சங்கத்தமிழர் வாழ்வியலில் சந்தனம்!

சங்க காலத்தில் சந்தனத்தின் பல்வேறு பயன்பாடுகள் பற்றி இக்கட்டுரையில்..
Sandalwood
சந்தனக் கட்டைத் துண்டுகள்...
Published on
Updated on
6 min read

பண்டைத் தமிழகத்தில் சந்தனமரக் காடுகள் நிறையவே இருந்திருக்கின்றன. பண்டைத் தமிழர்கள் சந்தனத்தின் மணத்தையும், அதன் மருத்துவக் குணத்தையும் அறிந்து வைத்திருக்கின்றனர். அதன் காரணமாக, தங்களது அன்றாட வாழ்வில் சந்தனத்தைப் பல வழிகளில் பயன்படுத்தியும் இருக்கின்றனர்.

சந்தன மரம்

ஒரு சந்தன மரம் 10 மீட்டர் (33 அடி) வரையிலும் வளரக் கூடியது மட்டுமல்ல, மிகமிக மெதுவாகவே வளரக் கூடியது. ஒரு சந்தன மரம் பயனுள்ள மரமாக மாறுவதற்கு 30 ஆண்டுகள் வரையிலும் தேவைப்படும். மண்ணிற்கு மேல் வளர்ந்திருக்கும் மரமும், மண்ணுக்குக் கீழ் பரவியிருக்கும் வேர்களும் மஞ்சள் நிறத்தில் நறுமணம் கமழும் எண்ணெய்யைக் கொண்டுள்ளன. பல ஆண்டுகள் நீடித்திருக்கும் அந்த நறுமணம் காரணமாகவே, வீட்டிற்குப் பயன்படும் மரத்திலான பொருள்கள், நகைப்பெட்டிகள் போன்றவை வெள்ளைச் சந்தனக் கட்டைகளால் செய்யப்படுகின்றன. பொடியாக்கப்படும் சந்தனம் ஆடைகளின் நறுமணத்திற்கும், மேனியில் பூசுவதற்கும், வழிபாட்டிற்கும் பயன்படுகின்றது. ஈமச்சடங்குகளிலும் சந்தனக் கட்டைகளைப் பயன்படுத்துவதுண்டு.

சந்தன எண்ணெய், நறுமணக் குப்பிகளிலும் (perfumes), குளிப்பதற்கான மணம் கமழும் சோப்புக் கட்டிகளிலும், வாசனைப் பத்திகளிலும், மெழுகு திரிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சந்தன எண்ணெய்யின் பயன்பாடு மருத்துவத்திலும் நீள்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனர்கள் சந்தன எண்ணெய்யை மருந்தாகப் பயன்படுத்தும் மருத்துவ முறைகளை அறிந்துவைத்திருந்தனர். தமிழ்நாட்டில் சந்தன எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள் உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இன்றும் இயங்கி வருகின்றன.

செஞ்சந்தன மரம்

விளைந்த சந்தன மரத்தின் உட்புறம் செறிவான சிவப்பு நிறத்தில் இருக்குமானால் அதுவே செஞ்சந்தன மரம். வெள்ளைச் சந்தன மரத்தை விடவும் செஞ்சந்தன மரம் மிகவும் மெதுவாக வளரக் கூடியது. மிகவும் அரிதாகக் காணப்படுவதும் ஆகும். பெரும்பாலும் செம்மண் நிலப்பரப்பிலேயே வளர்கின்றது. வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டின் சிவப்பு நிறம் நாள் ஆக ஆக மேலும் மேலும் கடும் செவ்வண்ணம் பெற்று அழகுடன் மிளிர்கின்றது. அதன் காரணமாகக் கட்டடங்களின் உட்புற வேலைப்பாடுகளில் அழகு செய்வதற்கு இம்மரங்களைப் பெரிதும் விரும்புகின்றனர். அதன் காரணமாகவும் இவற்றின் தேவை அதிகரிக்கின்றது. மிகவும் அரிதாகக் காணப்படுவதாலும், பல்வேறு வழிகளில் பயன்படுவதாலும், செஞ்சந்தன மரங்கள் உலகளவில் மிகப் பெரிய சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன.

