பன்முகப் படைப்பாளி கவிஞர் தமிழ்ஒளி!

மகாகவி பாரதி, பாரதிதாசன் என்ற இரு ஆளுமைகளின் வழித்தடத்தில் பயணப்பட்ட கவிஞர் தமிழ்ஒளியின் நினைவு நாளையொட்டி இக்கட்டுரை.
பன்முகப் படைப்பாளி கவிஞர் தமிழ்ஒளி!

முனைவர் சீமான் இளையராஜா

கவிஞர் தமிழ்ஒளி பன்முகப் படைப்பாளியாகவும், கவிஞராகவும் விளங்கியவர். அவரது கவிதை வரிகள் சாகாவரம் பெற்று இன்றைக்கும் நம் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளன.

இளமைப்பருவம்

போ. சின்னையா, செங்கேணியம்மாள் தம்பதியருக்கு தலைமகனாக 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்தார் கவிஞர் தமிழ்ஒளி. குழந்தைப் பருவத்தில் ‘பட்டுராசு’ என அழைக்கப்பட்டவர். இயற்பெயர் விஜயரங்கம். ஆரம்பக் கல்வியை அரசுப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை கல்வே கலாசாலையிலும், தமிழ்க் கல்வியைக் கரந்தை செந்தமிழ்க் கல்லூரியிலும் பயின்றவர். கற்றுத் தெளிந்த பின்னர், கவிஞர் தமிழ்ஒளியாக நாடெங்கும் அறிமுகமானவர். கவிஞர் தமிழ்ஒளி மகாகவி பாரதி, பாரதிதாசன் என்ற இரு ஆளுமைகளின் வழித்தடத்தில் பயணப்பட்டவர்.1940ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதான ஈடுபாட்டால், தன்னைப் பாட்டாளியின் பாவலனாக மாற்றிக்கொண்டவர். மகாகவி பாரதி ரஷியப் புரட்சியைப் பற்றிப் பாடிய முதல் கவிஞன் என்றால், தமிழ்ஒளி செஞ்சீனப் புரட்சியைத் தமிழில் பாடிய முதல் கவிஞன் ஆவார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் தமிழ்ஒளிக்கு தோழனாக அறிமுகமானவர். இருவரும் திராவிடர் கழகத் தோழர்களாகப் புதுவையைச் சுற்றி வலம் வந்தனர். முரசு ஏட்டில் கவிஞர் தமிழ்ஒளி தனது கைவண்ணத்தில் கவிதைகள் எழுதினார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முரசு ஏட்டில் கவிஞர் தமிழ்ஒளி கவிதைகளைப் படித்துப் பாராட்டினர். குறிப்பாகத் தமிழ்ஒளியை நேரில் அழைத்துப் பாராட்டினார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தான் எழுதிவந்த ‘பாண்டியன் பரிசு’ காவியத்தின் கையெழுத்துப் படியினை நகலெடுக்கும் பொறுப்பினை கவிஞர் தமிழ்ஒளி அவர்களிடம் கொடுத்தார். அதனை செம்மையாகச் செய்துகொடுத்தார்.

தமிழ்ஒளியின் கல்விப் பயணமும் சாதிய ஒடுக்குமுறையும்

கவிஞர் தமிழ்ஒளியின் அறிவையும், திறமையையும், உழைப்பையும் பார்த்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கரந்தைப் பெரும்புலவர் கோ.சி. பெரியசாமி அவர்களுக்குப் பரிந்துரைத்து கடிதம் அளித்தார். அதைக்கொண்டு கல்லூரியில் கொடுத்து அங்கே தனது கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார் தமிழ்ஒளி. கரந்தைக் கல்லூரியில் கால் வைத்ததும் கல்லூரி மானவர்களிடையே சிறந்த கவிஞராகப் போற்றப்பட்டார். கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளை அங்கு இருக்கும் ஆசிரியர்களும் படித்துப் பாராட்டினர். கவிஞர் தமிழ்ஒளியின் சிந்தனையும், செயல்பாடும் கல்லூரியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கவிஞர் தமிழ்ஒளியைப் பற்றி ஆராயத்தொடங்கினர். அவர் பின்னணி இன்னாதென அறியப்பட்டது. சுயமரியாதைக்காரர், பாரதிதாசன் மாணவர், தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்பதற்கும் மேலாக எதுவும் புலப்படவில்லை. அந்த அடையாளங்களில் ‘சாதி’ ஒன்றே மேட்டுக்குடி மாணவர்களுக்குப் போதுமானதாகத் தெரிந்தது. ஒருநாள் இரவு உணவுவிடுதியில் ‘சாதி’ என்ற அடையாளம் ஏளனப் பேச்சாக எழுந்தது. தமிழ்ஒளி இதைக்கேட்டு அதிர்ந்துபோனார். மறுதினம் புதுவை சென்று கவிஞர் பாரதிதாசனிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். உடனே கவிஞர் பாரதிதாசன் தஞ்சை வந்து கல்லூரி முதல்வரைச் சந்தித்தார். அப்போது, கல்லூரி முதல்வராயிருந்தவர் புலவர் பொன். மீனாட்சி சுந்தரனார். இவர் சுயமரியாதைக் கொள்கைகளில் ஈடுபாடுமிக்கவர். மீனாட்சி சுந்தரனார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைச் சமாதானப்படுத்தி “இனிமேல் இதுபோன்ற பிரசனை வராது; தமிழ்ஒளியை நான் கவனித்துக்கொள்கிறேன்” என உறுதிமொழிந்து வழியனுப்பி வைத்துள்ளார். கரந்தைக் கல்லூரியில் படித்த நாள்களில் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய மேடைநாடகம் தான் 'சிற்பியின் கனவு'.

