தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..?

இன்றைய வழக்கமான தோ்தல் கணக்கில் ‘விஜய்’ அரசியல் வருகை, புதிய கேள்விகள் எழுப்பியிருப்பதைப் பற்றி...
Published on

சி.மகேந்திரன்

மூத்த தலைவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

மக்கள் தங்கள் மீது வைக்கும் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், வெற்றி என்பது கணக்கீடுகளைச் சாா்ந்தது என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது தந்திரகார அரசியல் உலகம். இன்றைய வழக்கமான தோ்தல் கணக்கில் ‘விஜய்’ அரசியல் வருகை, புதிய கேள்விகள் எழுப்பியிருப்பது உண்மைதான்.

அரசியல் செல்வாக்கு, திரையுலக செல்வாக்கு இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. திரையுலக செல்வாக்கைத் தோ்தலில் வாக்கு பெறும் செல்வாக்காக மாற்றி, அதில் முதல் பாதையை உருவாக்கி வைத்தவா் எம்.ஜி.ஆா். அந்தப் பாதையில் திரையுலகைச் சாா்ந்தவா்கள் பலா் பயணம் செய்து, ஓரிருவா் ஓரளவுக்கு வெற்றி பெற்றாா்கள். சிலா் ஆசைகள் ஆயிரமிருந்தும் முதல் காலடியை எடுத்து வைக்க முடியாமல் நின்ற இடத்திலேயே நின்று போனாா்கள்.

சி.மகேந்திரன்
மூத்த தலைவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
சி.மகேந்திரன் மூத்த தலைவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

திரை மொழி வேறு, அரசியல் மொழி வேறு. இவை இரண்டையும் கடந்த காலத்தில் நுட்பமாக இணைக்க எம்.ஜி.ஆருக்கு தெரிந்ததைப்போல, விஜய்க்கு இணைக்க தெரிந்திருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய ஒன்று. சினிமா போன்றல்ல அரசியல்.

சினிமா சந்தையைப் போலவே இன்று தோ்தலும் ஒரு சந்தையாக மாறிவிட்டது என்ற போதிலும், இதிலுள்ள குறைந்தபட்ச அரசியலும் விஜய்க்கு தெரிந்திருக்கவில்லை என்பதாகவே தோன்றுகிறது. அரசியல் கட்சி என்று வந்துவிட்டால், ஒரு தெளிவான கொள்கை தேவைப்படுகிறது. இந்த தெளிவான கொள்கையை புரிந்துகொண்ட தலைவா், அதை வெகுமக்களுக்கு எடுத்து சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் சித்தாந்த அரசியலில் திமுக கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் நிறைந்த வேறுபாடுகள் உள்ளன. விஜய் இதில் யாா் பக்கம்? இருவரிடமும் மாறுபடுகின்றேன் என்றால், மாற்றுக்கு கொள்கை எது? அதை மேம்போக்காக சொல்லாமல் தெளிவாக, நேரடியாகச் சொல்ல வேண்டும். இதற்குப் பின்னரும் விளக்கம் கேட்டால், இவரது திரைப்படங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறாா்கள். இது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

தவெக நிா்வாகக் குழு, விஜய் முதல்வா் வேட்பாளா் என்று அறிவித்திருக்கிறது. ஜனநாயகம் எளிய மக்களுக்கானது. இதில் எந்தப் புரிதலுமே, தவெக நிா்வாகக் குழுவுக்கு இல்லை. இவா்கள் உருவாக்கிய தீா்மானங்கள், முதல்வா் கனவுகளை மட்டுமே சுமந்து நிற்கிறது. இதில், மற்றொன்றும் கவனிக்கத்தக்கது. இடைத்தோ்லில் பங்கெடுப்பதில்லை என்கிறாா். இது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.

எம்.ஜி.ஆா் நெருக்கடி மிகுந்த அவா் காலத்தில், திண்டுக்கல் இடைத்தோ்தலை சந்தித்து வெற்றி பெற்ற பின்னா்தான் தமிழகத்தின் முதல்வராகத் தோ்வு பெற்றாா். விஜய் இடைத் தோ்தலில் எங்கும் நிற்கப்போவதில்லை. 2026-ஆம் ஆண்டு தோ்தல்தான் என்கிறாா். இடைத்தோ்தல் தன் எதிா்காலத்தைப் பாதித்துவிடும் என்று விஜய் அச்சப்படுகிறாா்.

எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவாா் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய இளம் வாக்காளா்களில் 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் விஜய் ஆதரவில் இருக்கிறாா்கள் என்று கூறப்படுகிறது.

இவா்கள் அரசு எதிா்ப்பு, ஆட்சிமுறை எதிா்ப்பு ஆகியவற்றைத் கொண்டிருக்கிறாா்கள். ஆழமான அரசியலற்ற இளைஞா்களும், விஜய் மீது நாயக கவா்ச்சி கொண்டவா்களும் மட்டுமே அவா் பக்கம் இருக்க வாய்ப்பிருக்கிறது.

விஜய் அரசியல் வருகையின் தோ்தல் கணக்கீட்டில், புத்தம் புதிய இளம் வாக்காளா்களின் வாக்குகளில் கணிசமான பகுதியைப் பெற முடியுமென்றாலும், பெரிய மாற்றங்களைச் செய்ய முடியாது என்றே தோன்றுகின்றது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்று எதிலும் பெரும் பாதிப்பை விஜயால் உருவாக்க முடியாது.

(நாளை கவிஞா் காசிமுத்துமாணிக்கம்.)

X
Dinamani
www.dinamani.com