இந்தியா கூட்டணி பிளவுப் பாதையில் புதுச்சேரி இணைகிறதா?

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் 'இந்தியா' கூட்டணியிலிருந்து வெளியேறியது, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸூம், பஞ்சாபில் ஆம்ஆத்மியும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக முடிவு.
புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

புதுச்சேரி: பிகார் முதல்வர் நிதீஷ் குமார் 'இந்தியா' கூட்டணியிலிருந்து வெளியேறியது, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸூம், பஞ்சாபில் ஆம்ஆத்மியும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக எடுத்துள்ள முடிவு ஆகியவற்றால் 'இந்தியா'  கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், புதுச்சேரியிலும் 'இந்தியா' கூட்டணியின் பிரதான கட்சியான திமுகவுக்கும் காங்கிரஸூக்கும் இடையே இணக்கமற்ற நிலை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

புதுவை யூனியன் பிரதேசத்தில் 1967-ஆம் ஆண்டுமுதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான 14 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 10 முறையும், திமுக, அதிமுக, பாமக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தலா ஒரு முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணியே அதிக முறை வென்றுள்ளது.

வரும் மக்களவைத்  தேர்தலில் (2024) காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணிக்கும், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளரே போட்டியிடுவார் என முடிவாகியுள்ளது. ஆனால், 'இந்தியா' கூட்டணியில் போட்டியிடுவது யார் என்பதில் காங்கிரஸூக்கும் திமுகவுக்கும் இடையே கருத்து மோதல் காணப்படுகிறது.

எம்.பி. சீட் கேட்கும் திமுக: 

தற்போது புதுவை காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும், எம்.பி.யாகவும் உள்ள வி.வைத்திலிங்கத்தை மீண்டும் வேட்பாளராக்க காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இம்முறை தங்களுக்கு வாய்ப்பளித்தால் மட்டுமே புதுவையில் வெற்றியைத் தக்கவைக்க முடியும் என போர்க்கொடி தூக்கியுள்ளது திமுக.

கடந்த புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸில் 15 பேர் போட்டியிட்டு அதில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றதைக் குறிப்பிடும் திமுகவினர், தங்களுடைய கட்சி சார்பில் 6 பேர் வென்று திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

புதுவை மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அக்கட்சியின் மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சிவாவும், புதுவையில் 'இந்தியா' கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் தங்களது வேட்பாளரே நிற்பார் என காங்கிரஸ்காரர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், திமுகவுக்கே தங்களது ஆதரவை தெரிவிப்பதாக ஆர்வம் காட்டுகின்றனர்.

மோதலுக்கான காரணம்: சில மாதங்களுக்கு முன்பு புதுவை காங்கிரஸில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்தனர். இது காங்கிரஸ் தலைவர்களுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

சமீபத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் புதுவை அரசைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளுடன் சேராமல் காங்கிரஸ் கரிக்கலாம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் மு.கந்தசாமி, புதுவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட, திமுக தலைவர் சம்மதித்துவிட்டதாகவும், வைத்திலிங்கத்துக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி பிரசாரத்தை தொடங்கிவைத்தார். அவரது பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு காட்டவில்லை.

கோபமூட்டிய  நிகழ்வு: இந்த நிலையில், புதுச்சேரி உருளையன்பேட்டையில் சமீபத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் அத்தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவுடன் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு நெருக்கம் காட்டினர்.  நேரு, புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் ஆர்.சிவாவுக்கு எதிராகச் செயல்படுபவராக திமுகவினரால் குற்றஞ்சாட்டப்படுபவர். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கம் காட்டுவதை திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து, தங்களுடைய கட்சியினரை திமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இத்தகைய சூழலில் ஜனவரி 25-ஆம் தேதி புதுச்சேரி சாரம் பகுதியில் திமுகவின் மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று, புதுவையில் திராவிட மாடல் ஆட்சி அமையும் எனக் கூறியதுடன், புதுவை காங்கிரஸôர் உழைப்பதில்லை; தேர்தலில் சீட்டு வாங்க மட்டும் திமுக தலைவரிடம் காங்கிரஸôர் வருகின்றனர்; அவர்களின் செயலற்ற போக்கால் காங்கிரஸ் வலுவிழந்துவிட்டது என்று விமர்சித்தார்.

தமிழக அமைச்சரின் இந்தப் பேச்சு புதுவை காங்கிரஸôரை அதிருப்தியடைய வைத்தது. திமுக அமைச்சரின் விமர்சனம் சரியல்ல என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். இவ்வாறு அடுத்தடுத்து நடக்கும் 'யார் பெரியவர்' என்ற போட்டி மற்றும் பேச்சுகளால் புதுச்சேரியில் 'இந்தியா' கூட்டணிக்குள் எப்போது வேண்டுமானாலும் பிளவு நேரலாம் என்று இரு கட்சியினரும் கருதுகின்றனர்.

புதுவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வேட்பாளர் தேர்வுக்கும் தயாராகி விட்டது. இந்த நிலையில், 'இந்தியா' கூட்டணியில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் பரஸ்பரம் மோதி வருவது அக்கூட்டணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என இரு கட்சிகளின் தலைவர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com