
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நேரிட்டு இன்னும் 15 நாள்கள்கூட ஆகவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த நாடும் நாட்டு மக்களும் அதை அப்படியே மறந்துவிட்டு அடுத்தடுத்த செய்திகளுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர், வழக்கம்போல.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம், மக்களவைத் தலைவர் தேர்தல், நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை, நாடாளுமன்றத்தில் அமளி... இன்ன பிறவாகக் கவனக் குவியங்கள் மாறிக்கொண்டே செல்கின்றன.
இனி வரும் காலத்தில் அடுத்தடுத்து நேரிடக் கூடிய ரயில் விபத்துகளின்போது வெளியிடப்படும் பட்டியல்களில் இதுவுமொன்றாக இடம் பெறும். ஆனால், உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் துயரங்கள்...
நாட்டில் ரயில் விபத்துகள் நேரிடும் ஒவ்வொரு முறையும் பேசப்படும் விஷயம் அரியலூர் ரயில் விபத்தும் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் பதவி விலகலும்!
சாஸ்திரியின் ராஜிநாமாவுடன் சேர்த்து அவ்வளவாக அறியப்படாத – இன்றைய காலத்தில் சற்றும் நினைவுகூரப்படாத மற்றொரு முக்கியமான விஷயம், மக்களவையில் அப்போது பிரதமராக இருந்த ஜவாஹர் லால் நேரு ஆற்றிய உருக்கமான உரை.
கடைசியாக, மேற்கு வங்கத்தில் புதிய ஜல்பைகுரி அருகே ஜூன் 17 ஆம் நாள் காலை முன்னால் சென்றுகொண்டிருந்த அல்லது நின்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இறந்தவர்களில் இருவர் – சரக்கு ரயிலின் டிரைவர், எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு.
இந்த விபத்தின்போதும் (அரியலூர் விபத்து காலத்திலிருந்து) எப்போதும்போல முதல் நபர்களாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர் அருகிலுள்ள கிராமத்து மக்கள்.
ஒரு காலத்தில் அரசியல் கட்சிகளின் மிக மூத்த தலைவர்களால் கேபினட் நிலையில் தனியொரு அமைச்சர் பதவி நிரப்பப்பட்டு சர்வ அதிகாரங்கள் கொண்ட அமைச்சகமாகத் திகழ்ந்தது ரயில்வே.
உலகின் மிகப் பெரிய போக்குவரத்து சங்கிலித் தொடர் அமைப்பான இந்திய ரயில்வேக்காக ஆண்டுதோறும் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
நாட்டின் விடுதலைக்கும் முன்பிருந்தே – 1924 ஆம் ஆண்டு முதல் – இந்திய ரயில்வே துறைக்காகத் தனி நிதிநிலை அறிக்கைதான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நிதிநிலை அறிக்கைச் சீர்திருத்தம் என்ற பெயரில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 2016-ல், இந்த 92 ஆண்டுகால பாரம்பரிய வழக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 2017-ல் பொதுவான மத்திய நிதி நிலை அறிக்கையின் ஒரு பகுதியாக ரயில்வே நிதி நிலை அறிக்கையையும் சேர்த்து சமர்ப்பித்தார் அன்றைய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.
ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் கடந்த காலங்களில் ரயில்வே துறைக்கெனத் தனி அமைச்சர் என்ற நிலையும் ஒழிக்கப்பட்டு, தற்போது ஏதேனும் ஓர் அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாக ரயில்வே துறை வழங்கப்படுகிறது.
ஆசப் அலி, லால் பகதூர் சாஸ்திரி, ஜகஜீவன் ராம், ஸ்வரண் சிங், பனம்பள்ளி கோவிந்த மேனன், குல்சாரி லால் நந்தா, கமலபதி திரிபாடி, மது தண்டவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதீஷ் குமார், மமதா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ் போன்ற பெருந்தலைவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருந்த ரயில்வே துறை, தற்போது கூடுதல் இணைப்பாகத் தகவல் ஒலிபரப்பு – தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான முன்னாள் ஐ.ஏ.எஸ். அலுவலர் அஸ்வினி வைஷ்ணவிடம் இருக்கிறது.
ரயில் விபத்துகள் நேரிடும்போதெல்லாம் நிகழ்வதைப் போலவே இப்போதும் யாரைக் குற்றவாளியாக்குவது என்பதில் ஒவ்வொரு தரப்பும் முனைப்பாகவே இருக்கின்றன. விபத்துப் பகுதியில் சிக்னல்கள் செயலிழந்திருக்கின்றன என்பது மறுக்கப்படாத உண்மை. இந்தப் பகுதியில் அனைத்து சிக்னல்களையும் கடந்துசெல்ல சரக்கு ரயிலின் டிரைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட வேகத்தைவிடக் கூடுதலாகச் சரக்கு ரயில் டிரைவர் சென்றிருக்கிறார் என்றொரு தரப்பு. விசாரணையே முடியாத நிலையில் டிரைவரைக் குற்றவாளியாக்குவதா? என்று நொந்துபோயிருக்கிறார்கள் அவருடைய உறவினர்கள்.
எக்ஸ் வலைத்தளத்தில் தனது துயரத்தையும் வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் ரயில்வே துறைக்கும் கூடுதல் பொறுப்பான அஸ்வினி வைஷ்ணவ்.
மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் நேரடியான விளைவுதான் கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்துவரும் ரயில் விபத்துகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கட்டண உயர்விலும் அழகுபடுத்துவதிலும்தான் அரசு கவனம் செலுத்துகிறது, பாதுகாப்பில் அல்ல என்று குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும் இந்நாள் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி.
ரயில்வே அமைச்சகத்தைத் தற்புகழ்ச்சிக்கான ஃபோட்டோ ஷூட்டுக்கானதாக்கிவிட்டது மோடி அரசு என்று குறிப்பிட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
நிதிப் பிரச்சினை, நிரப்பப்படாமல் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் எனத் திணறுகிறது ரயில்வே. பெருமையாக ஒருபுறம் வந்தேபாரத் ரயில்கள் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்க, சாதாரண பயணிகளின் நிலைமையோ படுமோசமாகிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து, அவ்வப்போது ரயில்கள் பெரும் விபத்துகளுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன.
அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் தொடர் செய்தி அலைகளின் மூழ்கடிப்பில் - ஊடகங்களும் மக்களும் ஒருசேர மறந்துவிட, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் காயமுற்றோருக்கும் அரசுகள் அறிவித்த இழப்பீடுகள் அனேகமாக இந்நேரம் வழங்கப்பட்டிருக்கலாம். விபத்துக்குப் பொறுப்பு என்று குறிப்பிட்டு ரயில்வே துறையில் யாரேனும் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தச் செய்தி வெளித் தெரிவதுகூட குறிப்பிட்ட நாளின் நிலைமையைப் பொருத்திருக்கும். ஆக, அவ்வளவுதான் எல்லாமும்.
மீண்டும் ஒரு ரயில் விபத்து நேரிடும். பிரதமர் இரங்கல் தெரிவிப்பார், ரயில்வேக்குப் பொறுப்பான அமைச்சர் சென்று பார்வையிடுவார். மறுபடியும் அரியலூர் விபத்து பற்றியும் லால் பகதூர் சாஸ்திரியின் ராஜிநாமா பற்றியும் எதிர்க்கட்சிகளும் சமூக ஊடகங்களும் நினைவுகூரும். மீண்டும், மீண்டும், மீண்டும்...
[வரலாற்றின் பக்கங்களிலிருந்து... தொடரும்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.