீலக் கற்றாழைச் செடிகளை வளர்க்கக் கூடிய பெரும் எண்ணிக்கையிலான கலிபோர்னியா மக்களில் 49 வயதான எந்திரவியல் பொறியாளர் லியோவும் ஒருவர்.

கரோனா தொற்றுக்குப் பிறகு அதிக தண்ணீர் தேவைப்படாத பயிர்களைக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தாலும், உயர்தர மதுபானங்களுக்கான பெருகிவரும் தேவையாலும் நீலக்கற்றாழைச் செடிகளைப் பயிரிடும் போக்கு இங்கு அதிகரித்தது. இந்தப் போக்கு லியோ போன்ற தொழில்முனைவோரையும் பல விவசாயிகளையும் ஈர்த்தது.

அவர்கள் ஏற்கெனவே குறைந்த நீர்த்தேவையுள்ள பயிர்கள் மற்றும் குறைவான அளவில் நீர் செலவழியும் பாசன முறைக்கு மாற முயன்று வந்தனர். மேலும், அதிதீவிரமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடியதாகவும், நிலத்தடி நீரை சேமிக்கக் கூடியதுமான பயிர்களை எதிர்பார்த்திருந்தனர்.

நீலக்கற்றாழையானது மற்ற தாவரங்களைப் போலல்லாமல், கிட்டத்தட்ட தண்ணீரின்றியே நன்றாக செழித்து வளரக்கூடியது.

"நாங்கள் அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சியபோது ​​​​அவை அதிகம் வளரவில்லை, ஆனால் தண்ணீர் விடாத செடிகள் நன்றாக வளர்ந்தன" என்று லியோ கூறினார்.

அமெரிக்காவில் அவர் ஆரம்ப நிலையில் பயிரிட்ட நீலக்கற்றாழைச் செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் ஒரு பாட்டில் 160 டாலர்களுக்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப்போது அதற்கான தொழிற்சாலைகளில் முதலீடு செய்து வருகிறார்.

“கரோனா தொற்று முடக்கத்தின்போது வாடிக்கையாளர்கள் உயர்தரமான மதுபானங்களுக்கு அதிக செலவு செய்யத் தொடங்கினர். இதனால் விலையுயர்ந்த மதுபானப் பொருட்களின் உற்பத்தி பெருமளவில் அதிகரித்தது” என்று நீலக்கற்றாழை மதுபான நிபுணரான எர்லிண்டா கூறுகிறார். 

அமெரிக்க மதுபான கவுன்சிலின் அறிக்கையின்படி, டகீலா மற்றும் மெஸ்கல் ஆகியவை 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது மதுபான வகையாகும். 

பிரான்சில் இருந்து புகழ்பெற்ற ஷாம்பெயின் தயாரிக்கப்படுவதைப் போல, மெக்சிகோ மாகாணங்களில் இருந்து டகீலா தயாரிக்கப்படுகிறது. டகீலாவில் குறைந்தபட்சம் 51 சதவீதம் நீலக்கற்றாழைச் சாறு மற்றும் ஜாலிஸ்கோ இருக்க வேண்டும். மெஸ்கல் பல்வேறு நீலக் கற்றாழை வகைகளில் இருந்து தயாரிக்கப்படும். ஆனால் அவையும் மெக்சிகோவில்தான் தயாரிக்கப்பட வேண்டும். 

மெக்சிகோவிற்கு வெளியில் தயாரிக்கப்பட்டாலும் நீலக்கற்றாழையைக் கொண்டு உருவாக்கப்படும் மதுபானங்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதாக கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா விவசாயிகள் கூறுகின்றனர். 

"எங்களுக்கு நீலக்கற்றாழை மீது அளவற்ற தாகம் உள்ளது. அப்படியிருக்கும்போது அதனை ஏன் உள்நாட்டிலேயே வளர்க்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது" என டோஹெர்டி கூறினார்.

