விரைவான, தாமதமில்லா நீதியை உறுதிப்படுத்தவே பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய சட்டங்கள்

மூன்று புதிய தண்டனைச் சட்டங்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா பல கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா - பிரதமர் நரேந்திர மோடி
மத்திய அமைச்சர் அமித் ஷா - பிரதமர் நரேந்திர மோடி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நேர்காணல்..

மூன்று புதிய தண்டனைச் சட்டங்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா மற்றும்
எக்ஸ்பிரஸ் குழும ஊடகவியலாளர் ராஜேஷ் குமார் தாக்குர் ஆகியோருக்கு அளித்த நேர்காணலில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பல கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளித்துள்ளார்.

1860-ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), 1882-இல் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் (கிரிமினல் பிசி) மற்றும் 1872-இல் பழங்கால இந்திய சாட்சியச் சட்டம் போன்ற முக்கோண யூனியன் காலனித்துவ கால குற்றவியல் சட்டங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டிருப்பதன் மூலம் உலகிலேயே மிக நவீன நீதி அமைப்பு கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்கணித்துள்ளார். 

தற்போதிருக்கும் அமைப்பின் மிக முக்கிய தீமை என்வென்றால், மிக  மிக மோசமான மந்தநிலை (காலதாமதம்) என்றும் இந்த மந்தமான செயல்முறையே பல இடங்களில் தண்டனையாக மாறிவிடுகிறது எனவும் குறிப்பிடுகிறார்.

ஆனால் இனி, மக்கள் நீதியைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை. புதிய சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் நீதி வழங்கப்படும். ‘வாய்தாக்கு மேல் வாய்தா’ என்ற சகாப்தம் படுகுழிக்கு சென்றுவிடும் என்று அமித் ஷா கூறுகிறார், நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு கலாசாரம் குறித்த பிரபலமான பாலிவுட் திரைப்பட வசனத்தை அவர்  இங்கே குறிப்பிடுகிறார். இந்த முறையான சீர்திருத்தமானது, அவரது கருத்துப்படி, இந்திய அரசியலமைப்பின் உணர்வோடு முற்றிலும் இணைந்து நடக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், இந்த நேர்காணலில், அமித் ஷா மூன்று புதிய சட்டங்களான - பாரதிய நாகரிக் சுர‎க்‏ஷ (இரண்டாம்) சன்ஹிதா 2023; பாரதிய நியாயா (இரண்டாம்) சன்ஹிதா 2023; மற்றும் பாரதிய சா‎க்‏ஷ (இரண்டாவது) மசோதா 2023-ன் பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

160 ஆண்டுகள் பழமையான குற்றவியல் நீதி அமைப்பில் முதல் முறையாக மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நீதி அமைப்பிலிருந்து அடிமைத்தனம் மற்றும் காலனித்துவ மனநிலையின் ஒவ்வொரு சின்னத்தையும் அகற்றுவது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியை நனவாக்குவதற்கான ஒரு வரலாற்றுப் படியாகும் என்கிறார் அமித் ஷா.

நேர்காணலில்..

மூன்று புதிய சட்டங்கள் நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு விரிவான மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், குடிமக்களை காலனித்துவ மனநிலையிலிருந்து விடுவிக்கும் என்றும் கூறுகிறீர்கள். எப்படி?

மூன்று புதிய சட்டங்களும் புதிய பரிமாணங்களைக் கொண்டுள்ளன, மேலும் அவை மூன்று கோணங்களில் பார்க்கப்பட வேண்டும், அப்போதுதான் அதன் மிகப்பெரிய தாத்பரியத்தை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். 

முதலாவதாக, நான் கூறியது போல், இந்தச் சட்டங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக காலனித்துவ மனப்பான்மையிலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு முழுமையான பாரதிய நியாய நடைமுறைக்கு (இந்திய நீதி அமைப்பு) முக்கியத்துவம் கொடுக்கிறது. இரண்டாவது, இந்த மூன்று சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, அவை தொழில்நுட்ப சகாப்தத்திற்கு ஏற்ப, உலகின் மிக நவீனமயமாக்கப்பட்ட குற்றவியல் நீதி அமைப்பாக மாறும். மூன்றாவதாக, 130 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில், சரியான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் மக்களைக் கொண்டிருக்கும் நாட்டில், இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்துவதன் மூலம், நாட்டின் எந்தப் பகுதியிலும் ஏதேனும் முதல் தகவல் அறிக்கை ஒன்று பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கில், நீதி உறுதி செய்யப்படும் என்று என்னால் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். 

