மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது நீதித் துறையின் வரம்பு மீறல்! தமிழக பாஜக பொதுச் செயலர் ராம.சீனிவாசன் சிறப்புப் பேட்டி

எந்த ஒரு பிரச்னையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகக் கூடியவர்.
ராம.சீனிவாசன்
ராம.சீனிவாசன்
Updated on
5 min read

தென் மாவட்டங்களில் பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவர் தமிழக பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன். தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவர். எந்த ஒரு பிரச்னையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகக் கூடியவர்.

பாஜக தலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், அதிமுகவுடன் அமைந்திருக்கும் கூட்டணி, புதிதாகக் களம் காணும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம், வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தமிழகத்தில் வாய்ப்பு உள்ளிட்டவை குறித்துக் கருத்துத் தெரிவிக்க அவரைவிடப் பொருத்தமான ஒருவர் இருந்துவிட முடியாது. கொள்கைப் பிடிப்பும், முன்வைக்கும் வாதங்களில் தெளிவும், மாற்றுக் கருத்தை மதித்துத் தர்க்க ரீதியாக எதிர்கொள்ளும் முதிர்ச்சியும் கொண்ட தமிழக அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் அவர்.

1985-ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடர்பவர், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முழு வீச்சில் பணியாற்றியவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி பல மாணவர்களை ஆய்வு நிறைஞர்களாக உருவாக்கியவர்.

பேராசிரியர் ராம. சீனிவாசன், தினமணி நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து....

தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தலைமை தேவைப்படுகிறது. இரண்டாம் உலகப்போரை எதிர்கொள்ள வின்ஸ்டன் சர்ச்சிலைத் தேர்ந்தெடுத்த பிரிட்டன், சமாதான காலத்துக்குக் கிளெமண்ட் அட்லியைத்தானே பிரதமராக்கியது. அரசியல் சூழ்நிலை மாற்றமும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய தேவையும்தான் இந்த மாற்றத்துக்குக் காரணம்.

கூட்டணிக்காகத்தான் இந்தத் தலைமை மாற்றமா?

நிச்சயமாக. தேசிய கட்சிகளுக்கு இதுவொன்றும் புதிதல்ல. 1989 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காகக் காங்கிரஸ் தலைமை ஜி.கே.மூப்பனார் போன்ற பெரிய தலைவரையே மாற்றி வாழப்பாடி ராமமூர்த்தியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கிய வரலாறு உண்டு.

சமூக ஊடகங்களில் பாஜக தொண்டர்கள் அண்ணாமலை மாற்றப்பட்டதை விமர்சித்துக் கருத்துத் தெரிவிப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பரப்புரைகள் பல விஷமத்தனமானவை. கட்டமைக்கப்படுபவை. அண்ணாமலையை பாஜகவின் தேசியத் தலைமை ஒதுக்கிவிட்டது; உரிய முக்கியத்துவம் அளிக்காமல் விட்டுவிட்டது போன்ற கருத்துகள் முற்றிலும் தவறானவை. மேலிடம் அண்ணாமலைக்கு உச்சபட்ச கெüரவத்தை அளித்துள்ளது.

பாஜக - அதிமுக கூட்டணியை நீங்கள் சந்தர்ப்பவாதக் கூட்டணியாகக் கருதவில்லையா?

கூட்டணி என்று சொல்வதே சந்தர்ப்பவாதம்தான். சாம்சங் தொழிற்சாலைப் பிரச்னையில் இடதுசாரிகளும் திமுகவும் ஒத்த கருத்துடனா இருக்கின்றன?. திமுகவின் மாநில சுயாட்சி போன்ற கோரிக்கைகளைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா? திமுக அமைத்தால் அது கொள்கைக் கூட்டணி; மற்றவர்கள் அமைத்தால் சந்தர்ப்பவாதக் கூட்டணியா?

