அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை இளமை முதல் முதுமை வரை துன்பமும், துயரமும், தியாகமும், போராட்டங்களும் நிறைந்த ஒருவாழ்க்கைப் பயணம் எனலாம். மாணவராக, கல்லூரி விரிவுரையாளராக, பாரிஸ்டராக, சட்ட அமைச்சராக ஒரு தலைவராக வாழ்ந்த அவர் எண்ணற்ற மோதல்கள், எதிர்ப்புகள், அவமதிப்புகளைச் சந்தித்திருக்கின்றார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தால், சாதிக்கொடுமை, தீண்டாமைக் கொடுமை, ஒடுக்குமுறைகள், அடக்குமுறைகள், தாங்கமுடியாத துயரங்கள் ஆகியவற்றை அவர் அனுபவிக்க நேர்ந்தது. இதன் தாக்கம் அவரை ஒரு புரட்சியாளராக்கி இந்து சமூகத்தின் மனிதாபிமானமற்ற போக்குகளை எதிர்த்துப் போராடுவதற்குரிய அரிய வாய்ப்புகளை அவருக்கு அளித்தன. துணிவும், தன்னம்பிக்கையும், தனக்குத் தானே விதித்துக்கொண்டு ஒழுங்கும், கட்டுப்பாடும், ஆழ்ந்த படிப்பும், அறிவாற்றலும் கொண்ட இலட்சியத்தில் கொள்கையும், உறுதியும், ஈடுபாடும், தியாகமும், தன்னலமில்லாத தொண்டு மனமும் அவர் கொண்டிருந்த காரணத்தால், இந்த நாட்டில் பாமரராய், விலங்குகளாய், அற்ப வேலைகளை மட்டுமே செய்பவர்களாய் வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறிவின் ஊற்றாய் உயர்ந்து நின்றார்.
குரலற்றவர்களின் குரலாக ஒலித்தவர்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் குரல் நாடெங்கும் எதிரொலித்தது, தூங்கிக்கிடந்த எண்ணற்ற மக்களைத் தட்டி எழுப்பியது. தடைகளை மீறவும் தங்கள் கை விலங்குகளை உடைத்தெறியவும் அவர் முழக்கமிட்டார். பொதுக் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கும் உரிமையை நிலை நாட்டுவதற்காக அறப்போர் நடத்தினார். சாதி இந்துக்களின் தடைகளையும், வன்முறைகளையும் பொருட்படுத்தாமல் கோயில் நுழைவு போராட்டம் செய்தார். நீதிமன்றங்களில் வழக்காடித் தம் மக்களுக்குச் சிவில் உரிமைகளைப் பெற்றுத் தந்தார். ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவந்து நிறுத்தி அவர்களுக்கு 'கற்பி, போராடு, ஒன்று சேர்' என்னும் மந்திரத்தைப் போதித்தார்.
இந்து மதத்திலிருந்த தீண்டாமைக் கொடுமை, நால் வருணமுறை முதலான மனிதநேயமற்ற போக்குகளை வெட்ட வெளிச்சமாக்கினார்.1956 அக்டோபர் 14-இல் ஐந்து இலட்சம் மக்களோடு அவரும் சேர்ந்து பவுத்த நெறியைத் தழுவினார். பவுத்தமே சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமயநெறி என அவர் கருதினார். இந்திய நாட்டில் தோன்றிய சமய ஞானிகளும், சீர்திருத்தவாதிகளும் காலங்காலமாகத் தொடர்ந்து வந்த தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டித்துப் பேசினராயினும் இந்து மதத்தின் சாதி வேறுபாட்டை ஒழிக்க அவர்கள் குரல்கொடுக்கவில்லை. ஆனால் அண்ணல் அம்பேத்கர், இன்றைய இந்து மதத்தின் அடித்தளமாக அமைந்த சாதீயத்தின் அமைப்பு முறையை அலசி ஆராய்ந்தது மட்டுமல்ல, அதனை முற்றிலுமாக ஒழிப்பதற்கு ஓயாமல் போராடினார். இதனால் மகாத்மா காந்தியும், அண்ணல் அம்பேத்கரும் முரண்பட்டனர். இந்தப் போராட்டம் இந்துக்களின் மனச் சான்றையும், நம் நாட்டுத் தலைவர்களையும் உலுக்கியது. அண்ணல் அம்பேத்கர், சமயம் நேர்ந்தபோதெல்லாம் அன்றிருந்த ஆங்கில அரசாங்கத்திற்கும் அந்த அரசு அமைத்த குழுக்களின் முன்பும் அவற்றின் தலைவர்களிடமும் தீண்டாதாரின் அவலநிலையைப் பற்றியும், விடுதலைப் பெற்ற இந்தியாவில் அமையப்போகும் அரசியல் முறையில் இம் மக்களுக்கு உரிய இடமளிக்க வேண்டுமென்பதையும் எடுத்துரைத்து வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலையும், கோரிக்கைகளையும் வாழ்க்கைநிலையையும் இங்கு ஆட்சியிலிருந்த ஆங்கிலேயரிடமும், இங்கிலாந்துக்குச் சென்று பிரிட்டிஷ் பிரதமரிடமும் எடுத்துரைத்தார். தம் வாழ்நாள் முழுவதும் தனியொருவராக நின்று தமக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே தான் இருந்தார்.
