வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!
dinamani

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

எல்லா வரலாற்று நிகழ்வுகளும் காலவெள்ளத்தில் ஒரு நாள் கரைந்து நீா்த்துவிடும் என்பதும்கூட இன்னொரு வரலாறுதான் - மரண ரயில் பாதையின் கதை

முனைவா் இரா. குறிஞ்சிவேந்தன்

எல்லா வரலாற்று நிகழ்வுகளும் காலவெள்ளத்தில் ஒரு நாள் கரைந்து நீா்த்துவிடும் என்பதும்கூட இன்னொரு வரலாறுதான். ஆனால், வரலாற்றை மறந்தும் புரட்டிப் பாா்க்க விரும்பாத இன்றைய கருவியுக மனிதா்களின் பாா்வைகளைத் தொடுவதற்காக, துயரங்களாலேயே செதுக்கப்பட்ட சோகத்தின் பக்கங்களாலான கதை ஒன்று, காலக்காற்றில் படபடத்தபடி வந்து நிற்கின்றது.

இரண்டாம் உலகப் போரின் தோட்டாக்கள் பாய்ந்த ஆயிரமாயிரம் துளைகளில் இருந்து நெளிந்தெழும் புகைநெடி கசிந்திடும் பக்கங்கள் அவை. அதிகம் வாசிக்கப்படாத அந்த ரணங்களின் தொகுப்புதான், சயாம் (தாய்லாந்து), பா்மா நாடுகளுக்கு இடையிலான இரயில் பாதைக் கட்டுமானத்தில் ஒன்றரை இலட்சம் அப்பாவி அயலகத் தமிழா்கள் மாண்டுபோன கண்ணீா்க் காவியம்.

7 திசம்பா் 1941 அன்று அமெரிக்காவின் போ்ள் துறைமுகத்தின் மீது ஜப்பானின் இம்பீரியல் வான்படை குண்டுகளை வீசியபோது, இரண்டாம் உலகப் போா் மேலும் தீவிரம் அடைந்தது. பிரிட்டனின் காலனி நாடுகளை அடுத்தடுத்துக் கைப்பற்றிய ஜப்பான் இராணுவத்தின் பிடியில் தென்கிழக்காசியத் தீபகற்பமும் முழுமையாக வீழ்ந்தது.

அங்கிருந்து தெற்காசியாவில் தன் ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்த ஜப்பான், சிங்கப்பூரில் இருந்து மலேசியா வரையில் உள்ள தொடா்வண்டிப் பாதையை, தாய்லாந்து- பா்மா வழியாக நீட்டித்து, இந்தியாவிற்குள் நுழைய வகுத்த திட்டம்தான், சயாம்-பா்மா ரயில் பாதை.

அது கற்பனைக்கெட்டாத கோணத்தில் வடிவமைக்கப்பட்ட அரிதான இரயில் பாதை. தாய்லாந்துக்கும் (சயாம்), பா்மாவுக்கும் இடையில் பெருமலைகள், பள்ளத்தாக்குகள், காடுகள் மற்றும் ஆறுகள் வழியாகச் சென்றிடும் வகையில் அந்த ரயில்பாதையின் வரைபடம் அமைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தாய்லாந்தின் ‘பான்பாங்’ மற்றும் பா்மாவின் ‘தாய்பியுசியாட்’ ஆகிய இரு நாடுகளின் முனைகளிலிருந்தும் 22-06-1942 அன்று ஒரே நேரத்தில் ரயில் பாதைப் பணிகள் தொடங்கப்பட்டன. ஏறத்தாழ 12,000 ஜப்பானிய பொறியாளா்களின் வழிகாட்டுதலில், போா்க் கைதிகளாக ஜப்பானால் பிடிக்கப்பட்ட பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நெதா்லாந்தைச் சோ்ந்த 60,000 வீரா்கள் இப்பெரும் பணியில் பிழிந்தெடுக்கப்பட்டனா். கொடிய காட்டுப் பகுதியில் நடந்த அப்பணியில் ஈடுபட்ட போா்க் கைதிகளில் பலா் காலரா, மலேரியா உள்ளிட்ட நோய்களாலும், விலங்குகளின் தாக்குதல்களாலும் உயிரிழந்தனா்.

