மனதை உலுக்கும் மறக்க முடியாத நாவல் தூப்புக்காரி

சமூகத்தின் கண்களைக் கோடரி கொண்டு திறக்க வைக்கும் முயற்சியாக உருவான நாவல் தூப்புக்காரி
தூப்புக்காரி
தூப்புக்காரி

தமிழ் எழுத்துலகில் சில நாவல்கள் மின்னலடித்தாற்போல, முற்றிலும் புதியதொரு களத்தின் பின்னணியில் வெளிப்படும். அந்த எழுத்தாளரே நினைத்தாலும் அப்படியொன்றை மீண்டும் எழுத முடியாதென்கிற அளவில் இருக்கும் அதன் வீச்சும் தாக்கமும். அந்த வரிசையிலான ஒன்றுதான்   தூப்புக்காரி.

ஊரின் ஒட்டுமொத்த கழிவுகளையும் அள்ளி அகற்றும் மனிதர்களின் வாழ்வியல் பின்னணியில் நாற்றமே வாழ்க்கையான சிலரைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளதுதான் இந்தக் கதை.

தூப்புக்காரி நாவலின் ஆசிரியர் மலர்வதி. 2008 ஆம் ஆண்டு 'காத்திருந்த கருப்பாயி' என்ற புதினத்தின் மூலம் எழுத்துலகில் அறிமுகமானார். இவரது இரண்டாவது புதினம் 'தூப்புக்காரி'. 2012 ஆம் ஆண்டு இந்த புதினம் சாகித்திய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருதைப் பெற்றபோது இவர் பலராலும் அறியப்பட்டார்.

உலகம் கொஞ்சமும் விரும்பாத விளிம்பு நிலை, கடைநிலை மக்களை தனது எழுத்தின் அச்சாணியாகக் கொண்ட மலர்வதி,  'பூமி மடியை சுத்தப்படுத்தும் உயர்ந்த மனிதர்களுக்கு..' புத்தகத்தை அர்ப்பணித்திருக்கிறார். 

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்முறையை எந்த அலங்காரமும் இன்றி அதே நாற்றம், அழுக்குடன் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார். புத்தகத்தை கையிலெடுத்த வாசகர்களையும், விளக்குமாறும், பிளீச்சிங் பவுடருமாக அலையும் துப்புரவுத் தொழிலாளர்களோடு முழுக்க முழுக்க  அலையவிடுகிறார். பல இடங்களில், கழிப்பறைகளின் நாற்றமும் காணச் சகிக்காதவற்றையும் கண்முன்னே கொண்டு வருகிறார்.

இது ஒரு காத்திரமான தலித்திய நாவல்; தீவிரமான பெண்ணிய நாவல் என்று  மதிப்புரையில் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் பொன்னீலன்.

துப்புரவுத் தொழிலாளியின் தொழில் சூழலின் தனித்தன்மை மிகுந்த  உக்கிரத்துடன் நாவலில் உணர்த்தப்படுகிறது என்று மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

புதினத்தைப் பற்றி மலர்வதி பேசுகையில், தூப்புக்காரி ஒரு வகையில்  தலித்தியம் பேசினாலும், முழுக்க முழுக்கப் பெண்ணியப் புதினமே. ஊரின் ஒட்டுமொத்த கழிவுகளையும் அள்ளும் மனிதர்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை யோசிக்கையில் என்னுள் பிறந்தவளே தூப்புக்காரி. இம்மக்களின்  தொழில் ரணங்களையேனும் அறிந்து கொள்ளட்டுமே, சிறிதளவேனும் நாற்றம் என்பது என்ன என்பதை மக்கள் உணரட்டுமே என்கிற உத்வேகத்தில் எழுதியதே தூப்புக்காரி என்கிறார்.

யார் இந்த தூப்புக்காரி?