செஞ்சந்தன மரங்கள் இந்தியாவில், ஆந்திர மாநிலத்தின் சேஷாசலம், வெல்லிகொண்டா, லங்கமாலா, பலகொண்டா ஆகிய கிழக்கு மலைத்தொடர் பகுதிகளில் மட்டுமே வளர்கின்றன. செஞ்சந்தனம் ஓர் உள்நாட்டுத் தாவரம் (endemic). வேறு எங்கும் இதனைக் காண முடியாது. தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் கிழக்கு மலைத் தொடர்களிலும் ஒரு சிறிது நிலப்பரப்பில் வளர்க்கப்படுகின்றன. செம்மரம் வெட்டியதற்காக இருபது தமிழர்கள் ஆந்திர காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். செம்மரம் என்பது செஞ்சந்தன மரத்தையே குறிப்பதாகும். இது தங்கத்தை விடவும் மதிப்பு மிகுந்ததும் ஆகும்.

சந்தன மரம் ஓர் ஒட்டுண்ணி மரம்!

மண்ணிற்கு மேல் வளர்ந்திருக்கும் பெரிய மரங்களின் கிளைகளில் பற்றிப் படர்ந்திருக்கும் பிற தாவர வகையினை நம்மில் பலரும் பார்த்திருப்போம். அத்தாவரங்கள் தாங்களாகவே, தங்களுக்குத் தேவையான உணவு தயாரிப்பதில்லை. அவை எந்த மரத்தின் மீது அல்லது பிற செடிகொடிகளின் மீது படர்ந்திருக்கின்றனவோ, அவை தயாரிக்கும் உணவைத் திருடி உயிர் வாழ்பவை. அப்படிப்பட்ட தாவரங்கள் ஒட்டுண்ணித் தாவரங்கள் (parasitic plants) என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு வகையான ஒட்டுண்ணித் தாவரங்கள் உள்ளன. ஒருவகை ஒட்டுண்ணித் தாவரங்கள் தங்களுக்குத் தேவையான உணவு முழுவதையும், அவை சார்ந்திருக்கும் பிற தாவரங்களிலிருந்து பெறுகின்றன. மற்றொரு வகை, பகுதி உணவைப் பிற தாவரங்களிலிருந்து பெறுகின்றன. இந்த இரண்டாம் வகை ஒட்டுண்ணித் தாவரம் மண்ணுக்குக் கீழ் படர்ந்திருக்கும் வேர்களால் அருகில் உள்ள மரங்களின் வேர்களில் உள்ள உணவைத் திருடுகின்றன. அதற்காக, இந்த வகையான ஒட்டுண்ணித் தாவரங்களின் வேர்கள், அருகில் உள்ள பிற மரங்களின் வேர்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும்.

இந்த இரண்டாம் வகை ஒட்டுண்ணி மரங்களின் விதைகள் முளைத்து வளர்வதே கூட மற்ற தாவரங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுவதாகும். மண்ணில் கிடக்கும் விதைகள் முளைப்பதற்குச் சரியான ‘கொடை - மரத்தை எதிர்நோக்கிப் பல ஆண்டுகள்கூடக் காத்துக் கிடக்கும். கொடை - மரங்கள் வளர்வதற்கேற்ற சூழல் நிலவும் நிலப்பரப்பில்தான் ஒட்டுண்ணித் தாவரங்களின் விதைகள் காத்துக்கிடக்கின்றன. அருகில் கொடை-மரம் வளர்ந்திருக்கிறது என்பதை அம்மரத்தின் வேர் தங்களுக்கு அருகில் நீண்டு, அவை வெளிப்படுத்தும் ஒருவித ஆவியாகும் வேதிப்பொருளையும், நிறத்தையும் ஒரு சைகை அமைப்பு (sensor) வழியாக ஒட்டுண்ணித் தாவரத்தின் விதைகள் அறிந்துகொள்கின்றன. அதன் பிறகு முளைத்து வளர ஆரம்பிக்கின்றன. அப்படி வளரும்போதே, அவற்றின் வேர்கள் உணவளிக்கும் மரங்களின் வேர்களுடன் பின்னிப் பிணைந்து விடுகின்றன.

