தொன்மங்கள் நிறைந்த உறத்தூர்க் கூற்ற ராஜாளிப்பட்டி!

இராஜாளிப்பட்டியில் பல்லவர் காலம் முதல் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்து விவசாயம் செழித்து வளர்ந்ததற்குச் சான்றளிக்கிறது இரண்டாம் நந்திவர்மன் காலக் கல்வெட்டு.
தொன்மங்கள் நிறைந்த உறத்தூர்க் கூற்ற ராஜாளிப்பட்டி!


புதுக்கோட்டை மாவட்டத்தில்  விராலிமலையிலிருந்து திருச்சி மாவட்டம்  மணப்பாறை செல்லும் வழியில் உள்ள ஊர் இராஜாளிப்பட்டி.

இங்கே பல்லவர் காலம் முதல் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்து விவசாயம் செழித்து வளர்ந்ததற்கு இங்குள்ள இரண்டாம் நந்திவர்மன் காலக் கல்வெட்டு ஒன்று சான்றளிக்கிறது. இங்குள்ள ஏரியிலுள்ள குமிழி எனும் மடைத் தூணைப் புல்லயக்  கடம்பன் என்ற ஒருவர் அமைத்துக் கொடுத்ததிலிருந்து இவ்வூரின் தொன்மை புலனாகிறது.

புதிய கண்டுபிடிப்புகள்

பராந்தக சோழன் கல்வெட்டு

ஆற்றுப்படைக் குழும உறுப்பினரான இராஜாளிப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்மணி அளித்த தகவலின் அடிப்படையில் ஆற்றுப்படை அமைப்பினர் இவ்வூரில் சில தொன்மச் சான்றுகளைக் கண்டறிந்துள்ளனர்.

இராஜாளிப்பட்டி கடை வீதியிலிருந்து பாட்னாபட்டி செல்லும் வழியில் உள்ளது வரதராஜ பெருமாள் கோவில். பாழடைந்து கிடந்த இந்தக் கோவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் புனரமைக்கப்பட்டது. இக்கோவிலின் காலம் இன்னதென அறிய முடியவில்லை. புனரமைப்புப் பணியின்போது, இந்தக் கோவிலின் அருகே கிடந்த எழுத்துப் பொறிப்புள்ள கல்லையும் இணைத்துவைத்துக் கோவிலைக் கட்டியுள்ளனர். அனேகமாக இந்தக் கல்வெட்டுத் துண்டு அருகேயுள்ள, சிதிலமாகக் கிடந்து புதுப்பிக்கப்பட்ட, சிவன் கோவிலைச் சேர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். இக்கல்வெட்டு எழுத்துகளை ஆராயும்போது சுமார் 1,100 வருட பழமையான வரலாறு கொண்டது என்று தெரியவந்ததது. பராந்தகச் சோழனின் சிதைந்த இந்தக் கல்வெட்டுத் துண்டு, இவ்வூர் உறத்தூர் கூற்றம் எனும் கூற்றத்தின்  கீழ் இருந்ததைக் கூறுகிறது.

உறத்தூர் கூற்றம் என்பது இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் நீர்ப்பழனி, கொடும்பாளூர், விராலிமலை மற்றும் திருச்சி மாவட்டம் மாத்தூர், மணப்பாறை வரையிலும் பரவியிருந்த ஒரு பெரிய வளநாடாக இருந்த பகுதியாகும்.

சிதைந்த இக்கல்வெட்டு கோவிலின் நில எல்லை தொடர்பான தகவலை அளிக்கிறது. மேலும் இத்திருக்கோவிலுடைய பட்டுடையார் எனும் தகவலை அளிக்கிறது. பட்டுடையார் என்போர் சிவன் கோவில் பூஜை செய்வோரில் ஒரு பிரிவினராவர். இவ்வூரில் பழமையான சோழர் கோவில் இருந்து புனரமைப்பின்போது அதன் முக்கியத்துவம் அறியாமல் நவீன பாணியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கல்வெட்டு வரிகளாக இவற்றைக் கொள்ளலாம்.

