ஆலும் பனையும்!

அத்தியும் ஆலும் பனையுடன் இணைந்து வளர்ந்திருப்பது பற்றியோர் ஆய்வுப் பார்வை...
ஆலும் பனையும்!

பனை மரம்

நெல்லை மாவட்டத்தில், பனைமரம் பற்றிய எத்தனையோ சொலவடைகள் உள்ளன. அவற்றில், “பனைமரத்தின் நிழலும் சரி, பகைவன் உறவும் சரி” என்பதும் ஒன்று. ஓராள் இருக்கும் அளவிற்குத்தான் பனை நிழல்தரும். அந்த நிழலில் அமர்ந்திருந்தால், சில நிமிடங்களில் நிழல் நகர்ந்து, வெயில் நம்மீது விழும். காரணம், சூரியன் நகரும்போது ஒடுக்கமான பனைநிழலும் வேகமாக நகர்ந்துகொண்டே இருக்கும். பனையின் நிழலை எப்படி நம்பி அமர முடியாதோ அப்படித்தான், பகைவன் நம்மை நேசக்கரத்துடன் நெருங்கிவரும்போது நம்பக்கூடாது. பனைநிழல் விலகுவதுபோல, பகைவனின் நெருக்கமும் மாறிவிடும் என்பதால் கவனமாகப் பழகவேண்டும் என்பது இச்சொலவடையின் உட்கருத்து.

பனையில் முளைக்கும் ஆல் (தோவாளை, குமரி மாவட்டம்)
பனையில் முளைக்கும் ஆல் (தோவாளை, குமரி மாவட்டம்)

என்னதான் ஓங்கி உயரமாக வளர்ந்தாலும், பனைமரம் ஒரு நபர் இருப்பதற்குக்கூட நிழல் தராது. இதனை வெளிப்படுத்தும் ஒரு நறுந்தொகைப்பாடல்:

“தேம்படு –பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க் கிருக்க நிழலா காதே”

( நறுந்தொகை-16)

தேன் போன்று இனிக்கும் திரண்ட பனம்பழத்தின் பெரிய விதை ஒன்று முளைத்து வான்நோக்கி வளர்ந்தாலும், ஒருவர் இருப்பதற்கான நிழலைக்கூட அப்பனைமரம் வழங்காது என்று சொல்கிறது, நறுந்தொகை பாடல்-16.

பழங்களிலேயே, அதிக தொலைவு மணம் வீசக்கூடிய பழம் பனம்பழம். பனையில் பழம் பழுத்துவிட்டால், தொலைவில் நாம் செல்லும்போதே பனம்பழத்தின் மணம் நம் மூக்கைத் துளைக்கும் மாத்திரமல்ல, அத்தனை சுவையாகவும் இருக்கும். பனம்பழத்தை அப்படியே சாப்பிடலாம், சுட்டும் சாப்பிடலாம்.

பனம்பழம் பற்றிய ஒரு குறிப்புப் புறநானூற்றுப் பாடலில் உள்ளது.

“……………………………………………………….. சிறாஅர்

தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்

குறைக்கண் நெடுப்போர் ஏறி, விசைத் தெழுந்து

செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும் “

(புறநானூறு, பாடல் 61, வரிகள் 8-11)

சமைத்த வாளை மீன் துண்டங்களோடு, வெண்ணெல் அரிசியின் சோற்றை விலாப்புடைக்க உண்ணும் உழவர்கள், கழனியில் ‘சூடு’ இருக்கும் இடம் தெரியாமல் தடுமாறுகின்றனர். அவர்களது சிறார்களோ, கீழே விழும் தேங்காய் நெற்றுக்களை வெறுத்து, அவர்களது தந்தையர் உருவாக்கியிருக்கும் உயரமான நெற்போரின்மீது ஏறி, பனம்பழம் பறிக்க முயன்றுகொண்டிருக்கும் காட்சியை இப்புறநானூற்றுப் பாடல் வெளிப்படுத்துகிறது.