மெக்சிகன் சேம்பர் ஆஃப் டகீலா அமைப்பின் இயக்குநர் அல்போன்சோ நவரோ, டகீலாவுக்கு நீண்ட வரலாறும், உலகளாவிய புகழும் உள்ளது. மேலும் மெக்சிகன் கலாசாரத்துடன் அதற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்றார். 

ஒவ்வொரு முறையும் எங்களின் போட்டியாளர்கள் டகீலாவின் வெற்றியைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர். நீலக்கற்றாழை மதுபானங்கள் மற்றும் மெக்சிகன் மதுபானங்களை ஒத்த தோற்றம் கொண்ட பானங்களை அவர்கள் தயாரிப்பதால் டகீலா துறை கவலையடைந்துள்ளதாகவும், ஆனால் தோற்றம் இவற்றைப் போல இருந்தாலும், அதைப் போன்ற சுவையைக் கொண்டுவர அவர்களால் முடியவில்லை என்றும் அல்போன்சோ தெரிவித்தார். 

நீலக்கற்றாழைச் செடிகள் கலிபோர்னியாவில் இன்னும் பெரிய அளவில் வளரவில்லை, அவ்வாறு வளர்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மதுபானங்கள் மிக வேகமாகப் பிரபலமாகி வருகின்றன. அவற்றைப் பயன்படுத்தி நாங்கள் தயாரித்த அனைத்து பானங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்று வென்ச்சுரா மதுபான ஆலை உரிமையாளர் ஹென்றி டார்மி கூறினார்.

மெக்சிகோவைப் போலவே, கலிபோர்னியாவும் அதன் புதிய தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கலிபோர்னியா மாகாணத்திற்குள் வளர்க்கப்படும் கற்றாழைத் தாவரங்களைக் கொண்டும், ரசாயன சேர்க்கைகள் இல்லாமல் மட்டுமே மதுபானங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று கலிபோர்னியா மாகாணம் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தினை இயற்றியது.

முதலில் 12 விவசாயிகள் இணைந்து கடந்த ஆண்டு கலிபோர்னியா நீலக்கற்றாழை கவுன்சிலை உருவாக்கினர், அதன் பின்னர் இக்குழு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்று வடக்கு கலிபோர்னியா பகுதியில் நீலக்கற்றாழை பயிரிடும் குழுவின் நிறுவன இயக்குனரான கிரேக் ரெனால்ட்ஸ் கூறினார். "எங்கள் அமைப்பில் சுமார் 45 விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர், அவர்கள் அனைவருக்குமே அதிக அளவிலான கற்றாழைத் தாவரங்கள் தேவைப்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.

நீலக்கற்றாழை குறைந்த அளவு தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்கிறது, ஆனால் வேறு சில சவால்களை அளிக்கிறது. அவை வளர்வதற்கு பொதுவாக குறைந்தது ஏழு ஆண்டுகள் எடுக்கும். அறுவடை செய்வதும் எளிதல்ல. நன்கு வளர்ந்த நீலக்கற்றாழை நூற்றுக்கணக்கான பவுண்டுகள் எடையுள்ளதாக இருக்கும். ஒருமுறை வெட்டினால், அதனை மீண்டும் மீண்டும் வளர்க்க வேண்டும்.

இருப்பினும், அமெரிக்காவின் நீலக்கற்றாழை சாகுபடியில் பெரும்பங்கு வகிக்கும் கலிபோர்னியா மாகாணத்தினர் நீர் பயன்பாட்டைக் குறைப்பதற்கான சிறந்த மாற்றாக நீலக்கற்றாழையைப் பார்க்கின்றனர். 

சமீபத்தில் அங்கு பெய்த மழை மற்றும் பனிப்பொழிவு கலிபோர்னியாவில் மூன்று வருட வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தாலும், அங்கு அடிக்கடி வறண்ட காலநிலை ஏற்படும்.

