
மக்களாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம் என்று நாம் பொதுவாக அறிந்து கொண்டிருக்கும் அரசியல் தத்துவ அடிப்படையில்தான் நம் நாடும் இயங்குகிறது. நம் நாட்டில் (மத்திய, மாநில) அரசுகள், அதன் கீழியங்கும் அமைப்புகள், அரசுச் செயல்பாடுகள் அனைத்துக்குமான அதிகாரங்களின் வளமும், மூலமும் நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்துதான் பெறப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது. உலகின் மிக நீண்ட அரசியல் அமைப்புச் சட்டமாக இருந்த போதிலும், நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில், பல அரசியல் நடவடிக்கைகளுக்கான விதிகள் மிக வெளிப்படையாகச் சொல்லப்படாமல் விடப்பட்டிருக்கின்றன என்பது உண்மையே.
நமது அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் அளவிட அரிதான உழைப்பும், கூட்டு அறிவாற்றலும், புதியதொரு இந்தியாவை வழிநடத்தத்தக்க வலிமையான தேசிய ஆவணத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்புணர்வும் வியப்பளிக்கிறது. அம்முன்னோர்கள் நமக்கு நிரந்தரக் கொடையாக வழங்கிச்சென்றிருக்கும் மகாசாசனமான அரசியல் சட்டத்தில் சொல்லப்படாதவற்றுக்கும், செயலாற்றவுரிய வழிவகைகளைக் கண்டறிந்து பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும், போற்ற உரிய ‘நுட்பக் கருவி’யாக அல்லவோ நமது அரசியலமைப்புச் சட்டம் நம்மிடையே நிலைத்து நிற்கிறது 1950 ஜனவரி 26 முதலே.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், அரசியலில் அடிக்கடி பேசப்படுவதும், நிகழ்வதுமான ஒரு விசயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம். மத்திய அரசுக்கு எதிராகவும், மாநிலங்களிலுள்ள மாநில அரசுகளுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்போவதாக மிரட்டல்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட நிகழ்வுகளும், நாடாளுமன்ற மாநிலச் சட்டப்பேரவைகளின் வரலாற்றில் பலமுறை எப்படி நிகழ்ந்தன?
அரசியல் சட்டத்தில் நேரடியாகச் சொல்லப்படாத, நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான வழி, நமது அரசியல் சட்டப்பிரிவு (அ.ச.பிரிவு - 75(3)இல் பொதிந்திருக்கிறது என்பது தான் நமது அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் கூட்டு மதி நுட்பம் புலப்படும் இடங்களில் ஒன்றாகும்.
அப்பிரிவு சொல்வதென்ன?
“அமைச்சரவை மக்கள் பேரவைக்குக் கூட்டுப் பொறுப்புள்ளதாக இருத்தல் வேண்டும்.” அதாவது, மத்தியத்தில் - மாநிலங்களவைக்கோ, மாநிலங்களில் சட்டப்பேரவை மேலவைகள் (இருந்தால்) அவைகளுக்கல்ல- மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களுள்ள மக்களவைக்கே, மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கே அமைச்சரவை கூட்டுப் பொறுப்புள்ளதாக இருக்கவேண்டியது அவசியம் என்கிறது அ.ச.பிரிவு 75(3).
இந்தக் கூட்டுப் பொறுப்புக் கோட்பாடு என்ற கருத்து, பிரிட்டிஷ் மாதிரியில் இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. நடைமுறையில், ஆளுந்தரப்புக்கு மக்களவையில் அல்லது அந்தந்த மாநிலச் சட்டப் பேரவைகளில் பெரும்பான்மை இருக்க வேண்டும். அவ்வாறு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அரசு, தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நுட்பமும், மக்களாட்சி/நாடாளுமன்ற மக்களாட்சியைச் செயல்படுத்த ஏதுவான முக்கியமான வலியுறுத்தலும் அரசியல் சட்டப் பிரிவு 75(3) இல் அடங்கியுள்ளது. அரசியலில், ஆளுங்கட்சியை, எதிர்க்கட்சிகள் விழிப்பில், கண்காணிப்பில் வைத்திருக்கவும் இது உதவக்கூடியது. இந்த அரசியல் சட்டப்பிரிவு தரும் வாய்ப்புதான், நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற செயல்முறை நிகழ்வதற்கு வாயிலாகும்.