கல்வெட்டு

1. (மதிரை கொ)ண்ட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு 25 ஆவது உறத்தூர்கூற்றத்து ...

2. முது இரண்டும் நெயமுது ஒருபிடியும் தயிரமுது நாழியும் நியதி ஒ...

3. எல்லைக்கு வடக்கும் மேக்கு உறத்தூர்க்கே

போய் இழிந்த வழியில்கு..

4. திருக்கோயிலுடையபட்டுடையார் கண்டு பரிசு செலுத்துவதாக தேவதான...

5. தேவதானம் செய்வித்து குடுத்தேன் மலைதிண்ட

அரிய வகை அய்யனார்

இராஜாளிப்பட்டியிலுள்ள பாப்பான்குளம் எனும் குளக்கரையில் இந்த அய்யனார் சிற்பம் உள்ளது.

பொதுவாக ஐயனாரின் படிமவியலில் ஒருகாலைத் தொங்கவிட்டு மறுகாலை மடக்கி இருக்கையின் மீது ஊன்றியிருக்கும் மண்டலமர்வு எனும் உத்குடிஆசனத்தில் சிற்பம் வடிப்பதுண்டு. ஆனால் இச்சிற்பம் பேரரசமர்வு எனும் மகாராஜலீலாசனத்தில் வடித்துள்ளனர். இத்தகைய சிற்பம் இலங்கையில் புடைப்புச் சிற்பமமாக உள்ளது.

தலைமுடியைச் சடைமண்டலம் எனும் அமைப்பாய் அலங்கரித்துள்ளனர். காதில் குதம்பை அணியும், கைகளில் தோள்வளை, கடகவளையும், மார்பிலும் கழுத்திலும் கண்டிகை, மணியாரம் போன்ற அணிகலன்கள் பூட்டி, இடையில் அரைப்பட்டிகை, யோகப்பட்டம் போன்றவை அணிந்து மிகுந்த வேலைப்பாட்டுடன் இவரை செதுக்கியுள்ளனர். இச்சிற்பம் முற்கால சோழரின் கலைப்பாணியில் உள்ளது. இச்சிற்பம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கருதலாம்.

தவ்வை எனும் மூத்த தேவி

இராஜாளிப்பட்டி பாப்பான்குளக் கரையிலே ஜேஷ்டாதேவி எனும் தவ்வை சிற்பம் காணப்படுகிறது. அம்மையின் வலப்புறம் அவரின் மைந்தன் மாந்தனும், இடப்புறம் மகள் மாந்தியும் உள்ளனர். இச்சிற்பம் முற்கால சோழர் காலத்தினை சேர்ந்தது.

தவ்வை சில குறிப்புகள்

தாய்த் தெய்வ வழிபாடு சுமேரிய, அசீரியா போன்ற நாகரிகங்களிலும் நமது நாட்டிலும் பண்டைய காலத்தில் இருந்தது தெரிய வருகிறது. வயிறு பெருத்தும், மார்பகம் பெரிதாகவும் பிள்ளைகள் பெற்ற  "தாய்மை"யின் அடையாளமாகத் திகழும் சுடுமண் சிற்பங்கள் மொகஞ்சாதரோவிலும், ஆதிச்சநல்லூரிலும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வணங்கப்படும் உருவங்கள் வளமையின் அடையாளமாய் கருதப்படுகிறது! இயல்பாகவே பெண்ணிலிருந்தே உயிர்கள் தோற்றம்கண்டு பல்கிப்  பெருகுவதால், பெண்ணை முன்னிருத்தும் "தாய்த் தெய்வ வழிபாடு" பழமையான நாகரிகங்களில் தோன்றியது.