தமிழ்ஒளியின் கவிதைகள் - காவியங்கள்

நம் நாடு விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டு மூன்று குறுங்காவியங்களை வெளியிட்ட பெருமைக்குரிய கவிஞராக தமிழ்ஒளி, இலக்கிய வட்டத்தில் பாராட்டப்பெற்றார். நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல் இம்மூன்றும் கவிஞர் தமிழ்ஒளியின் தொடக்க காலப்படைப்புகள். இம்மூன்றனுள்ளும் ‘நிலைபெற்ற சிலை’ தமிழ்த்தாய்க்குக் கவிஞர் தமிழ்ஒளி வடித்தளித்த முதல் காணிக்கையாகும்.

1949இல் இவர் படைத்த ‘மேதினமே வருக!’ என்ற கவிதை இன்றளவும் சொல் புதிது; பொருள் புதிது எனப் பேசப்படுகிறது. ‘தலித்’ என்ற சொல் தமிழில் இடம்பெறுவதற்கு முன்னரே சேரிப் பெண்களை கதைத்தலைவியாக வைத்து இரண்டு காவியங்கள் படைத்தவர் தமிழ்ஒளி. இத்துடன், ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் வழிநூலாக ‘மாதவி காவியம்’ படைத்தவர். தமிழ்ஒளி தோற்றத்தில் எளியவர். மனத்தின்மை மிக்கவர். கொண்ட கொள்கையை நெறி பிறழாமல் ஒழுகியவர். அதனால், நயந்து பணிந்து ஆதாயம் தேடும் அவலம் அவருக்கு நேர்ந்திடவில்லை. இத்துணை சிறப்புக்குரிய கவிஞர் தமிழ்ஒளி, காலத்தால் நிழலடிக்கப்பட்டர், இரட்டிப்புச் செய்யப்பட்டார். இத்துணை இடர்பாடுகளுக்கும் மத்தியில் கவிஞர் தமிழ்ஒளி தனிமனிதராக வாழ்ந்து மிகக் கடுமையாக உழைத்து சாதனை படைத்துள்ளார் என்பதை அவருடைய படைப்புகளின் பட்டியல் சொல்கின்றன.

ஒன்பது காப்பியங்கள், பலநூறு தனிக் கவிதைகள், இரண்டு குறுநாவல்கள், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இருபது ஓரங்க நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட குட்டிக்கதைகள், மூன்று இலக்கிய ஆய்வுநூல்கள், விமர்சனக் கட்டுரைகள் எனப் படைப்புகள் நீண்டுள்ளது. இந்தப் படைப்புகளில் பலவும், விஜயரங்கம் என்ற இயற்பெயரிலும், ‘விஜயன்’ ‘சிவிர’ ‘தமிழ்ஒளி’ ‘பாணன்’ ‘ஜெயங்கொண்டான்’ போன்ற பல புனைபெயர்களிலும் ஏடுகளில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ஒளி கொள்கைக் கவிஞர். பொதுவுடைமைத் தத்துவம் அவரை ஈர்த்தது. சோவியத் ரஷியாவைப் போற்றி எழுதினார். தமிழ்ஒளி ஏழை மக்களின் கவிஞர் ஆனார். தமிழ்ஒளி குழந்தைகளுக்காக எழுதினார். அவரது குழந்தை இலக்கியம் முக்கியத்துவம் வாய்ந்தது. 60 குழந்தைப் பாடல்களை எழுதியுள்ளார். குழந்தைகளின் அறிவைத் தூண்டும் விதத்தில் குட்டிக் கதைகளும் எழுதினார். அவை டால்ஸ்டாயின் குட்டிக் கதைகளுக்கு இணையானவை. அவை ‘வனமலர்கள்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்ததுள்ளன.

