தேவிபாரதியின் படைப்புலகம்

நீர் வழிப்படூஉம் நாவல் இவ்வாண்டு (2023) சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது.
தேவிபாரதியின் படைப்புலகம்

மேற்கு மண்டலத்தில் இதுவரை ஆறு பேர் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளனர்.

"சக்கரவர்த்தி திருமகன்" எனும் இராமாயணம் உரைநடை நூலுக்கு ராஜாஜி (1958), "ஒரு கிராமத்து நதி" எனும் கவிதைத் தொகுப்புக்குக் கவிஞர் சிற்பி (2002), "வணக்கம் வள்ளுவ" எனும் கவிதைத் தொகுப்புக்காக  ஈரோடு தமிழன்பன் (2004), "கையொப்பம்" எனும் கவிதை நூலுக்காகப் புவியரசு (2009),  "சூடிய பூ சூடற்க"  எனும் சிறுகதைத் தொகுப்புக்காக நாஞ்சில் நாடன் (2010),  தற்பொழுது மேற்கு மண்டலத்தில்  நாவலுக்கென  முதன்முதலாக  "நீர் வழிப்படுஉம்" நூலுக்குச் சாகித்ய அகாதமி விருதினைத் தேவிபாரதி பெற்றுள்ளார்.

"இவருக்குக் கொடுக்கக். கூடாது" என்ற அளவுக்குச் சர்ச்சைக்குரிய பின்னணியில், நீர் வழிப்படூஉம் நாவல் இவ்வாண்டு (2023) சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது.

தேவி பாரதி ஏறக்குறைய ஆறு சிறுகதைத் தொகுதிகளையும், நான்கு நாவல்களையும், மூன்று கட்டுரைத் தொகுதிகளையும்  வெளியிட்டுள்ளார். சிறுகதை - குறு நாவல் - நாவல் என இவரது இலக்கியப் பயணம் பரிணாமம் அடைந்துள்ளது.

தனது மாணவப் பருவத்திலேயே இவர் எழுதத் தொடங்கியதற்கு இவரது தந்தையின் ஆதரவும் ஊக்கமும் காரணமாக இருந்துள்ளது. 1979 முதல் தொடர்ந்து எழுதத் தொடங்கினாலும், தொண்ணூறுகளில் இவர் எழுதிய "பலி" சிறுகதை தொகுப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இதை அவரது வேண்டுகோளுக்கு ஏற்ப நான் பதிப்பித்து வெளியிட்டேன்.

இந்திய துணைக்கண்டத்தில் அம்பேத்கர் நூற்றாண்டு விழா பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட பொழுது,  அவரது கோட்பாடு, கலை இலக்கியத் தளத்தில் மாபெரும் பாதிப்பினை உருவாக்கியது. அலை அலையாகத் தலித் இலக்கியங்கள் அதன் பின்னணியில் இந்திய மொழிகளில் தொடர்ந்து வெளிவந்தன.

அதை ஒட்டி ஒரு தலித்தை  மையமாக வைத்துப் பலி சிறுகதை எழுதப்பட்டது. தலித் உரிமை மற்றும் பெண் உரிமை ஆகியவற்றுக்கிடையேயான கடும் முரண்பாடுகளும், உளவியல் சிக்கல்களும் இக்கதையில் முன்னிறுத்தப்பட்டதால், இப்படைப்பு மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

தொடக்க காலத்தில் இடதுசாரி அரசியலில் ஈடுபாடு உடையவராக அவர் இருந்தார். ஆனால் பின்னாளில் இலக்கியமே அவரது முதன்மைத் தேர்வாக மாறியது. இருப்பினும், இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்கானது எனத் தான் ஏற்கவில்லை என்பதைத் தொடக்கத்திலிருந்து இன்று வரை அவர் பிரகடனப்படுத்தி வருகிறார். அவரது படைப்புகளில் நேரடியான அரசியல், தூக்கலாக இல்லாவிட்டாலும் குரலற்றவர்களின் குரலைத் தனது படைப்புகளில் உள்ளார்ந்த செறிவுடன்  பதிவிடுகிறார். நுணுக்கமான வாசகன் அதை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அந்த வகையில்தான் வண்ணதாசன் / பூமணி /  பா.  செயப்பிரகாசம் போன்றவர்களது படைப்பு மொழியை அவர் கையாள்கிறார். தவிரவும் சர்வதேச அளவில் தால்ஸ்தாய் மற்றும் தாஸ்தாவஸ்கி ஆகிய இருவரும் தனது இரு பெரும் முன்னோடிகள் என்பதாகவும் அவர் உறுதி செய்கிறார்.

இலக்கியத்தில் செய்நேர்த்திக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவதாகக் கூறும் அவர், எப்பொழுதும் படைப்பாளிக்குப் போதாமை உணர்வு இருக்க வேண்டும் எனவும், வாழ்வு குறித்த தொடர் தேடல்  இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். வாழ்வின் வலியும், துன்பமும் ஒரு படைப்பை உருவாக்குகிறது என்பது அவரது கண்ணோட்டமாக இருக்கிறது.