ஆதியில் இருந்த வேடர் மரபினை விட்டு மக்கள் பொதுவாகக் கூட்டம் கூட்டமாய் வசிக்கும் மரபு தோன்றிய பின், வேளாண்மை மரபு தோன்றியது! அக்காலத்தில் விளைச்சல் வேண்டியும், மழை வேண்டியும் தம் குழுவில் இருந்த தாய்மையடைந்த மூத்த பெண்ணையொத்த உருவினைப் படிமமாய் செய்வித்து, அவளை வேண்டி, அவளுக்கு வேண்டியதைக் குறைவின்றிப் படைத்தால், தம் குழுவின் வளமை பெருகும் என்ற நம்பிக்கை உலகெங்கும் சில குறிப்பிட்ட இனங்களில் காணப்பட்டது! நம் ஊரிலும் இத்தகைய மரபு இருந்ததற்கு நம் இலக்கியங்கள் பல சான்றளிக்கின்றன.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக்
காட்டி விடும்.

திருக்குறளில் இல்லறவியல் 167 ஆம் பாடல் இது, இதில் பிறருடைய செல்வம் கண்டபோது பொறாமைப்படுகின்றவனைப் பார்த்துத் திருமகள் தான் பொறுக்காமல் தனக்கு மூத்தவளைக் காட்டி அவனிடம் சென்று இருக்குமாறு செய்வாள் என வள்ளுவர் தவ்வை எனும் மூத்ததேவியை குறிப்பிடுகிறார்.

இத்தெய்வத்தை வைணவ அடியார்களுள் ஒருவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார், செல்வம் அனைத்தையும் அருளும் திருமாலிருக்க, “சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே" எனப் பாடுகிறார்.

இவளை மூத்தலட்சுமி எனவும் அழைப்பர். தவ்வை, சேட்டை, மாமுகடி, மூத்ததேவி, பழையோள், காக்கை கொடியோள் என பல பெயர்கள் உண்டு. மூத்ததேவி என அழைக்கப்பட்டவள் அதன் சமஸ்கிருத பொருளான "ஜேஷ்டா" என 16-18 ஆம் நூற்றாண்டுவாக்கில் அழைக்கப்பட்டு அதுவே தொடர்ந்து வருகிறது. இடையே அந்தந்த பகுதிக்கேற்றவாறு புராண பிற்சேர்க்கையும் உண்டு. திருமகளின் மூத்த சகோதரியாக இவர் கருதப்படுகிறார். பெரும்பாலும் காலத்தால் முற்பட்ட தவ்வையின் சிலைகள் வயல்வெளிகளிலேயே கிடைப்பது குறிப்பிடத்தக்கது. தவ்வையை உரத்தின் அடையாளமாகவும், அவளது தங்கை திருமகளை விளைச்சலின் அடையாளமாகவும் கருதுவர்.

இன்றும் நிறைய இடங்களில் இறந்தவர்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் முன் சீதேவியை விட்டுவிட்டு மூதேவியைக் கொண்டு போ எனச் சொல்வது உண்டு! இதற்கு செல்வங்களை வீட்டில் விட்டுவிட்டு, தேவையற்றதை ஈமக்காட்டிற்கு கொண்டு செல்லுதல் என பொருள். தவ்வையின் சிற்ப படிமங்களில் காணப்படுபவைகளில்கூட அழுக்கினை அகற்றுவதைக் குறிப்பவைகளாக இடம்பெற்றுள்ளது! குறிப்பாக துடைப்பத்தையும், காக்கையையும், அவளது வாகனமான கழுதையினையும் கூறலாம்.

முதலாம் ஆதித்தனின் திருக்கட்டளைக் கோவிலிலும், பார்த்திவேந்திரவர்மனின் உத்திரமேரூர்க் கல்வெட்டிலும் இவர், "திருக்கேட்டை கிழத்தி" "சேட்டைதேவியார்" என அழைக்கப்பட்டுள்ளார். பத்தாம் நூற்றாண்டு வரையிலும் பரிவார தெய்வமாகவும், கோட்ட தெய்வமாகவும் இருந்த தவ்வை, அதன் பின்னர் புறக்கணிக்கப்பட்டுத்  "தவ்வையை கண்டாலே தீட்டு" எனும் தவறான புரிதல் காரணமாய் சில இடங்களில் அப்புறப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அண்மைய கண்டறிதல்கள் மூலம் தொன்மங்கள் நிறைந்திருப்பவை இராஜாளிப்பட்டி என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com