கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பிரச்னைகளும் தீர்வுகளும்!

கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தின் பிரச்சினைகளும் தீர்வுகளும் பற்றி...
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து  முனையமானது பல்வேறு எதிர்மறை விமர்சனங்களைப்  பெற்றுக்  கொண்டிருக்கிறது. இதற்கான முதன்மையான காரணம், சென்னை  மாநகரிலுள்ள மக்கள் எளிதாக அணுக முடியவில்லை என்பதே. கிளாம்பாக்கத்தின் பிரச்னைகள் என்ன? தீர்வுகள் என்னென்ன?

சென்னையை அடுத்த வண்டலூா் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் ரூ. 400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 30-ம் தேதி திறந்துவைத்தார்.

பொதுவாக உலக அளவில், பெருநகர வெளி வட்டாரத்தில் உள்ள புறநகர்ப் பேருந்து முனையத்திலிருந்து கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துவதற்கு, கீழே குறிப்பிட்டிருப்பது போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும். 

• கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு அருகே மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

• பல்வேறு பகுதிகளிலிருந்தும், அதிகமான பயணிகள் வரும் பகுதிகளில் இருந்து அதிகமான பேருந்துகளும் இயக்கப்பட்டு போக்குவரத்து இணைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

• பல்வேறு வாகன பயண முறைகள், இணைப்பு இடங்கள் அமைத்தல், ஆங்காங்கே டிக்கெட் எடுப்பதால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, ஒருங்கிணைந்த பயண டிக்கெட் அமைப்புகள் ஏற்படுத்துதல் வேண்டும்.

• ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டமிடல் முறைகள் அமைக்க வேண்டும். 

• முக்கிய இடங்களுக்கு  சிறு பயண  வாகன சேவைகள் அளித்தல், பல்வேறு வகையான போக்குவரத்து முறைகளை ஊக்குவித்தல் வேண்டும். 

• அதிகத் திறனளவு கொண்ட வாகன சாலைகள் அமைத்தல், அதிகத் திறனளவு கொண்ட சுங்கச் சாவடிகள் போன்றவை அமைக்கலாம். 

• சுங்கச் சாவடிகளில் பேருந்துகளுக்கான பிரேத்யேகமான வழித்தடங்கள் அமைத்தல், இருசக்கர வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளும் வழிமுறை மற்றும் இருசக்கர வாடகை சேவைகள் ஏற்படுத்த வேண்டும்.

• குறு வாகன பயண அமைப்பு தீர்வுகள், கார்  பங்கீட்டு முறை அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். 

• நிகழ்நேர தகவல் அமைப்புகள் அளித்தல், சமூக ஈடுபாட்டுக்கான தளம் அமைத்துத் தீர்வு காணுதல், வாகன மற்றும் பயணத்திற்கான பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்ய வேண்டும். 

• வாகன மற்றும் பயணத்திற்குத் தேவைப்படும் அனைத்து தொழில்நுட்பங்களை இணைக்கும் ஸ்மார்ட் டெக்னாலஜி ஒருங்கிணைப்பு முறைகள் ஏற்படுத்துதல். 

• பல்வேறு வாகன நிறுத்த முறைகள், இணைப்பு இடங்கள்  அமைத்தல், பேருந்து போக்குவரத்துக்கு தனிச்சாலை பாதைகள், பேருந்து சிக்னல் முன்னுரிமைகள் அளிக்க வேண்டும். 

• சிறப்புக் கால மற்றும் அதிக நெரிசல் இருக்கும் காலத்திற்கான வாகன திட்டமிடுதல். 

• சிறுவாகன நிறுத்தம் செய்து பயணிக்கும் முறை, உள்ளாட்சி நிர்வாகங்களின் மூலம் முக்கிய சாலைக்கு இலவச சிறு வாகன சேவை அளித்தல் போன்றவையும் மேம்படுத்த வேண்டும்.