வட்டமேசை மாநாடும் – பூனா ஒப்பந்தமும்
1931-32 இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாடுகள் அவருடைய அறிவாற்றலை வெளிப்படுத்தும் நல்வாய்ப்பாக அமைந்தன. தமது பிரதிநிதிகளைத் தாங்களே வாக்களித்துத் தேர்த்ந்தெடுத்துக்கொள்ள வழிவகுக்கும் வகுப்புவாரி உரிமையை தலித் மக்களுக்கு வழங்கவேண்டும் என்றும், தமது திறமைமிக்க வாதத்தாலும், மதிநுட்பத்தாலும், கேட்பாரைக் கவரும் வகையில் நயமாக எடுத்துரைக்கும் சொல்லாற்றலாலும் காந்தியடிகளாரின் எதிர்ப்பையும் மீறிய வகையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரிடம் வாதாடித் தனது கோரிக்கைகளை வெற்றிபெற வைத்தார். இதன் விளைவாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்து சமூகத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக இருப்பதால், அவர்களுக்குத் தேர்தல்களில் கூட்டுத்தொகுதி வாக்குரிமையே அளிக்க வேண்டும் என்று காந்தியடிகள் கூறியதற்கு மாறாக அந்த மக்களுக்குத் தேர்தல்களில் தனித் தொகுதி அளிக்கப்படும் என்னும் அறிவிப்பு வெளிவந்தது. இதை எதிர்த்து காந்தியடிகள் 20.09.1932இல் புனே ஏர்வாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். நாடு முழுவதும் காங்கிரஸார் கலவரச் சூழலை ஏற்படுத்தினார்கள். ஆங்காங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டனர். இதனால் மிகப்பெரிய கலவரம் நடக்கும் என்ற அச்சத்தின் காரணமாக நாட்டு மக்களின் பார்வையும், தலைவர்களின் பார்வையும் அண்ணல் அம்பேத்கரின் பக்கம் திரும்பியது.
நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்த காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்றுவதா, ஆதரவற்றவர்களாகக் கிடந்த மக்களின் நல்வாழ்விற்காக அளவற்ற தியாகமும் தொண்டும் செய்து ஈட்டிய உரிமைகளைக் காப்பதா, என்ற நிலைக்கு ஆளானார் அண்ணல் அம்பேத்கர். அந்த நிலையில் நாளுக்கு நாள் காந்தியடிகளின் உடல் நிலை சீர்கேடு அடைந்து வந்தது; தலைவர்கள் அண்ணல் அம்பேத்கருக்கு வேண்டுகோள்கள் விடுத்துத் தம் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றுகேட்டுக்கொண்டனர். அண்ணல் அம்பேத்கர் தமக்கு ஏற்பட்ட அந்த நெருக்கடியை உணர்ந்து காந்தியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு தாம் போராடிப் பெற்ற தனித்தொகுதி உரிமையை விட்டுக் கொடுத்தார். இதன் விளைவாக, 1932–செப்டம்பர் 24 ஆம் தேதி பூனாவில் ஏற்பட்ட உடன்படிக்கைதான்’பூனா ஒப்பந்தம்’ என அழைக்கப்படுகிறது.
பூனா ஒப்பந்தத்தின் விளைவாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய, மாநிலச் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு, உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்களிலும், அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவதிலும் ஏற்படும் தடைகளையும் தொல்லைகளையும் நீக்குதல் ஆகிய பயன்கள் கிடைத்தன. பின்னர் இந்தப் பயன்கள் 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்திலும் இடம் பெற்றன. ஒருவகையில், இந்த உடன்படிக்கை காந்தியடிக்கும் அண்ணல் அம்பேத்கருக்குமிடையே உணர்ச்சிபூர்வமாக மனமொத்த நிலையில் ஏற்பட்ட உடன்படிக்கை என்றே கூறலாம். இந்த உடன்படிக்கை தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் சமூக விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்புமிக்கதொரு முக்கிய நிகழ்ச்சியாகும். தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு முறையை ஒரு சலுகையாகக் கருதி அதை மாற்ற வேண்டும் என்று கோருபவர்கள், இந்த புனித உடன்படிக்கையின் பின்னணியை எண்ணிப்பார்க்க வேண்டும். நம் நாடு விடுதலை பெற்ற பின்பும் நாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி ஏற்றுக்கொண்ட போதும் இந்தச் சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல்வாழ்விற்காக இவ்வாறு அளிக்கப்பட்டுள்ள அரசியல் சாசன வழியிலான சலுகைகளும், பாதுகாப்புகளும் முழுமையாகவும், முறையாகவும் நடைமுறை படுத்தப்படுகின்றனவா என்பதுதான் தற்போது எண்ணிப் பார்க்கத்தக்கது.