குட்டிக் கதைகளுக்கும் ஒரு மரபு உள்ளது. மகாகவி பாரதி, மாதவையா, விந்தன், அண்ணா, கலைஞர், கண்ணதாசன் என்று பலரும் குட்டிக் கதைகளை எழுதியுள்ளனர். இதில், கவிஞர் தமிழ்ஒளியின் குட்டிக் கதைகள் தனித்துவமும் நுட்பமும் வாய்ந்தவை. தமிழ்ஒளி 105 குட்டிக் கதைகளை எழுதியுள்ளார். அவை அறிவூட்டல், மகிழ்வூட்டல் என்ற இரு நோக்கங்களைக் கொண்டுள்ளது. இக்குட்டிக்கதைகள் தாமரை, சரஸ்வதி, ஜனசக்தி, அமுதசுரபி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன. இக்குட்டிக் கதைகளைப் பதின்ம வயதுக் குழந்தைகள் படித்துப் புரிந்துகொள்ள முடியும். இக்குட்டிக் கதைகள் மிகுந்த கற்பனை நயத்துடனும் இனிமையான நடையிலும் அமைந்துள்ளன.

தமிழ்ஒளி குழந்தைகளுக்காக எழுதிய பாடல்கள் ‘பாடு பாப்பா’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. தலைப்பிற்கேற்றவாறு குழந்தைகளைப் பாடத் தூண்டுகிறது என்றே சொல்லலாம். தமிழ் ஒளியின் குழந்தைப்பாடல்கள் அறிவுப்பாட்டுகள், அழகுப் பாட்டுகள், ஆனந்தப் பாட்டுகள் என்று மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளன. கல்வியின் முக்கியத்துவத்தைத் திருக்குறளும் நாலடியாரும் ஔவையும் சொல்லி விளக்கியதை 12 வரிகளில் தமிழ் ஒளி எளிய சொற்களில் கூறி விடுகிறார். முதலில் அறிவுப் பாட்டைப் பார்ப்போம்:

“பாடம் படியா ஒரு பையன்

பள்ளி செல்லா ஒரு பையன்

மூடன் ஆனான் முன்னாலே

மூட்டை சுமந்தான் பின்னாலே

சொல்லைக் கேளா ஒரு பையன்

துள்ளித் திரிந்த ஒரு பையன்

கல்லான் ஆனான் முன்னாலே

கட்டை சுமந்தான் பின்னாலே

சோம்பித் திரிந்த ஒரு பையன்

சுற்றித் திரிந்த ஒரு பையன்

தேம்பித் திரிந்தான் முன்னாலே

தெருவில் நின்றான் பின்னாலே”

என்று குறிப்பிடுகிறார்.

டென்சிங் என்ற இந்திய இளைஞர், இமயமலையின் உச்சியில் தேசியக் கொடியை நாட்டிய செய்தியை 1953-களில் உலகம் பரபரப்பாகப் பேசியது. அதிசயத்துடன் பேசப்பட்ட "எவரெஸ்ட் பிடிபட்டது' நிகழ்ச்சியை - அந்தச் சாதனையை "தமிழ்ஒளி' கவிதையாகப் படம்பிடித்திருந்தார்.

அந்தக் கவிதை:

“விண்மீது மோதுகின்ற

வெற்புமுடி "எவரெஸ்ட்'

பெண்ணரசி தேவமகள்

பேருலகில் மானிடரை

கண்காட்டி ஏமாற்றிக்

கைபிடியிற் சிக்காமல்

மண்காட்டிக் கைலாய

வான்காட்டிக் கொக்கரித்தார்”

எவரெஸ்ட் பிடிபட்ட நிகழ்ச்சியை நாம் மறந்துவிடலாம். ஆனால், தமிழ்ஒளியின் ‘எவரெஸ்ட் பிடிபட்டது' கவிதை வரிகள் சாகாவரம் பெற்று இன்றைக்கும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

1960-ஆம் ஆண்டு நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் தோண்டப்பட்டுச் சாதனை படைத்த நாளில், ‘நெய்வேலி நாம் பெற்ற பேறு' எனக் கவிபாடிப் பெருமிதம் கொண்டவர் ‘தமிழ்ஒளி’. இந்திய அரசின் ‘நேஷனல் புக் டிரஸ்ட்' நிறுவனம், சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள சிறந்த கவிதைகளின் தொகுப்பாக உருதுமொழியில் வெளிவந்த நூலில் தமிழ்ஒளியின் ‘நெய்வேலி' கவிதை இடம்பெற்றுள்ளது. பொதுவுடைமை சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கவிஞர் தமிழ்ஒளி தனித்தமிழகத்துக்கான கோரிக்கையையும், தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தியும் எழுதியுள்ளார்.

