எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கனவு காண முடியாத வகையில் நாயகன், நாயகிக்கு இடையிலான காதல் அழகாக இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லீஸ் ஆர். டங்கன்
எல்லீஸ் ஆர். டங்கன்

தமிழ் சினிமா பேசத் தொடங்கிய பிறகு அதைக் காட்சி மொழியின் கலையாக வளர்த்தெடுத்துத் தமிழர்களின் கையில் கொடுத்துச் சென்றவரான இயக்குநர் எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய திரைப்படம்தான் பொன்முடி.

இன்றைய திரைப்படங்களில் இசை, ஆடல்பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், வெளிப்புறக்காட்சிகள் என்று அனைத்துக்கும் விண்ணளவு வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். ‘செயற்கை அறிவு’ தொழில்நுட்பம் மிக விரைந்து வளர்ந்துகொண்டிருக்கிறது. அதன் தாக்கத்தையும் விரைவில் திரைப்படங்களில் நாம் பார்க்கப்போகிறோம். ஆனால், 74 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ‘பொன்முடி’ என்னும் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில 'உத்திகள்' இயக்குநரின் அறிவுசார்ந்து நம்மைப் பெரிதும் வியக்கவைக்கிறது. அதன் காரணமாகவே இத்திரைப்படத்தை அறிமுகம் செய்யத்தோன்றியது. காத்திரமான பழைய நூல்களைப் புரட்டிப்பார்த்துப் படிப்பதற்கு இது ஒப்பாகும்.

கதை மிகவும் எளிமையானது. நாயகன் பெயர் ‘பொன்முடி’. நாயகி பெயர் ‘பூங்கோதை’. இருவரும் திருமணம் செய்யும் உறவுமுறை உள்ளவர்கள். சிறுவயதில் விளையாடும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்வதுபோல ஒரு காட்சியும் உள்ளது. நாயகன், நாயகி இருவரது தந்தையரும் முத்து வணிகர்கள். சங்கு, சோழி, சிப்பி, மீன்முள், வெண்முத்து ஆகியவை பரப்பிவைக்கப்பட்டு அந்தப் பின்புலத்தில்தான் தலைப்புப்பெயர்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. முதல் காட்சியே, பாய்மரக்கப்பல்களில் ஆழ்கடலுக்குச்சென்று முத்துக்குளிப்பதுதான். இடுப்பில் கயிற்றைக்கட்டிக்கொண்டு ஆழ்கடலில் மூழ்கி, மூச்சடக்கி முத்தெடுக்கும் காட்சியை நுணுக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

வளர்ந்த பிறகும் பொன்முடியும், பூங்கோதையும் ஒருவர்மீது மற்றவர் கொண்ட அன்பு மாறாமல், காதலாகிக் கனிந்துவிடுகிறது. என்றாலும் இரு குடும்பங்களுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக அவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காலம் குடும்பங்களைப் பிரித்தாலும், காதலர்களின் அன்பு மனங்களைப் பிரிக்கமுடியவில்லை. இருவரும் தனிமையில் சந்திக்கின்றனர். அப்படியான ஒரு சந்திப்பின்போது பூங்கோதையின் தந்தையிடம் மாட்டிக்கொள்கின்றனர். அவர் பொன்முடியைக் கட்டிவைத்து சவுக்கால் அடிக்கிறார். அது மாத்திரமல்ல, பூங்கோதைக்கு வேறு ஒரு மாப்பிள்ளையையும் முடிவு செய்துவிடுகிறார்.

பொன்முடி படத்தை இயக்கும்போது..
பொன்முடி படத்தை இயக்கும்போது..

இந்நிகழ்வால் வெறுப்புற்ற நாயகன் பொன்முடி வடநாடு செல்லும் வணிகர்கள் கூட்டத்துடன் இணைந்து சென்றுகொண்டிருக்கிறான். பொன்முடியைப் பிரிந்த பூங்கோதை தற்கொலை முடிவுக்கு வருகிறாள். அதனைத்தடுக்கும் தோழி, அவளுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறாள். அதன்படி தற்கொலை செய்யப்போவதாக ஓலை ஒன்று எழுதிவைத்துவிட்டு, ஆண் உடை தரித்து மற்றொரு வணிகர் கூட்டத்திலுள்ள ஆண்களுடன் இணைந்து பொன்முடியைத் தேடிச்செல்கிறாள்.