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் நீதி என்பது நிலைநாட்டப்படும் என்று எடுத்துக்கொண்டால், இந்த சட்டங்கள் நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு சகாப்தத்தையே மாற்றும் வகையில் அமைந்துள்ளன என்று குறிப்பிடுகிறார்.

முதல் சாராம்சத்தை விளக்க விரும்புகிறேன், இந்தச் சட்டங்கள் இந்தியத்தன்மையின் உணர்வை எவ்வாறு உள்ளடக்குகின்றன என்று பார்த்தால், இந்தச் சட்டங்களின் கருப்பொருளானது - யாரையும் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே. ஆங்கிலேயர் காலத்தின் பழைய சட்டங்கள் இந்த நாட்டின் குடிமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கருவூலம், ரயில்வே, அவர்களின் அரசைத்தின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். 

பழைய சட்டங்கள் உண்மையில் 1857ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளை அடக்குவதற்காக இயற்றப்பட்டன. எனவே அவர்கள் இந்தியர்களுக்கான நீதியை முறியடிக்கவே எண்ணினர். அந்த மனநிலையிலிருந்தும் அடிமைத்தனத்தின் எல்லாச் சின்னங்களிலிருந்தும் இந்தியா விடுவிக்கப்பட வேண்டும் என்று செங்கோட்டையில், நமது பிரதமர் கூறியிருந்தார். எனவே அடிமைத்தன  மனநிலையிலிருந்து நமது புதிய குற்றவியல் நீதி அமைப்பு நம்மை விடுவிக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இது மக்களை மையமாகக் கொண்டது மற்றும் நீதி சார்ந்தது என்கிறார். 

இதையும் படிக்க.. பிறர்க்கென வாழ்வோர் 

இந்த மூன்று சட்டங்களும் 158 கூட்டங்களில் விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய சட்டங்கள் நீதியை மையமாகக் கொண்டதாகவும் தண்டனையை மையமாகக் கொண்டதாக இருக்காது என்று குறிப்பிடுகிறீர்கள். இருப்பினும், சட்ட அறிஞர்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினரால் இது குறித்த அச்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எதிர்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

புதிய சட்டங்கள், பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்கிறது. சிறிய அல்லது முதல் முறை குற்றவாளிகள் என மொத்தம் ஆறு குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சிறைச்சாலையில் அடைக்கப்படுவதிலிருந்து விடுபட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறுசிறு வழக்குகளில் தொடர்புடையவர்கள், ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தினாலோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ தவறு செய்திருந்தால், அவர்கள் தண்டனையை அனுபவிப்பதற்கு பதில், சமூக சேவை செய்வதன் மூலம் தங்களை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மேலும் சிறு வழக்குகளுக்கு இப்போது குறுகிய கால விசாரணைகள் கட்டாயம்; இப்போதிருக்கும் சட்டத்தின்படி, ஒரு நீதிபதி, இந்தக் குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க முடியும்.

குறிப்பாக, காவல் துறையினர் மக்களை அழைத்துச் சென்று காவலில் வைத்திருப்பது, குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் கைது மற்றும் தடுப்புக் காவலில் வைப்பது அவ்வப்போது நிகழும். ஆனால், இனி அதற்கு வாய்ப்பில்லை. அனைத்து காவல் நிலையங்களிலும், யார் யார் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர், எத்தனை பேர் காவலில் உள்ளனர் என்பதைக் குறிப்பிடும் பதிவேட்டை ஆன்லைனில் பொதுமக்கள் அணுகும் வகையில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேலும் கைது செய்யப்படுவோர், 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் அல்லது முறையாக காவலில் எடுக்க வேண்டும். 