கொள்கை ரீதியாக அதிமுக பல பிரச்னைகளில் பாஜகவுடன் வேறுபடுகிறது. எந்த அடிப்படையில் பாஜகவும் அதிமுகவும் இப்போது இணைந்திருக்கின்றன?

பாஜக எதிர்ப்பு என்கிற அடிப்படையில் திமுக தனது கூட்டணியைக் கட்டமைத்திருக்கிறது. தேச விரோத, பிரிவினைவாத சிந்தனையுடைய, ஊழல் மலிந்த திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தீய சக்தியான திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்கிற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதே அறைகூவலைத்தான் நாங்கள் இப்போது முன்னெடுக்கிறோம். மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க.வின் புதுவரவு எப்படி இருக்கும்?

நடிகர் விஜய் பிரபல திரை நட்சத்திரம். எம்.ஜி.ஆருக்கு அரசியலில் இருந்த அனுபவமும் வெகுஜன செல்வாக்கும் விஜய்க்கு கிடையாது. கட்சி தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகும் நிலையில், ஒருமுறை கூட அவர் தென் மாவட்டங்களுக்கோ மேற்கு மாவட்டங்களுக்கோ சென்றதில்லை. ஒரு செய்தியாளர் சந்திப்பைக்கூட நடத்தியதில்லை.

திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரிப்பதால் அதிமுக-பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்படாதா?

மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என விஜய்க்கு வாக்குகள் போகுமானால் அவை திமுக மற்றும் அதன் கூட்டணியுடைய வாக்குகளாகவே இருக்கும். அதிலும் தமிழகத்தின் வடமாவட்டங்களில்தான் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். வட மாவட்டங்களில் திருமாவளவனுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் விஜய்க்கு போகலாம். தென் மாவட்டங்களில் திமுகவுக்கு கிடைத்து வந்த கிறிஸ்தவர்களின் வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை விஜய் பெறலாம். குறிப்பாக, கடலோர மீனவ கிராம வாக்குகள் அவருக்குக் கிடைக்கலாம். விஜய்க்கு அவரது ரசிகர்கள் அளிக்கும் வாக்கு திமுகவுக்குத்தான் இழப்பை ஏற்படுத்தும். விஜய் பெறும் ஒவ்வொரு வாக்கும், அதிமுக - பாஜக கூட்டணியின் வெற்றிக்கு வலிமை சேர்க்கும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என அமித் ஷாவும், அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தது பற்றி...

பாஜக எப்போதும் அதிகாரப் பகிர்வை முன்னிறுத்தக்கூடிய கட்சி. இந்தியாவில் பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சியும் அதிகாரத்தை மற்ற கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை பெற்றிருந்த நிலையிலும் கூட்டணி ஆட்சியையே அமைத்தது. கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தவர்கள், கூட்டணியாகவே ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். ஆனால், இந்தியாவில் பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சியும் அதிகாரப் பகிர்வை ஏற்பதில்லை. அதிமுக மட்டும் விதிவிலக்காக இருக்கும் எனக் கருதவில்லை.

2026 தேர்தலில் அதிமுக தனித்துப் பெரும்பான்மை பெற்றால் நீங்கள் கூட்டணி ஆட்சி கோருவீர்களா?

எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது என்பதை நீங்கள் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். அதுவரையில் மகிழ்ச்சி. 1967-இல் அண்ணாதுரை தலைமையில் திமுக கூட்டணி அமைந்தபோதும், 2006-இல் கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணி அமைந்தபோதும் எழுப்பப்படாத இந்தக் கேள்வி 2026-இல் அதிமுக-பாஜக கூட்டணி அமையும்போது மட்டும் எழுப்பப்படுவது ஏன் என்பதுதான் புரியவில்லை. 2006-இல் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், கருணாநிதி தலைமையில் திமுக சிறுபான்மை அரசு அமைந்ததே, அப்போது காங்கிரஸ் ஏன் வாய் மூடி மௌனியாக இருந்தது என்று கேட்காதவர்கள்தான் இப்போது எங்களை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள். தனிக்கட்சி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்பதல்ல முக்கியம். ஊழல் திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். எங்கள் இலக்கு அதுதான்.