அவரது படைப்புகள் மண்ணின் மணத்தோடும், சுயஅனுபவங்களோடும்  வெளிப் படுகின்றன. அவ்வகையில் ராஜம் கிருஷ்ணன் அவர்களுடைய படைப்புகளிலிருந்து இவரது படைப்புகள் வேறுபடுகின்றன. ராஜம் கிருஷ்ணன் மிகச் சிறந்த படைப்பாளி என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அந்த மக்களோடு சில காலம் தங்கியிருந்து அவர்களைக் குறித்த விவரங்களைச் சேகரித்துப் பிறகு அதைக் கலைப்படைப்பாகச்  செவ்வனே வெளியிட்டவர் அவர். இது அவரது பணி.  இதில் குறை சொல்வதற்கு ஏதுமில்லை.

சாகித்திய அகாதெமி விருதுக்குத் தேர்வான எழுத்தாளர் தேவிபாரதிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் கண. குறிஞ்சி.
சாகித்திய அகாதெமி விருதுக்குத் தேர்வான எழுத்தாளர் தேவிபாரதிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் கண. குறிஞ்சி.

ஆனால் தேபி பாரதியின் படைப்புகள் நேரடியாக அவருடைய அனுபவத்திலிருந்து கிளர்ந்தெழுந்தவை.   இவருடைய கதாபாத்திரங்களில்  பெரும்பான்மையோர் இவரோடு நேரடியாகத் தொடர்பில் இருந்தவர்கள். அவர்களோடு சிரித்தும், பிணங்கியும் வேறுபட்டும் அவர் வாழ்ந்திருக்கிறார். எனவே அவரது எழுத்துப் பாணி மண்ணின் கவிச்சையோடு சுயம்புவாக இருப்பதை எளிதில் உணர முடியும்.

நீர் வழிப்படூஉம் நாவல் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதை ஒரு சுயசரிதை நாவல் என்றே குறிப்பிடலாம் இதில் உள்ள கதைமாந்தர்கள் நகமும் சதையுமாக இன்றும் வாழ்ந்து வருபவர்கள். எனவே அந்த வாழ்வைச் சித்தரிப்பதற்கு அவர் நனவேரடை முறையைக் கையாள்கிறார். ஒரு கதாபாத்திரம் தன்னுடைய கதையைப் பல்வேறு மனிதர்களோடும், நிகழ்வுகளோடும் தொடர்புபடுத்திக்  கதையை நகர்த்திச் செல்லும்  இந்த உத்தி,  தமிழ் இலக்கியத்தில் புதிது அல்ல. தொடர்ந்து பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு எழுத்து முறையே ஆகும். இதை ஆங்கிலத்தில் "Stream of Consciousness" எனக் குறிப்பிடுவர். ஆங்கில இலக்கியத்தில் வெர்ஜீனியா வுல்ஃப் இந்த நடையை மிகவும் இலாகவமாகக் கையாண்டு உள்ளார். இந்தச் சுயம்புவான வெளிப்பாடு நாவலுக்குக் கூடுதல் அடர்த்தியைத் தருகிறது.  அதனாலேயே organic writing  - ஆக அது பரிணமிக்கிறது.

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள  குடி நாவிதர் மற்றும் நாசுவத்தி ஆகியோருடைய துன்ப துயரங்களையும், அற்ப சந்தோஷங்களையும், பெரும் கனவுகளையும் அசலாக இந்நாவல் பேசுகிறது. கொங்கு மண்டலத்தில் ( கொங்கு மண்டலம் என்பது இங்கு அரசியல் சொல்லாடலாகப் பயன்படுத்தப்படவில்லை) ஆதிக்க சாதியாக உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கும் நாவிதர்களுக்கும் இடையேயான உறவின் பல்வேறு பரிணாமங்கள்,  நுணுக்கமாக இப்படைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொங்கு வேளாளக் கவுண்டர்களின் ஆதிக்கத்தின் கீழ் குடிநாவிதர் சமூகத்தின் ஆண்களும் பெண்களும் படும் அவமானங்களையும் இழிவுகளையும் இந்நாவல் பட்டவர்த் தனமாக வெளிப்படுத்துகிறது.

அதே சமயம் கொற்ற வேல் கவுண்டருக்கும் காரு மாமாவுக்கும் இடையிலேயான நேசமும் நெருக்கமும் கூட இதில் பதிவு செய்யப்படுகிறது.