பல வணிகர்கள் நடந்து செல்கின்றனர். சிலர் காளைமாடுகள்மீது அமர்ந்து சவாரி செய்கின்றனர். கழுதைகள் மீது, குதிரைகள் மீது, அத்திரிகள் மீது, யானைகள் மீது மனிதர்கள் சவாரி செய்வதைப் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த காளைமாட்டுச் சவாரி புதுமையாக உள்ளது. நாயகனும், நாயகியும்கூட காளைமாடுகள் மீது அமர்ந்து செல்கின்றனர். இக்காட்சியமைப்பு இயக்குநரின் கற்பனையா அல்லது அதற்கான வரலாறு ஏதேனும் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கபாலிகன் ஒருவன் வணிகர்கள் வந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் தலைவனிடம் தெரிவிப்பதற்கு ஓடுகிறான். அங்கு காளிக்கு பூசை நடந்துகொண்டிருக்கிறது. அதில்கூட இயக்குநரின் ஒரு காட்சிப்படுத்தலைக் கூறவேண்டும். ஆம், ஒரு சிலந்தி வலை வழியாக கபாலிகர்கள் ஆடுவதைக் காட்சிப்படுத்தியிருப்பார். தமிழ்நாட்டிலிருந்து பொன்பொருளுடன் ஒரு கூட்டம் வந்துகொண்டிருப்பதாக ஓடிவந்தவன் கூறுகிறான். அவனே, அவர்களை வழிமறித்துப் பொருள்களைக் கேட்க வேண்டும் என்று ஆலோசனையைத் தலைவனுக்குச் சொல்கிறான், அப்போது அந்தத்தலைவன் ‘தென்னாட்டான் தர்மசிந்தனை உள்ளவன். கேட்டால் கொடுப்பான். ஆனால் நியாயமான காரணம் கூறவேண்டும்’ என்று சொல்கிறான். சொன்னதுபோலவே தலைவனும் மற்றொரு கபாலிகனும் வணிகர்களிடம் காளிக்கு யாகம் செய்யவேண்டும் என்பதால் பொருள் கேட்கின்றனர். வணிகர்கள் கொடுப்பதற்கு உடன்படுகின்றனர். ஆனால் பொன்முடி அதனைத் தடுத்துவிடுகிறான். அப்போது பேசப்படும் முற்போக்கு வசனங்கள் கபாலிகர்களுக்கும், சைவர்களுக்கும் இடையே உள்ள முரணை வெளிப்படுத்துகிறது.

பொருள்தரவில்லை என்ற கோபத்தில் கபாலிகர்கள் வணிகர்களை வழிமறித்துக் கொள்ளையடிக்க முயல்கின்றனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை நடக்கிறது. காளிக்குப் பலிகொடுப்பதற்காகப் பொன்முடி, கபாலிகர்களால் கடத்தப்படுகிறான். இந்தச் செய்தியைப் பூங்கோதை இணைந்திருக்கும் வணிகர்களிடம் ஒருவன் வந்து சொல்கிறான். அதிர்ச்சியடைந்த பூங்கோதை, வீரம் கொப்பழிக்கும் வசனங்களைப்பேசி, ஆண்களை உசுப்பேற்றுகிறாள். அதன் பயனாக அனைவரும் பொன்முடியை மீட்கச் செல்கிறார்கள். மீண்டும் ஒரு சண்டை. பொன்முடி மீட்கப்படுகிறான். சண்டையில் பூங்ககோதையின் ஆண்வேடம் கலைகிறது. கதை நடக்கும் காலம் குமரகுருபரர் காலம். அதனால் இறுதிக் காட்சியில் அவரும் வருகிறார். அழகு தமிழில் அன்பைப் போதிக்கிறார். அங்கேயே பொன்முடிக்கும் பூங்கோதைக்கும் திருமணமும் செய்துவைக்கிறார். இருவீட்டாரும் மனம் மாறி, பொன்முடி-பூங்கோதை இணையரை ஏற்றுக்கொள்கின்றனர்.

படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர். டங்கன். தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம். இத்திரைப்படத்தில் பி.வி. நரசிம்மபாரதி, ஆர். பாலசுப்பிரமணியம், எம்.ஜி. சக்கரபாணி, காளி என்.ரத்தினம், மாதுரிதேவி, சரஸ்வதி, தனலட்சுமி, டி.பி. முத்துலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். லலிதா, பத்மினியின் நாட்டிய நாடகமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மருதகாசி, கவிஞர் கா.மு. ஷெரீஃப் பாடல்கள் எழுதியுள்ளனர். ஜி. ராமநாதன் இசை அமைத்திருக்கிறார். பெரும்பாலான பாடல்களை இசை அமைப்பாளர் ஜி.ராமநாதனே பின்னணி பாடியிருக்கிறார். அவருடன், டி.வி.ரத்தினம், காளி. என்.ரத்தினம் , யு.ஆர்.சந்திரா, என்.லலிதா ஆகியோர் பாடியுள்ளனர்.

