காரிருள் போக்கும் கார்த்திகை!

உலகெங்கும் மக்கள் பல திருவிழாக்களை பருவத்திற்கு ஏற்றவாறு கொண்டாடுகின்றார்கள். இந்தியத் திருநாட்டில் பண்டிகைகளுக்குக் குறைவில்லை.
karthigai deepam
karthigai deepam

உலகெங்கும் மக்கள் பல திருவிழாக்களை பருவத்திற்கு ஏற்றவாறு கொண்டாடுகின்றார்கள். இந்தியத் திருநாட்டில் பண்டிகைகளுக்குக் குறைவில்லை. மாதந்தோறும் பல திருவிழாக்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கும். நம் தாய்த் தமிழ் நாட்டிலும் வருடம் முழுவதும் ஏதேனும் ஒரு திருவிழா  நடந்து கொண்டேதான் இருக்கும். ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு விழாவாவது நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோல கார்த்திகை மாதத்தின் சோமவார வழிபாடு, ரமா ஏகாதசி, முடவன் முழுக்கு, துளசி கல்யாணம், கார்த்திகைப் பெருவிழா ஆகியவை மிகுந்த சிறப்பிற்குரியவை. கார்த்திகை என்ற சொல்லிற்கு ஆரல், அங்கி, இறால், எரிநாள் என்று பல பெயர்கள் உள்ளன.

சங்க இலக்கியங்கள், புராணங்கள், சீவகசிந்தாமணி, தேவாரம், கல்வெட்டுகள் போன்றவைளில் கார்த்திகை மாதம் மற்றும் கார்த்திகை தீப பெருவிழா பற்றிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. தற்போது கார்காலம் நடைபெற்று வருகிறது. கார் என்றாலே மழை பொழியும் கார்த்திகை என்றும் ஒளி பொருந்திய மாதம் என்றும் நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தும் மாதம் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு பூக்களை இம்மாதத்தில் சிறப்பாகக் கூறலாம். ஒன்று கார்த்திகைப் பூ என்று சொல்லப்படும் செங்காந்தள் மலர் பூக்கும் மாதம் மற்றொன்று அக்கினிப் பூ என்று சொல்லக்கூடிய முருகப்பெருமான் தோன்றிய சிறப்பான மாதம் ஆகும்.

சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த அக்கினிப் பூவாகிய முருகப் பெருமான் இமயமலைச் சாரலில் உள்ள சரவணப் பொய்கையில் உதித்ததாக திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம் ஆகியவை கூறுகின்றன. சிவனுக்கு உன்னதமாக இருக்கக் கூடிய கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுகிறார். வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமான் தோன்றினாலும் கார்த்திகைப் பெண்களான நிகர்த்தனி, அபரகேந்தி, மேகந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகியோரால் வளர்க்கப் பெற்றதால் இந்த கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு.

கார்த்திகை தீபப் பெருவிழா மூன்று நாள்கள் நடைபெறுகிறது. முதல்நாள் பரணி தீபம். பரணி தீபம் என்பது திருவண்ணாமலைக்கே உரித்தான ஒன்று. மலையே அகல்விளக்காக இருந்து தீப ஒளி ஏற்றப்பட்டு ஊரெங்கும் பிரகாசமான ஒளியாகக் காட்சியளிக்கும் நாளாகும். சிவபெருமானின் தலை உச்சியைக் காண அன்னப்பறவை வடிவை எடுத்துச் சென்ற பிரம்மாவுக்கும் வராக உருவம் எடுத்து பெருமானின் பாதத்தைத் தேடிச் சென்ற விஷ்ணுவுக்கும் லிங்கோத்பவர் வடிவில் நெருப்புப் பிழம்பாகக் காட்சியளித்து உபதேசித்தநாள், அண்ணாமலையார் மற்றும் உண்ணா முலை அம்மன் கார்த்திகை பரணியன்று ஒன்றாகக் காட்சி தந்து உலகுக்கு மட்டுமல்ல அங்கு வந்துள்ள பக்தர்களின் முகங்களிலும் மனதிலும் ஒளியைத் தந்து அருள் பாலிக்கும் நாள் ஆகும்.கார்த்திகைப் பௌர்ணமி அன்று கிரிவலம் வருதலால் சித்தர்களின் ஆசி கிடைப்பதாக ஐதீகம். அன்று வீடுகளில் பரணி தீபம் ஏற்றுவார்கள்.