சந்தன மரம் இந்த இரண்டாம் வகை ஒட்டுண்ணி மரம் ஆகும். பொதுவாக ஒட்டுண்ணித் தாவரங்கள் தரைக்கு மேல் காணப்படுவதால் அவற்றை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் சந்தன மரம் மண்ணுக்கு அடியில், தனது வேர்களால் அருகில் இருக்கும் மரங்கள் அவற்றின் வேர்களில் சேமித்து வைத்திருக்கும் உணவையும் தண்ணீரையும் களவாடி உயிர் வாழ்கிறது என்னும் உண்மை நமக்குத் தெரிந்திருப்பதில்லை. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ஒரு சந்தன மரத்தை நடுவில் வைத்து, சுற்றியும் நான்கு அகத்தி மரங்களை நட்டு விடுவார்களாம். சந்தன மரத்தின் வேர்கள், சுற்றியுள்ள அகத்தி மரங்களின் வேர்களிலிருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டு நன்றாக வளரும் என்னும் அரிய தாவரவியல் தகவலும் உள்ளது.

சந்தனத்தின் நறுமணத்திற்குப் பின்னால் இப்படி ஓர் அறிவியலும் உள்ளது. தங்களைக் கொடைவள்ளல்களாக, பெரிய மனிதர்களாக வெளி உலகுக்குக் காட்டிக்கொள்பவர்கள் அவர்களது அகவாழ்க்கையில், சந்தனம் போல மற்றவர்களைச் சுரண்டிப் பொருள் சேர்க்கும் குணம் மறைந்திருக்கலாம்.

சங்ககாலத் தமிழரின் வாழ்வியலில் சந்தனத்தின் பயன்பாடு

பண்டைத் தமிழ் மக்கள் சந்தனத்தைத் தங்கள் அன்றாட வாழ்வில் பல வகைகளில் பயன்படுத்தியிருக்கின்றனர். சந்தனக் கட்டையை நீர் விட்டு உரசிச் சந்தனக் குழம்பாக்கி மார்புகளில் பூசியிருக்கின்றனர். சந்தனக் கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, இழைத்து, துளையிட்டுக் கோர்த்துச் சந்தன மாலையாகக் கழுத்தில் அணிந்திருக்கின்றனர். அந்தக் காலத்தில் உணவு சமைப்பதற்கு விறகுகளைத்தானே பயன்படுத்தினர். பண்டைத் தமிழர் சந்தனக்கட்டைகளை விறகாகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். சந்தனம் நறுமணம் வீசுவது மட்டும் அல்ல, உடல் சூட்டைக் குறைப்பதும் ஆகும்.

சங்கப்பாடல்களில் சந்தன மரம் ‘சிறியிலை சாந்தம்’, சந்தனம், சந்தம், ஆரம்’ என்னும் சொற்களால் குறிப்பிடப்படுகின்றது. சந்தனத்தின் பயன்பாடு பற்றியும், சந்தன மரம் பற்றியும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

சந்தன மரமும், அதன் நறுமணமும்

சந்தன மரத்தின் ஒரு சிறப்புச்செய்தியை நற்றிணை 5-வது பாடல் தருகிறது.

“நிலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப

அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் பரப்பக்

குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்

நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்

பெரும்பெயல் பொழிந்து தொழில எழிலி

தெற்குஏர்பு இறங்கும் அம்சிரக் காலையும்

அரிதே காதலர் பிரிதல் இன்றுசெல்

இருளையர் தரூஉம் வாடை யொடு

மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே”

( நற்றிணை, பாடல் 5)

தலைவன், தலைவியைப் பிரிந்துசெல்வதை அவளுக்கு இலைமறை காய்மறையாகத் தெரிவிக்கிறான். அதனை அறிந்த உடன் தலைவியின் உடல் மாற்றமடைகிறது. கண்களில் நீர் பெருகி வழிகிறது. அக்கண்ணீரே தூதாகச் சென்று தலைவன் தலைவியைப் பிரியாதிருக்கச் செய்யும் என்று தோழி உரைக்கும் பாடல். அது வாடைக்காலம். வாடைக்காலத்தில் பிரிந்துசெல்வது அறம் அன்று என்றும் உணர்த்தும் பாடல்.

