அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!

அண்ணாமலை பேச்சு குறித்து செ.கு.தமிழரசன் கடும் விமர்சனம்
அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!

எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலம் வரை தொடர்ந்து அதிமுகவை வலுவாக ஆதரிப்பவர் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன். 1984}இல் தொடங்கி நான்கு முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். டாக்டர் அம்பேத்கரின் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் என்பது மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.எல்.ஏ.வாக பதவிப் பிரமாணம் செய்துவைத்த பெருமைக்குரியவர் செ.கு.தமிழரசன்.

மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் இருந்த அவர் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

மோடியா, இந்த லேடியா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தேர்தல் பரப்புரையில் எதிர்க்கப்பட்ட பிரதமர் மோடியை கூர்மையாக விமர்சனம் செய்யாமல் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தவிர்ப்பது ஏன்?

அரசியல் விமர்சனம் செய்வதில் ஒவ்வொரு தலைவருக்கும் தனித்தனி பாணி இருக்கும். மோடி}ஜெயலலிதா ஆகியோர் சம ஆளுமை உடையவர்கள். அதே முழக்கத்தை எடப்பாடி பழனிசாமியிடம் எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்? கூட்டணியில் இருந்து விலகியதே பாஜக எதிர்ப்பு என்றுதானே அர்த்தம்.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு பொதுத் தொகுதி ஒதுக்காத நிலையில் திமுகவுக்கு தலித் வாக்குகளில் பாதிப்பு ஏற்படுமா?.

பொதுத் தொகுதியில் தலித் ஒருவரை நிறுத்த திருமாவளவன் பொதுத் தொகுதியை கேட்டாரா அல்லது வேறொருவருக்கு கேட்டாரா என்பது ஊருக்கே தெரியும். தலித் எழில்மலையை திருச்சி மக்களவைத் தொகுதியில் துணிச்சலாக நிறுத்தி வெற்றிபெறச் செய்தவர் ஜெயலலிதா.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் பாரம்பரிய தலித் வாக்குகளை 2019, 2021 தேர்தல்களில் இழந்ததாகக் கூறும் அதிமுகவுக்கு இந்த முறை தலித் வாக்குகள் திரும்பி வருமா?

கடந்த இரு தேர்தல்களில் தலித் வாக்காளர்கள் மனநிலை மாறியிருக்கிறது. வேங்கைவயல் முதல் வேளச்சேரி வரை பல்வேறு விவகாரங்களில் தலித்துகளுக்கு திமுக அநீதி இழைத்துள்ளது. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்த முதல்வர் ஸ்டாலின், வேங்கைவயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. மனதில் ஆறாத வடுக்களுடன் இருக்கும் தலித்துகள் இந்த முறை அதிமுக கூட்டணிக்கு திரண்டு வாக்களிப்பார்கள். பாமக, பாஜக இல்லாததால் தலித்துகள் முழு விருப்பத்துடன் அதிமுகவை ஆதரிப்பார்கள்.

பாஜக விலகியதால் சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்குமா?

சிறுபான்மை மக்களிடம் மறுசிந்தனை உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஓரளவு சிறுபான்மை வாக்குகள் கிடைக்கும். பேரவைத் தேர்தலில் முழு ஆதரவை சிறுபான்மையினர் அளிப்பார்கள். நீண்ட நாள்கள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க திமுக அரசு ஆர்வம்காட்டவில்லை. அவர்களுக்காக பேரவையில் எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக குரல் கொடுத்துள்ளார்.

ஜூன் 4}க்கு பிறகு அதிமுக தலைமையில் மாற்றம் வரும், ஓபிஎஸ்}டிடிவி.தினகரன் கைகளுக்கு அதிமுக செல்லும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதை எப்படி பார்க்கிறீர்கள்?

பிற கட்சி உள்விவகாரங்களில் தலையிட்டு உடைப்பது, குழப்பத்தை ஏற்படுத்துவது பாஜகவுக்கு கைவந்த கலை. அதை அண்ணாமலையின் பேச்சு வெளிப்படுத்துகிறது. அதிமுகவின் 100 சதவீத தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது. அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்ற செயல்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி வியூகத்தில் அதிமுக பின்னடைவைச் சந்தித்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?

எடப்பாடி பழனிசாமி மிகுந்த ராஜதந்திரமாக செயல்பட்டுள்ளார். பாஜக, பாமகவை கழற்றிவிட்டதே மிகப்பெரிய ராஜதந்திரம். பாரம்பரிய வாக்குகள் மீண்டும் திரும்பி அதிமுக மீண்டும் மிகப்பெரிய வலிமை பெறும். மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

2019, 2021 தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது தலித் வாக்கு வங்கியை திமுக கூட்டணிக்கு கொண்டுசெல்லும் கிரியாவூக்கியாக திருமாவளவன் மாறியிருப்பது உண்மைதானே?

தலித் வாக்குவங்கியை ஓர் இயக்க ரீதியாக திருமாவளவன் மாற்றியிருக்கிறார் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம் போல தனித்த அடையாளத்துடன் தலித் வாக்கு வங்கியை இன்னும் உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை. 1952 முதல் 1962 வரையிலான தேர்தல்களில் தலித் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடிந்தது. இப்போது அதுபோன்ற நிலை இல்லை.

ஆதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் எனப் பிரித்து அரசியல் செய்வது தலித்துகளுக்கு சாதகமா இல்லை பாதகமா?

தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் திமுகவும்தான் இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கின்றன. இதற்கு தலித்துகள் இரையாகக் கூடாது.

எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்ததன் மூலம் தலித்துகளில் மிகவும் பின்தங்கிய அருந்ததியர் சமூகத்தில் இருந்து முதல்முறையாக உயர்ந்த அங்கீகாரத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

இதேபோல, பல்வேறு மாநிலங்களில் தலித்துகளில் பின்தங்கியவர்களுக்கு காங்கிரஸ் கட்சியும் பல்வேறு காலங்களில் அமைச்சர் பதவி வழங்கியுள்ளது. அடையாளப் பதவிகளால் ஆகப்போவது என்ன?

அமைச்சரவையில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை திமுக கொடுக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அமைச்சரவையில் எண்ணிக்கை அடிப்படையிலும், வலுவான துறைகள் கொடுக்காதது என்ற அளவிலும் தலித்துகளை திமுக புறக்கணித்துள்ளது என்பதுதான் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com