தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...? கல்கி பிரியன், மூத்த பத்திரிகையாளர்

எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து வந்ததால் இயல்பாகவே திராவிட கொள்கைகளே அவரது கொள்கையாக இருக்கும் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள்.
Published on

எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து வந்ததால் இயல்பாகவே திராவிட கொள்கைகளே அவரது கொள்கையாக இருக்கும் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். கடந்த 2005-இல் நடிகர் விஜயகாந்த், தேமுதிகவை தொடங்கியபோது, அவரை நோக்கி அடிக்கடி எழுப்பப்பட்ட கேள்வி "தேமுதிகவின் கொள்கை என்ன? என்பதுதான். மக்களுக்கு நல்லது செய்வதுதான் எனது கொள்கை எனப் பொதுவான பதிலை சொல்லிவந்தார் விஜயகாந்த்.

அரசியலில் முழு வெற்றியைக் கண்டு மறைந்த எம்ஜிஆர், எதிர்கட்சித் தலைவர் வரை தன்னை உயர்த்திக் கொண்ட விஜயகாந்த் என இருவரையும் விலக்கிவைத்துப் பார்த்தால் தமிழகத்தில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் உள்ளிட்ட பிற நடிகர்கள் எதிர்பார்த்த ஏற்றம் கிடைக்காமல், அரசியலில் தோல்வி அடைந்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

இந்தச் சூழலில்தான் தவெகவைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், கொள்கைத் தெளிவோடு களம் இறங்கியுள்ளார். இந்தத் தெளிவுக்குப் பின்னால் வாக்கு வங்கிக் கணக்கும் இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும்.

தமிழ் மண்ணின் இரு கண்களாக திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் முன்னிறுத்துகிறார் விஜய். பெரியார் ஈ.வெ.ரா. (அவரது கடவுள் மறுப்பைத் தவிர்த்து), அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் என்று தவெகவின் வழிகாட்டிகளை அடையாளம் காட்டுகிறார்.

இருமொழிக் கொள்கை, மதச்சார்பற்ற சமூக நீதி, மாநில சுயாட்சி, சமநிலை சமூகம், பன்முகத்தன்மை என்று பரந்துபட்ட கொள்கைளைச் சொல்லும், அதேநேரம், நீட் ஒழிப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, மதுவிலக்கு என்று குறிப்பாக பல விஷயங்களையும் சொல்கிறார்.

வாரிசு அரசியல், மன்னராட்சி என்று திமுகவைக் கடுமையாக விமர்சிக்கும் விஜய், தனது அரசியல் எதிரியாக திமுகவை நிலைநிறுத்துகிறார். பாஜக செய்யும் பிளவுவாத அரசியலைக் குறிப்பிட்டு, அதை தனது கொள்கை எதிரியாக சுட்டிக்காட்டுகிறார்.

தன்னாலும் கள அரசியல் செய்ய முடியும் என்பதைச் சொல்லும் விதமாக பரந்தூர், காவல் மரண விவகாரங்களில் சாலைக்கு வந்து போராடுகிறார்.

இப்படி, கொள்கைப் பின்னணியோடு, தனது அரசியல் செயல்பாடுகளை வகுத்துவரும் விஜய், வாக்கு வங்கியில் என்ன அதிர்வுகளை ஏற்படுத்தப் போகிறார் என்பதே பொதுவெளியில் பேசுபொருளாக உள்ளது. விஜய் மிகவும் செல்வாக்கு பெற்ற நடிகர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால், அவரது மொத்த ரசிகர் கூட்டமும், அவரது வாக்கு வங்கியாக மாறுமா என்பது கேள்விக்குறி. தற்போதைய நிலையில் திமுக, பாஜக எதிர்ப்பே அவரது முக்கியப் பேச்சாக உள்ளது. எனவே, திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்தும் நிலையில், அந்த எதிர்ப்பு வாக்குகளை தன்பக்கம் சிறிது இழுப்பதன்மூலம் அதிமுக, நாதகவுக்கும் செல்லும் திமுக எதிர்ப்பு வாக்குகளை குறைக்கக்கூடும். பாஜக எதிர்ப்பைக் கையில் எடுப்பதால் திமுகவுக்கு செல்லும் பாஜக எதிர்ப்பு வாக்குகளில் சேதாரத்தை உண்டாக்கலாம்.

புதிதாக வந்திருக்கிறார், ஒருமுறை இவருக்கு ஆதரவு கொடுக்கலாமே என்று திமுக, அதிமுகவை விரும்பாத நடுநிலையாளர்கள் விஜய்க்கு முன்னுரிமை கொடுக்கக்கூடும். கடந்த 4 தேர்தல்களாக சீமானுக்கு சென்று கொண்டிருந்த வாக்குகளில் சிறிதளவேயாவது தன்பக்கம் இழுக்கும் வாய்ப்பு விஜய்க்கு உள்ளது.

இப்படி பல தரப்பில் இருந்து வாக்குகளை தனது பக்கம் திருப்பும் வாய்ப்பு இருப்பதால் விஜய் ஆட்சியை பிடிப்பார் என்ற நம்பிக்கை தவெகவினருக்கு உருவாகியுள்ளது. இதற்கு எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்ததை உதாரணமாகப் பார்க்கின்றனர். ஆனால், உதாரணம் காட்டுவது எளிது. எம்ஜிஆர் அரசியல் பாதை தனித்துவமானது.

என் தலைமையில் கூட்டணி, அதிகாரத்தில் பங்கு என்று சொல்வதன் மூலம் பல சிறிய கட்சிகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் விஜய். விஜயின் வாக்கு வங்கி, சோதனை செய்யப்படாதது (அன்டெஸ்டட்) என்பதால் பலர் தங்கள் ஆசைகளுக்கு ஏற்ப இத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறுவார் என ஆரூடம் கணிக்கின்றனர். ஆனால், விஜயோ, திமுகவுக்கு மட்டுமே போட்டி என சவால் விடுகிறார்.

மதுரையில பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி, தனது அதிரடி பேச்சுக்கள் மூலம் இரு திராவிடக் கட்சிகளைப் பதற வைத்திருக்கிறார் விஜய். அடுத்ததாக சுற்றுப்பயணம் என்று தனது அரசியலை விரைவுபடுத்துகிறார். 2026 தேர்தலை நோக்கி தமிழ்நாடு நகரும்போது விஜய் விஸ்வரூபம் எடுப்பாரா? என்ற கேள்வியே இன்றைய அரசியலில் முக்கிய பேசுபொருள் ஆகியிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

நாளை

கே.பாலகிருஷ்ணன்,

அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com