கு.வைத்திலிங்கம்
தமிழக திரைத் துறையிலிருந்து வந்த பலரும் அரசியல் கட்சியைத் தொடங்கினாலும், அதில் பெரும்பாலானோரால் வெற்றிபெற முடியவில்லை. மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் உள்பட பலரும் கட்சி தொடங்கி, பிற்காலத்தில் கட்சியை நடத்த முடியாமல் கட்சியைக் கலைத்த வரலாற்றை தமிழகம் கண்டுள்ளது. திமுகவிலிருந்து விலகி, 1972-இல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆரின் கதை வேறு. இன்னொரு விதிவிலக்கு விஜயகாந்த்.
பிரதான கொள்கை: இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்து, 2024, ஜன. 25-ஆம் தேதி செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களைக் கூட்டி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து, பிப். 2-ஆம் தேதி கட்சி தொடங்கப்பட்டதாக அறிவித்தார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அவரது கட்சியின் பிரதான கொள்கை என்றும் அறிவிக்கப்பட்டது.
திரைத் துறைக்கு வந்து 30 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நடிகர் விஜய், 2009-இல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், 15 ஆண்டுகள் கழித்து கட்சியைத் தொடங்கி, முதல் மாநில மாநாட்டையும் நடத்தி முடித்திருக்கிறார்.
சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற ஏதாவதொரு பெருநகரத்தில் மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் முக்கியமானதாகத் திகழும் விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் மாநாட்டை நடத்தி, அதில் கட்சியின் கொள்கை, செயல் திட்டங்களை அறிவித்ததுடன், அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதையும் தனது பேச்சின் மூலமாக உணர்த்தியுள்ளார்.
நேரடியாக எதிர்ப்பு: பிளவு அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்ற பெயரில் மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஊழல் சக்திகளும்தான் தவெகவின் எதிரிகள் என்று தனது பேச்சில் குறிப்பிட்ட விஜய், மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தில் ஆளும் திமுகவையும் நேரடியாக அரசியல் களத்தில் எதிர்க்கத் தொடங்கிவிட்டதாக கூறி, தனது கட்சிக்கான கொள்கைத் தலைவர்கள் யார் என்பதையும் அறிவித்தார்.
இளைஞர்களின் வாக்குகள் அறுவடையா?: மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாது, புதுவை, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தவெகவினரும் பங்கேற்றனர். இதில், குறிப்பாக 15 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் தொடங்கி சுமார் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் அதிகளவில் பங்கேற்றனர்.
இவர்களில் முதல்முறையாக வாக்களிக்கும் தகுதியைப் பெற்றவர்கள், திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஒருமுறை வாக்களித்துவிட்டு, தமிழக அரசியலில் மாற்றம் கட்டாயம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ள இளைஞர்கள், இதர வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். விஜய் பேசும்போது இவர்களின் முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு அதை வெளிப்படுத்தியது.
மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து கட்சியினர் பங்கேற்றாலும், வடதமிழக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் பங்கேற்றிருக்கிறார்கள் என்ற கருத்து தவெக வட்டாரங்களில் கூறப்படுகிறது. பட்டியலின மக்கள், வன்னியர், நாடார், முக்குலத்தோர் உள்ளிட்ட பெரும்பாலான சமுதாயங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.
பெண்கள், வயதானவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வந்திருந்தாலும், இளைஞர்களைப் போன்று இளம்பெண்களும் அதிக அளவில் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாற்றத்துக்கான சரியான தேர்வு: "இதுவரை நாங்கள் திமுகவுக்குத்தான் வாக்களித்தோம். தமிழகத்தில் யாராவது மாற்றத்தை ஏற்படுத்துவார்களா என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். அதற்கான சரியான தேர்வாக, சரியான கட்சியாக தவெக வந்துவிட்டது. எனவே, தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் தலைவராக விஜய் இருப்பார். எங்களைப் போன்ற இளைஞர்களின் வாக்கு தவெகவுக்குத்தான்' என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவிக்கிறார் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பொறியாளர் அ.நவீன்.
இனி தவெகவுக்கே எனது வாக்கு: "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவுக்கு ஒருமுறை வாக்களித்தேன். மற்ற தேர்தல்களில் எல்லாம் நோட்டாவுக்கே வாக்களித்தேன். இனிமேல், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் விஜய்க்குத்தான் எனது வாக்கு.
எங்கள் கிராமம் போன்ற பல்வேறு கிராமங்கள் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற முடியாத நிலையில் உள்ளன. 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டும், பல கிராமங்கள் வளர்ச்சி என்ற நிலையை நோக்கி நகரவில்லை. இதையெல்லாம் மாற்றித் தரக்கூடியத் தலைவராக விஜய் இருப்பார் என எதிர்பார்க்கிறோம்' என்கிறார் விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூர் அருகேயுள்ள கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ்.
இவர்களைப் போன்ற பல்வேறு இளைஞர்களும் மாநாட்டுப் பகுதியிலேயே பேசத் தொடங்கிவிட்டனர்.
பல்வேறு கட்சிகள் வலியுறுத்திய கொள்கைகள், செயல்திட்டங்கள்: மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் வலியுறுத்திவரும் இரு மொழிக் கொள்கை, தமிழ் ஆட்சிமொழி, நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி, நீட் தேர்வு எதிர்ப்பு உள்ளிட்டவை, பாமக வலியுறுத்திவரும் சமூக நீதி, ஜாதிவாரி கணக்கெடுப்பு, விகிதாசார ஒதுக்கீடு உள்ளிட்டவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும் சமூகநீதி -சமத்துவம், போதைப் பொருள் ஒழிப்பு போன்றவற்றையும் ஒருங்கிணைத்து கட்சியின் கொள்கைகளாக, செயல்திட்டங்களாக அறிவித்திருப்பதும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்தான். ஆனால், அவரது கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்க மாட்டோம். அதே நேரத்தில் எந்த மதத்தின் வழிபாட்டு உரிமையிலும் நாங்கள் தலையிடமாட்டோம் என்பதும், கட்சியின் கொள்கைத் தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், சுதந்திரப் போராட்டத்
தியாகி அஞ்சலை அம்மாள் ஆகிய 5 பேரையும் அறிவித்த தவெக தலைவர் விஜய், கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் வழியில் கட்சி என்ன என்ன செய்யப் போகிறது என்பதையும் அறிவித்திருப்பது கட்சியினர் மட்டுமல்லாது, வெகுஜன மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
"திரைப்படத் துறையைச் சேர்ந்த என்னை கூத்தாடி என்று அழைக்கின்றனர். கூத்தாடி என்றழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும் இன்றளவும் மக்கள் மனதில் ஆகப்பெரும் தலைவர்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்ட விஜய், அவர்கள் வரிசையில், தமிழகத்தில் ஆட்சிசெய்யப் போகும் தலைவராவாரா என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.