ஓட்டுநர்களின் சேவையும் போற்றப்பட வேண்டிய ஒரு சமூக சேவையே!

ஓட்டுநர்கள் தினத்தில், சாலைப் போக்குவரத்தில் பணி செய்யும் போற்றப்படாத கதாநாயகர்களைப் பாராட்டவும் கொண்டாடவும் சிறிது நேரம் ஒதுக்குவோம். 
ஓட்டுநர்களின் சேவையும் போற்றப்பட வேண்டிய ஒரு சமூக சேவையே
ஓட்டுநர்களின் சேவையும் போற்றப்பட வேண்டிய ஒரு சமூக சேவையே

இந்திய அரசின் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் அனைத்து இந்திய மாநிலங்களின் போக்குவரத்து நிறுவனங்களின் கூட்டமைப்பும், ஜனவரி 24, 2024 (இன்று) ஓட்டுநர் தினமாக அறிவித்துள்ளது. இந்த ஓட்டுநர்கள் தினத்தில், சாலைப் போக்குவரத்தில் பணி செய்யும் போற்றப்படாத இந்த கதாநாயகர்களைப் பாராட்டவும் கொண்டாடவும் சிறிது நேரம் ஒதுக்குவோம். 

காலத்தையே இயக்கும் சமூக தேரின் அச்சாணி ஓட்டுநர்களே

காலம் இயங்குகிறது என்பது பூமி சுழற்சியை மட்டும் கணக்கில் கொள்வது அல்ல. உலகம் இயங்குவதற்கு மக்களின் அன்றாட தேவைகளுக்கு  சரக்கு பொருள்களும், மக்களும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்வதற்கு வாகன போக்குவரத்து தேவை மிக மிக அவசியம் ஆகும். சமூகத்தின் கால சக்கரங்கள் சுழன்றுகொண்டே இருப்பதற்கு மக்களின் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் சரக்கு வாகன ஓட்டுநர்களும் சரி , மக்களின் அன்றாட பணிக்குச் செல்வதற்குப் பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி  போன்ற பயணிகள் வாகனத்தின்  ஓட்டுநர்களும் சரி, அபாய கால தேவைகளான ஆம்புலன்ஸ், தீயணைப்பு சிறப்புத் தேவை வாகன ஓட்டுநர்களும் சரி, நம் அன்றாட வாழ்வில் ஓட்டுநர்கள் தான் ஏதோ ஒரு வகையில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 

உலகில் உழவுத்தொழிலுக்கு அடுத்து போக்குவரத்து தொழில் தான் இன்றியமையாத தொழில் ஆகும். இந்த போக்குவரத்து தொழிலில் முதன்மையானவர்களும் முக்கியமானவர்களும் யார் என்றால் ஓட்டுநர்கள் தான் என்பது சிறப்பான பதிலாகும். நவீனமயமான  வாழ்க்கை அமைப்பில் சமூக நல்வாழ்வு உருவாவதற்கும், பொருளாதார செழிப்பு அடைவதற்கும் மக்களுக்குத் தேவையான எளிதான, சிக்கனமான  பொருள் பரிமாற்ற சேவைக்கும் மற்றும் அன்றாட நடமாட்டத்திற்கும் சமூக அர்ப்பணிப்பு கொண்ட ஓட்டுநர்(திறன் வல்லுநர்கள்) தான் இணைக்கும் சக்தியாக இருக்கின்றனர். சரக்குகள் மற்றும் மக்களின் நடமாட்டத்திற்கு ஓட்டுநர்களின் இன்றியமையாத பங்கை அங்கீகரிப்பதும், பாராட்டுவதும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு முதுகெலும்பாகவும் அடித்தளமாகவும்  இருப்பது  ஓட்டுநர்கள் பணியாகும். சமூகத்தில் நம்மை அடிக்கும் உரிமை பெற்றோர், ஆசிரியர் மற்றும் காவல்துறையினருக்கும் மட்டுமே வழங்குகிறோம். நம் உயிரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழுவதுமாக வாழ்வின் இணையரோடும் மட்டுமே  நம்பி ஒப்படைக்கிறோம். சுகாதார வசதிக்காக சில சமயங்களில் நமது உயிரை மருத்துவரிடம் நம்பி ஒப்படைக்கிறோம். நம் வாழ்வின் தினந்தோறும் ஒரு கணமாவது ஓட்டுநரை நம்பி முன்பின் அறிமுகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது உயிரை ஒப்படைத்து பயணம் செய்கிறோம். அப்படிப்பட்ட ஓட்டுநர்களும்  தங்களை நம்பி வரும் மனித உயிர்களையும் சாலையில் செல்லும் மனித  உயிர்களையும் பாதுகாத்து வாகனங்களை இயக்கி ஒப்பற்ற சேவையினை செய்து வருகின்றனர் .