இரண்டாம் நாள் சர்வாலய தீப நாள். அன்று அனைத்து ஆலயங்களிலும் வீடுகளிலும் தீப விளக்குகள் ஏற்றி கொண்டாடுவார்கள். புதிதாக வாங்கி வைத்த அகல் விளக்குகளை எண்ணெய் குடிக்காமல் இருக்க நீரில் சில மணித் துளிகள் மூழ்க வைத்து பிறகு எடுத்து துடைத்து அனைத்து அகல் விளக்குகளையும் ஒரு மனைப் பலகை அல்லது தாம்பாளத்தில் வரிசையாக வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் இடுவர். அதுபோன்று வீட்டில் உள்ள வெள்ளி, பித்தளை குத்து விளக்குகளையும் வெண்கல அகல் விளக்குகளையும் துடைத்து பொட்டிடுவர். 

தற்காலத்தில் பீங்கானால் செய்யப் பெற்ற அகல் விளக்குகளையும் பயன்படுத்துகின்றனர். மாலை ஆறு மணிஅளவில் மகாபலி சக்கரவர்த்தியை இறைவன் ஆட்கொண்ட நிகழ்வான அக்ஞானம் என்ற இருள் விலகி ஞானம் என்ற ஒளியை பெற்ற நிலையில் தீபங்களை ஏற்றுவர், ஒளிபெற்ற அத்துணை தீபங்களுக்கும் இறைவனுக்கும் கார்த்திகைப் பொரி என்ற நெல்பொரி உருண்டை, அவல்பொரி உருண்டை, இனிப்பு அடை, அப்பம், வடை, தேங்காய், பழங்கள், பூ, வெற்றிலை பாக்கு போன்றவற்றினைப் படைத்து வழிபாடு செய்வர். வாழ்வில் இருள் நீங்கி வெளிச்சம் தருமாறு வேண்டி விழுந்து வணங்குவர். பின்னர் பூச்சூடிய குத்துவிளக்குகளை கோலமிடாப்பட்ட நடு ஹாலில் வைப்பர், வாசலின் முன்பகுதியில் இருபுறமும் வைப்பர், அகல் விளக்குகள் ஒவ்வொன்றையும் வீட்டுக்குள்ளேயும், வாசல் திண்ணைகள், படிகள் கோலமிட்ட முற்றங்கள் மாடிப்படிகள், சுற்றுச்சுவர்களில் ஒரே சீராக இடைவெளிவிட்டு அழகாக வரிசையாக வைப்பர். அனைத்து வீடுகளிலும் வைக்கப் பெறும் இந்த தீப ஒளிக்காட்சியானது விண்ணுலகில் உள்ள சொர்க்கம் மண்ணுலகிற்கு வந்துவிட்டதோ என்று எண்ணும்படியாக இருக்கும்.

சிறுவர்கள் பூத்திரி, மத்தாப்பூ, பட்டாசு போன்றவற்றைக் கொளுத்தி மகிழ்வர், மேலும் கார்த்திகைப் பொரி என்ற நெருப்புப் பொரியை தன் தலைக்கு மேலாக வட்டவட்டமாக சுழற்றிக் கொண்டே தெருவெங்கும் செல்வர். அந்த காரிருளில் அந்த வளையம் வளையமான நெருப்புப் பொரியைப் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதன்பிறகே சிவாலயம், விஷ்ணுஆலயம் மற்றும் முருகன் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் இறைவன் முன்பாக சொக்கப்பனை என்னும் நிகழ்வினை நடத்துவர். பனை ஓலைகளைக்கொண்டு ஒரு கூடாரம் போல அமைத்து எரியவிடுவர், புறத்தில் எவ்வாறு வெளிச்சம் ஏற்படுகிறதோ அதே போல அகத்திலும் ஏற்படும் என்பதாகும்.

மூன்றாம் நாள்  பாஞ்சராத்திர தினம் மகாவிஷ்ணு ஜோதி வடிவாகத் தோன்றி உலகை காத்த தினமாக கருதி வைணவர்கள் அன்று தீபம் ஏற்றி கார்த்திகை பெருவிழாவைக் கொண்டாடுவார்கள். அன்று அனைத்துவீடுகளிலும் குப்பை கார்த்திகை என்று கொல்லைப்புறத்திலும் விளக்கேற்றுவார்கள்.

எது எவ்வாறு இருப்பினும் விளக்கேற்றுதல் என்பது வழிவழியாக வந்த நம்முடைய மரபாகும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது. இதன்மூலம் உடல் ஆற்றல், ஆன்மபலம் மன அமைதி கிட்டும் என்பது திண்ணம். அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

(கட்டுரையாளர் - பட்டதாரி ஆசிரியர், சக்கராப்பள்ளி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com