அறிவொளி எழுத்தறிவுப் பணி - கல்வி கலாசார எழுச்சி!

அறிவொளி மையங்கள் வெறும் எழுத்தறிவு மையங்களாக மட்டும் நடைபெறவில்லை; மாறாகக் கல்வி கலாசார மையங்களாக விளங்கின.
பரவும் அறிவொளி!
பரவும் அறிவொளி!

படி படி அண்ணே படி படி
அக்கா நீயும் படி படி
ஒன்றாகவே நன்றாகவே வென்றாகவே….
அடிவேர் துவங்கி நீ படி
உன்னுள் சுடரும் தீப ஒளி…

…என்ற பாடலில் தொடங்கி 1990-களில் நடைபெற்ற எழுத்தறிவு இயக்கமான அறிவொளி இயக்கத்தை யாராலும் மறக்க முடியாது. 

கிராமங்கள்தோறும் தன்னார்வத் தொண்டர்கள் மூலம், எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்குக் கல்வியை வழங்கும் நோக்கில் பயணித்த இயக்கம் அறிவொளி இயக்கம்.

பேராசிரியர்கள், ஆசிரியர்கள் தொடங்கிப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வரை தன்னார்வலர்களாகச் செயல்பட்ட காலம் அது.

அறிவொளித் தொண்டர்கள், கற்போர்களை மையத்துக்கு வரவழைத்து பட்டா, படி சொல்லித் தந்தது மட்டுமல்லாமல் அவர்களிடையே நடத்திய சுதந்திரமான உரையாடல்கள் இன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. 

குடும்ப உறவுகள் என்பதைக் கற்றுத் தந்ததே அறிவொளி இயக்கம்தான் எனலாம். எல்லோரும் அண்ணன், அக்கா, அம்மா, அப்பா , தம்பி, தங்கை என்ற உறவுகளுடன் அழைப்பதற்குப் பழக்கியதும் அறிவொளி இயக்கம்தான். இதுதான் அறிவொளியின் மிகப் பெரிய பலம்.

கற்போர் முதல் தொண்டர்கள் என அனைத்துக் குடும்பத்தினரிடமும் இரண்டறக் கலப்பதற்கு ஓர் அருமையான வாய்ப்பை அளித்தது அறிவொளி இயக்கம்.

கள்ளம் கபடம் இல்லாத கற்போர்கள், தொண்டர்கள், பெரியவர்கள், ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒரே குடும்பமாய் ஒருங்கிணைத்தது அறிவொளி. 

இனம், மொழி, மதம் என அனைத்தையும் கடந்து நின்றது அறிவொளி. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்களையும் நேசிக்க வைத்தது அறிவொளி. 

தொண்டர்கள் அறிவொளி தீபத்தில் உள்ள பாடப் பகுதிகளை நடத்தும்போது நடைபெற்ற உரையாடல்கள் ஏராளம். எழுதப் படிக்கத் தெரியாதது தவிர மிகச் சிறந்த கற்பனை உள்ளவர்களாகவும் படைப்பாளிகளாகவும் கற்போர்கள் திகழ்ந்தனர் என்பதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

ஏட்டிக்குப் போட்டி

மையங்களை உற்சாகமாக துவங்குவதற்கு தொண்டர் ஒரு விடுகதை கூறப் பதிலாகக் கற்போர்கள் சொன்ன விடுகதைகள் ஏராளம்.

பிணம் வேகும் 
துணி வேகாது.
அது என்ன?
                               (இட்டலி)

சின்னக் குதிரைக்கு
நூறு கடிவாளம்.
அது என்ன?
                              (நெசவுத்தறி)

குட்ட அக்கா,
குனிய வச்சா. 
அவள் யார் ?
                             (நெருஞ்சி முள்)

என வாழ்க்கையோடு தொடர்புடைய விடுகதைகளைப் போகிற போக்கில் விதைத்துச் சென்றார்கள்.

கிராமத்துக் களஞ்சியம்

விடுகதைகள் மட்டுமல்ல .புதிர்க் கணக்குகள், நாட்டுப்புறக் கதைகள் சொலவடைகள், கைமருந்துக் குறிப்புகள் என பல்வேறு களங்களிலும் கைதேர்ந்தவர்களாகக் கற்போர்கள் திகழ்ந்தனர்.

தங்கள் வாழ்வின் எதார்த்தங்களை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களால் சொல்லப்பட்ட சொலவடைகள் களத்தில் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். 

தாய் தவிட்டுக்கு அழுதாளாம்-மகள் 
இஞ்சிப் பச்சடி கேட்டாளாம்.

சேலை இல்லைன்னு
சின்னாத்தா வீட்டுக்குப் போனா 
அவ ஈச்சம் பாயைக் கட்டிக்கிட்டு 
எதுக்க வந்தாளாம்.

காட்டுக்காரன் சும்மா இருந்தாலும்
கணக்குப்புள்ளே
சும்மா இருக்க மாட்டான்.

எலும்பில்லாத நாக்கு
எங்கிட்டும் பேசும்!

என சொலவடைகள் நீள்கின்றன.

சந்தைக்கு வராத திறமைகள் அறிவொளியின் மூலம் மேடை ஏறி உள்ளன. கற்போர்களால் சொல்லப்பட்ட விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், சொலவடைகளைத் தொகுத்துப் புத்தகங்களாக்கி அவர்கள் கையில் சேர்க்கும்பொழுது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பயிற்சியும் திறனும்

எழுத்தறிவுப் பணிகளின்போது முக்கியமாக கேட்பதற்கும், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும், சுவாரசியமான பயிற்சிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. எழுத்துப் பயிற்சிக்காக வழங்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்கள் அவர்களிடையே விவாதங்களை உருவாக்கின. விவாதம் என்றால் அனல் பறக்கும் விவாதங்கள்.