கலிபோர்னியாவில் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதால் அப்பகுதிகளில் கிணறுகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் பெரும் பாதிப்படைந்ததை அடுத்து, நிலத்தடி நீரை உறிஞ்சுவதை ஒழுங்குபடுத்துவதற்காக பத்தாண்டுகளுக்கு முன்பு அம்மாகாண அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றியது. ஆனாலும் நிலத்தடி நீர் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. மேலும் புவி வெப்பமாதலால் அப்பகுதியில் இன்னும் மோசமான வறட்சி ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.

மாகாணத்தின் விவசாயம் நிறைந்த மத்திய பள்ளத்தாக்கில் தக்காளி மற்றும் பாதாம் பயிரிடக்கூடிய ஸ்டூவர்ட் வுல்ஃப், நீர்ப் பற்றாக்குறை காரணமாக அடுத்த 20 ஆண்டுகளில் அவரது நிலத்தில் 60 சதவீத பகுதியில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று தெரியவந்த பிறகுதான் நீலக்கற்றாழை வளர்த்தல் பற்றி சிந்திக்க ஆரம்பித்ததாக கூறினார்.

அதன்பின்பு தலைமுறை தலைமுறையாக தனது குடும்பம் இருக்கக்கூடிய பண்ணையைப் பாதுகாப்பதற்காக சூரிய ஆற்றல் மற்றும் நிலத்தடி நீரை அதிகரிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கினார்.

2 லட்சம் நீலக்கற்றாழைச் செடிகளை அவரது நிலத்தில் நடவு செய்தார். ஒவ்வொரு ஏக்கர் நீலக்கற்றாழையும் ஆண்டுக்கு 3 அங்குல (7.6 சென்டிமீட்டர்) தண்ணீரை மட்டுமே எடுத்துக் கொள்கிறது எனவும், மற்ற பயிர்களுக்கு செலவிடப்படுவதில் பத்தில் ஒரு பங்கு தண்ணீரே இதற்கு போதுமானதாக உள்ளதாக தெரிவித்தார்.

நீலக்கற்றாழை வளர்ப்பில் கிடைத்த லாபத்தையடுத்து டேவிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு ஸ்டூவர்ட் மற்றும் அவரது மனைவி லிசா 1,00,000 டாலர் நன்கொடை அளித்தனர். குறைந்த அளவு நீரினை உட்கொள்ளும் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிக்கான நிதியாக அப்பணம் பயன்படுத்தப்படுகிறது. 

வறட்சி மற்றும் காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய மற்ற பயிர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறேன். அதனால் நமது நிலத்தை முழுவதுமாகப் பயன்படுத்த முடியும். மேலும் நாம் அவற்றுக்கு அளிக்கும் தண்ணீரின் அளவு குறைவதால் நமக்கு எதிர்காலத்தில் நீர் பற்றாக்குறை வராது என்று ஸ்டூவர்ட் தெரிவித்தார்.

அடிக்கடி வறட்சியை எதிர்கொண்ட கலிபோர்னியா விவசாயிகளுக்கும், ஆண்டுதோறும் வானத்தையும் கர்நாடகத்தையும் எதிர்பார்த்து ஏமாறும் தமிழக விவசாயிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பெரும்பாலும் பருவமழையை நம்பியே விவசாயம் மேற்கொண்டு நஷ்டம் அடையும் தமிழக விவசாயிகளும் இதையொரு பாடமாகக் கொள்ளலாம்.

கலிபோர்னியர்கள் அங்கு நிலவக்கூடிய தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவும், எதிர்காலத்தில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படாதவாறும், அதேநேரம் அவர்களுக்கு பெரிய அளவில் லாபம் தரக்கூடிய நீலக்கற்றாழை வளர்ப்பைக் கண்டறிந்து சாத்தியப்படுத்தியதைப் போல, தமிழக விவசாயிகளும் குறைந்த நீர்த்தேவையுள்ள சிறுதானியங்கள் உள்ளிட்ட மாற்றுவழிகளைக் கண்டுபிடித்து செயல்படுத்தினால் வாழ்விலும் லாபம் வர வாய்ப்புள்ளது. 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.