வறட்சி! பனாமா கால்வாயைக் கடப்பதில் கப்பல்களுக்கு சிக்கல்!

வறட்சி காரணமாக பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விளைவு என்னவாக இருக்கும்? 
பனாமா கால்வாய்
பனாமா கால்வாய்
Published on
Updated on
3 min read

பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள வறட்சியால் கப்பல்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதத்துக்கு மேலாக சரக்குகளுடன் கப்பல்கள் நடுக்கடலில் வரிசையில் காத்திருக்கின்றன.

சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் தன்மையை மாற்றியமைத்து எளிமையாக்கிய இரண்டு புரட்சிகரத் திட்டங்கள் சூயஸ் கால்வாய் மற்றும் பனாமா கால்வாய்.

மத்திய தரைக் கடலையும், செங்கடலையும் இணைத்து ஆசியா - ஐரோப்பா நாடுகளுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்கியது எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் திட்டம்.

அதேபோல், அட்லாண்டிக் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைத்து தென் அமெரிக்காவை சுற்றிச் செல்லும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக பனாமா நாட்டில் செயற்கையாக உருவாக்கப்பட்டது பனாமா கால்வாய்.

பனாமா கால்வாய் வரலாறு

பனாமா கால்வாய் கட்டுவதற்கு முன்னதாக, அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் தென் அமெரிக்க கண்டத்தை சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சுற்றிதான் செல்ல வேண்டும்.

ஆனால், பனாமா கால்வாய் உருவாக்கப்பட்ட பிறகு 12,668 கி.மீ. வரை பயண தொலைவு குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளின் முயற்சிகளுக்கு பிறகு 1904-ஆம் ஆண்டு பனாமா நாட்டில் கால்வாய் கட்டுவதற்கு அமெரிக்கா முன்வந்தது. சுமார் 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு 40 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது.

பனாமா சிட்டி அருகே ‘பிரிட்ஜ் ஆஃப் அமெரிக்கா’(அமெரிக்க பாலம்) என்ற பகுதியில் தொடங்கி கொலம்பியா நாட்டு வழியே சென்று ‘கோலன்’ என்ற பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் முடிவடைகிறது.

இந்த கால்வாய் 82 கி.மீ. நீளமும் 31 மீட்டர் அகலமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த 1,700 துறைமுகங்களுடன் பனாமா கால்வாய்க்குத் தொடர்புண்டு.

முன்னதாக, இந்த கால்வாய் கட்டுவதற்காக சுமார் 25 கோடி அமெரிக்க டாலர்களை பிரான்ஸ் நாடு செலவிட்டு, பின்னர் பணியைக் கைவிட்டது.

இந்த கால்வாய் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 25,000-க்கும் மேற்பட்டோர் விபத்து, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பல அரசியல் போராட்டங்களுக்குப் பின்னர், பனாமா கால்வாயின் நிர்வாகத்தை 1999-ஆம் ஆண்டு பனாமா நாட்டிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

பனாமா கால்வாய் இயங்கும் முறை

பனாமா குறுக்கே உருவாக்கப்பட்ட இந்த கால்வாயின் பெயர் காடன் ஏரி. இந்த ஏரியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 85 அடி உயரத்தில் உள்ளது.

இதனால், பனாமா கால்வாயைக் கடக்க வேண்டுமென்றால் கப்பல்கள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 85 அடி உயரத்துக்கு மேலே உயர்த்தப்பட - கொண்டுவர வேண்டும். இதற்காக ‘வாட்டர் லாக்’(நீர்ப் பூட்டு) என்ற சாதனம் அமைக்கப்பட்டு, கப்பல்களை கடல் மட்டத்திலிருந்து  ‘லிஃப்ட்’ போன்று மேலே உயர்த்தி அனுப்பும்.

கப்பல் செல்லும்போது ஏரியிலிருந்து வரும் நீரின் மூலம் இந்த நீர்ப்பூட்டு இயங்கி, கப்பல்களை உயர்த்தி காடன் ஏரியைக் கடந்த பிறகு கடலில் சமநிலையில் இறக்கிவிடும். 

இந்த கால்வாயில் 5 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கப்பலின் வகை, சரக்கின் வகை, சரக்கின் எடையைப் பொருத்துக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். பனாமா நாட்டின் செழிப்புக்கு இந்த சுங்கக் கட்டணமே பிரதான வருமானம்.

நாளொன்றுக்கு சுமார் 38 கப்பல்களும், ஆண்டுக்கு 14,000 சரக்குக் கப்பல்களும் இந்த பனாமா கால்வாயைக் கடந்து செல்கின்றன.

பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள பிரச்னை

சர்வதேச வர்த்தகத்தை மாற்றியமைக்கும் ஆற்றலுடைய பனாமா கால்வாய் பாதையில் தற்போது புதிய பிரச்னை வெடித்துள்ளது.

பனாமா நாட்டில் சராசரியைவிட இந்தாண்டு 30 சதவிகிதம் குறைவான மழையே பெய்ததால் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதனால், பனாமா கால்வாயில் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக கப்பல்களைக் கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவதில் சிரமமுள்ளதால், கப்பல் போக்குவரத்தின் அளவைக் குறைக்கும் நிலைக்கு கால்வாய் நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் வரை நாளொன்றுக்கு 38 கப்பல்கள் வரை பனாமா கால்வாய் வழியில் சென்ற நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை வெறும் 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், கப்பல் கடந்து செல்லச் செலவிடும் நீரின் அளவைக் குறைப்பதற்காக கப்பலின் எடையையும் குறைத்து பயணம் செய்ய கால்வாய் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பனாமா கால்வாயை ஒரு கப்பல் கடந்து செல்வதற்கு செலவிடும் தண்ணீர், பனாமா நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் பேர் ஒரு நாளுக்கு செலவிடும் தண்ணீரைவிட அதிகம் எனக் கூறப்படுகிறது.

தற்போது பனாமா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியில் மக்கள் நீரின்றித் தவிப்பதால், அந்நாட்டுத் தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக வரும் 2024, பிப்ரவரி முதல் 30 சதவிகித கப்பல் போக்குவரத்தைக் குறைத்து, நாளொன்றுக்கு 18 கப்பல்கள் மட்டுமே பனாமா கால்வாயைக் கடக்க அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 200-க்கும் மேற்பட்ட கப்பல், கால்வாயை கடப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருப்பதால் சரக்குப் போக்குவரத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பனாமா கால்வாயைக் கடக்க வரிசையில் காத்திருக்கும் கப்பலின் எண்ணிக்கை 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலகளவிலான நீர்வழி வர்த்தகம் 3 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னணி கப்பல் நிறுவனம் ஒன்று சுமார் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதிகமாகக் கொடுத்து வரிசையைத் தவிர்த்து கடந்து செல்ல பேரம் பேசியுள்ளது. மேலும், பல கப்பல்கள் சுற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ளவும் முடிவெடுத்துள்ளன.

சர்வதேச அளவில் 5 சதவிகித வர்த்தகத்தைக் கையாளும் பனாமா கால்வாய் முடங்கியிருப்பதால், உலகளாவிய விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் உணவு, எரிவாயு, சமையல் எண்ணெய் மற்றும் பிற பொருள்களின் விலைகள் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

120 ஆண்டுகள் முந்தைய காலநிலை மற்றும் நீர் அளவைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பனாமா கால்வாய், தற்போதைய காலநிலை மாற்றத்தை சமாளிக்குமா என்பது சந்தேகமே.

சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தை வலுப்படுத்த மாற்று வழித்தடங்களை உருவாக்குவது மிக அவசியம். 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com