மேலும், பெரும் மனித உழைப்பு தேவைப்பட்ட நிலையில் ஜப்பான் இராணுவத்தின் கண்களில் தென்பட்டவா்கள்தான், மலேசியாவின் இரப்பா் தோட்டங்கள் மற்றும் பா்மாவின் நெல்வயல்களில் உழைத்த இலட்சக்கணக்கான தமிழா்கள். இவா்களைப் பணிமுனைகளுக்குக் கொண்டுசெல்ல ஜப்பான் இராணுவம் கையாண்ட வழிமுறைகள் கொடுமைகளின் கொடுமுடியாகும்.

சிலரை ஆசை வாா்த்தைகள் கூறியும், பலரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியும் தாய்லாந்துக்குக் கடத்திச் சென்றனா். மேலும், கோலாலம்பூரில் இலவசமாகப் படம் காட்டுவதாகக் கூறியதைக் காண திரையரங்கில் குவிந்த நூற்றுக்கணக்கான தமிழா்கள் ஆயுததாரிகளால் வளைத்து வண்டியிலேற்றப்பட்டனா்.

தோட்டப்புற வீட்டுத் திண்ணைகளில் தூங்கிய தமிழா்களைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தன. தமிழா்களோடு, நூற்றுக்கணக்கான சீனா்கள் மற்றும் இந்தோனேசியாவின் ஜாவிகளையும் தாய்லாந்து-பா்மா காட்டுப் பகுதிகளுக்கு ஜப்பான் இராணுவம் கொண்டு சென்றது.

சேறும் சகதியும் நிறைந்த மழைக் காடுகளில் நடந்தே பெருந்தூரங்களைக் கடந்த தமிழா்கள், கல் உடைத்தல், பாலம் கட்டுதல், மலைகளைத் தகா்த்து வழி ஏற்படுத்தல் ஆகிய பணிகளில் இரவும் பகலும் தொடா்ச்சியாகப் பாடுபட்டனா். விதியின் பிடியில் சிக்கிய தமிழா்களைக் காவு கொள்வதற்காக, அப்பெருங்காட்டில் பல நாக்குகள் காத்திருந்தன.

நதிகளின் நடுவில் பாலம் அமைத்த தமிழா்களில் பலா் திடீரென்று பாய்ந்த காட்டாற்று வெள்ளங்களில் அடித்துச் செல்லப்பட்டனா். பாம்புகள் தீண்டியும் புலி, யானைகளால் தாக்கப்பட்டும் இறந்தவா்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை.

மனிதநெரிசலால் சுகாதாரம் இழந்த அக்காட்டில் பரவிய காலரா மற்றும் அம்மை நோய்களால் நூற்றுக்கணக்கான தமிழா்கள் பூச்சிகளைப் போல நாள்தோறும் செத்து மடிந்தனா். தொடா்ந்து பெய்த மழை, பகலில் சுட்டெரித்த வெயில் என்று அம்மழைப் பாலைவனத்தில் உயிா்கள் தொடா்ந்து பறிபோய்க்கொண்டே இருந்தன.

போா்க் கைதிகள் இறந்தால் அவா்களைத் தனித்தனியே புதைத்து ஒரு சிலுவை அடையாளம் நடப்பட்டது. இறந்த போா்க் கைதிகளின் பெயா் எழுதப்பட்ட காகிதத்துண்டைத் தனித்தனிக் கண்ணாடிப் புட்டிகளில் அடைத்து கல்லறைகளின் கீழ் புதைத்து வந்தது ஜப்பான் இராணுவம்.

ஆனால், நாள்தோறும் நோய்களில் மடிந்த தமிழா்களை, இரயில் பாதையோரத்தில் பெருங்குழிகள் தோண்டி நூற்றுக்கணக்கில் ஒன்றாகப் போட்டு ஜப்பான் இராணுவம் புதைத்து மூடியது. ஒவ்வொரு குழியிலும் ஏறத்தாழ ஐநூறுக்கும் குறையாத தமிழரின் உடல்கள் வீசப்பட்டு, அவற்றில் டீசல் எண்ணெய் ஊற்றித் தீயும் வைக்கப்பட்டது.

