
ஆப்பிரிக்காவில், மேற்கு மடகாஸ்கரில் உள்ள மெனாபே பகுதியின் கடைசி சுதந்திர ஆட்சியாளராக இருந்த மலகாசி மன்னர் டோரா (Toera). ‘டூயர்’ என்றும் உச்சரிக்கப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு பிரெஞ்சு காலனித்துவப் படைகள் மெனாபே தீவைக் கைப்பற்றியபோது துப்பாக்கியால் சுடப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். அவரது மண்டை ஓடும் மற்ற அவரது இரு மலகாசி இன சகாக்களின் மண்டை ஓடுகளும் இதுநாள் வரை பாரிஸ் அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருந்தன. அவை, 128 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னரின் வழித்தோன்றல்களிடம் ஒப்படைக்கப்பட்டு, நாளை (31 ஆகஸ்ட்) இந்தியப் பெருங்கடலிலுள்ள அவர்களது தீவுக்குச் சென்றடையும்.
மேற்கண்ட 1897 வரலாற்று அவலத்தின் சோக நினைவுகளும், வரலாற்றுக் காயம் ஆற்றும் வகையான அண்மைச் செய்தியும் (27-8-2025) விளைவித்த சிந்தனை அலைகளில் பயணித்து, நிகழ்வுகளின் பின்னணியைச் சற்றுத் திரும்பிப் பார்க்கிறது இக்கட்டுரை.
‘’சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’’ என்ற உன்னதக் கோட்பாடுகளோடு, உலகின் முதல் மக்கள் புரட்சி எனப் போற்றப்படும் 1789 ஆண்டுப் பிரெஞ்சுப் புரட்சியின் அடிநாதமான கோட்பாடுகள், அந்நாடு, பிற நாடுகளைத் தமது காலனிகளாக ஆட்கொண்டபோது அப்பகுதிகளில் எள்ளளவும் செயலாகவில்லை. சமத்துவத்தைச் சுதந்திரத்தைச் சகோதரத்துவத்தை உயிர்மூச்சாக நிலைநிறுத்திக் கொடுங்கோலாட்சியை மக்கள் எழுச்சியால் தூக்கியெறிந்து தன் நாட்டில் மட்டுமல்ல, ஐரோப்பா கண்டம் முழுதும், ஏன், அதற்கப்பால் உலகு தழுவிய தாக்கங்களை ஏற்படுத்திய பிரான்ஸ் தனது காலனி நாடுகளில் சுதந்திரத்திற்கான மக்கள் எழுச்சிகளைக் கடுமையாக நசுக்கியது; சமத்துவ மந்திரத்தை உலகறிய ஓங்கி உச்சரித்த அந்நாடு, அற்ப வணிக லாபங்களுக்காக ஆப்பிரிக்க நாடுகளில் அடிமை வர்த்தகத்திற்கு அரணாக நின்று அவலங்காட்டியது; பூமிப்பரப்பெல்லாம் பரவிடச் செய்யவேண்டிய சகோதரத்துவத்துக்குப் பதில், தனது காலனி நாடுகளில் கடுமுகங்காட்டிக் கொடுஞ்செயல்கள் புரிந்தது.
அத்தகைய கொடுஞ்செயல்களில் ஒன்றுதான் 1897 அம்பிகி (Ambiky Massacre) வெறியாட்டம். 128 ஆண்டுகள் முன் ஆகஸ்ட் 29-30 நள்ளிரவில், பிரெஞ்சுத் தளபதிகள் மீது விளைத்திருந்த ‘நம்பிக்கைகள்’ எனும் நற்பயிற்களை நாசமாக்கி, சமாதானத்திற்கு நீட்டக் காத்திருந்த மன்னரின், மக்களின் கைகளை முறித்து, உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அம்பிகி மக்களை - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் எனப் பாகுபாடு ஏதும் காட்டாத பாதகம் (சமத்துவம்) போர்த்தி – துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுத்த வெறியாட்டத்தில், அம்பிகியின் தரை முழுவதும் இரத்தச்சேறு. இந்த ஆகஸ்ட் 30, 1897 தேதியிட்ட "ஆயுத சாதனை" குறித்து பால் விக்னே டி'ஆக்டன் என்ற பிரஞ்ச் பாராளுமன்ற உறுப்பினரது உணர்ச்சிகரமான உரை அவைப்பதிவிலுள்ளது.