“தன்குமரி எல்லை தன்னைச் சார்ந்த தமிழகத்தில்

எல்லாம் தமிழர்க்கே என்ற போர் முரசும்

எல்லோரும் கேட்டே எழுகின்ற நேரமிது ”

என்று மொழி வாரியாக மாநிலங்கள் பிரித்த போது குமரியைத் தலைநகராகக் கொண்டு தனித்தமிழகம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தம்மொழிக் கல்வியை கற்பதிலார் அவர் துமிழ்மொழி கற்க நமை வருத்தி வாய்மொழி பெற்று மகிழ்ந்திடுவர் அவர் வாழ்க்கையில் ஞானம் வருவதேயில்லை என்று தம் பாடலின் மூலம் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்துகிறார்.

தமிழ்ஒளியின் திறமையை உணர்ந்த மக்கள் எழுத்தாளர் "விந்தன்', "தமிழ்ஒளி'யின் கவிதை மலரப் பல விதங்களில் உதவியிருக்கிறார். பூவை எஸ்.ஆறுமுகம், ஜெயகாந்தன் ஆகியோர் எழுத்துலகில் ஒளி வீசப் பல விதங்களில் தமிழ்ஒளிக்கு ஆதரவு தந்தனர். திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த தமிழ்ஒளியின் கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டியவை. துணிவுடன் தன் கருத்தைக் கூறும் ‘கவிஞருக்கே உரிய துணிவு' அவரிடம் இருந்தது. புதுமைப்பித்தன் கவிதைகளைப் பற்றிய மறைந்த ரகுநாதனின் கருத்தை தமிழ்ஒளி ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்க் கவிதையில் யாப்பு - மரபு குறித்த தமிழ்ஒளியின் மதிப்பீட்டை, ரகுநாதன் மறுத்து எழுதிய கட்டுரை - விவாதங்கள் இந்தத் தலைமுறையினர் அறிய வேண்டியவை. தமிழ்ஒளி கவிஞர் மட்டுமல்லர்; கட்டுரையாளர், பத்திரிகையாளரும் கூட. கவிஞர் தமிழ்ஒளி எழுதிய கவிதைகளைப் பிற்காலத்தில் திரட்டித் தொகுத்து வெளியிடப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டவர்தான் செ.து. சஞ்சீவி. கவிஞர் தமிழ்ஒளி மறைவுக்குப் பிறகு கவிதை, கட்டுரை, காப்பியங்கள், குழந்தைகளுக்கு எழுதியவை அனைத்தையும் சேகரித்து நூல் வடிவில் வெளியிட்டார்.

கவிஞர் தமிழ்ஒளியின் இறுதிக்காலம்

சென்னையிலிருந்து புதுவை சென்ற கவிஞர் தமிழ்ஒளி அங்கே பத்து மாதங்கள் போராடியிருக்கிறார். மன உளைச்சலுக்கு ஆட்பட்டு தனிக்குடிலில் இருந்து அழுதுபுரண்டு ஆவி சேர்ந்திருக்கிறார். ஏழைமக்கள் ஏற்றம் பெற எழுதுகோல் பிடித்தவன் இறுதிவரை ஏழ்மையில் தான் உழல வேண்டும் என்ற நியதிக்கு கவிஞர் தமிழ்ஒளி வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டது. ஒடுங்கிய உருவம், கோலூன்றிய நடை, கையில் ஒரு குவளை, தாடியும் மீசையும் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் கையில் ஒரு பையுடன் கடைசிகாலத்தில் இருந்துள்ளார். அதில் சமநீதி, காந்திவழி ஏடுகள், பாரதிதாசன் மறைவு குறித்து எழுதிய இரங்கற்பாக்கள் அதில் இருந்துள்ளன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொள்கைக்காக கலையை தன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திய கவிஞர் தமிழ்ஒளி மார்ச் 29, 1965-ம் ஆண்டு எழுதுவதையும் மூச்சுவிடுவதையும் நிறுத்தி கொண்டார்.

அனைவருக்குமான சமத்துவ உலகத்தை வலியுறுத்திய கவிஞர் தமிழ்ஒளிக்கு அவர் வாழ்ந்த காலத்திலும், இறந்த பின்னும் அவருக்குரிய அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்தது. கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டினை முன்னிட்டு அவருக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 50 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி, கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அறிவித்தது போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (27.02.2024) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிப்புலத்தில் கவிஞர் தமிழ்ஒளி சிலை திறந்து வைக்கப்பட்டது. 100 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு தமிழ்ஒளிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை வைத்து அங்கீகாரம் தந்துள்ளது. ஓங்குக தமிழ்ஒளியின் புகழ்.

[கட்டுரையாளர் - உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலை., தஞ்சை]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com