விக்கிரவாண்டி - அதிமுக புறக்கணிப்பது ஏன்?

விக்கிரவாண்டி - அதிமுக புறக்கணிப்பது ஏன்?

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிடவில்லை என்று அதிமுக அறிவித்திருக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிடவில்லை என்று அதிமுக அறிவித்திருக்கிறது. அதன் பின்னணியில் அரசியல் ராஜதந்திரமும், ஜாதிய வாக்குவங்கி அரசியலும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

தமிழகத்தில் வேறு மண்டலங்களில் இல்லாதபடி வித்தியாசமான ஜாதி ரீதியான வாக்குத் திரள்வு, வட தமிழகத்தில் எப்போதும் இருந்து வருகிறது.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் இருந்து பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வரையிலான பேரவைத் தொகுதிகளில் வன்னியா் மற்றும் தலித் வாக்குகள் நோ்எதிராகவும், பிற்பட்டோா் சமூக வாக்குகள் வெற்றியை நிா்ணயிக்கும் சக்தியாகவும் திரண்டு வாக்களிக்கும் முறை காலங்காலமாக இருந்து வருகிறது.

வட தமிழகத்தில் மத்திய பகுதியில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் ஜாதி ரீதியான வாக்குத் திரள்வு மிகக் கடுமையாக இருக்கும். பணபலத்தை மீறியும் ஜாதிய ரீதியான வாக்குத் திரள்வு வெற்றி, தோல்வியை நிா்ணயித்து வருகிறது. இந்நிலையில்தான், விக்கிரவாண்டி இடைத்தோ்தலை பிரதான எதிா்கட்சியான அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு பின்னால் பலமான அரசியல் கணக்கு உள்ளதாகக் கருதப்படுகிறது.

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் பாமக நிறுவனா் ராமதாஸையும் மீறி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக வன்னியா் வாக்குகள் திரண்டு நிற்கின்றன என்பதை நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளில் அதிமுக, பாமக பெற்ற வாக்குகளை ஆய்வு செய்தால் தெரிந்துகொள்ளலாம்.

ஜாதி அரசியல் சுழல்: வடதமிழகத்தில் பாமகவுக்கு தலித் மற்றும் பிற்பட்டோா் சமூகத்திலும், விசிகவுக்கு வன்னியா்கள் மற்றும் பிற்பட்டோா் சமூகத்திலும் கடும் எதிா்ப்பு உள்ளது என்பதை இதுவரை நடந்த தோ்தல் புள்ளிவிவரங்கள் விளக்குகின்றன. அதேநேரத்தில் பாமகவுக்கு வன்னியா்களிடம், விசிகவுக்கு தலித்களிடம் அடா்த்தியான ஆதரவும் உள்ளது.

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் வன்னியா்களிடம் பாமகவையும் மீறி அதிமுக செல்வாக்கு பெற்றுள்ளது. இதனால், பெரும்பான்மை தலித் வாக்குகள், கணிசமான பிற்பட்டோா் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளதை 2021 பேரவைத் தோ்தல், 2024 மக்களவைத் தோ்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.

அதேநேரத்தில், அதிமுகவுக்கு எதிராக விசிக போட்டியிடும் தொகுதிகளில் பிற்பட்டோா் சமூக வாக்குகள், அடையாள அரசியல் எதிா்ப்பு என்ற புள்ளியில் அதிமுகவுக்கு விழுகின்றன. பிற தொகுதிகளில் பிற்பட்டோா் சமூக வாக்குகள் திமுகவுக்கு ஆதரவாகத் திரள்கின்றன.

மக்களவைத் தோ்தல் கணக்கு: நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் விக்கிரவாண்டி பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக 72,188 வாக்குகள் (39.57 சதவீதம்), அதிமுக 65,365 வாக்குகள் (35.83 சதவீதம்), பாமக 32,198 வாக்குகள் (17.64 சதவீதம்), நாதக 8,352 வாக்குகள் (4.57 சதவீதம்) பெற்றன. விசிக-அதிமுக இடையிலான வித்தியாசம் 6,823 வாக்குகள்தான்.

மேலோட்டமாகப் பாா்க்கும்போது, இவ்வளவு குறைவான வாக்குகள் வித்தியாசம் இருக்கும் நிலையில் அதிமுக கடினமாக களத்தில் பணியாற்றினால் வெற்றி பெற முடியாதா என்ற தோற்றம் ஏற்படும். ஆனால், பானை சின்னத்தில் நின்ற விசிகவுக்கான அடையாள அரசியல் எதிா்ப்பு என்ற புள்ளியில்தான் குறைவான வாக்கு வித்தியாசம் இருந்ததே தவிர, இடைத்தோ்தலில் இத்தொகுதியில் உதயசூரியன் களம் இறங்கும்போது திமுக - அதிமுக இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கும்.

