விராட் கோலி - தன்னிகரற்ற சாதனை வீரன்!

சச்சினுக்குப் பிறகு அவரைப்போல ஒரு வீரர் யாரும் இல்லை, அவரின் சாதனைகளை எவராலும் தகர்க்க முடியாது என கூறிக் கொண்டிருந்தவர்களின் உதடுகளை சச்சின் இருக்கும்போதே தன் பெயரை உச்சரிக்க வைத்தார் விராட் கோலி. 
விராட் கோலி - தன்னிகரற்ற சாதனை வீரன்!
Published on
Updated on
4 min read

உலகத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் தடம் பதிக்கிறார்கள், ஆனால், அவர்களிலும் வெகு சிலரே புதிய வரலாற்றை எழுதுகிறார்கள்.

மக்கள் எல்லா வீரர்களையும் சாதனையாளர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், வெகுசிலருக்கு மட்டுமே அந்தக் கிரீடத்தை வழங்குவார்கள், அப்படிப்பட்ட ஒரு முடிசூடா மன்னன்தான் சச்சின்!  இந்திய அணியை உலக அளவில் கொண்டு சேர்த்த பெருமை சச்சினையே சேரும். அவரது சாதனைகளும் ரன் குவிப்பும், மக்கள் மனங்களில் அவரை சிம்மாசனம் போட்டு அமர வைத்தன. உலகின் எந்தத் திடலுக்குச் சென்றாலும் தன் பெயரை மட்டுமே உச்சரிக்கச் செய்தார் சச்சின். அத்தகைய அன்பை சச்சின், தோனிக்குப் பிறகு செய்து காட்டினார் விராட் கோலி.

சச்சினுக்குப் பிறகு அவரைப் போல் ஒரு வீரர் யாரும் இல்லை, அவரின் சாதனைகளை எவராலும் தகர்க்க முடியாது என்று கூறிக் கொண்டிருந்தவர்களின் உதடுகளை சச்சின் இருக்கும் காலத்திலேயே தன் பெயரை உச்சரிக்க வைத்தார் விராட் கோலி.

எத்தனையோ சாதனைகளைச் செய்து 100 சதங்கள் கண்ட சச்சினுக்கு எட்டாக்கனியாக இருந்தது ஒரு நாள் உலகக்கோப்பை மட்டுமே. அதை தோனியின் படைத் தளபதியாக இருந்து உலகக்கோப்பையை வென்று சச்சினை தன் தோள்களில் சுமந்து அழகு பார்த்தார் விராட் கோலி.


2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் விராட் கோலி.  முதல் போட்டியில் அவர் அடித்த ரன்கள் 12. அதன் பிறகு அவரது வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகம்தான். தினமும் பலரின் சாதனைகளை முறியடிப்பதையே தன் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிவேகமான 6,000 ரன்கள், 7,000 ரன்கள்,  8,000 ரன்கள் முதல் 13,000 ரன்கள் வரை மிக விரைவாக எட்டிப்பிடித்தார்.

எத்தனையோ சாதனைகளைப் படைத்தாலும், இன்றும் இவர் உச்சாணிக் கொம்பில் இருப்பதற்கு முதல் காரணம் தன் சுய சாதனைகளைப் பற்றி யோசிக்காமல் அணியின் நலனை மட்டும் மனதில் நிறுத்தி விளையாடியது. 

விளைவு, ஒருநாள் போட்டிகள் தர வரிசையில் முதல் இடம் அதுவும் ஓரிரு நாள்கள் அல்ல, தொடர்ந்து 1,258 நாள்கள். அதனைத் தொடர்ந்து டெஸ்ட், 20 ஓவர் போட்டி தர வரிசைகளிலும் முதல் இடம் பிடித்தார்.

2013 டிசம்பர் 30 ஆம் நாள் தோனி யாரும் எதிர்பாரா வண்ணம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்திய டெஸ்ட் அணியை தலைமை ஏற்கும் வாய்ப்பு விராட் கோலியைத் தேடி வந்தது. அவரது தலைமையில் இந்தியா அணி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடம் பிடித்தது. 

தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு 20 ஓவர் போட்டிகள், 2017 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டன் ஆனார் விராட் கோலி.

இப்படி எத்தனையோ சாதனைகளும், பெருமைகளும், அவரைச் சூழ்ந்து இருந்தாலும், சில கசப்பான குற்றச்சாட்டுகளும் அவரைச் சுற்றி வலம் வந்துகொண்டுதான் இருந்தன.  ராசியற்ற கேப்டன், தோனிக்கு பிறகு ஐ.சி.சி. கோப்பைகளை வெல்லாதது என சொல்லலாம். எத்தனையோ இருநாட்டுத் தொடர், முத்தரப்பு தொடர் என தொடர்களை வென்றாலும் ஐ.சி.சி. கோப்பைகள் என்னவோ எட்டாக்கனியாகவே இருந்தது. ஏன் ஐபிஎல்லில்கூட அவர் தலைமை வகித்த பெங்களூரு அணி ஏ.பி.டி. வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் என பல ஜாம்பவான்கள் இருந்தும் கோப்பையை மட்டும் ஒருமுறைகூட வென்றது கிடையாது. டிசம்பர் 9, 2021 அன்று திடீரென இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து டெஸ்ட், 20 ஓவர் போட்டிகள், ஐபிஎல் என அனைத்து வகையான போட்டிகளிலும் கேப்டன் பதவியிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒரு சதம்கூட பதிவு செய்யவில்லை, இதைக் காரணமாக வைத்து பல முன்னணி வீரர்கள் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனக் குரல் எழுப்பினர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் அணியின் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.

இயற்கை எல்லா மனிதர்களுக்கும் தினமும் ஏதோ ஒரு வலியை தந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வலியை நினைத்து வாழ்வில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாமல் பலர் முடங்கிப் போகிறார்கள், ஆனால் ஒருசிலரே அந்த வலியிலும் தனக்கான வாய்ப்பைத் தேடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வீரன்தான் விராட் கோலி.

டிசம்பர் 18, 2006  பெங்களூருவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தில்லி அணிக்காகக் களத்தில் நின்று கொண்டிருந்தார் விராட் கோலி. அன்றைய நாள் முழுவதும் ஆட்டமிழக்காமல் நின்று விளையாடிய அவர், அடுத்தநாள் அந்த ஆட்டத்தைத் தொடர வேண்டும் என்ற பெரும் பொறுப்புடன் வீட்டுக்குச் சென்றார். 

இரவு உணவை முடித்துக் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கையில் அதிகாலை 2 மணியளவில் அவரது தந்தைக்கு திடீர் என மாரடைப்பு ஏற்படுகிறது. மரணத்தின் விளிம்பில் இருந்த அவரது தந்தைக்கு அருகேயிருந்த மருத்துவர்கள் உதவியை நாட, அதிகாலை நேரம் என்பதால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. பின்பு அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்க அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். அதிர்ச்சியில் உறைந்து போனார் விராட் கோலி.

ஆனால் மறுநாள் காலை தந்தையில் உடலை வீட்டில் வைத்துவிட்டு களத்தில் புகுந்தார் விராட் கோலி. நடுவரின் தவறான முடிவால் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்த அவர், ஆட்டம் முடிந்தபின் அன்று மாலை தந்தை இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டார். இத்தனைக்கும் அவருக்கு அதிகம் பக்குவப்பட்ட வயதுகூட இல்லை. வெறும் 18 தான். 

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் உதிர்த்த வார்த்தைகள் இவை. 

“நான் என்னுடைய வாழ்நாளில் எவ்வளவோ திறமையான கிரிக்கெட் வீரர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் யாரும் விராட் கோலியை மிஞ்ச முடியாது. நான் நீண்ட காலமாகவே விராட் கோலியின் ரசிகனாக இருந்து வருகிறேன். அவர் சச்சின் டெண்டுல்கரை போல எல்லா காலங்களுக்குமான சிறந்த வீரராகத் தன்னை நிரூபித்துக் கொண்டே வருகிறார்” என்றார். 

