பொங்கல் பண்டிகை - அன்றும் இன்றும்!

உழவுத் தொழிலுக்கு மட்டும் அல்லாமல் உழவனுக்கும் நண்பனாய், தோழனாய், உடன் பிறவா சகோதரனாய் உறவாய் விளங்குவது கால்நடைகளே. 
பொங்கல் பண்டிகை - அன்றும் இன்றும்!

பண்டிகை என்ற சொல்லுக்கு, பிறருக்கு ஈகை புரிதல் என்றே பொருளாகும். பண்டு + ஈகை = பண்டிகை. "பண்டு' என்றால் பழைய காலத்தில் பிறருக்கு ஈகை புரிவதற்காக குறிக்கப்பட்ட நாள்களே பண்டிகை நாட்கள் ஆகும். ஈகை - பிறருக்குக் கொடுத்து உதவுதல் தானமளித்தல் என்பதாகும். தானும் தன் குடும்பத்தாரும் மட்டுமே உண்டு, உடுத்தி மகிழ்வதற்காக பண்டிகை நாள்கள் கொண்டாடப்படுவதில்லை. பிறருக்குக் கொடுத்து மகிழ்வதற்காகவே பண்டிகை நாள்கள் கொண்டாடப்படுகிறது.

கண்ணுப் பொங்கல், கன்றுப் பொங்கல், கன்னிப் பொங்கல், காணும் பொங்கல் என்று உலகத் தமிழர்களால் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்களால் இயற்கைக்கும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் தமிழர் திருவிழா ஆகும்.

பொங்கல் விழா தைத்திங்கள் முதல்நாள் கொண்டாடப்படுகின்றது. தமிழர் திருநாள் என்றும் உழவர் திருநாள் என்றும் அழைக்கின்றனர். இது உழவர் பெருமக்களுக்குப் பொன்னான நாள். உழைப்பின் உயர்வினை உலகுக்கு உணர்த்தும் உன்னதத் திருநாள். தமிழர் கண்ட பொங்கல் விழா தரணிக்கோர் புதுவிழா. வேளாண்மைப் பெருக்கத்திற்குக் காரணமாக ஞாயிற்றையும் வணங்குகின்றனர். புதுப்பானையில் பொங்கலிட்டுப் 'பொங்கலோ பொங்கல்' என முழங்குவர். கதிரவனுக்குப் பொங்கலைப் படைத்து, உண்டு மகிழ்வர். மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் பொங்கல் வாழ்த்துக் கூறி மகிழ்வர்.

பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் என்றுப் பலப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையின் போது செங்கரும்பு, வாழைப்பழம், புதுப்பானை, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, அச்சு வெள்ளம், பச்சரிசி எனப் பல பொருள்கள் வைத்து பொங்கல் படைக்கப்படுகிறது.

தை முதல் நாள் தமிழர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடப்பட்டுவருகிறது. புதுநெல்லில் இருந்து விளையப்பட்ட பச்சரிசியினால் பொங்கல் வைக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்குப் பாரம்பரிய முறையில் பொங்கல் வைப்பதற்காக மண் அடுப்பு, மண்பானை, மண்சட்டி வாங்குவது வழக்கம். நம் முன்னோர்கள் மண் அடிப்பிலும், மண் பானையிலும் மட்டுமேதான் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

வீட்டின் முன் மண்தரையினை சுத்தம் செய்து பொங்கல் மேடை அமைத்து அதில் மாட்டுச்சாணம் போட்டு மெழுகி சுத்தம் செய்து பச்சரிசி மாவினால் கோலம் இட்டு, மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரித்து அதன் மேல் மண் பானைகளை வைத்து பொங்கல் படைப்பது வழக்கமாக இருந்தது. இன்றைக்கும் கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.

இன்றைக்கு நகரங்களில் வாழும் மக்கள் அப்படி மண் அடுப்பு, மண் பானைகள், மண் சட்டிகள் பயன்படுத்துவதில்லை. மண் அடுப்பிற்குப் பதிலாக சிலிண்டர் அடுப்பும், சில்வர் பானையும் வைத்து பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்

தைத்திங்கள் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலாகும்.மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, குங்குமம் இட்டு மாலை சூட்டிச் சோறு படைப்பர். சில இடங்களில் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதும் உண்டு. தமிழக அரசு இந்நாளைத் 'திருவள்ளுவர் திருநாளாகக்' கொண்டாடி வருகின்றது.

