உலகை உலுக்கியவன் - சமூகத்தின் முதல் சுதந்திர உயிர்!

1992-ல் உலகை உலுக்கிய இளைஞனது கதையைத்தான் இங்கு மிகச் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
விட்டு விடுதலையாகி...
விட்டு விடுதலையாகி...

க. தர்மராஜகுரு

'பள்ளி மாணவரா நீங்கள்? நல்ல மதிப்பெண் வாங்குகிறீர்களா? கல்லூரி மாணவரா? நல்ல வேலை கிடைத்திடும்தானே? சம்பளம் எவ்வளவு? அவ்வளவுதானா? கல்யாணம் காட்சியெல்லாம் எப்போது? பொண்ணு கிடைக்குதா? என்ன ஆளுங்க? எவ்வளவு பவுன் போட்டாங்க பொண்ணுக்கு? குழந்தை எப்போது? ஆணா, பொண்ணா? சுகப்பிரசவமா, சிசேரியனா? குழந்தை படிப்பது தமிழ் மீடியமா, இல்லை ஆங்கிலமா? குழந்தை நல்ல மதிப்பெண் எடுக்கிறதா?' 

இதில் எந்த கேள்வியில் உங்கள் வாழ்க்கை இப்போது நிற்கிறது? அல்லது எந்த கேள்வியை நோக்கி உங்கள் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது? தலை வலிக்கிறதல்லவா? தண்ணீர் இருந்தால் கொஞ்சம் குடித்துவிட்டு மீதம் படியுங்கள். இந்தச் சமூகம் என்ற கட்டமைப்பால், இதுபோன்ற பல கேள்விகள் மூலம் நாம் ஒரு அளவுகோலின் முன் நிறுத்தப்படுகிறோம். அதில் நம் சமூகப் படிநிலை அளவிடப்படுகிறது. இங்கு மனிதனாகப் பிறந்த எல்லா உயிர்களும் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகள் என பல வரையறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரையறைகள் வலுக்கட்டாயமாக அனைவர் மீதும் திணிக்கப்படுகின்றன.  

இந்த நுட்பமான சமூக அடிமைத்தனத்திலிருந்து வெளியில் வருவதென்பது எளிய செயலல்ல. அதேநேரம், முடியாதவொன்றுமல்ல. இந்த உலகம் காட்டும், கடைப்பிடிக்கும் வழியில் திருப்திகொள்ளாத கிரிஸ் மெக்கேன்ட்லஸ் (Chris Mccandless) எனும் 24 வயது இளைஞனின் கதையைப் பார்க்கலாம் இங்கே:

1990-ல் வீட்டை விட்டு ஓடிய அந்த இளைஞன், 1992-ல் தனது வீட்டிலிருந்து சுமார் 3,600 கிலோ மீட்டர்கள் தொலைவில் ஒரு காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டான். அலாஸ்காவின் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட பேருந்து ஒன்றில் வாழ்ந்துவந்த அவனது உடலும் உடைமைகளும் மட்டுமே கிடைக்கப் பெற்றன. அந்த இரண்டு வருடம் அவன் தேர்ந்தெடுத்து வாழ்ந்த வாழ்க்கையை அவன் விட்டுச்சென்ற அவனது டைரி இந்த உலகிற்குச் சொன்னது. அது சொன்ன கதை பரவலாகப் பேசப்பட்டு பலரையும் சொல்ல முடியாத உணர்வுக்குள் ஆழ்த்தியது.

கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்து வளர்ந்த கிரிஸ் மெக்கேன்ட்லஸ் ஒரு சாதாரணமான குடும்பத்தைச் சார்ந்தவன். பொருளாதார ரீதியாக பிரச்னைகள் இல்லாத குடும்பம் அது. நாசாவில் பணிபுரியும் தந்தை, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனத்தில் செயலாளராக இருந்த தாய் என கொஞ்சம் அலட்டிக்கொள்ளத் தகுதிகொண்ட குடும்பம்தான் அது. பள்ளிப்படிப்பை அதிக மதிப்பெண்களோடு முடித்து பெற்றோருக்கு பெருமை சேர்த்த கையோடு, வரலாற்றுப் பாடத்தில் பட்டப்படிப்பையும் முடித்தான் கிரிஸ். மேல்படிப்புக்காகப் பெற்றோர் வாங்கித் தந்த புதிய காரில் வெளியூர் கிளம்பியவன்தான், கல்லூரிக்குப் போக வேண்டியவன் காணாமலேயே போய்விட்டான். அந்தக் கார் தேர்ந்தெடுத்த வழி இந்த உலகில் யாரும் எடுத்திடாத வழி. 