ஆனால், நடைமுறையில் இந்த சமூகம் ஓட்டுநர் தொழிலை ஒரு போற்றக்கூடிய தொழிலாகக் கருதாமல் அடி மட்டமான தொழிலாகக் கருதுகின்றனர். ஒரு மருத்துவரோ, வழக்குரைஞரோ  அல்லது பொறியாளரோ, வளமான எதிர்காலத்தை  தனது வாரிசுகளுக்கும் அமைத்துதரும்  நோக்கில், தங்கள் வாரிசுகள் தங்களது தொழிலுக்கே வரவேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், ஓட்டுநர் தொழிலில் இருப்பவர் மட்டும் தான், இந்த தொழில் நம்மோடு முடியட்டும் என்று எண்ணி தமது குழந்தைகளிடம்  நன்றாகப் படித்து வேறு தொழிலுக்குச் செல்லுங்கள் என்று  அறிவுரை சொல்லுவதை நடைமுறையில் பல ஓட்டுநர்களின் குடும்பங்களில் காண்கிறோம். கீழ் குறிப்பிட்ட திருக்குறளில் சமூகத்தில் எவரையும் பணியைக் கொண்டோ, பொருளாதாரத்தைக் கொண்டோ வேறு எந்த காரணம் கொண்டும் தரக்குறைவாக நடத்துவது எண்ணுதல் கூடாது என்று  திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.” 

(குறள் எண் – 667, பொருட்பால், வினைத்திட்பம்)

பொருளுரை: (மு.வ. உரை) உருளும் பெரிய தேர்க்கு அச்சிலிருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது. எனவே, நவீன உலகின் சமுதாய  தேரை இயக்குபவர்களாக போக்குவரத்துத் துறையின் முதுகெலும்பாக ஓட்டுநர்கள் தான் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். 

அன்றாட வாழ்வில் ஓட்டுநர் சந்திக்கும் சவால்கள்

ஓட்டுநர்கள்  தங்களது அன்றாட பணியில் போக்குவரத்து நெரிசல், சாலை பாதுகாப்புப் பிரச்னைகள், பாதகமான வானிலை, நீட்டிக்கப்பட்ட வேலை நேரம், குடும்பத்தை விட்டு வெகுதூரத்தில் இருத்தல்  மற்றும் தனிமையாகப் பிரிந்து இருத்தல், சுகாதார பிரச்னைகள், நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் கவனச்சிதறல்கள், சாலை விதி மற்றும் போக்குவரத்து வாகன சட்டங்களைப்  பின்பற்றுதல், அவசரநிலைகள் மற்றும் பழுதுகளால் அல்லது விபத்துகளால் ஏற்படும் செயலிழப்புகள், நிதிச் சுமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் போன்ற பல்வேறு வகை சவால்களை சமாளித்து அதனை ஏற்றுக்கொண்டு பணி செய்து வருகின்றனர். இவ்வகையான ஓட்டுநர்களின் பணிகள் பாதுகாப்பான மற்றும் நீடித்த நிலையான போக்குவரத்துத் தொழிலை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குகிறது.