‘நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கூட்டு, இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவிலும் நேரடியாகப் பேசப்படவில்லை என்பது குறித்த புரிதலோடும், அரசியல் சட்டப்பிரிவு 75 (3) தான், மக்களவை/ சட்டப்பேரவைகளில் அமைச்சரவை ‘பொறுப்புக் கூறலுக்கான’ மூல ஆதாரமாக இருப்பது குறித்த தெளிவோடும் மேற்செல்வோம். மக்களவையிலும் சட்டப் பேரவைகளிலும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ‘விதிகளை உருவாக்கும் அதிகாரத்தின் கீழ்’ நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. மக்களவையில், மக்களவை விதிகள், அத்தியாயம் XVII, விதிகள் 198(1),(2),(3),(4),(5); மற்றும் 199 (1),(2),(3); தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள், அத்தியாயம் XI விதிகள் 72 (1),(2), மற்றும் 73 (1),(2),(3),ன் கீழும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விரு அரசியல் சட்ட அமைப்புகளும் (மக்களவை, சட்டப்பேரவை) நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஏற்படுத்திக் கொண்டுள்ள விதிகளில் ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசங்கள் ஏதுமின்றி இருப்பதைக் குறிப்பிட்டுரைக்க வேண்டும்.
குறிப்பிட உரிய ஒரே முக்கியமான வித்தியாசம் யாதெனில், நம்பிக்கையில்லாத் தீர்மானம், அதுதொடர்பான விதிகளின்படி முறையாக உள்ளது என்று மக்களவையில், அவைத்தலைவர் கருதி, அவையின் அனுமதிக்கு விடத் தீர்மானித்தால், தன்னிடம் விதிகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை (பிரேரணையை), விதி எண் 198(2)ன்படி, அவைத்தலைவர் அவைக்கு வாசித்துக்காட்டி, அவையின் அனுமதி வழங்கப்படுவதற்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்களை அவரவர்களின் இடங்களில் எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொள்ளுதல் வேண்டும் ஐம்பதுக்குக் குறையாத உறுப்பினர்கள் அதற்கேற்ப எழுந்திருப்பின், அவைத்தலைவர் அவையின் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அத்தீர்மானம் அந்நாளில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தல் வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையைப் பொறுத்தவரை, இதேமாதிரி, பேரவைத்தலைவர் தீர்மானத்தைப் பேரவை விதி எண் 72 (2)ன் கீழ் படித்துக்காட்டியபின், அவையின் அனுமதியைப் பெற, தீர்மானத்திற்கு ஆதரவாக அவரவர் இடங்களிலிருந்து எழுந்து நிற்க வேண்டியவர்களின் எண்ணிக்கை இருபத்து நான்கு உறுப்பினர்களுக்குக் குறையாமல் இருப்பின் அவையின் அனுமதி இருப்பதாகப் பேரவைத்தலைவர் அறிவித்து அத்தீர்மானம் அந்நாளில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தல் வேண்டும். அதன்பின் வழக்கமாக, மக்களவையோ, சட்டப்பேரவையோ, தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி அதனைத்தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறும் முறையைத்தான் மேற்கொண்டுள்ளன.
மற்ற எல்லா நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளையும் போலவே, இந்தியாவிலும் நாடாளுமன்ற நடைமுறையில் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு அரசியலமைப்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவைகளில், கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம், இறுதியாக, அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கத்துடன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பவை அடங்கும். கடைசியிலுள்ளது, எதிர்த்தரப்பினர் பயன்படுத்தும் ஆயுதங்களில் மிகவும் விசித்திரமானது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்துக் 'கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், மக்களவையாக இருந்தாலும் சரி, தமிழ்நாடு சட்டப்பேரவையாக இருந்தாலும் சரி - மக்களவை விதி எண் 198.(1)ன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 72 (1)ன் கீழ், நம்பிக்கையில்லாத் தீர்மானம் முழு அமைச்சரவையின் மீதுதான் கொண்டு வரப்பட முடியும். அப்படிச் செய்யத்தான் விதிகளில் இடமுள்ளது.