நீரின்றி வறண்டு கிடந்த நிலம், மழை பெய்ததால் குளிர்ந்தது. மலைக்குன்றம் குழை, தழைகளால் பசுமை நிறைந்தது. சுனைகள் நிறைந்து மழைநீர் வாய்க்கால்கள் வழியாக ஓடி குறவர்களின் வயல்களில் பாய்ந்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்தன. நிலமும், குன்றமும் மழை நீரை ஆர உண்டதால், கானம் குழைந்து கவின்மிகு வனப்பினை எய்தியது. அப்படிப் பசுமைபெற்ற கானகம் விண்ணில் நகரும் மழை முகிலைத் தன்கண் ஈர்த்துப் படிவித்து பெருமழையைத் தோற்றுவிக்கும். மழை முகில் தெற்கு நோக்கி நகர்கிறது என்பது அது வாடைக்காலம் என்பதை உணர்த்துகிறது. இயற்கையின் இந்தச் சங்கிலித்தொடர் இயல்பைப் புரிந்துகொண்டிருந்த பழந்தமிழர் கானகத்தைப் பாதுகாத்தனர். அதனைப் புரிந்திருந்தாலும் இன்றைய மனிதர் தமது சுயநலம் ஒன்றையே கருத்திற்கொண்டு காட்டை அழித்து, பருவமழையைத் தடுத்து, நாட்டின் சீர்கேட்டிற்கும் வழிவகுத்து விட்டனர்.

‘நறை’ என்பது நறுமணம் கமழும் ஒரு கொடி. குன்றக்குறவர் வெட்டி எறிந்திருந்த அந்த நறைக்கொடி (குறைக்கொடி), மழை பெய்ததில் வேர் விட்டுத் துளிர்த்து அருகில் இருந்த சந்தன மரத்தைச் சுற்றிப் படர்ந்தன. தனியாக நிற்கும் சந்தன மரத்தைவிடவும், நறுமணம் கமழும் நறைக்கொடி சுற்றிய சந்தன மரத்தின் மணம் அதிகம் என்று இப்பாடல் கூறுகிறது. மண்ணில் வீழ்ந்த நறைக் கொடியின் வேரும் சந்தன மர வேர்களைச் சுற்றியிருக்கும் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

நறைக்கொடி சந்தன மரத்தைச் சுற்றி சந்தன மரத்திற்குக் கூடுதல் மணம் சேர்ப்பதுபோல, தலைவி தலைவனைச் சார்ந்து ஒழுகி அவனது குடும்பத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று பொருள் கொள்ளலாம். நறைக்கொடி வேர்களும், சந்தன மர வேர்களும் பின்னிப் பிணைந்துள்ளன என்னும் உவமை, தலைவி தலைவனுடன் சேர்ந்தால் மட்டுமே அவளது வாழ்வு வளம்பெறும் என்றும் ஆகிறது. இந்த உவமையில், சந்தன மரம் ஓர் ஒட்டுண்ணி மரம் என்னும் தாவரவியல் உண்மையும் பொதிந்துள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைத் தமிழர்கள் சந்தன மரத்தின் வேர்கள் மற்ற மரங்களின் வேர்களுடன் பிணைந்திருக்கும் அறிவியலை அறிந்திருக்கிறார்கள் என்பது சிறப்பு. ஆனால் அது பிற மரங்களின் வேர்களில் உள்ள சத்துகளை உறிஞ்சி எடுப்பதற்கு என்னும் அறிவியல் அவர்களுக்குப் புரியாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை அப்படிப் புரிந்திருந்தாலும் அந்த உவமை சரிதான். அருகில் உள்ள மரங்களின் வேர்களோடு பின்னிப் பிணைந்திருப்பதால்தான் சந்தன மரம் உயிர்வாழ முடிகிறது. அதுபோல தலைவனுடன் இணைந்தால் மட்டுமே தலைவியின் வாழ்வு வளம்பெறும், நலமும் பெறும் என்று ஆகிறது.