அண்ணல் அம்பேத்கரின் மதிநுட்பமும் துணிவும்
இந்த மக்களின் நலன்களுக்காக எவ்வளவோ நன்மைகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் மேலும் செய்யப்பட வேண்டியனவும் நிறைய உள்ளன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு சமூக, பொருளாதார விடுதலையைத் தராத வெறும் அரசியல் விடுதலை, உண்மையான விடுதலை ஆகாது. அண்ணல் அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டார். அவ்வாறே பெண்களுக்கும் உழைப்பாளர்களுக்கும் உரிய நியாயமும் பங்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், வைஸ்ராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினர், சட்ட அமைச்சர், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய தலைமைச் சிற்பி எனப் பல நிலைகளில் அவர் உழைத்த உழைப்பும் நடத்திய போராட்டங்களும் அவர் கொண்டிருந்த இலட்சிய வேட்கைக்கும், அவற்றை நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சிகளும் சான்றுகளாக இருக்கின்றன.
அண்ணல் அம்பேத்கர் கூரிய மதிநுட்பமும், துணிவு கொண்ட நெஞ்சமும்; ஆழ்ந்தப் படிப்பறிவும் ஆராய்ச்சித் திறமும் கொண்டவர், இந்திய அரசியல், சமூக அரங்கில் பலகாலம் பேருருவமாக திகழ்ந்தார். வழக்கறிஞராகவும் சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும் திறமைபெற்றிருந்த அவர் புரட்சிகர சீர்திருத்த வாதியாக, தேசபக்தராக, அரசியல் சட்ட மாமேதையாக, இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் கிடந்த கோடிக்கணக்கான மக்களுக்குத் தலைவராக, அவர்களுக்கு விடுதலை அளித்து வாழ்விக்க வந்தவராகத் தோன்றினார். அண்ணல் அம்பேத்கர் மறைந்து 34 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவருக்குப் 'பாரத் ரத்னா' விருதினை அளித்து நம் நாடு அவரைப் பெருமைப்படுத்தியது.
அரசியல் அமைப்புச் சபை
1949, நவம்பர் 25-அன்று இந்திய அரசியல் அமைப்புச் சபையில் பேசும்போது அண்ணல் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிட்டார். "ஓர் அரசியலமைப்பு என்னதான் நல்லதாக இருந்த போதிலும் அதனை நிறைவேற்ற வருபவர்கள் தீயவர்களாக இருந்துவிட்டால் நிச்சயமாக அது தீமையானதாகவே மாறிவிடும் என்பதையும், அவ்வாறே ஒரு அரசியல் அமைப்பு என்னதான் தீயதாக இருந்தபோதிலும் அதன் விதிமுறைகளை நடைமுறைப் படுத்துவோர் நல்லவர்களாக இருந்துவிட்டால் அரசியலமைப்பும் நல்லதாகவே இருக்கும் என்பதையும் உணர்ந்துள்ளேன். எனவே, அரசியலமைப்பு செயல்படும் விதம் அரசியல் சட்டத்தின் தன்மையை மட்டும் சார்ந்ததாக இருப்பதில்லை. ஒரு அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் ஆகிய உறுப்புகளை மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் தரவல்லது. அரசின் இந்த உறுப்புகள் செயல்படும் தன்மைகள் மக்களையும், அந்த மக்கள் தமது விருப்பங்களையும் நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்குக் கருவியாக அமைத்துக் கொள்ளும்அரசியல் கட்சிகளையும் சார்ந்திருக்கின்றது. இந்திய நாட்டு மக்களும் அவர்கள் அமைத்து கொள்ளும் அரசியல் கட்சிகளும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று யார் சொல்ல முடியும்? தங்களுக்கு வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்வதற்கு அரசியல் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவார்களா அல்லது அரசியல் சட்டம் சிறந்ததாக இருந்தபோதிலும் அதை விட்டுவிட்டு, புரட்சி முறைகளை மேற்கொள்வார்களா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? எனவே, மக்களும் அவர்களின் கட்சிகளும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றித் தீர்ப்பு கூறுவது பயனற்றது."என்றார். நாட்டின் இன்றைய அரசியல் நிலைகளைக் கருதிப் பார்த்தோமானால் இந்தக் கருத்துரை எத்தகைய தீர்க்கதரிசனமும், பொருத்தமானதாகவும் உள்ளது என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.
உலகத் தலைவர்களில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர். அவரது சிந்தனைகள் அனைவருக்குமானவை. அவரது பிறந்த நாளை அனைத்து சமூகங்களும் கொண்டாடவேண்டும். அரசும், அரசியல் கட்சிகளும் மட்டுமே கொண்டாடினால் போதாது. மாணவர்களும், பொதுச் சமூகமும் சேர்ந்து கொண்டாட வேண்டும். அண்ணல் அம்பேத்கரைக் கொண்டாடுவது அடிப்படையில் நமக்குள் உள்ள சாதிய உணர்வை அழிப்பதற்கான குறியீடுகளில் ஒன்று. அண்ணல் அம்பேத்கரை கொண்டாடும் இந்தத் தருணத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டமைந்த ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம்.
கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10