இறந்த கணவரின் மருத்துவக் கடனைத் தீர்க்க மருத்துவமனையிலேயே தூப்புக்காரியாக மாறும் கனகம், மகள் பூவரசி, மருத்துவமனையில் குப்பை வாரும் மாரி, இத்துணை நாற்றத்துக்கும் இடையே பூக்கும் காதலாக மனோ என கதைமாந்தர்களும் என்றோ ஒரு நாள் நாம் கடந்து  சென்றவர்களைப் போன்றே புதினம் முழுவதும் விரிகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியான கல்லுவிளைதான் கதைக்களம். தான் ஆசைப்பட்டவளைக் கோழைத்தனத்தால் விட்டுவிட்டு வெளிநாடு சென்று திரும்பிய மனோ, பூவரசியைத் தேடுவதிலிருந்து பின்னோக்கி நகர்கிறது கதை.

ஒட்டுமொத்த கதையும் மகி என்ற தனியார் மருத்துவமனையில்தான், அல்ல கழிப்பறையில்தான் நகர்கிறது. அங்கு தூப்புக்காரியாக இருக்கும் கனகம், வெறும் தேயிலை வெள்ளத்தைக் குடித்து காற்றை சுவாசித்து உயிர்வாழ்கிறார். இவரது மகள் பூவரசி, கழிப்பறையைச் சுத்தம் செய்து அழுக்காகும் தாயின் ஒரே துணை. எக்காரணத்தினாலும் தன் நிலை மகளுக்கு வரக் கூடாது என்ற ஒரே வைராக்கியம்தான் கனகத்துக்கு. பூவரசி - அதே ஊரைச் சேர்ந்த மனோ மீது காதல் கொள்கிறாள்.  மறுபக்கம் பூவரசி மீது அதே மருத்துவமனையில் குப்பைகளை அள்ளும்  மாரிக்கும் ஆசை. ஆனால், மாரி தன் மகளைப் பார்ப்பதைக்கூட கனகத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. காரணம், அதே தொழில். அதே நாற்றம். 

ஒருபக்கம் தாயின் நிலை, மறுபக்கம், வயது செய்யும் வேலையாக காதல்.. 'எல்லாம் ஒரு காலத்துக்குத்தான். அதுக்கப்புறம் வாழ்க்கையோட வலிதான் பெருசா தெரியும். ஒடம்புண்ணா என்ன நினைச்ச மோளே. ஆகக் கூடி கொஞ்சம் சொப்பனங்களை சுமக்கிற சொப்பனக்கூடுதான் தேகம்' என மகளுக்குக் கனகம் சொல்லும் வார்த்தை எக்காலத்துக்கும் பொருந்தும் யதார்த்தம்.

மனோவின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் தாய்க்கு ஒத்தாசையாகச் சென்று பூவரசி படும் வேதனை, அப்போது நான் இருக்கிறேன் என மனோ வருவான் என்று நினைக்கும்போது, வந்தவன் என்னவோ மாரிதான். இதனை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர்.

கனகம் உடல்நலமிழந்து அதே மருத்துவமனையில் படுத்துக்கிடக்கும்போது, தாயின் தூப்புக்காரி வேலையைப் பூவரசி செய்யும் நிலை ஏற்பட.. வீட்டுலண்டு வரம்ப அம்மையிக்க நீல கலரு யூனிபாமை சீலையை எடுத்துட்டு வா. நாளையிலண்டு நீ தூத்து வார.. போ.. ணு.. ம்.. என்கிறார்  கனகம் நா  தழுதழுக்க. அதில், இயலாமையால் தவிக்கும் அனைத்துப் பெண்களின் வலியும் உணர்த்தப்படுகிறது.

கனகம் இறந்தபோது, வாழ்வில் கிடைக்காத பல்வேறு சௌகரியங்கள் சவப்பெட்டியில் கிடைக்கப் பெற்றுக் கிடந்த தாயின் உயிரற்ற உடலையே பார்த்துக் கொண்டிருந்தாள் பூவரசி எனும் வார்த்தைகள் ஈட்டி முள்போல தைக்கின்றன. 