சுயசார்பு ஓட்டுநர்கள்/ தனியார் நிறுவன ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் 

அரசு பொது போக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கு பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. ஆனால், வாகன தொழிலை சுய தொழிலாக செய்பவர்கள், வாடகை ஓட்டுநர்கள் அல்லது தனியார் நிறுவன ஓட்டுநர்கள், பெரும்பாலும் சமூகத்தினாலும் மற்றும் தனியார்த் துறையிலும் அவர்கள்  பாரா முகமாகவே நடத்தப்படுகின்றனர் என்பது சோகமான விஷயம் ஆகும். இவ்வகையான ஓட்டுநர்கள் சமூகப் பாராட்டு இல்லாமை, சமூகத்தின் ஓட்டுநர்கள் மீதான தவறான விமர்சனம் மற்றும் எண்ணம், பெரும்பான்மையான ஓட்டுநர் முறைசாரா தொழிலாளியாக இருப்பதால் கண்டுகொள்ளாத நிலை, ஓட்டுநர்களின் பொருளாதார சிக்கல்கள் குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட பலன்பெறும் நிலையில் இருப்பது, நிச்சயம் இல்லாத கணிக்க முடியாத வேலை நேரம், குழுவாகச் சேர்ந்து தங்கள் குறைகளை முறையிட முடியாமல் இருப்பது, பாதுகாப்பு பிரச்னைகள், தொழில்நுட்ப மாற்றத்தினால் ஏற்படும் சவால்கள், மற்றும் மனநலம் பாதிப்பு பிரச்னைகள், நீண்ட நேரம் குடும்பத்தை விட்டு  தனிமையில் இருப்பதால் ஏற்படும் உடல் மற்றும் மன பிரச்னைகள் போன்ற ஓட்டுநர்களின்  கவலைகளை  நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் இருக்கிறது.

சுயசார்பு ஓட்டுநர்கள்/ தனியார் நிறுவன ஓட்டுநர்கள் என்னதான் எதிர்பார்க்கின்றனர்.. 

  • அங்கீகாரம் மற்றும் பாராட்டு: ஓட்டுநர் தொழில் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டு இல்லாததற்கு வழிவகுக்கிறது. ஓட்டுநர்களின் முக்கியத்துவத்தையும், சமுதாயத்திற்கு இன்றியமையாத பங்களிப்பாளர்களாக அவர்களின் பங்கையும் அங்கீகரிப்பது நேர்மறையான பணிச்சூழலை வளர்ப்பதற்கு அவசியமாக இருக்கிறது.
     
  • தற்போது தனியார் துறை அல்லது தற்சார்பு ஓட்டுநர்களின் கூட்டு முயற்சி: ஓட்டுநர்களின்  பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, போக்குவரத்து தொழில்துறை தலைவர்கள், போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த பல்வேறு சங்கங்களின் கூட்டு முயற்சிகள் தேவைப்படுகிறது. ஓட்டுநரின் மனவளத்தை திடப்படுத்தும் யோகா பயிற்சிகள்  வழங்குவது, ஓட்டுநர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் அமைவதற்கு  வழி வகுக்கும்.
     
  • ஓட்டுநர் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான முயற்சிகள்: ஓட்டுநருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், ஓட்டுநர்களுக்கான பணியில் உள்ள எதிர்பாரா நிலைமைகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஒட்டுமொத்த வேலை திருப்தி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தொடர்முயற்சிகள் முக்கியமாக தேவைப்படுகிறது. இந்த சவால்களை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசாங்கங்கள் அதனை அங்கீகரித்து செயலை அமல்படுத்தும் போது என்பது மிகவும் நீடித்த நிலையான, திறமையான, கண்ணியமான மற்றும் கனிவான  சேவைகளை ஒருங்கே தருகின்ற போக்குவரத்துத் துறையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகுக்கும்.
     
  • ஓட்டுநர்களுக்கான ஒழுங்கு விதிமுறைகள்: மத்திய, மாநில அரசாங்கங்கள் ஓட்டுநரின் எதிர்கொள்ளும் பிரச்னைகளான வேலை நேரம், பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் நடைமுறைகள் போன்ற சிக்கல்களிலிருந்து மீட்க அவர்களுக்கான விதிகளைத் தெளிவாகவும், நன்கு வரையறுக்கப்பட்டதாகவும்   அமைத்து அதனை செயல்படுத்துவதன் மூலம் ஓட்டுநர்களுக்கு  மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான சூழலுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயம் இல்லை.
     