வெறுமனே விவாதங்கள் மட்டும் நடைபெறாமல் புதிய கோணத்தில் முடிவெடுக்கும் திறன்களைக் கொண்டவர்களாகக் கற்போர்கள் வெளிப்பட்டனர். 

கல்வி கலாசார மையம் 

அறிவொளி மையங்கள் வெறும் எழுத்தறிவு மையங்களாக மட்டும் நடைபெறவில்லை. மாறாகக் கல்வி கலாசார மையங்களாக விளங்கின. மையங்களில் நாட்டுப்புறப் பாடல்களுக்கு பஞ்சமே இல்லை.

அண்டாவுத் தண்ணியிலே
துண்டலசி உணரப் போட்டேன் 
துண்டு உணருமுன்னே
துண்டுபட்டோம்
ரெண்டு பேரும்.

எனத் தம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வைப் பதிவிட்டதையும்,

கத்திரிக்காய் தோட்டத்திலே
காய் புடுங்கும் கன்னியம்மா
கார்த்திகை விரதத்துக்கு
காய் கொடு கன்னியம்மா… 

என்று கேட்கும் முறைமாமனுக்குப் பதிலாக

காயும் கொடுத்துடுவேன்
கலகலன்னு பேசிருவேன்
கட்டுனவன் என்னைக் கண்டால்
கண்டபடி ஏசுவாறே….

என்று பதிலடி கொடுக்கும் பாடல்கள் ஏராளம்.

வாசிப்பும் விவாதமும்

வாசிப்பிற்கும் கேட்பதற்கும் நிறைய வாய்ப்புகளை உருவாக்கியது அறிவொளி. அவர்கள் படிப்பதற்காக உருவாக்கிய  புத்தகங்கள் கேட்பதற்கு மட்டுமல்ல விவாதிக்கவும் அவர்களை மாற்றியுள்ளன. நல்லதங்காள் கதையை எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வாசிக்க, அதை கற்போர்கள் மட்டுமல்லாது ஊரே கூடி நின்று கேட்டதை மறக்க இயலாது. கேட்பதோடு மட்டுமல்லாமல் கதை குறித்த விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. 

அவர்கள் விவாதித்ததோடு மட்டுமல்லாமல் முடிவெடுப்பதற்கான திறனையும் பெற்ற நபர்களாக மாறினர் என்பதையும் மறுக்க முடியாது.

கடவுளுக்குக் கடிதம்

எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எழுதத் துடிக்கும் கைகள்   யாருக்கு எழுதுவது, எதை எழுதுவது என்று எண்ணும்போது ”கடவுளுக்கே கடிதம்” எழுதியவர்கள் நம் அறிவொளி கற்போர்கள்.

கடவுளுக்கு எழுதிய கையோடு கலெக்டருக்கும் கடிதம் எழுதினார்கள். சும்மா அல்ல. தங்கள் தேவைகளைக் கேட்டு. அதிகாரிகளையும் அசைத்தது அக்கடிதங்கள். கடிததங்களுக்குப் பலனும் கிட்டியது என்றால் பாருங்களேன்.

குடும்ப விழாக்கள்

குடும்ப விழாக்கள் என்ற பெயரில் அறிவொளி இயக்கத்தில் செயல்பட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் துவங்கி அறிவொளி கற்போர், தொண்டர்கள், முதன்மைப் பயிற்சியாளர்கள், வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்க வைத்து அறிவொளி குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்தியது அறிவொளி குடும்ப விழாக்கள்தான் .

குடும்ப விழாக்களில்தான் தன்னுடைய சந்தோஷமான நிகழ்வுகள், துக்கமான சம்பவங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

குடும்ப விழாக்களில்தான் கற்போர் மற்றும் தொண்டர்களின்  திறமைகளைக் கண்டறிய முடிந்தது.

'குடும்ப விழாக்களில்தான் 
எளிய திறமைகள் அரங்கேற்றப்பட வேண்டும்'

என்று அடிக்கடி சொல்வார் பேராசிரியர் ச. மாடசாமி.  அவர் சொன்ன அத்தனை விஷயங்களையும் பின்னாளில் களங்களில் காண முடிந்தது.

தொண்டர்களின் அபாரமான திறமைகள், கற்போரின் ஏராளமான திறமைகள் வெளிப்படும் இடமாக மாறியது அறிவொளி குடும்ப விழாக்களில்தான். 

கற்போர் மற்றும் தொண்டர்களின் விடுகதைகள், நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், சொலவடைகள் விளையாட்டுகள் என ஏராளமான திறமைகளையும் வெளிக்கொண்டு வந்ததும் மேடையேற்றி அவர்களைப் பாராட்டியதும் குடும்ப விழாக்கள். 

அறிவொளி ஒரு பரவசம். ஆண்டுகள் பல ஆனாலும், அந்த அனுபவங்கள் ஏதோ ஒருவகையில் இன்றும் நமக்குப் பல வழிகளில் வழிகாட்டி வருவது மறுக்க முடியாத உண்மை.

காலம் தந்த கலப்பையாட்டம்
எழுத்துகூட ஆயுதம்தான்...
ஒத்துமையா இருக்கணுன்னா
புத்தகத்தை நண்பனாக்கு...

என்று அன்று பாடிய பாடல் வரிகள் இன்றும் காதுகளில்  ஒலிக்கின்றன.

(செப். 8 - உலக எழுத்தறிவு நாள்) 

[கட்டுரையாளர் - தலைமையாசிரியர், ஆர்.சி. தொடக்கப்பள்ளி,
மனியம்பட்டி & மேனாள் (விருதுநகர் மாவட்ட)
அறிவொளி இயக்க மைய அலுவலகப் பொறுப்பாளர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com