சோதனைகளின்போது, தற்போது விடியோ எடுக்காமலேயே சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், இனி இரண்டு நடுநிலை சாட்சிகள் முன்னிலையில்தான் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அதனை கட்டாயம் விடியோ எடுக்க வேண்டும்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே கைவிடப்படும். ஆனால் இனி, புகார் மனுக்களையும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் இலவச நகலைப் பெற பாதிக்கப்பட்டவருக்கு உரிமை உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து 90 நாட்களுக்குள் அவர்களுக்கு விசாரணை குறித்த தகவலை வழங்கவும், எஸ்எம்எஸ் அல்லது பிற மின்னணு தகவல் தொடர்பு முறைகள் மூலம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து 15 நாட்களுக்குள் விவரம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தற்போது, வழக்கைத் திரும்பப் பெற பாதிக்கப்பட்டவரின் ஒப்புதல் தேவையில்லை; ஆனால் இனி அது கட்டாயம்.  ஆடியோ-வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இனி அவர்கள் காணொலி வாயிலாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகலாம். பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் ஏழு நாட்களுக்குள் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும், முதல் விசாரணையின் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் சட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். குற்றவியல் வழக்குகளின் விசாரணை முடிந்த 45 நாள்களுக்குள் தீர்ப்பும் வழங்க வேண்டும்.

இந்த மூன்று முக்கிய சட்டங்களின் அம்சங்களை நீங்கள் சுருக்கமாக கூறுவதென்றால், கேட்பதற்கு வாய்ப்பளிக்கப்படும், தகவல் அறியும் உரிமை, சேதங்களுக்கு இழப்பீடு பெறும் உரிமை..

லாரி ஓட்டுநர்களைப் பொறுத்தவரை, நாங்கள் அவர்களுடன் கலந்தாலோசனை செய்து வருகிறோம், அது முடியும் வரை அந்த குறிப்பிட்ட பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்படாது. ஒரு லாரியால் விபத்து நேரிடும்போது, லாரி ஓட்டுநர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தால், கடுமையான தண்டனை விதிக்கப்படாது என்பது விதிமுறை. ஓட்டுநர்கள் தவறுதலால் ஏற்படும் விபத்துகள் குறித்து காவல்துறைக்கு தெரிவிப்பதால், அவர்களின் பொறுப்புகள் முடிந்துவிடும். இது எதற்காக என்றால், இந்தியாவில் அதிகபட்சமாக விபத்துக்குள்ளானவர்கள் அதிக இரத்தப்போக்கு காரணமாக இறக்கின்றனர். எனவே இந்த சட்டம் உயிர்களைக் காப்பாற்றுவதை ஊக்குவிக்கிறது.

இந்த சட்டங்கள் காவல்துறையை எவ்வாறு மேம்படுத்த உதவும்?

உண்மையில், இந்த சட்டங்களால் ஒட்டுமொத்த அமைப்பும் மாறும். காவல்துறை அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்வதற்காக அடுத்த 50 ஆண்டுகளில் வரவிருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் இடமளிக்க சட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த காவல் துறையும் மாற்றியமைக்கப்படும். எந்த அம்சமும் காகிதப்பணியால் தேக்கமடையாது, புகார்கள் முதல் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகைகள் வரை, பல நடைமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். குற்றப்பத்திரிகைகள் காகிதத்தில் தயாரிக்கப்படுவதற்குப் பதிலாக பென் டிரைவ்களில் சேமிக்க முடியும். சாட்சியங்களை காணொலி வாயிலாக நீதிமன்றத்திற்கு கொண்டு வர முடியும். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை அளிக்கலாம், மின்-வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படும் குற்றங்களில், தண்டனை விதிக்கப்படுவதை 90 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்துடன் விசாரணைகளில் தடயவியல் அறிவியல் முறைகள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்.

சம்மன்கள் இனி வாட்ஸ்ஆப்களில் அனுப்பப்படும். சம்மனை வாட்ஸ்ஆப்பில் ஒருவர் பார்க்கும்போது, சம்மன் பெறப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும். 

"அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்" பற்றி புதிய சட்டங்கள் என்ன சொல்கிறது? எப்படி செயல்படும்?

யாரையும் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பட்டியலிட, குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை அல்லது ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். இவற்றுடன், தப்பியோடியவர்களின் அல்லது குற்றவாளிகளின் சொத்துகள் - நாட்டிற்குள் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் அவை - முடக்கப்படும்.
தப்பியோடிய குற்றவாளிகள் நாட்டில் இல்லாவிட்டாலும் விசாரணையைத் தொடங்க சட்டம் வழிவகுக்கும். உதாரணத்திற்கு, தாவூத் இப்ராஹிம் தலைமறைவாக இருப்பதால், மும்பை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தொடங்கவில்லை. ஆனால் இனி, நீதிமன்றம் ஒரு குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பு வழக்கறிஞரை நியமித்து, விசாரணையைத் தொடங்கும், மேலும் வழக்கு தண்டனைக்கு தகுதியானதாக இருந்தால், தீர்ப்பும் வழங்கப்படும். தப்பியோடிய குற்றவாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தண்டனையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்து மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு செய்யாவிட்டால், தண்டனை உறுதிசெய்யப்பட்டு, தீர்ப்பின்படி தண்டிக்கப்படுவார்கள்.
 