கிளாம்பாக்கத்தில் இப்போதைய குறைபாடுகளும் தேவைப்படும் உடனடி சேவைகளும்

மேற்குறிப்பிட்ட சேவைகளில், தற்போது வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர்ப் பேருந்து  நிலையம் வரும்  மக்கள் சென்னை பெருநகரத்தினுள் எளிதாக செல்ல மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவை என நேரடியான இணைப்பு இல்லை என்பதும் பல்வேறு வாகன பயண முறைகள் இணைப்பு இடங்கள் அமைத்தல் (Setting of Mobility Hubs), ஒருங்கிணைந்த பயண டிக்கெட்டிங் அமைப்புகள் (Integrated Ticketing Systems) இல்லை என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

இதுபோன்ற திட்டங்களை அமைக்க அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அவற்றை நிறைவேற்ற சில காலம் ஆகும். இப்போதுள்ள சூழ்நிலைக்கு உடனடியாக என்ன தேவைப்படுகிறது என்ற சில தீர்வுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி. சாலையிலிருந்து  பூந்தமல்லி மற்றும் ஆந்திர சாலைகளுக்கு எளிதாகச் செல்லவும் திரும்பி வரவும் போதிய அளவில் போதுமான பேருந்துகள் இல்லை.

வடசென்னை, மாதவரம், செங்குன்றம், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் இருந்து தென் தமிழகத்திற்கு வெளியூர்  செல்லும் பொருளாதாரத்தில் மேல்தட்டு வகுப்பினர், மேல் நடுத்தர வர்க்கம்  வகுப்பினர் பெரும்பாலும் விமானம் மற்றும் வந்தே பாரத், தேஜஸ் விரைவு ரயில்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் தகுந்த பணத்தினை செலுத்திச் செல்வார்கள், செல்லவும் இயலும்.

ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய, சாதாரண,  கீழ்த்தட்டு,  நடுத்தர மக்கள், பேருந்துகளிலும் சாதாரண ரயில்களிலும் தமிழகத்தின் தென்பகுதிக்கு செல்வார்கள். எனவே, சாதாரண  மத்திய தர வகுப்பினர் மற்றும் சாதாரண வகுப்பைச் சார்ந்த பயணிகள் மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள், பறக்கும் ரயில் சேவைகள்  இல்லாத பகுதியிலிருந்து தங்களது உடமைகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எளிதாகச் செல்வதற்குப் போதுமான அனைத்து விதமான வாகன இணைப்பு  சேவைகளை மாதவரம், கோயம்பேடு, பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி, மணலி, மீஞ்சூர், எம்.கே.பி. நகர், கொளத்தூர், வியாசர்பாடி, பெரம்பூர், பாரிமுனை பகுதிகளிலிருந்து வருவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

தென் தமிழகத்தின் வெளியூர்கள்  செல்வதற்காக ஆம்னி பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும் பொருளாதாரத்தில் மேல்தட்டு வகுப்பினர் மற்றும் மேல் நடுத்தர  வகுப்பினர், தங்களது வாழ்விடத்தில் இருந்து கிளாம்பாக்கம் பெருநகர பேருந்து நிலையம் வருவதற்கும் மற்றும் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து வாழ்விடங்களுக்குச் செல்வதற்கும், பேருந்து பயணத் தொகை இல்லாமல் தங்களது சொந்த வாகனத்தில் மதுரவாயல் பைபாஸ்  சாலையைப் பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 140 ரூபாய் சுங்கக் கட்டணச் செலவு செய்தும், எரிபொருளுக்கு எனத் தனியாகக் குறைந்தபட்சம் 1000 செலவு செய்தும் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, தங்களது சொந்த இடத்திலிருந்து கிளாம்பாக்கம் பெருநகர பேருந்து நிலையம் வருவதற்கும் மற்றும் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து சொந்த வாழ்விடங்களுக்குச் செல்வதற்கும் மதுரவாயல் பைபாஸ்  சாலையைப் பயன்படுத்துவதை விட புதிய வெளிவட்ட சாலையைப் பயன்படுத்தும்போது சுங்கக் கட்டணச் செலவும்  எரிபொருள் செலவும் இரண்டு மடங்கு அதிகம் ஆகும். இதனால், தனி நபர் வாகன பயன்பாடு அதிகரிக்கும் நிலை உள்ளது. மேலும், வாகன நெரிசலும் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுகிறது. 