பனைமரம் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் பலவிதங்களிலும் பயன்பட்டு, பண்பாடாகிப்போனது. பனை ஓலை, குருத்து, மட்டை, நார், பனை நாராலான பெட்டி, கயிறு போன்ற பயன்படு பொருள்கள், பாளை, பாளையிலிருந்து வடியும் கள், கள் தரும் பதநீர், பதநீர் தரும் கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்று எத்தனையோ விதங்களில் பனை, மக்களின் பயன்பாட்டில் இருந்துவந்திருக்கிறது. என்றாலும், பனைமரம் ஒருவர் அமர்ந்திருப்பதற்குக்கூட நிழல் தருவதில்லை.

ஆல மரம்

நாங்கள் ஆரம்பப் பள்ளியில் படித்தபோது அன்றைய ஆசிரியர்கள் நிறையக் கதை சொல்வார்கள். அதற்கென்றே ஒரு வகுப்பும் இருந்தது. அப்படிச் சொல்லப்பட்ட கதை ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது. அன்றைய காலங்களில் பயணம் என்பதே காலால் நடந்துசெல்வது என்பதாகத்தான் இருந்தது. அப்படி நடைப்பயணம் சென்றுகொண்டிருந்த ஒருவன், மிகப்பெரிய ஆலமர நிழலில் இளைப்பாற நினைக்கிறான். தனது கட்டுச்சோற்றைப் பிரித்து உணவருந்திவிட்டு, அடர் நிழலில் மல்லாந்து படுக்கிறான். கிளைகளில் ஒளிவீசும் ஆலம்பழங்களைப் பார்க்கிறான். இயற்கையின் படைப்பில் ஒரு முரண் இருப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது.

திருக்குறுங்குடி ஏரிக்கரையில் பனையில் முளைத்து, பனையைச்சூழ்ந்திருக்கும் ஆல்.
திருக்குறுங்குடி ஏரிக்கரையில் பனையில் முளைத்து, பனையைச்சூழ்ந்திருக்கும் ஆல்.

அவன் வீட்டுக் கொல்லையில் படர்ந்திருக்கும் பூசணிக் கொடியில், பெரிய பூசணிப் பழங்கள் காய்த்திருப்பது அவன் நினைவுக்கு வருகிறது. விரல் அளவுகூட இல்லாத பூசணிக் கொடியில் ஆள் உயர பழம் பழுக்கிறது. ஆனால், ஒரு படையே தங்கும் அளவு நிழல்தரும் இத்தனை பெரிய ஆலமரத்தில் ஏன் இத்தனைச் சிறிய பழங்கள் பழுக்க வேண்டும் என்று ஒருவித எள்ளல் உணர்வு அவனுக்குத் தோன்றுகிறது. அந்த வேளையில் அவனது நெற்றிப்பொட்டில் ஒரு ஆலம் பழம் விழுகிறது. ‘பொட்டில் அடித்தாற்போல்’ என்னும் பழமொழி வேலைசெய்ய ஆரம்பித்தது. ‘ஆகா, ஆலம் பழம், பூசணிப்பழம் அளவு பெரிதாக இருந்திருந்தால், இப்போது என் மண்டை உடைந்து சிதறியிருக்குமே’ என்று எண்ணிய வேளையில், இயற்கையில் அனைத்தும் காரண காரியத்தோடு மிகச்சரியாகவே படைக்கப்பட்டிருக்கிறது என்னும் ஞானம் வருகிறது. ஆலமரம் பற்றி நறுந்தொகைப்பாடல் கூறுவதைப்பார்ப்போம்.

“தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும் அண்னல் யானை

அணிதேர்ப் புரவி யாட்பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலாகும்மே”

( நறுந்தொகை-17)

ஆலமரத்தின் சிறிய பழத்தின் ஒரு விதை, மிகச்சிறியதாக, தெளிந்த நீர்க்குட்டையில் வசிக்கும் சிறிய மீனின் சினை முட்டை அளவே இருந்தாலும், அது முளைத்து விழுதுவிட்டு வளர்ந்து, பெரிய ஆலமரமாகும்போது, அதன் நிழலில் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படையுடன் வரும் மன்னன் தனது படையணிகளுடன் தங்குவதற்கான நிழலைக் கொடுக்கவல்லது.