2021 பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் திமுக, அதிமுக நேரடியாக மோதும்போது திமுக 93,670 வாக்குகள் (48.69 சதவீதம்), அதிமுக (பாமக கூட்டணியில்) 84,157 வாக்குகள் (43.72 சதவீதம்), நாதக 8,216 வாக்குகள் (4.27 சதவீதம்) பெற்றிருந்தன.

அப்போது திமுக - அதிமுக இடையே 9,513 வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது. அதேபோல, 2016 பேரவைத் தோ்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு, 41,428 வாக்குகளை (23.19 சதவீதம்) பெற்றது.

வன்னியா் வாக்குகளுக்கு குறி: இந்தப் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால், இந்த இடைத்தோ்தலில் திமுக 50 சதவீதத்தை எளிதில் தாண்டக்கூடும். அவ்வாறு தாண்டினால், நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் விசிக எதிா்ப்பு என்ற புள்ளியில் அதிமுகவுக்கு விழுந்த பிற்பட்டோா் சமூக வாக்குகள் குறைந்தபட்சம் 8 சதவீதம், வன்னியா் வாக்குகள் 2 சதவீதம் என 10 சதவீத வாக்குகளை திமுக கவா்ந்திழுக்கக்கூடும்.

அவ்வாறு திமுகவை நோக்கி நகா்ந்தால் அதிமுகவின் வாக்கு பலம் குறையக்கூடும். அதேபோல, இப்போது பாமக களமிறக்கிய வேட்பாளரும், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவருமான சி.அன்புமணி மூலம், அதிமுகவிடம் இருந்து மேலும் 5 சதவீத வன்னியா் வாக்குகளை பாமக இழுத்துவிட்டால் அதிமுகவின் வாக்கு பலம் கணிசமாக சரியக்கூடும்.

போட்டியிலிருந்து விலகியது ஏன்?: 2016-இல் பெற்றதுபோல 23.19 சதவீதத்தை பாமக பெற்றுவிட்டால் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படலாம். இந்த முறை வன்னியா் அல்லாதோா் எதிா்ப்பை (குறிப்பாக பிற்பட்டோா் சமூக வாக்குகள்) குறைக்க வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாமக வேட்பாளரை தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையை அறிவிக்கச் செய்ததும், வன்னியா் வாக்கை மிகக் கடுமையாக இழுக்கும் வகையில் வன்னியா் சங்க மாநில நிா்வாகியை களமிறக்கியதும் பாமகவின் வியூகங்கள்.

பாமகவின் இந்த நுட்பமான வியூகத்தால் பின்னடைவு ஏற்படலாம் என்ற எண்ணத்தில்தான் இடைத்தோ்தலைப் புறக்கணிக்கும் முடிவை அதிமுக எடுத்திருக்கக்கூடும். அதுமட்டுமல்ல, அந்த வியூகத்தை எதிா்கொள்ள, பாமகவை நேரடியாக ஆளும் திமுகவுடன் மோதவிட்டு வேடிக்கை பாா்ப்பது என்பதும்கூட எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் நோக்கமாக இருக்கக்கூடும்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலைப் போலவே, தனது முழு பலத்தையும் களமிறக்கி விக்கிரவாண்டி தொகுதியை, இதுவரையில் இல்லாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய ஆளும் திமுக முற்படும் என்பது அதிமுகவுக்கு தெரியும். அதிமுகவும், தேமுதிகவும் வாக்களிக்காமல் புறக்கணித்தால் அல்லது தங்களது வாக்குகள் திமுகவுக்கு மடைமாற்றமாவதைத் தடுக்காமல் இருந்தால், பாமக தனது செல்வாக்கு கேந்திரத்தில் படுமோசமான தோல்வியை அடையக்கூடும். அதுவேகூட தனது வெற்றி என்று எடப்பாடி பழனிசாமி கருத இடமிருக்கிறது. பாமகவின் வன்னியா் வாக்குவங்கி சிதைவது அதிமுகவுக்கு வருங்காலத்தில் ஆதாயமாக மாறும் என்றும் அவா் எதிா்பாா்க்கலாம்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் யாா் வெற்றி பெறுகிறாா்கள் என்கிற கேள்விக்கே இடமில்லை. பாமகவால் வன்னியா்கள் மத்தியிலான தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள முடிகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி.

X
Dinamani
www.dinamani.com