முதல் நாள் கொண்டாடியது போல் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலை அனைவரும் கொண்டாடுவதில்லை. உழைக்கும் மக்கள் மட்டுமே கொண்டாடுகின்றனர். உழவுத் தொழிலுக்கு மட்டும் அல்லாமல் உழவனுக்கும் நண்பனாய், தோழனாய், உடன் பிறவா சகோதரனாய் உறவாய் விளங்குவது கால்நடைகளே. இத்தகைய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிராமங்களில் உழைக்கும் மக்களால் கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கல்.

கால்நடைகள் இருக்கும் வீடுகளில் வீட்டை சுத்தம் செய்து கால்நடைகளை குளிப்பாட்டி அதற்கு அலங்காரம் செய்து, வண்ணம் பூசி ஆவாரம்பூ, தும்பைப்பூ, பூலப்பூ, மாங்கொழுத்து, நெல்லித்தழை போன்றவற்றை இணைத்து நெல்கயிற்றால் பூமாலை செய்து மாடுகளுக்குக் கட்டுவது நம் முன்னோர்களின் வழக்கம்.

இதையும் படிக்க | பொங்குக பொங்கல்!

இன்றைக்கு அப்படி ஒரு வழக்கம் இருப்பதில்லை. இயற்கைக்கு மாறாக காகித மாலைகள், நெகிழி மாலைகள் என்று பலவிதமான மாலைகளை மாடுகளுக்கு கட்டி விடுகின்றனர். கிராமங்களில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவரவர்களின் வீடுகளில் இருக்கும் மாடுகளை கிராமத்தில் உள்ள வீதிகளில் ஒன்றாக கட்டிவைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஒன்று கூடி தட்டினால் ஒலி எழுப்பி மாட்டுப் பொங்கலை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றைக்கு இந்த நிலை இல்லை. மாடுகள் இருந்தாலும், மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவகிறது. ஆனாலும் அன்றைக்கு இருந்த நமது பண்பாடும், கலாச்சாரமும், ஒற்றுமையும், ஒருமைப்படும் இன்றைக்கு இல்லை எனலாம்.

உழவர் திருநாள்
மாட்டுப் பொங்கலுக்கு மறுநாளை, 'காணும் பொங்கல்' என அழைக்கின்றனர். பெரியவர்களைக் கண்டு வாழ்த்துப் பெறுவர்.'காணும் பொங்கல்' என்றும் 'கன்னிப்பொங்கல்' என்றும் அழைக்கின்றனர். கிராமங்களில் தை மூன்றாம் நாளை உழவர் திருநாள் என்றும் காணும் பொங்கல், கரிநாள் என்றும் அழைப்பர்கள். உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி உற்சாகமாக கொண்டாப்படும் நாள் உழவர் திருநாள்.

உழவர் திருநாளில் ஜல்லிக்கட்டு (மஞ்சு விரட்டு), கபடி, கும்மிப்பாட்டு என்று பல்வேறு விளையாட்டுகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகம் பொங்க விளையாடி மகிழ்வார்கள். காலையில் தொடங்கி இரவுவரை ஆடல், பாடல் என்று கொண்டாடுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவார்கள் கிராமங்களில் நடப்பது போல் நகரங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடப்பதில்லை. இத்தகைய சிறப்பு நகர்புறமக்களுக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் ஆர்வமாக கொண்டாடுவதில்லை.

பண்டிகைகளில் பொங்கல் பண்டிகை மட்டுமே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகை என்பது இயற்கைக்கும், கால்நடைக்கும் நன்றி செலுத்தும் விதமாக அமைகிறது. 

வீடெல்லாம் தூய்மையும் ஊரெல்லாம் உவகையும் நாடெல்லாம் மகிழ்வும் உழவர் உள்ளமெல்லாம் உயர்வும் அடையும் ஒப்பற்ற விழா. தமிழர்கள் அனைவரும் ஒருமித்துக் கொண்டாடும் ஒரே விழா பொங்கல் விழாவாகும். இந்த பண்டிகைகள் மூலம் தமிழரின் பண்பாடும், கலாசாரமும் மீட்கப் படுகிறது.
 

கட்டுரையாளர்:  உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

பொங்கல் ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com