வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..? பி.விஸ்வநாதன், செயலர், அகில இந்திய காங்கிரஸ்.
நடிகர்களின் அரசியல் பிரவேசம் புதிதல்ல. இதைப் பட்டியலிட்டால் ஆந்திரத்தில் என்டிஆர், தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கே.பாக்யராஜ் உள்பட எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகும். ஆனால், எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா ஆகியோர் மட்டுமே அரசியல் களத்தில் ஜொலித்தனர். விஜயகாந்த் ஓரளவு வெற்றி பெற்றிருந்தார்.
திரை உலகின் கடைசி காலகட்டத்தில்தான் கமல், ரஜினிகாந்த் ஆகிய உச்ச நட்சத்திரங்கள் அரசியலில் குதித்தனர். ரஜினி முன்வைத்த கால்களை பின்வாங்கினார். தனித்து நின்று வெற்றி பெற முடியாத கமலும், கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். ஆனால், திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் குதித்து இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கிறார் விஜய்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடி வாக்காளர்களில் 2 கோடி வாக்குகளைப் பெறும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கிறது. முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், பெண்கள் என 18 முதல் 35 வயதுக்குள்பட்ட வாக்காளர்களை குறிவைத்துள்ளார் விஜய். இந்த வயதுக்குள்பட்டோர் 1.18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருப்பதால் அதை நோக்கி அவரும் கவனம் செலுத்தி வருகிறார். திமுக, அதிமுகவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பதவியில் உள்ளனர். எனவே, இளம் வாக்காளர்களை விஜயால் எளிதில் தன்பக்கம் திருப்ப முடியும்.
கிராமம்தோறும் உள்ள இளைஞர் சக்தியை விஜய் வைத்துள்ளார் என்பது உண்மை. ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள்போல விஜய் பின்னால் புதிய இளைஞர்கள் திரண்டுள்ளனர். புதிய ஜனநாயக மறுமலர்ச்சியைத் தேடியவர்கள் விஜய் பக்கம் போய்விட்டனர். ஆனாலும், விஜய் வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான்.
ஆந்திரத்தில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை சிரஞ்சீவி தொடங்கியபோது, 16.32 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றும் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. தமிழகத்தில் தனித்து நிற்கும் சீமானுக்கும் கூட்டம் கூடுகிறது. தனக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்துள்ளன என சீமான் பேசுகிறாரே தவிர, வெற்றி பெற முடியவில்லை. எனவே, தேர்தல் களத்தில் வெற்றியைத் தீர்மானிப்பது கூட்டமல்ல, கூட்டணிதான். கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, விஜயகாந்தின் தேமுதிக 1.15 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அதேபோல, 39 தொகுதிகளிலும் தேமுதிக லட்சங்களில் வாக்குகளைப் பெற்றது. ஆனால், வெற்றிபெற முடியவில்லை. தேமுதிக போல விஜயும் வாக்கு வங்கியைப் பெறலாம். ஆனால், வெற்றி பெறுவது கடினம்.
திமுக, அதிமுக இருகட்சிகளும் கிராம அளவில் கட்டமைப்பு ரீதியாக பலமாக உள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி இருவரும் முதல்வராக நிரூபித்தவர்கள். திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணியைச் சிதறாமல் வைத்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு 10 சதவீத வாக்குகளை அதிமுக இழந்துவிட்டது. அந்த 10 சதவீத வாக்குகள் யாருக்கு செல்கிறது, அதை மீண்டும் எடப்பாடி பழனிசாமி தக்கவைக்க முடியுமா? திமுக வாக்கு வங்கி மேலும் 4 அல்லது 5 சதவீதம் உயரப் போகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக, அதிமுக, சீமான், விஜய் என 4 முனைப் போட்டி திமுக அணிக்குச் சாதகம். இருமுனையில், வெற்றி முனை எங்கு சாய்கிறது என்பதை தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் கணிக்க முடியும். ஆகவே, கூட்டணிதான் வெற்றி பெற வைக்குமே தவிர, கூட்டம் வெற்றியைத் தராது. விஜய் பொதுவெளியில் கூட்டத்தைக் கூட்டினாலும், அவருக்கு இளைஞர்கள் பக்கபலமாக இருந்தாலும், கூட்டணியின்றி வெற்றி பெறுவது மிகக் கடினம்.
நாளை...
கல்கி பிரியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.