சந்தன விறகு

“ஓங்குமலை நாட ஒழிகநின் வாய்மை

அறுகால் பறவை அளவில பறத்தலின்

சாந்த ஞெகிழி காட்டி

ஈங்கா யினவால் என்றிசின் யானே”

(நற்றிணை, பாடல் 55)

களவு வாழ்க்கையில் தலைவன் தலைவியுடன்கூடி இன்பம்துய்க்கிறான். அதற்காக ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல் நீண்ட காட்டுவழியில் பயணித்துவருகிறான். தலைவியின் களவு வாழ்க்கையை அவளது தாய் சந்தேகம் கொள்கிறாள். எப்படி என்றால், காட்டில் தலைவன் தலைவியைத் தழுவிக் கூடியதால் அவளது கூந்தல் கூடுதல் மணம் பெற்றது. அதனால் அவளது கூந்தலைச் சுற்றி நிறைய வண்டுகள் பறந்தன. அதனைக் கண்ட தாய் சந்தேகம்கொண்டு கேள்வி எழுப்புகிறாள். தலைவி, தோழியைப் பார்க்கிறாள். தோழி, அடுப்பில் எரிந்துகொண்டிருந்த சந்தனக்கொள்ளியை எடுத்துக்காட்டி அதன் நறுமணம் காரணமாகவே வண்டுகள் (அறுகால்பறவை) பறக்கின்றன என்று பொய்சொல்லித் தலைவியைக் காப்பாற்றுகிறாள். இப்படி எத்தனை நாளைக்குப் பொய் சொல்ல முடியும் என்று சொல்லும் தோழி, தலைவியை விரைந்துவந்து மணம் செய்துகொள்ளவேண்டும் என்று தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.

இந்தப்பாடலில் இரண்டு சிறப்புச்செய்திகள் உள்ளன. ஒன்று மெய்யுறுபுணர்ச்சி காரணமாக பெண்ணுடல் மணம் வீசும் என்பது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கண்டுணர்ந்த இம்மெய்யறிவு, இப்போது நம்காலத்து அறிவியலால் கண்டறியப்பட்டுள்ளது. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சந்திக்கும்போது அவர்களது முதல் பார்வையால் மட்டுமல்ல, முதல் மெய்ம்மணத்தாலும் காதல் உருவாகும் என்று நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. இரண்டாவதாக சந்தனக்கட்டை அடுப்பெரிக்க விறகாகப் பயன்பட்டிருக்கிறது என்பதாகும்.

சந்தனமரத்தின் மலர்களுக்கும் மணம் உண்டு

“சாந்த மரத்த பூழில் எழும்புகை

கூட்டுவிரை கமழும் நாடன்

அறவற்கு எவனோ நாம்அகல்வு அன்னாய்”

(ஐங்குறுநூறு, பாடல் 212)

தலைவியின் பெற்றோரிடம் தலைவன் பெண் கேட்கிறான். பெற்றோர் பெண் கொடுக்க மறுக்கின்றனர். அந்தவேளையில் தோழி குறுக்கிட்டுத் தலைவியின் களவு வாழ்க்கையை வெளிப்படுத்துகிறாள். தலைவனின் மலைவளம் பற்றி எடுத்துரைக்கிறாள். சந்தன மரங்களுக்கு இடைப்பட்ட நிலத்தில் அகில் மரங்கள் உள்ளன. அகில் மரங்களை நெருப்பு வைத்துச் சுடுவதால் அகில்புகை எழும். அதன் மணமும் சந்தன மரத்தில் பூத்திருக்கும் பூக்களின் மணமும் சேர்ந்து கூட்டுமணம் கமழும் வளமான காட்டுக்கு உரியவன் தலைவன் என்று தோழி தலைவனின் பெருமையை எடுத்துரைக்கிறாள். அகில், சந்தன மரங்கள் அருகருகே வளர்ந்திருந்த காடுகள் நம் தமிழ் மண்ணில் முன்பு இருந்திருக்கின்றன என்னும் செய்தியும் நமக்குத் தெரிய வருகிறது.