இந்தியாவில், வரலாற்று ரீதியாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு குறிப்பிட்ட விசயம் அல்லது பிரச்னை மீதான விவாதத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாயக் கருவியாக அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறத் தேவையான எண்ணிக்கையிலான வாக்குகள் தம்மிடம் இல்லை என்பதை அறிந்திருந்தாலும் தீர்மானங்கள் முன்மொழியப்படுகின்றன.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜவஹர்லால் நேரு அரசிற்கு எதிராக ஆகஸ்ட் 1963இல் ஆச்சார்யா ஜே.பி. கிருபளானியால் 3வது மக்களவையில் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர் பிரஜாசோஷலிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.யாக இருந்தார். இது 1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய - சீனப் போருக்குப் பின் நிகழ்ந்ததாகும். முதல் நம்பிக்கையில்லாதத் தீர்மானம் மீதான விவாதம் நான்கு நாள்களில் 21 மணி நேரம் நீடித்தது, இதில் 62 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
பிஆர்எஸ் என்ற அமைப்பு தொகுத்துள்ள ‘சட்டமன்ற ஆராய்ச்சி’ தரவுகளின்படி, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்திரா காந்தி தலைமையிலான அரசுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் - 15 -கொண்டு வரப்பட்டன. ஆனால், 16 ஆண்டுகள் 286 நாள்கள் நீடித்த, மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, ஒரே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மட்டுமே எதிர்கொண்டார், அது 1962 போரில் சீனாவிடம் இந்தியா அடைந்த கடுமையான தோல்வியைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்டது என்று முன்னர் குறிப்பிட்டோம்.
ஒரே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம்தான் 1979இல் அரசின் வீழ்ச்சியை விளைவித்தது. மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அவர் ராஜிநாமா செய்ய வழிவகுத்தது, விவாதம் முடிவடையாமல் இருந்தபோதும், வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்றபோதும் மொரார்ஜி தேசாய் பதவி விலகி, அரசியல் துறவும் பூண்டார். 1990-ல் வி.பி.சிங் அரசு, 1997-ல் தேவகௌடா அரசு, 1999-ல் அடல் பிகாரி வாஜ்பாய் அரசு என மூன்று முறை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆட்சி கவிழ்ந்துள்ளது. நவம்பர் 7, 1990 அன்று வி.பி.சிங் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். ராமர் கோயில் விவகாரத்தில், பாஜக அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
1997-ல் தேவகௌடா அரசு, ஏப்ரல் 11-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 292 எம்.பி.க்கள் அரசுக்கு எதிராகவும், 158 எம்.பி.க்கள் ஆதரவாகவும் வாக்களித்ததால், தேவகௌடாவின் 10 மாத கூட்டணி அரசு கவிழ்ந்தது. 1998ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவை வாபஸ் பெற்றதால் ஏப்ரல் 17, 1999 அன்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தினமும் இந்த அரசு எப்போது கவிழுமோ என்று என் இரவுகளின் உறக்கங்கள் போயின; நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்துள்ள இன்றைய இரவு முதல் நான் நிம்மதியாக உறங்குவேன் ‘எனப் பிரதமர் வாஜ்பாய் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பதற்கு ஒப்ப, நகைச்சுவை விரவிய வருத்தத்தைத் தன் உரையில் வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்ற மக்களவையில் இதுவரை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களின் பட்டியல்..
ஆகஸ்ட் 1963 - பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசுக்கு எதிராக ஆச்சார்யா கிருபளானியால் 1963 ஆகஸ்டில், மூன்றாவது மக்களவையில், முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது 1962 போரில் சீனாவிடம் இந்தியா தோற்ற சமயத்தில் நடந்தது. இந்த விவாத. இறுதியில், தீர்மானத்தை, 62 எம்.பி.க்கள் மட்டுமே அதை ஆதரித்தனர், 347 பேர் எதிர்த்தனர். மக்களவையில் கொண்டுவரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது
செப்டம்பர் 1964 - லால் பகதூர் சாஸ்திரியின் அரசாங்கத்திற்கு எதிராக என்.சி.சாட்டர்ஜியால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 18, 1964இல் வாக்கெடுப்பு நடந்தது, 307 மக்களவை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர், 50 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
மார்ச் 1965 - லால் பகதூர் சாஸ்திரி அரசாங்கத்திற்கு எதிராக கேந்திரபாரா எம்.பி, எஸ்.என்.திவேதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்தார். மார்ச் 16, 1965இல் விவாதம் நடந்தது, பிரேரணைக்கு 44 நாடாளுமன்ற மட்டுமே ஆதரவளித்தனர், 315 பேர் எதிராக வாக்களித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1965 - சுதந்திரா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஆர்.மசானி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஆகஸ்ட் 26, 1965இல் வாக்கெடுப்பு நடந்தது, 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவளித்தனர், அதே நேரத்தில் 318 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1966 - மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இந்திரா காந்தி ஜனவரி 1966 இல் பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., ஹிரேந்திரநாத் முகர்ஜி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்திற்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 270 வாக்குகளும் பெற்றதால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
நவம்பர் 1966 - இந்திரா காந்தியின் அரசாங்கம் ஒரு வருடத்தில் இரண்டாவது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டது, இது பிரபல வழக்குரைஞரும், பாரதிய ஜனசங்கத்தின் அரசியல்வாதியுமான யு.எம். திரிவேதியால் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 36 எம்.பி.க்களும், எதிராக 235 எம்.பி.க்களும் வாக்களித்ததால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
மார்ச் 1967 - நான்காவது மக்களவையில், அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திரா காந்தி அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மார்ச் 20, 1967இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது, 162 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர், 257 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அதுவரை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட உச்ச எண்ணிக்கை வாக்குகள் இதுவாகும்.