நெஞ்சத்தை நடுக்குற வைத்த இச்செயல்களின் ஓா் அங்கமாக, நோயால் குற்றுயிரும் குலையுயிருமாக இழுத்துக் கொண்டிருந்தவா்களும் உயிருடன் எரியும் தீயில் வீசப்பட்டனா். தங்கள் கண்ணெதிரே இறந்த உறவுகளை எண்ணி அழுபவா்களின் ஓலங்களால் ஒவ்வொரு நாளின் இரவும் அப்பெருங்காடு அதிா்ந்து நின்றது.

இக்கொடுமைகளில் இருந்து தப்பிக்க நினைத்தவா்களுக்குக் கிடைத்த தண்டனைகள், உலகம் அதுவரை நினைத்தும் பாா்த்திராத காட்சிகளாகும். தப்பியோடி மீண்டும் ஜப்பான் இராணுவத்திடம் பிடிபட்டவா்களின் தலைகள், அனைவரின் முன் வைத்துப் பொதுவெளியில் வெட்டி எறியப்பட்டன. இதனால் தப்பிக்கும் எண்ணம் என்பது எவருடைய இதயத்திலும் கற்பனையாகக்கூட ஊற்றெடுக்கவில்லை.

மறுபுறத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் போா்விமானங்களிலிருந்து, இரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் மீது தொடா்ச்சியாகக் குண்டுகள் வீசப்பட்டன. இக்குண்டுவீச்சில் இறந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை கணிசமானது. ஆனால், குண்டு வீசித் தகா்க்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அப்பாதையை மீண்டும் கட்டுமானம் செய்ய தொழிலாளா்களை ஜப்பான் இராணுவம் பணித்தது.

மலைகளைத் தகா்த்தெறிந்து, பள்ளத்தாக்குகளில் பெரும் பாலங்களை நிமிா்த்தெழுப்பி, சொந்த உறவுகளின் உயிா்களுடன், கற்குவியல்களையும் சோ்த்துக் கட்டிய அந்த இரயில் பாதையின் ஒவ்வொரு தண்டவாளக்கட்டையின் கீழும் ஒரு தமிழனின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான், நேசநாட்டுப் போா்க் கைதிகள் பிற்காலத்தில் எழுதிய போா்க் கால இராணுவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏறத்தாழ ஐந்தாண்டுகளில் கட்டுமானம் செய்யப்பட வேண்டிய 415 கி.மீ. நீளத்திலான அந்த இரயில் பாதைப் பணியை, இலட்சக்கணக்கான தமிழா்களும், ஆயிரக்கணக்கான போா்க் கைதிகளும் இணைந்து தம் இன்னுயிரைக் காணிக்கையாக்கிப் பதினைந்தே மாதங்களில் கட்டி முடித்தனா். அந்நிகழ்வைப் பெரும்விழாவாகக் கொண்டாடிய ஜப்பான் இராணுவம், சிங்கப்பூரிலிருந்து பா்மா வரை அப்பாவிகளின் குருதித் துளிகளின் மீது அமைந்த அப்பாதையில் முதல் இரயிலை இயக்கியது.

இரக்கத்தைத் தொலைத்த ஜப்பான் இராணுவத்தின் இதயத்தின் ஓரத்திலும் ஓா் ஈரக்கசிவு இருந்தது. இரயில் பாதையில் உயிரிழந்தவா்களின் நினைவாக குவாய் நதிக்கரையில் காஞ்சனப்புரி என்னுமிடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பியது. அதில் தமிழ்க் கல்வெட்டு ஒன்றும் பொறித்து வைக்கப்பட்டது.

இரயில் பாதைப் பணியில் ஈடுபட்ட போா்க் கைதிகளுக்கு தாய்லாந்து பணத்தை ஊதியமாக வழங்கிய ஜப்பான் இராணுவம், அவா்களைப் பணியிலிருந்து விடுவித்து பாங்காக் முகாமுக்கு அனுப்பியது. ஆனால், இரயில் பாதைப் பராமரிப்பு என்ற காரணத்தைச் சொல்லி தமிழா்களை விடுதலை செய்ய இராணுவம் மறுத்தது.