  • ஓட்டுநர்களுக்கான திறன் மேம்பாட்டுக் கல்வி மற்றும் பயிற்சிப் பட்டறைகள் / திட்டங்கள்: மத்திய மாநில அரசாங்கங்கள்  தகுந்த இடைவெளியில் அனைத்து மண்டலங்களுக்கும் ஓட்டுநர்களுக்கான விரிவான பயிற்சிகள் தருவது, சமூக விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறைகள் /பிரசார திட்டங்கள்  வகுத்துச் செயல்படுத்த வேண்டும். இதனால், பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகளை மேம்படுத்துதலும்  உடல்நலம்/மனநலம் சார்ந்த நல்வாழ்வை மேம்படுத்துதலும் மற்றும் சமீபத்திய விதிமுறைகளைப் பற்றி ஓட்டுநர்களுக்குத் தெரியப்படுத்துதலும் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 
     
  • ஓட்டுநர்களுக்கான மன ஆரோக்கியம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்: மத்திய மாநில அரசாங்கங்களும், தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் சமூகதொண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்னைகளை கண்டறிந்து  அவற்றைச் சரிசெய்தல் வேண்டும். இதனால் ஓட்டுநரின் தனிமை மற்றும் மன அழுத்தம் சார்ந்த விளைவுகளைக் குறைக்கவும், மனநலம் உறுதித்தன்மை கொண்டதாக மாற்றவும் உதவுகிறது.
     
  • ஓட்டுநர்களுக்கான நிதி உதவித் திட்டங்கள்: மத்திய மாநில அரசாங்கங்கள் ஓட்டுநர்கள் சந்திக்கும்  பொருளாதார சுமைகளைக் குறைக்கும் நோக்கில் நிதியுதவி திட்டங்கள் அல்லது மானியங்களை அறிமுகப்படுத்தலாம். இதில் எரிபொருள் மானியங்கள், காப்பீட்டுப் பலன்கள் அல்லது எதிர்பாராத அவசரநிலைகளின் போது நிதியுதவி ஆகியவை அடங்க வேண்டும். 
     
  • வேலை தொடர்பான நியாயமான கோரிக்கைகள்: ஓட்டுநர்களுக்கான நியாயமான ஊதியம், முறையான ஓய்வு இடைவேளை மற்றும் பிற அத்தியாவசிய நன்மைகளைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் அவர்களுக்கான இலவச சட்ட சேவையினை வழங்கும் வழக்குரைஞர் குழுக்கள் அமைத்து அதன்மூலம்  கண்காணிப்பு செய்து ஓட்டுநர்களின் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த முடியும்.
     
  • பாலின சமத்துவம்: இதுவரை, ஓட்டுநர் தொழிலில்  ஆண்களின் பங்களிப்பே பெரும்பாலும் அதிகமாக நிலைகொண்டுள்ளது. அண்மைக் காலங்களில், பெண்களும் அனைத்துவிதமான வாகனங்களை இயக்குவதற்கு பெண்களும் பங்காற்ற முன் வந்துள்ளனர். இதில், பெண் சக்தியின்   பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க  தற்போது அரசு மற்றும் தனியார்த் துறையில் ஏற்படும் ஓட்டுநர் பற்றாக்குறையும் மற்றும் ஓட்டுநர் தொழில் மீதான அவதூறுகள் நீங்கும்.

மேற்கூறிய, ஓட்டுநர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் தலையீடும், சமூக ஆதரவு மற்றும் பல்வேறு போக்குவரத்துத் துறை சார்ந்த பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது. மேலே கூறிய, ஓட்டுநர்களின் பிரச்னைகளுக்கான  விரிவான தீர்வுகளைச் செயல்படுத்துவதன் மூலம், பல்வேறு சமூகங்களை இணைத்துச் செயல்பட வைப்பதில் முக்கிய பங்காற்றும்  ஓட்டுநர்களுக்கு  நீடித்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் சந்தோஷமான  சூழலைக் கொடுக்க இயலும்.