நவம்பர் 1967 - இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மது லிமாயே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். நவம்பர் 24, 1967 இல் நடந்த வாக்கெடுப்பில் 88 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடனும் 215 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களிக்க, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
பிப்ரவரி 1968 - இந்திரா காந்தி அரசுக்கு எதிராக பால்ராஜ் மதோக் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். பிப்ரவரி 28, 1968 இல் நடைபெற்ற வாக்கெடுப்பில், 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவும் 215 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தும் நின்றதால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
நவம்பர் 1968 - இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக பாரதிய ஜன சங்கத்தின் கன்வர் லால் குப்தா நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். நவம்பர் 13, 1968 இல் நடந்த வாக்கெடுப்பில், 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவும் 222 பேர் எதிராகவும் வாக்களித்ததால் தீர்மானம் தோல்வி.
1969 பிப்ரவரி - இந்திரா காந்தி தலைமையிலான அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ராமமூர்த்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஆதரித்து 86 எம்.பி.க்களும் எதிர்த்து 215 எம்.பி.க்களும் வாக்களித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
ஜூலை 1970 - இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மது லிமாயே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு 137 எம்.பி.க்ககள் ஆதரவு, எதிர்த்து 243 எம்.பி.க்கள் வாக்களித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
நவம்பர் 1973 - இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிர்மாய் பாசு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தீர்மானத்துக்கு எதிராக 251 வாக்குகளும், ஆதரவாக 54 வாக்குகளும் பதிவாகின. பிரேரணை தோற்கடிக்கப்பட்டது
மே 1974 - ஜோதிர்மாய் பாசு இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானம் மே 10, 1974இல் குரல் வாக்கெடுப்பு மூலமே தோற்கடிக்கப்பட்டது.
ஜூலை 1974 - இந்திரா காந்தி அரசுக்கு எதிராக ஜோதிர்மாய் பாசு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். ஜூலை 25, 1974இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் 63 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர், 297 பேர் எதிராக வாக்களித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
மே 1975 - ஜூன் 25, 1975இல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஜோதிர்மாய் பாசுவால் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானம் மே 9, 1975இல் குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
மே 1978 - மொரார்ஜி தேசாய் அரசாங்கத்திற்கு எதிராக அப்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சி.எம்.ஸ்டீபன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மே 11, 1978 இல், பிரேரணை குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
ஜூலை 1979 - மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக ஒய்.பி.சவான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். விவாதம் முடிவடையவில்லை என்றாலும், தேசாய் தனது பதவியை ராஜினாமா செய்து அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டாலும், தீர்மானம் தொடர்ந்து அரசு கவிழ்ந்தது இத்தீர்மானத்தின் விளைவாகும்.