இதன் காரணமாக மேற்கு மண்டலத்தில் ஆதிக்க சாதிக்கும் இடைநிலைச் சாதிகளுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவுகிறது என நாம் கருத வேண்டியதில்லை. பெரும்பாலான ஆதிக்க சாதிக்கும், இடைநிலைச் சாதிகளுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் நாவலின் 'மையச்சரடு அதுவல்ல என்பதையும் இங்கே நினைவில் வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் இதை ஒரு அரசியல் நாவல் என்ற வகையினத்தில் வைத்துக் காண வேண்டியதில்லை.

ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதகதப்பு, கடந்த காலச் சமுதாய உறவுகளின் நேயம், இவற்றை இழந்து தவிக்கும் அவலம்  ( Nostalgia )  இந்நாவலின் அடித்தளமாக அமைந்துள்ளது.  அவ்வகையில் பிளவுண்ட இந்தச் சமூகத்தின்  அந்நியமயமாதலைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் இதன் பரிமாணம் விரிவடையும்.

இதிலுள்ள அம்மா, பெரியம்மா போன்ற பெண் பாத்திரங்கள் ஆளுமையும் வைராக்கியமும் உடையவையாகப் படைக்கப்பட்டுள்ளன. அதிலும் பெண்களுக்கிடையேயான உறவு என்பது விருப்பு / வெறுப்பு எனத் தட்டையாகச் சித்தரிக்கப்படாமல் வாழ்வியல் எதார்த்தத்தோடு சித்தரிக்கப்பட்டுள்ளது சிறப்பு.

நாவலின் மற்றொரு சுவாரசியமான கூறு,  நடிகர் சிவாஜியும் சாவித்திரியும் நடித்த பாசமலர் திரைப்படம் குறித்தது. உள்ளபடியே சொல்லப்போனால் பாசமலர் சிவாஜியும் சாவித்திரியும் இந்நாவலின் கதாபாத்திரங்களாகவே வெகு இயல்பாகச் சித்தரிக்கப் பட்டுள்ளனர். அது இப்புதினத்திற்குப் புதிய பரிணாமத்தை அளிப்பதோடு, படைப்பின் இறுக்கத்தை குறைக்க உதவும் நகைச்சுவைப் பகுதியாகவும் மிளிர்கின்றன.

இந்நாவலில் வரக்கூடிய குறிப்பிடத்தக்க மற்றோர் கூறு, கிராமத்து பகுதியிலுள்ள இயற்கை வளங்களின் சித்தரிப்பு. கொங்குப் பகுதியிலுள்ள எண்ணற்ற செடி கொடிகளின் அசலான சித்தரிப்பு மண்வாசனையை அதிகரிக்கிறது.

சிறுகதை, நாவல் தவிரவும், மரபார்ந்த கலைகளின் மீது தேவிபாரதிக்கு உள்ள ஈர்ப்பு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 70 வயதை கடந்த, கலைமாமணி  கரூர் கலாமணி எனும் மூதாட்டியின் இசை பாடல்களைத் தொகுத்த  தேவிபாரதி பாராட்டுக்கு உரியவர். 

தவிரவும் சில ஆண்டுகளுக்கு  முன்பு கதிர்வேல் , வெள்ளிங்கிரி போன்ற தனது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் "பாதம் மரபுக் கலை விழா" ஒன்றை ஈரோட்டில் ஆறு நாள்கள் தேவி பாரதி நடத்தியது பாராட்டத்தக்கது. நல்லதங்காள் கதை, மதுரை வீரன் கதை, காத்தவராயன் கதை, குன்னடையாக் கவுண்டன் கதை என மக்கள் கலை வடிவங்கள், அவ்விழாவில் நிகழ்த்து கலையாக நடத்தப்பட்டது. தவிரவும் மரபுக் கலைகள் குறித்த பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் அதில் படிக்கப்பட்டன. இராசேந்திர சோழன், பா. செயப் பிரகாசம், தங்கர்பச்சான், கா.சீ. சிவகுமார், இமயம் போன்ற பல்வேறு எழுத்தாளர்கள் அந்நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தேவிபாரதியின் வாழ்வு என்பது ஒரு துன்பியல் குறியீடு.  அவர் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் மிகவும் சொற்பமானவை. வாழ்வின் பேரலைகளில் அடித்துச் செல்லப்படும் படகு போல் தத்தளிப்பதாக அவரது அவலம் நிறை வாழ்வு அமைந்து விட்டது. 

அதிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விபத்தின் தாக்கம் அவரைப் பாடாய்ப் படுத்துகிறது. கொந்தளிப்பும் பதற்றமும் மிக்க மனிதராக அவர் இருந்து வருகிறார். இருப்பினும் "கருணைதான் எனது படைப்பின் அடிநாதம்". எனப் பிரகடனப் படுத்துகிறார். அந்த வகையில் அவரது மனிதநேயம் கொண்டாடத்தக்கது.

தொடர்ந்து அடுத்த படைப்புக்கு ஆயத்தமாகும் தேவிபாரதிக்கு நல்வாழ்த்துகள்.


கட்டுரையாளர்: மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com