கிளாம்பாக்கத்தின் உடனடி தேவை: சிறு வாகன இணைப்பு சேவைகள்

சென்னை பெருநகரம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மாநகர போக்குவரத்துக் கழகம் இணைப்பு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது, கிளாம்பாக்கத்திற்கு இணைப்பு சேவைகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மட்டுமல்லாமல் தனியாரும் வழங்கினால்தான் ஜி.எஸ்.டி  சாலை வாகன நெரிசலைக் குறைக்க முடியும். புதிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைத்த நோக்கம் நிறைவேறும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து சட்டத்தின்படி, இந்த புதிய பேருந்து நிலையத்துக்கு வாகன இணைப்பு சேவை வழங்க 12 பேர் பயணிக்கக் கூடிய மேக்ஸி கேப் பர்மிட் மட்டும்தான் தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஆணையம் வழங்க முடியும். ஆனால், இதுபோன்ற வாகன இணைப்பு சேவைக்கு மற்ற மாநிலங்களில் 18, 20, 24 பேர் பயணிக்கக் கூடிய வாகனங்களுக்கு தனியே பர்மிட் வழங்கப்படுகிறது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து இணைப்பு  சேவைக்கும் வழங்க மற்ற மாநிலங்களைப் போல் 18, 20, 22, 24 பயணிகள் பயணிக்கக் கூடிய  வாகன சேவைகளை வழங்க புதிய பர்மிட்டுகளை வழங்கவும்  மற்றும் புதிய  மினி பேருந்து பர்மிட்டுகளையும் கூடுதலாக இணைப்பு சேவைகளுக்கு வழங்கவும் மாநில போக்குவரத்து ஆணையம் ஆவண செய்ய வேண்டும். இதனால், அரசுக்கு கூடுதல் வருவாயும் மற்றும் சென்னை பெருநகர வாகன நெரிசலும் குறையும். 

தற்போது கூடுவாஞ்சேரிக்கு அருகில் உள்ள ஆதனூர் ஊராட்சியிலிருந்து இலவச, சிறிய அளவில் பயணிக்கக் கூடிய மின்சார வாகன சேவை முக்கிய சாலைக்கு உள்ளாட்சி நிர்வாகம் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதுபோன்று ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி சாலை, மாதவரம் - தடா செல்லும் சாலை போன்றவற்றின் அருகே உள்ள சிறு உள்ளாட்சி அமைப்புகள் வழங்கினால் மக்கள் பெரும் பயன் அடைவார்கள் .

<strong>ஆதனுர் அருகே மின்சார வாகன சேவை</strong>
ஆதனுர் அருகே மின்சார வாகன சேவை

பேருந்துகளுக்கென தனி வழிப் பாதைகள் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்கெனவே, பொறியியல் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் சிப்காட் சிறு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து பயணிகள் போக்குவரத்து மேம்படும். சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், பேருந்து விரைவு போக்குவரத்து (Bus Rapid Transit Systems) அண்ணா சாலை முதல் தாம்பரம் வரை உள்ள சாலைக்கு ஆய்வுகள் செய்து சாத்தியம் இல்லை என்று அறிவித்துள்ளது. ஆனால், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள முக்கிய சாலைக்குப் பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்புகள் ஒத்துவருவதற்கான ஆய்வுகளைச் செய்து அதற்கான  திட்டத்தை அமல்படுத்த அரசு அமைப்புகள் முன்வர வேண்டும்.

துறைமுகத்திலிருந்து தென் தமிழகம் நோக்கிச் செல்லும் வெளிவட்டச் சாலை வழியாக வரும் சரக்கு வாகனங்கள் முடிச்சூரில் இருந்து படப்பை, வடக்குப்பட்டு, ஸ்ரீவாஞ்சூர் வழியாக பரனூர் டோல்கேட் செல்வதற்கு ஏதுவாக தனிச் சாலை அமைத்து ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் வாகன நெரிசல்லைத் தவிர்க்கவும் குறைக்கவும் இயலும்.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஐ.டி. காரிடார் பகுதியிலிருந்து கிளாம்பாக்கம்  பேருந்து நிலையம் வருவதற்கு தாம்பரம் வழியாக ஜி.எஸ்.டி. சாலையைப் பயன்படுத்தாமல், கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்தின் பின்பகுதியை எளிதில் அடைய புதிய சாலைகளை மேம்படுத்த வேண்டும். 

இந்தியாவிற்கு   முன்னோடியாக  கல்வி மற்றும்  மருத்துவத் துறையில் இல்லம் தேடிக் கல்வி, இல்லம் தேடி மருத்துவம் போன்று தமிழக அரசு பல்வேறு சிறந்த சேவைகளை வழங்கி வரும் வேளையில், சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்குப் பேருந்து நிலையம் தேடிச் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, மாநில அரசு இல்லம் தேடி வாகன சேவை வழங்குவதை இலக்காகக் கொண்டு மக்களுக்குக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வாகன இணைப்பு சேவைகளை வழங்க ஆவன செய்ய வேண்டும்.

[கட்டுரையாளர் - பன்னாட்டு பொதுப் போக்குவரத்து நிபுணர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com