செஞ்சந்தனம்

“மலைசெஞ் சாந்தின் ஆர மார்பினன்

மறைத்தற் காலையே அன்றே

திறப்பல் வாழி வேண்டு அன்னைநம் கதவே “

(குறுந்தொகை, பாடல் 321)

தலைவன், அவனது மலையில் உள்ள செந்நிறச் சந்தனத்தின் சாந்தினைக் குழைத்து மார்பில் பூசியவன், ஆரம் அணிந்தவன். புலிகள் வாழும் மலைப்பாதையில் தலைவன் வந்துபோகிறான். இதற்கு மேலும் இக்களவு வாழ்க்கையை நீட்டிக்க இயலாது. அதனால் அதனை அன்னைக்கு வெளிப்படுத்தப் போவதாகத் தோழி தலைவியிடம் உரைக்கிறாள். இங்கு தோழி அறத்துடன் நின்றாள் என்றும் ஆகிறது. இப்பாடலில் ‘செஞ்சாந்து’ என்று வருவதால், அது செஞ்சந்தன மரக்குழம்பு என்று பொருள் கொள்ளலாம். எனில் பண்டைத்தமிழகத்தில், செஞ்சன மரங்களும் இருந்திருக்கின்றன என்னும் செய்தியும், அவற்றின் பயன்பாடு தமிழ் மக்களிடம் இருந்திருக்கிறது என்பதும் இப்பாடலின் வழியே தெரிய வருகிறது. இப்போது செஞ்சந்தன மரங்கள் வளரும் மலைப்பகுதி முன்பு தமிழகத்தின் பகுதியாகவும் இருந்திருக்கலாம்.

சந்தனச்சாந்தும், சந்தனம் உரைக்கும் வடநாட்டு வெண்ணிற வட்டக் கல்லும்

பல்நாள் எவ்வம் தீர பகல்வந்து

பசுமீன் தொடுத்த வெண்ணெல் மாத்தயிர்மிதி

மிதவை நினக்கே, மாஆர் குனவே

வடவர் தந்த வான்கேழ் வட்டம்

குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய

வண்டு இமிர் நறுஞ்சாந்து அணிகுவம்

தெண்கடல் பரப்பின் எம்உறைவுஇன் ஊர்க்கே “

(அகநானூறு, பாடல் 340)

தலைவன் நெய்தல் நிலத்துத் தலைவியைப் பகற்குறியில் சந்தித்துவிட்டு ஊர் திரும்ப முனைகிறான். அப்போது அவன் இரவில் தலைவியின் ஊரில் தங்கிச்செல்ல வேண்டும் என்று தோழி, தலைவிக்காக வேண்டுகிறாள். அப்படித் தங்கினால் தலைவனை அவர்கள் எப்படிச் சிறப்புடன் அன்பு செய்வார்கள் என்பதையும் தோழி உரைக்கிறாள்.

“பச்சைமீனை விற்றுப்பெற்ற வெண்ணெல்லின் மாவில் தயிர்விட்டுப் பிசைந்த கூழினைக் குதிரைகளுக்குக் கொடுப்போம். வட நாட்டவர் கொண்டுவந்து தந்த வட்டக்கல்லில் மேற்கு மலையான பொதிய மலையில் விளைந்த சந்தனக்கட்டையை உரைத்து, அதனுடன் மற்ற நறுமணம் வீசும் பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கிடைக்கும் சாந்தினை உன் மார்பில் பூசுவோம்” என்று சொல்கிறாள் தோழி.