புதிய சட்டங்கள் தொடர்பான சில சந்தேகங்கள் உள்ளன, இது புதிய சட்டங்களின் திருத்தம் மற்றும் அதன் புதிய வார்த்தைகளில் மட்டும அல்ல? இதனால், புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமா?

சட்டங்கள் மாற்றப்படும் போதெல்லாம் இதுபோன்ற சூழல் எழுகின்றன. 160 ஆண்டு பழைமையான சட்டங்களுடன் இந்த நாடு இயங்குமா? சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏதேனும் முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் எழுந்தால் அவற்றை தீர்ப்பதற்கான வழிகளை நாம் தேடலாம். புதிய சட்டங்கள் குறித்த புத்தகங்களை ஏற்கெனவே இந்தியாவின் அனைத்து பட்டியலிடப்பட்ட மொழிகளிலும், பழைய பெயரிடலை அடைப்புக்குறிக்குள் வெளியிட்டுள்ளோம். புதிய சட்டங்களை விளக்குவதற்கும், ஏதேனும் தவறு இருந்தால் அதனை நீக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் செயலி ஒன்றை உருவாக்கி வருகின்றது. இந்த செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நோக்கியும், காலனித்துவ மனநிலையில் இருந்து மக்களை விடுவிப்பதை நோக்கியும் நாம் நகர்கிறோம். ஆனால், நாட்டுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்களை விட்டுவிட முடியாது.

புதிய சட்டங்கள் மூலம் நாடு காவல்துறை அதிகாரத்தின் கீழ் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதே? 

காவல்துறையினர் சோதனை செய்யும்போதோ, பொருள்களை கைப்பற்றும்போதோ தற்போது விடியோ பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், புதிய சட்டத்தின் மூலம் விடியோ பதிவு கட்டாயமக்கப்படுகிறது. முதல்முறையாக போலி வழக்குகள் பதிவு செய்யப்படுவதை சரிபார்க்க ஏற்பாடு செய்துள்ளோம். ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்வதற்கு முன்னதாக உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்கப்படும். தற்போது ஒருவரை காவல்துறையினர் கைது செய்தால் குடும்பத்தினருக்கு தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால், இனி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகள் வைத்து தகவல் அளிக்க வேண்டும். புதிய சட்டத்தின்படி, ஒருவரை கைது செய்தால் அவரை 24 மணிநேரத்துக்குள் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி குற்ற வழக்குக்கு உள்ளாக நேரிடும். ஒரு காவல்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் விசாரணைக்கு மேல் அதிகாரியின் அனுமதி பெற பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், புதிய சட்டத்தில் 180 நாள்களுக்கு அனுமதி கிடைக்காவிட்டால், விசாரணையை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறையின் அதிகாரத்தை குறைக்கிறதா? அல்லது அதிகரிக்கிறதா? மொத்தமாக காவல்துறையின் அதிகாரத்தை குறைக்க 20 பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், காவலர்கள் பற்றாக்குறையை பயன்படுத்தித் தப்பிச் செல்ல முயலும் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டின் நீதித்துறைக்கு பதிலளிக்காதவர்களுக்கு எந்த உரிமையும் இருக்கக்கூடாது.

கும்பல் படுகொலைகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்? சில சம்பவங்களில் திட்டமிடப்பட்ட ஏற்பாடுகள் இருப்பது ஆச்சரியமளிக்கிறதே!