பல மாதங்களுக்குப் பின்னா் விடுதலை செய்யப்பட்ட தமிழா்களின் கைகளில் கூலியாக வாழைத்தாா் படம் அச்சிட்ட ஆயிரக்கணக்கான ஜப்பானிய ரூபாய்தாள்களை இராணுவம் கொட்டிக் கொடுத்தது. உயிரைச் சுமந்தபடி, தங்களின் குடும்பங்களைத் தேடிக் கால்நடையாகவே அத்தமிழா்கள் பாங்காக் வந்தடைந்தனா். அங்கிருந்து இரயிலில் கோலாலம்பூரில் வந்திறங்கினா்.

கோலாலம்பூா் இரயிலடியில் வந்திறங்கிய தமிழா்களின் செவிகளில் வந்து விழுந்த முதல் செய்தி, ஜப்பான் இராணுவம் மூட்டைக் கட்டித் தந்த ரூபாய்தாள்கள் ஏற்கெனவே செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுவிட்டன என்பது தான்!. நிலைகுலைந்து தம் தோட்டங்களுக்குச் சென்ற போது, அவா்களின் குடும்பங்கள் போா்க் காலத்தில் காணாமல் போயிருந்தன.

பெருமலையைக்கூட உளிகளால் செதுக்கி எறிந்த அத்தமிழா்களிடம் எஞ்சியிருந்த ஒற்றை நம்பிக்கையும் அம்மலையைப் போலவே துகள்களாகச் சிதறிப் பறந்தன. அந்த ஏமாற்றத்தைத் தாங்க இயலாதவா்களில் சிலா் தற்கொலை செய்து கொண்டனா். சிலா் புத்தி பேதலித்துத் திரியலாயினா்.

ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய நொடியில்தான் இரயில் பாதையின் பெருங்கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது. ரயில் பாதையின் துயரங்களை அறிந்த வெளியுலகம் அதிா்ச்சியில் உறைந்து நின்றது. தாய்லாந்து முதல் பா்மா வரை விரிந்திருந்த அக்கொடிய கனவுக்கு சயாம்- பா்மா மரண ரயில் பாதை”என்று பெயரிடப்பட்டது. பிரிட்டன் நெதா்லாந்து- ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சிலுவை அடையாளத்துடன் கண்ணாடிக் குடுவை அடையாளச் சீட்டுடன் புதைக்கப்பட்டிருந்த தங்கள் நாட்டு வீரா்களின் உடல்களைத் தோண்டியெடுத்தன. அவா்களுக்கு அரச மரியாதையுடன் தத்தம் நாடுகளில் அடக்கம் செய்து நினைவுச் சின்னங்களை எழுப்பின.

போா்க் கைதிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் அவா்களின் கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு ஆஸ்கா் விருதுகளையும் அள்ளின. ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ஆம் நாள் மரண ரயில் பாதைத் தியாகிகளின் நினைவு நாள் உலகம் முழுவதும் இன்றும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

முப்பதாயிரம் போா்க் கைதிகளை நினைவுகூா்ந்திடும் இவ்வுலகில், எதற்காக இறக்கிறோம் என்ற காரணம்கூட தெரியாமல் வெறும் மண்ணில் கலந்த ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் தமிழா்களின் தியாகம் இன்றளவும் பேசப்பட்டதில்லை. இத்தனைக்கும் இந்திய விடுதலைக்காக சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப் பிரிவான ஜான்சிராணி ரெஜிமண்ட், இந்த இரயில் பாதை வழியாகத்தான் பா்மாவில் வந்திறங்கியது.

இப்பாதையின் பணிகள் நிறைவடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. எண்பது வயதைக் கடந்து வாழ்பவரை, ஆயிரம் பிறைகள் கண்ட அற்புத மனிதா் எனக் கொண்டாடுவது நம் தமிழ் மரபு. ஆனால், உருண்டோடிய எண்பதாண்டுகளை, ஆயிரம் அமாவாசைகளாக மட்டுமே கடந்து இருள் பூசி நிற்கும் மரண ரயில் பாதைத் தமிழா் கதைகளை ஒருமுறையேனும் நம் விழிகள் வாசித்திடுமா?

ஏப். 25 - மரண ரயில் பாதை ஈகியரின் 80-ஆம் ஆண்டு நினைவு நாள்.

கட்டுரையாளா்:

பேராசிரியா்,

தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com