பனைமரம் எப்படி ஆலமரத்தில் முளைத்தது?

அருகில் காடுகளைக்கொண்ட சிற்றூர்களில் வசிப்பவர்கள், ஆலமரத்தின் நடுவில் பனைமரம் வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்பார்கள். பனை விதை (பனங்கொட்டை) அளவில் பெரியது. மாறாக ஆல்விதை மிகமிகச்சிறியது. பனைவிதை முளைக்க வேண்டுமானால் நிறைய மண் வேண்டும். மண்ணில் முளைக்கும் பனைவிதை முதலில் கிழங்காகக் கீழ்நோக்கிச் செல்லும். குறைந்தது ஓர் அடி ஆழம் வரையிலும் கிழங்கு செல்லும். பிறகுதான் பீலி முளைத்து, வடலியாகி, பனையாக வளரும். அப்படிப் பனைமுளைப்பதற்கான சூழல் ஆலமரத்தில் இருக்கமுடியாது. பிறகு எப்படிப் பனை ஆலமரத்தில் முளைத்தது என்னும் கேள்வி எழுகிறது அல்லவா?

பனையில் முளைக்கும் அத்தி. (நாங்குநேரி – களக்காடு நெடுஞ்சாலை, நெல்லை மாவட்டம்)
பனையில் முளைக்கும் அத்தி. (நாங்குநேரி – களக்காடு நெடுஞ்சாலை, நெல்லை மாவட்டம்)

ஆலும், அத்தியும், அரசும், கட்டடங்கள், பாறை உள்பட பல இடங்களில் வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆல், அத்தி, அரசு விதைகள் மிக நுண்ணியவை என்பதாலும், ஆலம் பழம், அத்திப்பழம், அரசம் பழத்தைத் தின்னும் பறவைகள் எச்சமிடும்போது, இம்மரங்கள் வளர்கின்றன. அப்படித்தான் பனைமரத்தின் மட்டை இடுக்கில் விழும் ஆல் விதை, மழைநீரில் முளைத்து வேர்விட்டு, பனையைச் சுற்றி வளர ஆரம்பிக்கிறது. காலப்போக்கில் ஆலமரம் முற்றிலும் பனைமரத்தைச் சூழ்ந்துவிடுகிறது. பிற்காலத்தில் அதனைப் பார்க்கும் வழிப்போக்கன் ஆலமரத்தில் பனை முளைத்திருப்பதாக எண்ணிவிடுகிறான். உண்மையில் பனை மரத்தில்தான் ஆலமரம் வளர்ந்திருக்கிறது. சுருக்கமாகச்சொன்னால், பனை காலத்தால் முந்தையது. ஆல் காலத்தால் பிந்தையது. இயற்கையின் இத்திருவிளையாடல், நம் வாழ்விலும் பல இடங்களில் பொருந்திப்போவதுண்டு. வந்தேறிகள், மண்ணின் பூர்வ குடிகளை அடக்கி ஆளுவதை ஒரு சான்றாகக் கூறலாம்.

ஆலமரத்தில் மட்டுமல்ல, அத்தி மரத்திலும், அரச மரத்திலும் கூட பனை முளைத்திருப்பது போன்று தோற்றம் காட்டுவதுண்டு. காரணம், ஆல்போல், அத்தி, அரசு விதைகளும் நுண்ணியவையே. அவையும், பறவைகளின் எச்சத்தால் அல்லது வீசும் காற்றால் பனையில் விழுந்து முளைத்து வேர்விட்டு வளர்ந்து, பனையைச் சூழ்ந்து அத்தி மரத்திலும், அரச மரத்திலும் பனை வளர்ந்திருப்பதுபோன்ற தோற்ற மயக்கத்தைத் தருவதும் உண்டு. பனையில் ஆலும், அத்தியும் முளைத்திருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால், பனையில் அரசு முளைத்திருப்பதை அல்லது அரசமரத்தில் பனை இருப்பதை நான் இதுவரையிலும் நேரில் கண்டதில்லை.