ஓலை வாசிக்கும் காட்சியமைப்பு

காதலி, காதலனுக்கு எழுதும் கடிதத்தைக் காதலன் படிப்பதுபோல காட்சிகள் திரைப்படங்களில் வருவதுண்டு. கடிதத்தின் மையத்தில் தெரியும் காதலியின் முகம் அக்கடிதத்தின் உள்ளடக்கத்தைச் சொல்வதுபோல நாம் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இத்திரைப்படத்தில் அதில் ஒரு புதுமையைப் (பழமையை) பார்க்கமுடிகிறது. பிரிந்திருந்த காலத்தில், பூங்கோதை வீடுகளுக்கு மாலைவேளைகளில் பெண்களுக்குப் பூச்சரம்’ கொடுக்கும் ஆள்வழியாக ஓலை ஒன்றைப் பொன்முடிக்குக் கொடுத்து அனுப்புகிறாள். ஓலை என்றால் ஓலைதான். பனை ஓலை நறுக்கில் எழுத்தாணிகொண்டு எழுதப்பட்ட கடிதம். கதைநிகழும் காலம் குமரகுருபரர் காலம் அல்லவா? பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கைகளிலும் ஏடுகளே (ஓலைச்சுவடிகள்) காணப்படுகின்றன.

அந்த ஓலையைப் பொன்முடி வாசிக்கிறான். படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர். டங்கன், இந்தக் காட்சியில் ஒரு உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். ஓலை திரை முழுவதும் விரிகிறது. ஒரு சிறுவட்டத்திற்குள் பூங்கோதையின் முகம் தெரிகிறது, பேசவும் செய்கிறது. முதல் சொல்லின்மீது தெரியும் முகம், அடுத்தடுத்த சொற்களுக்குத் தாவுகிறது. முதல் வரி முடிந்த உடன் இரண்டாவது வரியின் முதல் சொல்லுக்கு வருகிறது. நாம் எப்படி வாசிப்போமோ அதே ஒழுங்கில் இட-வலமாகவும், மேல்-கீழாகவும் பூங்கோதை முகம் நகர்கிறது. அந்தக்காட்சியைக் கண்டால் மட்டுமே நீங்கள் முழுமையாகப் புரிந்து அதனைப் பாராட்ட முடியும். 74 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு தொழில்நுட்ப விந்தை புரிந்திருக்கிறார் படத்தின் இயக்குநர். அந்தக் காட்சியை முன்வைத்தே நான் இக்கட்டுரையை எழுதவேண்டும் என்று விரும்பினேன். இப்படி ஒரு காட்சி அமைப்பை நான் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் பார்த்ததில்லை.

1950-ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் கதையானது பாவேந்தரின் ‘எதிர்பாரா முத்தம்’ என்னும் குறுங்காப்பியத்தைத் தழுவியது. காளிக்குப் பலிகொடுக்கும் முன்பு கபாலிகர் தலைவனுக்கும் (எம்.ஜி.சக்கரபாணி – எம்.ஜி.ஆரின் அண்ணன்) பொன்முடிக்கும் இடையில் ஒரு சொற்போர் நிகழ்கிறது. தமிழ்மொழி, தமிழ் இனம் பெருமைப் பேசப்படும் வசனங்கள். அந்த வசனங்கள் பாவேந்தர் எழுதியதுபோல் தெரியவில்லையே என்று ஓர் ஐயமும் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது. அதற்கான விடை இணையத்தில் கிடைக்கிறது. ஓரளவிற்குப் படம் எடுக்கப்பட்ட நிலையில், அதனைப்போட்டுப்பார்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்திற்கு மனநிறைவு இல்லாததால் பிற்பாதியில் கலைஞர் கருணாநிதியை வைத்துக்காட்சிகளை நீட்டித்து எடுக்கப்பட்டதாகக் கிடைக்கும் தகவல் வசனம் பற்றிய புதிரை விடுவிக்கிறது. பொன்முடி திரைப்படம் வெற்றிப்படம் என்னும் செய்தியும் நமக்குத் தெரியவருகிறது.

1950 காலகட்டத்தில் வெளிவந்த தமிழ்த்திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமலேயே நடித்திருப்பதை அன்றைய திரைப்படங்களில் காணமுடியும். அதற்கு மாறாக மிகநெருக்கமான காதல் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. காளைச்சவாரி, ஓலை வாசித்தல், காதல் காட்சிகள் ஆகியவை பேசப்பட வேண்டியவை. இன்றும் பார்த்துப் பரவசப்படும் விதத்தில்தான் ‘பொன்முடி’ திரைப்படம் நகர்கிறது.

நாம் மட்டுமே சாதனையாளர்கள் அல்ல. நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களும் அறிவுக்கூர்மையோடு சாதனை புரிந்தவர்களே. ‘நான்தான் பெரியவன், இல்லை இல்லை நான்தான் பெரியவன்’ என்று இன்றைய குடுமிப்பிடிச் சண்டைகள்போல் அல்லாமல் ஒரு குடும்பமாக ஒருங்கிணைந்து உழைத்து திரைப்படங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் அவர்கள். ‘ஞான்’ இருக்கும் வரையிலும் ‘ஞானம்’ பிறக்க வழியில்லை என்பார் தோழர் பொதியவெற்பன். இக்கூற்று அனைவருக்கும் ஆனது.

மே 11 - எல்லிஸ் ஆர். டங்கன் பிறந்த நாள்

[கட்டுரையாளர் - இயற்பியல் பேராசிரியர் (ஓய்வு)]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.