மே 1981 - ஏழாவது மக்களவையில், இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக ஜார்ஜ் பெர்னாண்டஸால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மே 9, 1981இல் வாக்குப்பதிவு நடந்தது. இதற்கு ஆதரவாக 92 எம்.பி.க்களும் எதிர்த்து 278 எம்.பி.க்களும் வாக்களித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
1981 செப்டம்பரில் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமர் முகர்ஜி தீர்மானம் கொண்டு வந்தார். செப்டம்பர் 17, 1981இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் 86 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 297 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1982 - இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக, அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் எச்.என்.பகுகுணாவால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது, 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு ஆதரவாக 112 உறுப்பினர்களும் எதிராக 333 வாக்குகளும் பதிவாகின.. தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
டிசம்பர் 1987 - ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராக மாதவ ரெட்டியால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. டிசம்பர் 11, 1982 இல், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
1992 ஜூலை - பி.வி.நரசிம்மராவ் அரசுக்கு எதிராக பாஜகவின் ஜஸ்வந்த் சிங் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். வாக்குப்பதிவு ஜூலை 17, 1992 அன்று நடந்தது. இதற்கு ஆதரவாக 225 எம்.பி.க்களும், எதிராக 271 எம்.பி.க்களும் வாக்களித்தனர். பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
டிசம்பர் 1992 - நரசிம்மராவுக்கு எதிராக அந்த ஆண்டில் இரண்டாவது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அடல் பிஹாரி வாஜ்பாய் கொண்டு வந்தார். 21 மணி நேர விவாதத்திற்குப் பிறகு டிசம்பர் 21, 1992இல் வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 111 எம்.பி.க்களும், எதிராக 336 எம்.பி.க்களும் வாக்களித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
ஜூலை 1993 - நரசிம்மராவ் அரசு மீதான மூன்றாவது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அஜோய் முகோபாத்யாய் கொண்டு வந்தார். 18 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்தின் பின்னர், 265 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2003 - அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி அடல் பிஹாரி வாஜ்பாய் அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 21 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்தின் பின்னர், 2003 ஆகஸ்ட் 19இல், 314 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்தனர், 189 பேர் அதை ஆதரித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது,
ஜூலை 2018 - நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீனிவாஸ் கேசினேனி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சுமார் 11 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, தீர்மானம் ஜூலை 20, 2018இல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆதரவு 135 எம்.பி.க்கள், எதிராக 330 எம்.பி.க்கள் வாக்களித்தனர் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
ஜூலை 26, 2023 நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு எதிரான இரண்டாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் கொண்டுவந்தார். மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே சூடான வாக்குவாதமாக மாறி, குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மக்களவையில் இதுவரை 28 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளன ஒன்று மட்டும் (மொரார்ஜி காலத்தில்) முடிவில்லாமல் போனது, வாக்கெடுப்புக்கு முன்பே மொரார்ஜி பதவி விலகிவிட்டார்.
முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராகப் பிரதமர் நேரு அளித்த பதிலுரை பிரபலமானது. அவர் தனது பதிலுரையில்:- "நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது அரசில் ஒரு கட்சியை அகற்றி அதன் இடத்தை மற்றொரு கட்சி பிடிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய எதிர்பார்ப்போ, நம்பிக்கையோ இல்லை என்பது தற்போதைய நிகழ்வில் தெளிவாகிறது. எனவே விவாதம், பல வழிகளில் சுவாரசியமாக இருந்தாலும், லாபகரமானது என்றுதான் நான் நினைக்கிறேன், தீர்மானம் கொஞ்சம் உண்மையற்றது. தனிப்பட்ட முறையில், இந்த தீர்மானத்தையும் இந்த விவாதத்தையும் நான் வரவேற்றுள்ளேன். இதுபோன்ற தேர்வுகள் அவ்வப்போது நடத்தினால் ஆட்சிக்கு நன்றாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன்.’’ என்றார்.
தாம் விரும்பும் ஏதோவொரு விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை மடியில் மறைத்துக்கொண்டு, அண்மையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில், நடைமுறைகளிலுள்ள பேரவை விதிகளுக்கு முற்றிலும் புறம்பான – இந்தியாவிலுள்ள மக்களவை, மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவைகள் எதிலும், அறியப்பட்டுள்ளவரை, இதுவரை நடக்காத விநோதமான வகையில் ஒரு நிகழ்வு நடந்தேறியுள்ளது. பண்டிதர் நேரு கூறியுள்ளது போல "நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது அரசாங்கத்தில் ஒரு கட்சியை அகற்றி அதன் இடத்தை மற்றொரு கட்சி பிடிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய எதிர்பார்ப்போ, நம்பிக்கையோ இல்லை என்பது தற்போதைய தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வில் மிகத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவையிலுள்ள எதிர்க்கட்சித் துணைத்தலைவர், தமிழ்நாடு அமைச்சரவையிலுள்ள மூன்று அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அந்த மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்திருப்பதாகவும், பேரவைத் தலைவர் அதனை ஏற்றுக் கொள்ளாததால் வெளிநடப்புச் செய்ததாகவும் செய்திகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் மக்களுக்குத் தெரிவித்துள்ளன. அடிப்படையிலேயே சட்டப்பேரவையில் தீர்மானமாக நிற்கக் காலில்லாத இந்த முன்மொழிவு, அரசமைப்புச் சட்டம், பேரவை விதிகள் குறித்த சரியான புரிதலும், தெளிவுமில்லாமல், ஏதோவொரு அவசரத்தில் பேரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டு, பேரவைத்தலைவர் ஏற்காததால் அவையிலிருந்து வெளிநடப்பும் செய்துவிட்டதாகவே தெரிகிறது.