இந்தத் தேர்தலில் பாஜகவின் முதன்மை நோக்கம் என்ன?

தமிழகத்தில் திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம். அது தமிழகத்துக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே நல்லது. திமுக பிரிவினையை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டது. திமுகவுக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், தனித் தமிழ்நாடு கோரியும் திமுக அரசு தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளது. திமுக வெளியே தெரியாத தேச விரோத கட்சியாக உள்ளது. இந்த நோக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதால்தான் பாஜக- அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து 2019, 2021, 2024 தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2026-இல் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று எந்த அடிப்படையில் கருதுகிறீர்கள்?

எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியது முதல் தொடர்ந்த 1977, 1980, 1984 தேர்தல்களில் படுதோல்வி அடைந்த திமுக 1989-இல் வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். 2014, 2019, 2024 என்று தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் தோல்வியடைந்தும்கூடக் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என்றால், நாங்கள் கூட்டணி அமைத்திருப்பதில் ஒன்றும் தவறில்லை.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் அவசர அவசரமாக இப்போதே அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் பாஜக முனைப்புக் காட்டியது ஏன்?

அவசரக் கோலத்தில் கடைசி நிமிஷத்தில் கூட்டணி அமைக்கக் கூடாது என்று எங்கள் கட்சியின் தலைமை நினைத்திருக்கக்கூடும். 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் ஏற்பட்ட சில மனக்கசப்புகளையும், கருத்து வேறுபாடுகளையும் களையக் கால அவகாசம் தேவைப்படும் என்று நினைத்து முன்கூட்டியே கூட்டணியை அறிவித்தது அரசியல் ரீதியாக சரியானதுதான்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்காதது தவறு என்று நீங்கள் உணர்கிறீர்களா?

நாங்கள் மட்டுமல்ல, அதிமுகவும் உணர்ந்ததால்தான் இப்போது கூட்டணி அமைந்திருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக பிரிந்ததால் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வென்றது. பாஜக - அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் 15 முதல் 20 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியிருப்போம்.

மொழிக் கொள்கை, வக்ஃப் திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்களில் அதிமுகவின் நிலைப்பாடு பாஜகவுக்கு எதிராக உள்ளதே?

இலங்கையில் தனி ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. ஆனால், இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இருப்பினும், இரு கட்சிகளும் கூட்டணியில்தானே உள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை தமிழக காங்கிரஸ் ஏற்கவில்லை. இருந்தபோதும் அவர்களை திமுக அரசு தானே விடுவித்தது. பொருளாதார இட ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தபோது, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஆதரித்தன. திமுக எதிர்த்தது. இருப்பினும், திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணியில்தானே தொடர்கின்றன.

கூட்டணி, தேர்தல் எனும்போது சில கொள்கைகளில் முரண்படுவதும் ஒன்றுபடுவதும் இயல்பானதே. பாஜகவின் அனைத்துக் கருத்துக்களையும் அதிமுக ஆதரித்தால் அதிமுக என்பது இரண்டாம் பாஜகவாகிடும். தனித்தனி கொள்கை இருப்பதுதான் கட்சிகளின் அடையாளம்.

இந்திய தேசியத்தை ஏற்காத நாம் தமிழர் கட்சியை பாஜக கூட்டணிக்கு அழைக்கிறாரே நயினார் நாகேந்திரன்...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய தேசியத்தை ஏற்காதது போலவே, திமுகவின் திராவிட கொள்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என சீமான் கருதினால், அவர் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். முன்பு "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. தெரிவித்த கருத்துகளைத்தான் சீமான் பிரதிபலிக்கிறார் என்பது எனது கருத்து.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து?