கல்லூரிக்குச் செல்லாமல், கொண்டுவந்த சேமிப்புப் பணத்தை ஒரு தொண்டு நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டு, கையில் இருந்த கொஞ்சநஞ்ச சில்லறைப் பணத்தையும் எல்லா அடையாள அட்டைகளையும் எரித்துவிட்டு, காரை ஒரு சாலையோரமாக கைவிட்டுப் பொடி நடையாக, புதிய ஆளாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தான் அலெக்ஸாண்டர் சூப்பர்ட்ரேம்ப். அதுதான் அவனுக்கு அவனே வைத்துக்கொண்ட புதிய பெயர் (Alexander Supertramp). நாடோடியாக இந்த உலகைச் சுற்றக் கிளம்பினான். 

அவனது பயணம் அரிசோனா, தெற்கு டக்கோடா என விரிந்தது. பல வகை மனிதர்களுக்கும், பலவகை வாழ்க்கை முறைகளுக்கும் அறிமுகமானான். அவனது தினசரி குறிக்கோள் அடுத்த வேலை சாப்பாடு மட்டுமே. அதற்கான வேலையை மட்டும் செய்தான். சொத்து சேர்க்கவோ, ஆடை அணிகலன்களை வாங்கவோ அவன் விரும்பவில்லை. ஆங்காங்கே சிறு சிறு வேலைகள் செய்து, வரும் சொற்பப் பணத்தில் சாப்பிட்டு, அதிலும் சேமித்துப் புத்தகங்கள் வாங்கிப் படித்தான். சந்திக்கும் சம்பவங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றி தனது நாள்குறிப்பில் எழுதிவைத்துக்கொண்டே இருந்தான். இவனது அறிமுகம் பல மனிதர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. 

நாளடைவில் சிறிய தொழிற்சாலை ஒன்றில் மாத சம்பளத்துக்குக் கடைநிலை ஊழியனாக வேலைக்குச் சேர்ந்தான். உணவுக்குப் பஞ்சமில்லாமல் கஷ்டம் எதுவும் கண்ணில்படாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. சக தொழிலாளர்களுக்கும் முதலாளிக்கும் அவனை மிகவும் பிடித்துப்போனது. ஆனால் அலெக்ஸ், திடீரென ஒரு நாள் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து மீண்டும் தன் நாடோடி வாழ்க்கைக்கு ஓடிவிட்டான். அந்த கடிதத்தில், "இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் போர் அடிக்கிறது. அன்பிற்கு நன்றி" என எழுதியிருந்தது. 

கிரிஸ் மெக்கேன்ட்லஸ் இந்த உலகில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு, நாட்டிற்கு, மதத்திற்கு, அடையாளத்திற்குச் சொந்தமானவன். ஆனால், அலெக்ஸாண்டர் சூப்பர்ட்ரேம்புக்கு எந்த ஒரு பிறப்புச்சான்றிதழோ, அடையாள அட்டையோ கிடையாது. அவன் யாருக்கும் எதற்கும் சொந்தமில்லாதவன். சற்று நேரத்திற்கு முன் நாம் பேசிய சமூக அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற உயிர் அது.