பொதியை மலையில் விளையும் சந்தனம் மணம் மிகுந்தது என்பதும், வடநாட்டிலிருந்து வெள்ளைநிறமுடைய வட்டக்கற்கள் சந்தனம் உரைப்பதற்குத் தமிழகத்திற்கு வந்திருக்கின்றன என்னும் செய்தியும் இப்பாடலில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. ‘மேற்கு மலை’ என்று பொதிய மலையைக் குறிப்பிடுவதால், தலைவியின் ஊர் கிழக்குக் கடற்கரையில் இருந்திருக்கிறது என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

பாண்டிய மன்னன் அணிந்திருந்த சந்தனமாலை:

“தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்

முனைதிறை கொடுக்கும் துப்பின், தன்மலை

தெறல்அரு மரபின் கடவுட் பேணி

குறவர் தந்த சந்தின் ஆரமும்

இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்

திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்.. “

(அகநானூறு, பாடல் 13)

இன்றைய தமிழ்நாட்டின் வடமேற்கு சேரநாடு, வடகிழக்கு சோழநாடு. அதனால் தெற்கில் இருந்த நாடு பாண்டிய நாடு (இது பாவாணர் கூற்று). எனவே பாண்டிய மன்னன் தென்னவன் என்றும் அழைக்கப்பட்டான். முத்துக்குளிக்கும் துறையான கொற்கையும் (தன்கடல்), பொதியமலையும் (தன்மலை) பாண்டிய நாட்டுக்குரியவை. கொற்கை முத்துகளைக் கோத்த முத்துமாலையையும், பொதியை மலைக்குறவர்கள் முருகனை வேண்டிக் கொண்டுவந்து கொடுத்த சந்தன மாலையையும் (ஆரத்தாலான ஆரம்) சேர்த்துப் பாண்டிய மன்னன் தனது மார்பில் அணிந்திருக்கிறான். சந்தனமரத்தை இழைத்து, சிறுசிறு மணிகளாக்கிக் கோத்ததுதான் சந்தன மாலை.

சந்தனம் இன்று

பண்டைத் தமிழர்கள் அகில், சந்தனம் போன்ற நறுமணப் பொருள்களைப் பெரியளவில் தங்கள் வாழ்வில் பயன்படுத்தியிருக்கின்றனர். எனக்குத் தெரிந்து தாழம்பூ நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அந்தக்காலங்களில் பட்டுச்சேலைக்குள் தாழம்பூவின் மெல்லிய இதழ்களையும் மகரந்தத்தையும் இட்டு வைத்திருப்பார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகும் பட்டுச்சேலை நறுமணத்துடன் இருக்கும். பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருக்கும்.

இன்று நாம் இயற்கையிலிருந்து வெகுதூரம் விலகிவந்துவிட்டோம். அரசுகளின் துணையுடன் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் காடுகளையும், வனங்களையும் அழித்துவருவதால், மலையில் சந்தன மரங்கள் அருகிவிட்டன. சந்தன மரங்களை வெட்டி, அவற்றைத் துண்டுகளாக்கி விற்றுப் பிழைக்கும் கூட்டமும் பெருகிவிட்டது. அதனால் இன்று சந்தன மரங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. மக்களிடம் சந்தனத்தின் பயன்பாடும் குறைந்துவிட்டது.

நான் பள்ளியில் படிக்கும் சிறுவனாக இருந்த காலகட்டத்தில், கோடையில் சந்தனத்தைக் குழைத்து மார்பிலும், முதுகிலும், கைகளிலும் பூசும் வழக்கம் இருந்தது. உடற்சூட்டைக் குறைத்துக் குளிர்ச்சி பெறவே அப்படிச் செய்தோம். அதோடு கோடையில் வரும் வேர்க்குரு வராமலும் அது பார்த்துக்கொண்டது. இன்றும் சந்தனம் வழிபாட்டுப் பொருள்களில் இடம் பெற்றுள்ளது. தவிரவும் அப்போதெல்லாம் ஆண்களும், பெண்களும் நெற்றியில் சந்தனத்தைப் பொட்டாக வைத்துக்கொள்வதும், கீற்றாகத் தீட்டிக்கொள்வதும் வழமையாக இருந்தது. இன்று அப்பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களிடம் இருந்துவந்த வாழ்வியல் பண்பாடு சார்ந்த ஒரு பயன்பாட்டு அறிவியல் பிற்காலத்தில் குறிப்பிட்ட மத அடையாளமாக மாற்றப்பட்டுவிட்டதற்குத் தமிழர்கள் அனைவருமே காரணம் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com