சென்னா ரெட்டி தமிழக ஆளுநராக இருந்த காலத்தில், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முதல்வரே துணைவேந்தராக செயல்படும் சட்ட மசோதாவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். இதற்கு, அப்போது எதிர்க்கட்சியில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் க. அன்பழகன் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் செயல்பாடு முட்டாள்தனமானது என க. அன்பழகன் தெரிவித்தார். அதுதான் எனது பதிலும்.

ஆளுநரின் செயல்பாடு நீதிமன்றக் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மசோதாக்களை நீதிமன்றமே நிறைவேற்றப்பட்டதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

எப்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்குக் காலக்கெடு விதிக்கவில்லையோ, அதேபோல ஆளுநர்களும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவும் அரசியல் சாசனம் காலவரம்பை நிர்ணயிக்கவில்லை. நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிடலாம். அதுவேகூட ஏற்புடையதல்ல. ஆனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பு விதித்துப் பிறப்பித்திருக்கும் தீர்ப்பு நீதித் துறை வரம்பு மீறல். அரசியல் சாசனப் பிரிவு குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை நீதித் துறைக்கு உண்டே தவிர, அதில் திருத்தவோ, மாற்றவோ, வரம்பு நிர்ணயிக்கவோ நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் உரிமை உண்டு. தேவையில்லாத மோதலுக்கு வழி வகுத்திருக்கிறது நீதித் துறை என்பதுதான் எனது கருத்து.

மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் ஹிந்தித் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?

ஹிந்தியும் படிக்கலாம் என்றுதான் மும்மொழிக் கொள்கை சொல்கிறதே தவிர, ஹிந்திதான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழகத்தில் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியாக மும்மொழிக் கொள்கையை நான் கருதவில்லை. மாறாக, தமிழை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டுசெல்லும் முயற்சியாகவே கருதுகிறேன். தமிழக முதல்வருக்கு உண்மையில் தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் இருந்தால், மும்மொழிக் கொள்கையை ஏற்று, அனைத்து மாநிலங்களிலும் தமிழைக் கற்பிக்க தமிழக அரசு உதவும் என பிற மாநில முதல்வர்களுக்கு உறுதிபடத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு தமிழக அரசின் செலவில் தமிழ்ப் பாடத் திட்ட புத்தகங்களையும், ஆசிரியர்களையும் அனுப்பினால் இந்தியா முழுமையிலும் தமிழ் வளர்ச்சி பெறும். தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகம் தமிழகத்தில் மட்டும் இருப்பதால் பயன் இல்லை; உலக அளவில் இருக்க வேண்டும். எங்கள் கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழுக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருக்கும்.

ஹிந்திக்குக் கிடைப்பதுபோல அதற்கு ஆசிரியர்கள் கிடைப்பார்களா?

படிப்பதற்கு மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் வருவார்கள். தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை எட்டாம் வகுப்பு வரை அவரவர் தாய்மொழிக் கட்டாயம் என்பது. முதலில் தமிழ்நாட்டில் தமது குழந்தைகளுக்குத் தவறில்லாமல் தமிழில் எழுதவும், பேசவும் கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள். "தமிழ் வாழ்க' என்பதை "டமில் வால்க' என்று சொல்கிறார்கள். காந்தியடிகள் சொன்னதுபோல தாய்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான். மொழிக் கொள்கையில் இவர்கள் "ஆஷாடபூதிகள்'! கபட வேஷதாரிகள்... போலி மொழிப்பற்றாளர்கள்... ஏமாற்றுப் பேர்வழிகள்...!

யாரைச் சொல்கிறீர்கள்?

ஊருக்கு இரண்டு மொழிக் கொள்கை என்று சொல்லி, அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சித்துத் தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலித்து ஹிந்தி கற்றுக் கொடுப்பவர்களைத்தான் சொல்கிறேன். அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்திருந்தால்தான், இவர்களது தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்பதற்காக அடித்தட்டு மாணவர்களின் எதிர்காலத்தையே பாழாக்க நினைக்கிறார்கள்.

பேட்டி: எம்.சங்கர், படங்கள்: எஸ்.அருண்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com