ஆனாலும், சமீபத்தில் ஒரு விடியோ பார்த்தேன். அதில் அரசமரத்தின் நடுவில் பனைமரம் உள்ளது. ஓர் இளம்பெண், அரசமரத்தில் ஏறி, பின் பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்டுவதைக் காட்டும் விடியோ. ஆக, ஆல், அத்தி, அரசு ஆகியவற்றின் நுண்ணிய விதைகள், பனையில் விழுந்து வளர்ந்து பனையைச் சுற்றிச் சூழ்ந்து ஆலமரத்திலும், அத்தி மரத்திலும், அரச மரத்திலும் பனைமரம் முளைத்திருப்பது போன்ற காட்சி மயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன என்பதுதான் உயிரியல் உண்மை.

ஆலமரத்தின் பெரிய கிளையில் பனை முளைப்பதுண்டு என்று தாவரவியல் பேராசிரியர் கூறியிருப்பதாக ஒரு நண்பர் முகநூலில் பின்னூட்டம் இட்டிருந்தார். இந்தப் பேராசிரியர் எங்கே, எப்படிப் பார்த்தார் என்பதற்கான பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், இதுவரையிலும், நான் பார்த்த பனை மரங்கள் அனைத்தும், ஆலமரத்தின் நடுவிலேயே காணப்படுபவை. அது, பனையில்தான் ஆல் முளைத்தது என்பதை உறுதி செய்கிறது. தவிரவும், என்னதான் பெரிய கிளையாக இருந்தாலும், அதில் ஒருவேளை பனை முளைத்திருந்தாலும் அது எப்படி வேர்விட்டு வளரும்? பனை ஒட்டுண்ணித்தாவரம் அல்ல. அதனால், பனை வேர்கள் ஆலமரக்கிளைக்குள் பரவ முடியாது. பிறகு எப்படிப் பனை வளர்வதற்கான உணவு கிடைக்கும்?

பனை மரத்தின் வேர்கள் நீண்ட தொலைவு, நிலத்தில் ஊடுருவிச் சென்று நீர் சேகரிக்கும் தன்மை கொண்டவை. அதோடு, அப்படிச் சேகரிக்கும் நீரை, வீணாகாமல் பாதுகாக்கும் பண்பும் கொண்டவை. அதன் காரணமாகப் பனை மரங்கள் வறட்சியைத் தாங்கும் பண்பு கொண்டவை. அதனால்தான் நம் முன்னோர்கள் பனை மரங்களை ஏரிக்கரைகளிலும், குளத்தங்கரைகளிலும் வரிசையாக வளர்த்தார்கள். ஆலமரத்தின் கிளையில் பனை முளைத்திருந்தால் அதன் வேர்கள் எங்குச் சென்றிருக்கும்? எப்படிச் சென்றிருக்கும்?

தவிரவும், முழு பனையைத் தாங்கும் வலிமை ஆலமரத்தின் கிளைக்கு இல்லை. பனைமரம், ஆலமரம்போல் விழுது விடுவதும் இல்லை. ஆக, ஆலமரத்தின் பெரிய கிளை அல்ல, பெரிய ஆலமரத்தின் நடுவில்கூட பனை முளைப்பதற்கு வாய்ப்பே இல்லை. இனிமேல் நீங்கள் பயணிக்கும் வழியில் எங்கேனும் இப்படி ஆல், அரசு, அத்தியின் நடுவில் பனைமரம் இருந்தால், அருகில் சென்று ஆய்வுக் கண்கொண்டு பாருங்கள்.

[கட்டுரையாளர் - இயற்பியல் பேராசிரியர் (ஓய்வு)]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com