உண்மைதான். 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விராட் கோலி எனக் கூறினால் அது மிகையாகாது. மிகச் சிறந்த ஆட்டத் திறனும், பேட்டிங் நுணுக்கமும், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல தன்னை மாற்றியாடும் திறனும், போட்டியின் போக்கைத் திருப்பும் வல்லமையும், களத்தில் ஆக்ரோஷம் கலந்த அவரது தலைமைப் பண்பும், நீரும், நெருப்பும் கலந்த அவரது அன்பும் அவரை இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது. சவாலான இலக்குகளைத் துரத்தும்போது இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் அபாரமான திறனுக்காக விராட் கோலி "சேஸ் மாஸ்டர்" என்றும் புகழப்படுகிறார். இதற்கு காரணம் சேஸிங்கில் இவர் அளவிற்கு வேறு எந்த ஒரு வீரரும் இத்தனை பெரும் ரன்களைக் குவித்தது கிடையாது, சமீபத்தில் இவர் சச்சினின் அசைக்க முடியாத சாதனையாக கருதப்படும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் என்ற இமாலய சாதனையை வெறும் 277 இன்னிங்ஸில் சமன் செய்தார் (சச்சின் 49 சதம், 451 இன்னிங்ஸ்) இதில் சேஸிங்கில் மட்டும் 27 சதங்கள், 40 அரை சதங்கள். இந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் அவர் பெற்ற ரன்கள் 85, 55, 16, 103, 95.

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், விராட் கோலியைப் பற்றிக் கூறியது “உலகக் கிரிக்கெட்டில் நான் பார்த்தவரை மிகச்சிறந்த பேட்டர்களில் விராட் கோலியும் ஒருவர். சேஸிங் என்று வந்துவிட்டால் இவரின் பக்கத்தில் எந்த பேட்டரும் வர முடியாது. அதிலும் 50 ஓவர்கள் போட்டியி்ல் விராட் கோலி ஒரு அடையாளம், கிங் கோலிதான் உண்மையில் கிங்” என்று கூறினார். 

கோலிக்கு தற்போது 35 வயதாகிறது. இப்போதே பல முன்னாள் வீரர்கள் விராட் கோலிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை என ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். தற்போதைய நவீன கால கிரிக்கெட் மைதானத்தின் பிச்சில் இரு எல்லைகளுக்கு இடைப்பட்ட தூரத்தின் மிக வேகமான வீரர் என்றால் அது கோலிதான். 1, 2 ரன்கள் என வந்துவிட்டால் இன்றளவும் அவரது வேகத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. இது அவரின் ஆட்டத்தில் 4,6-களை விட 1,2 ரன்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதிலேயே தெரியும். 

சமீபத்தில் உலகக் கோப்பை 2023 அட்டவணை வெளியீட்டு நிகழ்வில் பேசிய சேவாக், ”ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு கடைசி உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியது நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த உலகக்கோப்பையை இந்திய வீரர்கள் அனைவரும் சச்சினுக்காக வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். தற்போது சச்சினின் இடத்தில்தான் விராட் கோலி இருக்கிறார். விராட் கோலிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் நினைக்கிறார்கள். விராட் கோலியும் சச்சினை போலவே இருக்கிறார். சச்சினை போலவே பேட்டிங் செய்கிறார், கிரிக்கெட்டையும் சச்சினைப் போல பார்க்கிறார், அவர் எப்போதும் அணிக்காக 100 சதவிகிதத்திற்கு மேல் கொடுக்கிறார், அவருக்காக இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்” என்றார். 

தற்போதைய இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் எதிரணியைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று உலகக் கோப்பைகளையும் போட்டியை நடத்திய நாடுகளே வெற்றிப் பெற்றுள்ளதால்  இந்தியர்கள் அனைவரும் அதிகம் எதிர்ப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவிற்கு ஐசிசி கோப்பைகள் என்பது 10 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேறாக் கனவாகவே இருந்து வருகிறது. அது இந்த ஆண்டு நிஜமாகும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்திய அணி கோப்பையை வென்று விராட் கோலியை தங்கள் தோள்களில் சுமந்து அகமதாபாத் மைதானத்தைச் சுற்றி வருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com