நாடோடி அலெக்ஸ் ஒருபகுதியில் சில காலம் மட்டுமே தங்கினான். அங்கு சந்திக்கும் மக்கள் மனதைக் கொள்ளைகொண்டான். அனைவரிடமும் அன்பு செலுத்தினான். பல பகுதிகளுக்கு நடந்தும் லிப்ட் கேட்டுமே சென்றான். உதவி செய்த அனைவரையும் உறவுபோல் நினைத்து நடத்தினான். அவனுக்கு உதவி செய்து சில நாள்கள் அவனுடன் பயணித்த ரொனால்ட் ஏ. பிரான்சிஸ் எனும் ஆதரவற்ற பெரியவர் அலெக்ஸைத் தன் பேரனாக தத்தெடுத்துக்கொள்ள விரும்பினார். தனக்கு இருக்கும் சொத்துகளை அவன் பெயரில் எழுதிவிட ஆசைப்படும் அளவுக்கு அவன் மேல் பாசம் கொண்டார். ஆனால் அலெக்ஸ் அதற்கு மரியாதையாக மறுப்பு தெரிவித்துவிட்டான். அவரிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறி அவரிடமிருந்து விடைபெற்றான். மனதிலும் மனிதர்களிடத்திலும் அலாதி அன்பைக் கொண்டிருந்தான் அலெக்ஸ். தன் வாழ்க்கையை எந்த ஒரு வரையறையும் இன்றி வாழ்ந்துகொண்டிருந்தான். இந்த வயதில் அவன் காதில் விழ வேண்டிய என்ன வேலை, எவ்வளவு சம்பளம், எப்போது கல்யாணம் என்ற எந்த கேள்வியும் அவன் காதை உரசும் சுதந்திரக் காற்றில் கேட்கவில்லை. 

அப்படியே வாழ்க்கையை ஓட்டிய அலெக்ஸ் சிறிது நாள்களில் அலாஸ்காவில் உள்ள காட்டுக்குள் மனிதர்கள் யாருமின்றி வாழ்ந்து பார்க்க முடிவு செய்தான். கையில் 9 கிலோ அரிசி, ஒரு கத்தி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றோடு காட்டிற்குள் சென்றான். அங்கிருந்த கைவிடப்பட்ட பேருந்து ஒன்றைத் தன் வீடாக மாற்றிக் கொண்டான். அங்கு திரியும் அணில் போன்ற விலங்குகளை வேட்டையாடியும் அங்குள்ள தாவர வகைகளில் உண்ணக் கூடியவற்றைக் கண்டறிந்தும் சமைத்துச் சாப்பிட்டான். ஒரு முறை சட்டத்திற்குப் புறம்பாக காட்டு மான் ஒன்றை வேட்டையாடி சமைத்து உண்டுள்ளான். 2, 3 மூன்று வாரங்களுக்கு இருக்க வேண்டிய கறியைப் பதப்படுத்த முடியாமல் மொத்தமும் வீணாகியுள்ளது.

காட்டிற்குள் அவன் வாழ்க்கை விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் வேளையில் பனிக்காலம் மெதுவாக ஆரம்பித்தது. பனிக் காலத்தில் அணில் போன்ற விலங்குகள் கண்ணில் படுவது அரிது என்பதால் அலெக்ஸுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பசியில் வாரம் முழுதும் வாடும் நிலை ஏற்படவும், அலெக்ஸ் அந்த காட்டிலிருந்து கிளம்ப முடிவு செய்தான். ஆனால் கடும் காற்று மற்றும் மழையினால் வழியிலிருந்த ஆற்றைக் கடக்க முடியவில்லை. வேறு வழியின்றி மீண்டும் அந்த பேருந்திற்கே வந்துவிட்டான். பசியில் வாடி வதங்கினான் அலெக்ஸ். தன் உடல்நிலை மோசமாவதை நன்றாக அறிந்திருந்தான் அவன். மெதுவாக அலெக்ஸ் தன் மரணத்தைச் சந்திக்கத் தயாரானான். தனது கடைசி நாள்களை டைரியில் முடிந்தவரை எழுதி வைத்தான். தன்னைப் புகைப்படங்கள் எடுத்து வைத்தான். ஆனால் எதிலுமே அவன் தன் மரணத்தை எண்ணி பயமோ, தான் எடுத்த முடிவை எண்ணி வருத்தமோ படவில்லை. 4 நாள்களுக்குப் பின் அந்த வழியாகச் சென்ற சில வேட்டைக்காரர்களால் அவன் அந்த பேருந்திற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான். பின்னர் அது கலிபோர்னியாவில் தொலைந்துபோன கிரிஸ் மெக்கேன்ட்லஸ் என்பது கண்டறியப்பட்டது. அவனது மரணத்திற்கான சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. பசியினால் இறந்திருக்கலாம் எனவும் விஷச் செடிகள் எதையாவது உண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அவனது அந்தப் பேருந்தில் அவன் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றில், மிகவும் ஒல்லியாக முகத்தில் பளீரென்ற சிரிப்போடு கையில் ஒரு குறிப்புப் பலகையோடு நின்றுகொண்டிருந்தான்.