ஓட்டுநர்களின் சேவையும்  போற்றப்படக் கூடிய சமூக சேவையே

மக்களின் அன்றாட பயண தேவைகளுக்கு எளிதாக அணுகவும் மற்றும் பயண இணைப்பு செய்யவும், பொருள்கள் மற்றும் சேவைகள் விநியோகம் செய்வதற்கும், அவசரக்கால சேவைகள்(ஆம்புலன்ஸ் / தீயணைப்பு) செய்வதற்கு, பொது போக்குவரத்து இயங்குவதற்கும், பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவும், சமூக நிகழ்ச்சிகளைக் கொண்டாடவும், மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கு இலவச போக்குவரத்து சேவைகளை வழங்கவும், அவசரக்கால நெருக்கடி நிலை(போர் /அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும் போதும் /சர்வதேச நோய் பரவல் காலத்திலும்) மற்றும் மனிதாபிமான உதவி, பெண் முன்னேற்றத்திற்கு அரசினால் கொடுக்கப்படும் இலவச பயணத்திற்கும், பெருநிறுவன பணியாளர் போக்குவரத்து சேவைகள், சமூக தொடர்புகளை எளிதாக்குதல் போன்ற சேவைகள் வழங்குவதில் ஓட்டுநர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

ஓட்டுநர் தொழில் என்பது வாகனத்தை இயக்குவதைத் தாண்டிய ஒரு சமூக சேவை என்பதை மறுக்க முடியாது. இந்த ஓட்டுநர்கள் தான்  மக்களின் அன்றாட பயண இணைப்புக்கும், நாம் எளிதில் எங்கும் செல்வதற்கும்  மற்றும் பொருளாதார உயிர்ச்சக்தியின் விளங்குவதற்கு மூலக்கல்லாக இருக்கின்றனர். நமது அன்றாட வாழ்வில் சமுதாயத்தின் நல்வாழ்வுக்கு மிக முக்கியமாக பங்களிக்கும் ஓட்டுநர்களை, அவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதும், அதற்கான பாராட்டு செய்வதும்  மற்றும் மரியாதையை வளர்ப்பதும் அவசியம் ஆகும். நீங்கள் ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு வாகனத்தில் நுழையும்போது, நம்  மக்களுக்கு ஓட்டுநரால் வழங்கப்படும் சேவை என்பது அனைவருக்கும் எளிதில் அணுகக் கூடிய இடமாகவும், உலகில் உள்ள அனைத்து விதமான சமூகங்களை இணைத்தும் ஒரு  சந்தோஷமான பாதுகாப்பான பயண அனுபவத்தைத் தருவது சமூக சேவைக்கு சமமானது என்றும் கருத்தில் கொள்ளுங்கள். மேலும் அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டு நிகழ்ச்சியோ, சன்மானமோ அல்லது சான்றிதழோ தேவை இல்லை. அடுத்த முறை, எவ்விதமான வாகனத்தில் பயணம் செய்தாலும் உங்கள் வாகனத்தின் பயண முடிவில் பாதுகாப்பான, சந்தோஷமான பயணத்தை வழங்கிய அந்த ஓட்டுநருக்கு ஒரு நன்றியையாவது  தெரிவித்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

ஓட்டுநர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையைத் தியாகம் செய்து உலகின் கடினமான பணியினை செய்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். உலகின் ஒவ்வொரு மூலையிலும் 24 மணி நேரத்தில் எண்ணிலடங்கா ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக் கொண்டு தான் இருப்பார்கள். அப்படி எந்நேரமும் ஓய்வே இல்லாமலும், பண்டிகை மற்றும் சிறப்பு நாள்களிலும் கூட ஓட்டுநர்கள் தங்களது பணியினை நிறுத்தாமல் செய்து வருகின்றனர். ஓட்டுநர் சேவையினை போற்றுதலுக்குரிய சமூக சேவையாகக் கருதி ஓட்டுநர்களைப் போற்றுவோம். 

[கட்டுரையாளர் - பன்னாட்டு பொதுப் போக்குவரத்து நிபுணர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com