மனோவுடனான காதல் மலர்ந்து இணைந்து உதிர்கிறது. பிறகுதான்  அழுக்கான மாரியின் மணம் வீசுகிறது. 

பூவரசியைப் பற்றி தெரிந்தும் ஏற்றுக்கொள்கிறான் மாரி, தன் மகளைச் சாக்கடை அள்ள விடமாட்டேன், சாக்கடை அள்ளும் இயந்திரம் கண்டுபிடிக்க வைப்பேன் என்பதில் எண்ணற்ற கடைநிலைத் தொழிலாளர்களின் வைராக்கிய வார்த்தை வெளிப்படுகிறது. ஆனால் இந்த வாழ்க்கையும் கனவாகி, பூவரசியைத் தூப்புக்காரியாக்குகிறது கதை.. ஆனால், இந்த தூப்புக்காரி மகளின் வாழ்வை மீட்டெடுப்பாள் என்ற நம்பிக்கையோடு நிறைவு செய்கிறது.

எளிய கனவுகள் நிரம்பிய தூப்புக்காரி (துப்புரவுப் பணிப்பெண்) மகள்  பூவரசியின் வாழ்க்கை, எதிர்கொள்ளும் சம்பவங்களால் எவ்வாறெல்லாம் செல்கிறது என்பதன் ஊடாகக்  கடையர்களிலும் கடையர்களான  துப்புரவுத் தொழிலாளர்களின் தொழில் சூழலும் வாழ்க்கையும் பேசப்படுகிறது.  

நாவல் நெடுக பூவரசியிடம் அவள் தாய் கனகமும் ரோஸ்ஸிலியும் கூறுகிற வரிகள் எல்லாம் வலிகளை உரைப்பவை; பெரும் அதிர்வுகளை  ஏற்படுத்துபவை.

ஒரு கழிப்பறையைக் கழுவி முடித்தபின் மாரிக்குத் தோன்றுகிற திருப்தியும் அடுத்து வரப் போகிறவனுக்காகப் படுகிற நிம்மதியும் உழைப்பின்  மேன்மையையும் அவன் மதிப்பையும் காட்டுகின்றன.

ஆரு ஒதுக்கினாலும் தள்ளினாலும் இது மதிப்புமிக்க தொழிலுண்ணு பெருமைப்படத் தெரியணும். அப்பதான் கக்கலும் வராது, அருவெருப்பும் வராது என்ற மாரியின் சொற்களும் முதன்முதலில் கழிப்பறை கழுவச் செல்லும்போதும் கழிவுத் துணிகளை அலசும்போதும் பூவின் மனவோட்டங்களும் சிறப்பான விவரணை.

பெரும்பாலான இடங்கள் வட்டாரப் பேச்சு வழக்கில்  இடம்  பெற்றிருந்தாலும்கூட வாசிப்பில் தடங்கலின்றி மனதுக்கும் மக்களுக்கும் நெருக்கமாகவே நாவல் செல்கிறது.  

நாவலைப் படித்து முடிக்கும்போது மனம் கனக்கிறது. தூப்புக்காரப்  பெண்களின் முகங்கள் தொடர்ந்து நிழலாடிக்கொண்டிருக்கின்றன.

மனிதநேயமும் அறச்சீற்றமும் கொண்ட இந்த நாவலைப் பள்ளிகளில் பாடமாக வைத்தால் நாளைய சமுதாயம் மனிதத்தை உணரும்; முகம் சுழித்து, மூக்கைப் பொத்திக் கண்டுங்காணாமல் கடந்த மனிதர்களைப் பற்றிய மதிப்பீடுகளும் மாறும். 

துப்புரவுத் தொழிலாளர்களை இன்னமும் மனிதர்களாகக் கூட பார்க்காத இந்த சமூகத்தின் கண்களைக் கோடரி கொண்டு திறக்க வைக்கும் முயற்சியாக இருக்கிறது தூப்புக்காரி.

தூப்புக்காரி - மலர்வதி, பக்கம் - 184, விலை ரூ. 225; கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014, 91- 44 - 42009603.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com