தீபாவளியும் கன்னடர்களும்

கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இங்கே தமிழர்களோடு கலந்து வாழ்ந்தாலும் தீபாவளிப் பண்டிகையினை அவர்கள் முன்னோர்கள் எவ்வாறு கொண்டாடினார்களோ அதேபோன்றே கொண்டாடி வருகின்றனர். 
தண்ணீர் நிரப்பி அலங்கரித்து வைக்கப்பட்ட குடத்துக்கு செய்யப்பட்ட பூஜை
தண்ணீர் நிரப்பி அலங்கரித்து வைக்கப்பட்ட குடத்துக்கு செய்யப்பட்ட பூஜை

 

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இயற்கைப் பேரிடர், போர், வணிகம் சார்ந்து தங்களுடைய வாழ்வியல் இயக்கங்களையும் மாற்றிக்கொண்டே வந்துள்ளனர், நம் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக பிற நாடுகளுக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் சென்று நிரந்தரமாக அங்கேயே தங்கி வாழ்ந்து வருவதை நாம் கண்கூடாகக் காண முடியும்.

அதேபோன்று பிறநாட்டவரும் இங்கு வந்து இந்தியாவில் தங்கி வாழ்வதும் இயல்பான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு பிற தேசங்களுக்குச் சென்றாலும்கூட நாம் நம் பண்பாடு, கலாசாரத்தை நாகரிகத்தை மரபைக் காத்து நிற்பதுபோல பிறமொழி இனம் சார்ந்த மக்களும் இந்தியாவில் தங்கி வாழ்ந்தாலும் அவரவர் மரபுக்கு ஏற்ப விழா கொண்டாடி மகிழ்கின்றனர். 

அந்த வகையில் தமிழகத்தில் தங்கி நிலைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் சௌராஷ்டிரா, மராத்தி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அவரவர்தம் மரபுகளை கைக்கொண்டு சடங்குகளும் விழாக்களும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வாழ்ந்து வரக்கூடிய கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இங்கே தமிழர்களோடு கலந்து வாழ்ந்தாலும் தீபாவளிப் பண்டிகையினை அவர்கள் முன்னோர்கள் எவ்வாறு கொண்டாடினார்களோ அதேபோன்றே இவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

நமக்கெல்லாம் தீபாவளிப் பண்டிகை ஒரு நாளோடு நிறைவு பெற்றுவிடும். ஆனால் இவர்களுடைய தீபாவளி முதல் நாளே தொடங்குகிறது. தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்து லெட்சுமியை வழிபடுவர். அதுவும் அன்று அமாவாசை நாளாக இருந்தால் இப்பூஜை மறுநாள் நடைபெறும். பலிபாட்யா எனப்படும் அன்று வாமன அவதாரத்தில் திருமால் பலி மகாராஜாவுக்கு முக்தி வழங்கியதை நினைத்து படையல் இட்டு, இனிப்பு, பழ வகைகள் வைத்து வழிபடுவதோடு இல்லம் முழுவதும் திருவிளக்கு ஏற்றி வைப்பர். அன்று மிகப்பெரும் பாத்திரங்களை நன்கு துலக்கி அந்த பாத்திரத்தின் வெளிப்புறத்தே மஞ்சள், குங்குமம் வைத்து மாவிலை தோரணத்தை சுற்றிக் கட்டி பாத்திரத்தை அடுத்த நாள் அதிகாலை குடும்பத்தினர் அனைவரும் எழுந்து குளிப்பதற்குத் தேவையான தண்ணீரை அதன் உள்ளே நிரப்பி வைப்பர். இது கங்கை நீரையே அதனுள் கொண்டு வந்துள்ளதாக ஒரு நம்பிக்கை அம்மக்களிடையே இருந்தது. இதனால்தான் கங்கா ஸ்னானம் ஆயிற்றா என்று வழக்குச் சொல் தோன்றியதுபோல. 

நீர் மட்டுமல்ல அடுத்த நாள் அணிந்து கொள்ளக்கூடிய புத்தாடைகள், மத்தாப்புகள் போன்றவற்றையும் அந்த இடத்திலே சேர்த்து வைப்பர். தீபாவளிக்கு முதல் நாள் மாலை வாசலில் பெரிய மாக்கோலம் இட்டு அடுத்த நாள் காலை எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து நேற்றிரவு நீர் நிரப்பி வைத்த அண்டாவில் இருந்து தண்ணீரை எடுத்து குளித்த பிறகு கடவுளை வணங்கி புத்தாடை அணிந்து புதுப்புது உணவு வகைகளை தயார் செய்து உண்டு மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்திருப்பர்.

தீபாவளிக்கு அடுத்த நாள் விறகு கட்டைகளைக் கொண்டு தயார் செய்யப்பெற்ற தேரில் கிருஷ்ணரின் திருவுருவச் சிலையை வைத்து அதற்கு அலங்காரம் செய்து வீதியில் வலம் வரச் செய்வர். அவ்வாறு வலம் வரக்கூடிய அத்தேரில் எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணரையும் மக்கள் வழிபடுவர்.

முதல் நாள் மாக்கோலம் இட்டு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி அதற்கு அடுத்து வரும் தீபாவளி நன்நாளில் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மூன்றாம் நாள் இதனுடைய தொடர்ச்சியாக விறகால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கிருஷ்ணணின் வீதியுலா நடத்தி, நான்காம் நாள் நிறைவாக தேரில் இருக்கும் கிருஷ்ணரை வேறோர் இடத்தில் எடுத்து வைத்துவிட்டு, தேர் செய்ய பயன்படுத்தப்பட்ட விறகுக் கட்டைகளைப் பிரித்து எடுத்து அன்றைய நாள் உணவு சமைப்பதற்கு இந்த விறகுகளையே பயன்படுத்துவர். இவ்வாறாகக் கன்னட மொழி பேசும் மக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். 

[கட்டுரையாளர் - தமிழ்த் துறைத் தலைவர்சரசுவதி மகால் நூலகம்தஞ்சாவூர்]

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com