அந்த குறிப்பில், "நான் மிகவும் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்தேன். கடவுளுக்கு நன்றி. கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்" என எழுதியிருந்தான் அலெக்ஸ்.

கிரிஸ், அலெக்ஸாக வாழ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகியது. அதற்குள் அவன் வாழ்கை முற்றுப்பெற்றது. அவன் உடல் கிரிஸாகவே அடையாளம் காணப்பட்டது. மீண்டும் அவன் மேல் அவன் விரும்பிடாத அடையாளங்கள் ஒட்டப்பட்டன.

அலெக்ஸ் பலருக்கும் ஒரு முட்டாளாகவே தெரிந்தான். ஆனால் சிலருக்கு அவனது முடிவு பெறும் ஆச்சரியத்தையும் இனம் கண்டறிய முடியாத உணர்வுகளையும் அள்ளித் தந்தது. எப்படி ஒருவனால் உலக இயல்பை மாற்றி புதிதாக வாழ முடிந்தது? என அனைவரும் வியந்தனர்.

ஜான் கிரக்கோர் எனும் எழுத்தாளர், அலெக்ஸ்-ஐப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார். அவன் சென்ற இடங்களுக்கெல்லாம் இவர் சென்றார், அவன் சந்தித்ததாக எழுதியிருந்த அனைவரையும் இவரும் சந்தித்துப் பேசினார். கிடைத்த விவரங்களை வைத்து அவனது முழுக் கதையையும் 'இன்டூ தி வைல்டு' (Into The Wild) என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். அது உலக அளவில் பெறும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் திரைப்படமாகவும் உருவானது. புத்தகமாக லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்த அலெக்ஸ், திரைப்படமாகக் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கவனிக்க வைத்துக் கவர்ந்தான். அந்தக் கதை உலகம் முழுதும் பரவிச் சென்றது. அலெக்ஸ் சுற்ற வேண்டிய இந்த உலகத்தை அவன் கதை சுற்றியது. அலெக்ஸ் எனும் புதிய பார்வை அனைவர் மனதிலும் உதிக்க ஆரம்பித்தது. அவன் வாழ்ந்த அந்த பேருந்தைக் காண மக்கள் கூட்டம் திரளாகக் கிளம்பியது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆள் நடமாட்டத்தைக் காணாத அந்தப் பேருந்து அலெக்ஸ் வந்து சென்ற பிறகு ஆயிரக்கணக்காண மக்களை ஆண்டுதோறும் கண்டது. உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் அந்த பேருந்தைக் காண வந்தனர். அங்கு வாழ்ந்துமடிந்த அலெக்ஸை உள்ளே தேடினர். பல ஆண்டுகள் அங்கேயே இருந்த பேருந்து கடந்த 2020-ல்தான் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. 

கிரிஸின் இந்த முடிவு அவனை விரும்புவோருக்கு பெரும் இழப்பைத் தேடித் தந்திருப்பது உண்மைதான். இந்த உலகின் மொத்த எண்ண ஓட்டங்களையும் மாற்ற, வரலாற்றில் அழியாத இந்த வடு தேவைப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் உலாவித் திரிய வேண்டிய உயிர் அது, இன்னும் அதே வேட்கையோடு மக்கள் மனதில் உலா வருகிறான் அலெக்ஸ். இவன் கதையைப் படித்துவிட்டு இதைப் போல் நாம் வாழ்ந்தால் எப்படியிருக்கும் என எண்ணிப் பூரிக்கும் அனைத்து உள்ளங்களிலும் கிரிஸ் வாழத்தான் செய்கிறான். 

இந்தச் சமூகம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க எண்ணி ஓடிக்கொண்டிருக்க இந்த வாழ்க்கை ஒன்றும் ஓட்டப் பந்தயத் திடல் அல்ல. மெதுவாக நடந்து சிறு சிறு அழகுகளை ரசிக்க வேண்டிய பூங்கா இது. அதனால் நம் மேல் திணிக்கப்பட்டிருக்கும் வரம்புகளையும் வரையறைகளையும் தளர்த்தி ஓட்டத்தை நிறுத்தி, மெதுவாக பொறுமையாக நடக்க முயற்சி செய்யலாம். பிடித்தது போல வாழலாம். 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com