கூழாங்கல் - திரைப்பட அனுபவங்கள் - நூல் அறிமுகம் | விமர்சனம்

எண்ணற்ற விருதுகளைப் பெற்று இந்தியாவின்  சார்பாக ஆஸ்கர் விருது விழாவுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம் "கூழாங்கல்" பற்றி...
கூழாங்கல்.. நூல் அறிமுகம்
கூழாங்கல்.. நூல் அறிமுகம்
Published on
Updated on
2 min read


தமிழ்த் திரையுலகை உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் சென்று, இந்தியத் திரையின் புதுமையான படைப்பாக  உருவெடுத்து, 'ரோட்டர்டேம் டைகர் விருது' உள்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்று இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருது விழாவுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம் "கூழாங்கல்".

புதிய இயக்குநர் வினோத்ராஜ் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகின் போக்கை புதிய திசைக்கு கொண்டுச் சென்றுள்ளார். அவருடைய தலைமையில் இந்தப் படத்திற்காகப் பங்காற்றியவர்களில் ஒருவரான அரவிந்த் சிவா தனது  அனுபவங்களை இங்கே நூலாகத் தந்துள்ளார்.

படத்தின் பெயர்வரிசை (title) திரைப்படத்தில் வரும்போது அந்தக் காலத்தில்  "கதை இலாக்கா" என குறிப்பிடுவது போல இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ்  பங்களித்தவர்களை "இயக்குநர் குழுவினர்" என தலைப்பளித்துள்ளார். 

இயக்குநர் குழுவினர் எந்தெந்த வகையில் ஒரு படத்தின் தயாரிப்பில்  பங்காற்றுகின்றனர் என்பதைத் திரைப்பட உலகம் அறியும். ஆனால், அதனை நூலாகப் பரந்தளவில் வாசகருக்கும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் திரை உலக உதவி இயக்குநர்களுக்கும் தருகிறது இந்நூல். இது திரையனுபவமாக  மட்டுமல்லாது "கூழாங்கல்" படத்தைப் போல ஒரு சமூக அனுபவமாக  அமைந்துள்ளது.

மதுரை, மேலூர் அருகிலுள்ள அரிட்டாபட்டியில் படம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்குச் செல்வதற்காக மேலூரில் தங்கியிருந்த வீட்டில் இருந்து மூன்று இரு சக்கர வாகனமும் ஒரு சிறிய ரக சரக்குந்தும் (டாட்டா - குட்டியானை ) பயன்படுத்தப்பட்டதில் இருந்து, மேலூரில் பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்திப் படக்குழுவினர்  படப்பிடிப்புக்குத் தயார் ஆனதிலிருந்து, இயக்குநர் வினோத்ராஜின் அம்மா - அக்காள்கள் உணவு   தயாரித்துப் படக்குழுவினருக்கு அளித்தது வரை பல செய்திகள் இந்தக் கூட்டுத் தயாரிப்பின் எளிய பின்னணியை எடுத்துச் சொல்கின்றன.

படத்தின் பெரும்பாலானவர்கள் அந்தப் பகுதி மக்களே. அவர்களை அணுகி படப்பிடிப்பு இடத்துக்கு கொண்டுசேர்த்த வலிகளை, எளிய மக்களின்  ஆர்வத்தைப் பல நிகழ்வுகளின் வழி  சொல்கிறார் அரவிந்த் சிவா.

படத்திற்கு மொட்டைத் தலையுடன் உள்ள ஒரு வயதான பெண்ணைத் தேடியபோது தானாக முன்வந்து வீட்டுத் திண்ணையிலேயே மொட்டை போட்டுக்கொண்ட வயதான பெண்மணியிலிருந்து, அறிவிக்கப்படாத மக்கள் தொடர்பு அலுவலராக மாறி உதவிய பூமாலை எனும் பெண்ணிலிருந்து,  கதையின் நாயகனாக நடித்த நாடகக் கலைஞர் கருத்தடையான், இணை நாயகனாக நடித்த சிறுவன் செல்லப்பாண்டி ஆகியோரைத் தெரிவு செய்த விதம் பற்றியும்  இயல்பான மொழியில் விவரிக்கிறார்.

படப்பிடிப்புத் தளங்களில் நிகழ்ந்த சுவையான, சோகமான செய்திகளையும் இயக்குநரின் கோபத்துக்கு ஆளாகிக் கோபித்துக்கொண்டு ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பியதையும் தொடக்க நிலையிலிருந்து படத்தின் இறுதி வரை இயக்குநருடன் தனது பயணத்தை வெவ்வேறு வகையில் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர்.

கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போன மனைவியைக் கூப்பிட, பள்ளிக்கூட வகுப்பறையிலிருந்து அழைத்துக் கொண்டுச் சென்று மாலை வீடு திரும்பும் வரை நடக்கும்.. ஆம் நடந்து நடந்து அப்பாவும் மகனும் செல்லும் நிகழ்வுகளே "கூழாங்கல்" திரைப்படம். 

திரைமொழியை மூலதனமாகக் கொண்டு சமூகத்தின் பல அவல நிலைகளை க் காட்சிகளாக  வடித்துப் புதுமை செய்த "கூழாங்கல்" திரைப்படத் தயாரிப்பின் ஊடாக நடந்த பல நிகழ்வுகளை, 'கற்றது தமிழ் 'ராம் உள்ளிட்ட பலருடைய உதவிகளை, இயக்குநர் வினோத்ராஜ்  குழுவினரின்  மன உறுதிகளை, உழைப்பை எளிய உரைநடையில் பேச்சுமொழியில் எடுத்துரைக்கிறது அரவிந்த் சிவாவின் இந்த நூல்.

கூழாங்கல் - திரைப்பட அனுபவங்கள், பக்கங்கள் - 112, விலை - ரூ. 150, நாடற்றோர் பதிப்பகம், 16, வேங்கடசாமி சாலை கிழக்கு, இரத்தின சபாபதிபுரம், கோயம்புத்தூர்- 641 002, செல் - 94435 36779.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com