புதிய சட்டங்கள் மூலம் முதல்முறையாக கும்பல் கொலைகள் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கும்பல் படுகொலை அச்சுறுத்தல் என்பது வகுப்புவாத பிளவுகளால் மட்டுமே ஏற்படுவதாக நினைக்கின்றனர். ஆனால், பெரும்பாலும் கும்பல் படுகொலைகளால் பாதிக்கப்படுபவர்கள் திருடர்கள்தான். மேலும், மூடநம்பிக்கை காரணமாக மந்திரவாதிகளால் அதிகளவிலான பெண்கள் கொல்லப்படுகிறார்கள். சாதி அல்லது மதங்களுக்கு இடையே திருமணம் செய்யும் தம்பதிகளும் கொலை செய்யப்படுகின்றனர். அதேபோல், மதச் சண்டைகளிலும் கும்பல் கொலை நடக்கிறது. இதுபோன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு தடுப்பதில் பிரதமர் மோடி அரசு உறுதியாக உள்ளது. இதுவரை காங்கிரஸின் மதச்சார்பற்ற அரசுகள் கும்பல் கொலைக்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வந்ததில்லை. நாங்கள் சிறப்புப் பிரிவுகளை உருவாக்கியுள்ளோம். அதன்படி, கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில் மரண தண்டனை கொடுக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. 

புதிய சட்டங்களில் பயங்கரவாதமும் வரையறுக்கப்பட்டுள்ளதா?

சரியான வரையறை இல்லாமல் ஒன்றை சமாளிப்பது கடினம். பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையுடன் முதல்முறையாக சட்டத்தை வரையறுத்துள்ளோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு அல்லது பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் இப்போது பயங்கரவாதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். இந்தியாவின் ஒற்றுமையுடன் விளையாட முயற்சிப்பவர்கள் கடுமையாக கையாளப்படுவார்கள்.

உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சரான நீங்கள், இத்தகைய சட்டங்கள் மூலம் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

சட்டங்கள், கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரும் என்று என்னால் கூற முடியாது. கிளர்ச்சி என்பது பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் வராது. ஆனால், கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடைமுறை வேகமாக இருக்கும். இந்த சட்டத்தின் மூலம் காவல்துறைக்கு வலுவான சட்ட ஆதரவு கிடைக்கும்.

தேசத்துரோகத்தை எடுத்துக்கொண்டால் அதன் வரையறையில் ஒரு மாற்றத்தைக் காண முடிகிறது - ராஜ துரோகம் (அரசுக்கு எதிரான குற்றம்) என்ற கருத்துகள் 'தேசத் துரோகம் (நாட்டுக்கு எதிரான குற்றம்) என்பதிலிருந்து வேறுபடுகிறது. கடந்த காலங்களில் தேசத்துரோகச் சட்டங்களைப் பயன்படுத்திய முறைகளால் அது பற்றிய கவலைகள் எழுகின்றன. புதிய கருத்து பற்றி விளக்க முடியுமா?

ராஜதுரோகம் மற்றும் தேசதுரோகம் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. முன்னதாக, அரசுக்கு எதிராக பேசினாலே போதும், அது தேசதுரோகமாக கருதப்பட்டு, அதன்கீழ் சவார்க்கர், காந்தி உள்ளிட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதிலிருந்து ‘ராஜ்’ என்பதை நீக்கிவிட்டு தேசதுரோகம் தொடர்புடைய குற்றத்தை மட்டும் வைத்துள்ளோம். இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராக செயல்படுபவர்களுக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. ஆனால், நாட்டுக்கு எதிரான செயலை செய்வதைகூட குற்றமாக பார்க்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். நாட்டுக்கு எதிராக செயல்படும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்.

புதிய சட்டங்களுக்கு ஹிந்திப் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

இதற்கு முன் பல சட்டங்கள் ஹிந்தியில் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் பல சட்டங்கள் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தப்போது இயற்றப்பட்டவை. இந்த சட்டங்களை கொண்டு வந்தததால்தான் பிரச்னை ஆக்கப்படுகிறது. நீங்கள் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், நாட்டின் மொழியை ஏற்ற மறுக்கின்றனர். மெதுவாக ஒவ்வொருவரின் நாவிலும் இந்த வார்த்தைகள் வரும். ஏனெனில், சட்டத்தின் பெயர் மட்டும் மாற்றப்படவில்லை. பழைய சட்டங்களின் ஆவியே மாற்றப்பட்டுள்ளது.

புதிய சட்டங்கள் எப்போது அமலுக்கு வரும்?

அமலுக்கு வரும் குறிப்பிட்ட தேதியை தற்போது தெரிவிக்க முடியாது. ஆனால், பிப்ரவரி மாதத்துக்குள் அமலுக்கு வரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.