பேரவைத் தலைவரும், நம்பிக்கையில்லாத் தீர்மானமென்பது முழு அமைச்சரவையின் மீது கொண்டு வரப்படத்தான் விதிகளில் இடமுள்ளது; தனிப்பட்ட மூன்று அமைச்சர்கள் மீதெல்லாம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் பேரவை விதிகளில் எந்த இடமும் இல்லை என்பதை உறுதிபடப் பேரவையில் வெளிப்படையாக அறிவிக்காததும் ஆச்சரியமளிக்கிறது.
“பொறுப்பு கூட்டாக இருப்பதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒட்டுமொத்தமாக அமைச்சரவைக்கு எதிராக முன்மொழியப்படலாம், தனிப்பட்ட அமைச்சருக்கு எதிராக அல்ல. ஒரு தனிப்பட்ட அமைச்சர் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் எந்தவொரு தீர்மானமும் ஒழுங்கற்றது.” என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது (ஆதாரம்: Dr. ANANT KALSE Principal Secretary, Maharashtra Legislature Secretariat & Secretary, Commonwealth Parliamentary Association Maharashtra Branch, 2014)
அமைச்சர்கள், மாநில முதல்வரின் அறிவுறுத்தலின்படி மாநில ஆளுநரால் நியமிக்கப்படுபவர்கள் ஆவர். [அ.ச.பிரிவு, 164(1)]. குறிப்பட்ட ஒரு அல்லது மூன்று அமைச்சர்கள் மீது மட்டும் நம்பிக்கையில்லை எனத் தீர்மானிக்கப் பேரவைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதே உண்மை. அ.ச.பிரிவு 164 (3) மொத்தமாக, அமைச்சரவை முழுவதும் கூட்டாகப் பேரவைக்குப் பொறுப்புக் கொண்டுள்ளவர்கள் என்றுதான் விதித்துள்ளதே தவிர, அமைச்சர்கள் தனிப்படவும் கூட்டாகவும் பேரவைக்குப் பொறுப்புக்கொண்டவர்கள் என்று நிர்ணயிக்கவில்லை.
அமைச்சர்கள் நியமனம், நீக்கம் முதலியவை முற்றிலும் மாநில முதல்வரின் அதிகாரம்/ உரிமை சார்ந்தது. அ.ச.பிரிவு 164 (1), அமைச்சர்கள் மாநில ஆளுநரின் இசைவிருக்கும்வரை அப்பணியில் இருப்பர் என்ற வாசகத்தை வைத்திருந்தாலும், மாநில முதல்வரின் விருப்பத் தேர்வு இல்லாமல், ஆளுநர் தன்னிச்சையாக ஒரு குறிப்பிட்ட அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது என்பதும்; முதல்வர் தனது அமைச்சரவையில் ஒருவரை அமைச்சராகச் சேர்த்துக்கொள்ள விரும்பும் தேர்வில், ஆளுநர் தன் விருப்பமில்லை என்று மறுத்து நிற்பதோ, அமைச்சருக்குப் பதவிப் பிரமாணம் செய்ய மாட்டேன் என முரண் காட்டுவதோ செல்லுபடியாகத் தக்கதல்ல என்பது தற்போதைய தமிழக அமைச்சரவை நிகழ்வுகள் மூலம் நிரூபணம் செய்துள்ளதும் நாம் அறிவோம். இவைகளிலிருந்தும், அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள 'கூட்டுப் பொறுப்பு' என்ற செல்லுபடியாகும் கோட்பாட்டின் அடிப்படையிலும் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட அமைச்சர் அல்லது மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிவது அரசியலமைப்புச் சட்டத்தைப் பகடி செய்யும் விளையாட்டுத்தனம் என்பது அனைவரும் அறிய உரியது.
**
[கட்டுரையாளர், கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவின் பின் உயர்நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்] (advrajamuthu@gmail.com)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.