இதோ அதனொரு பகுதி
“மன்னர் டூயர் பிரெஞ்ச் இராணுவ ஆட்களுக்கும், மாலுமிகளுக்கும், அவர்களுடன் வந்த சுமைதூக்கிகள் (போர்ட்டர்கள்) மற்றும் பாரம்பரிய ஊழியர்களுக்கும் ஆர்வமுடன் விருந்தோம்பலை வழங்கினார். "தனது சகோதரர்" எனக் கருதி, முழு நம்பிக்கையுடன், தளபதி ஜெரார்டுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான வரவேற்பை அளிக்க அவருடன் ஆலோசனையும் நடத்தினார்; நிகழ்வை மேலதிகமாக முக்கியத்துவப்படுத்தவும், கொண்டாட்டத்தைக் கூடுதலாகச் சிறப்பிக்கவும், மாவட்டத்தின் அனைத்து முக்கியஸ்தர்களையும், அம்பிகேவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவர்கள் தங்கள் பரிவாரங்களுடன் வந்தனர்; பல இசைக்கலைஞர்கள், வாலிஹே மற்றும் டிரம் வாசித்து, கூட்டத்தை உற்சாகத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பினர்.
ஆகஸ்ட் 29 ஆம் தேதி காலை, பிரெஞ்சு படை அவ்விடத்திலிருந்து இரண்டு மணி நேரப்பயணத் தொலைவில் உள்ளது என்பதை அறிந்த என்சைன் பிளாட் மற்றும் சமத், அவர்களது முகாமுக்குச் சென்றனர்; கமாண்டர் ஜெரார்டைச் சந்தித்த அவர்கள், அம்பிகேயில் நிலவும் இணக்கமான நிலைமைகளைப் பற்றி அவரிடம் கூறினர். ஆனால், தளபதி, அவர்களைப் புரிந்து கொள்ளாதது போல், அடுத்த நாள் தனது மாலுமிகளுடன் தாக்குதலில் அவர்களும் பங்கேற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
மடகாஸ்கர் ஆளுநர் ஜெனரல், "கல்லீனி, இமெர்னில் ஒரு பெரிய தாக்குதலுடன் தனது பணியைத் தொடங்கினார்; அதுபோலவே கமாண்டர் ஜெரார்ட், மெனபேயில் தனது நிலையை ஒரு பெரிய தாக்குதலுடன் உறுதிப்படுத்த விரும்பினார்." இது ஒரு ‘தவறான புரிதல்’ என்று என்சைன் பிளாட் மற்றும் சமத் இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தளபதி எந்த பதிலும் அளிக்காத தொனியில் தனது தாக்குதலுக்கான உத்தரவையே மீண்டும் வலியுறுத்தினார். மன்னர் டூயரின் சமாதானத்தை ஜெரார்ட் ஏற்க மறுத்து, "எனது உத்தரவுகளை நானே செயல்படுத்தப்போகிறேன்” எனக் கர்ஜித்தார்.
நடு இரவில், படைகள் புறப்பட்டன; அம்பிகேவுக்கு முன்னால் இருந்த காடுகள், புதர்கள் வழியாக அவர்கள் மற்றவர்களால் கவனிக்கப்படாமல் இரகசியமாக முன்னேறி, சர்வ அமைதியாக அவ்வூரைச் சூழ்ந்தனர்; தேவைப்பட்டால் தாக்கக்கூடிய பீரங்கிகளையும் தயாராக நிறுத்தினர். விடியுமுன், நகரின் ஆறு பக்கங்களிலிருந்தும், ஆபத்தறியாத மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நகரத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து பாம்பு புகுவதுபோல, மக்கள் உறங்கிய வீடுகளுக்குள் புகுந்தனர், தொடங்கின கொடுங்கொலைகள்!
எதிர்ப்பு ஏதும் இல்லாமல் உறங்கிய, அனைவரும் இரக்கமேதுமின்றித் துப்பாக்கிகளால் சுடப்பட்டனர். முதல் குண்டுகளால் கொல்லப்படாதவர்கள் தப்பி ஓட முயன்றபோது அவர்கள் வேட்டையாடப்பட்டனர். காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தோடிய ஆடைகளுடன் பீதியில் ஓடி, மீண்டும் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடக்கும் தங்கள் தோழர்களின் உடல்களில் தடுமாறி வீழ்ந்தனர். அதையும் கடந்து ஓடியவர்கள் வெளியேறும் இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த படைகளின் இரக்கமற்ற ஆயுதங்களுக்குச் சரிந்து வீழ்ந்தனர்.
அன்று காலை, மன்னர் டூயர், முக்கிய நபர்கள் அனைவரும் இயந்திர துப்பாக்கி வீரர்களின் தாக்குதலுக்கு இரையாயினர். துப்பாக்கி வீரர்கள், ஆண்களை மட்டுமே கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் அதனைப் பின்பற்றவில்லை: இரத்த வாசனைப் போதையில், அவர்கள் ஒரு பெண்ணை விடவில்லை, ஒரு குழந்தையைக் கூட விடவில்லை. பொழுது விடிந்தபோது, அந்த நகரம் ஒரு அதிபயங்கரமான சூழலில் நனைந்திருந்தது, பிரெஞ்சுக்காரர்களே இவ்வளவு காட்டுத்தனமான தாக்குதலால் மனச்சோர்வடைந்து, நிலைகுலைந்தனர். சிலர் அவமானத்தால் மூச்சுத் திணறி நின்றனர்.
பேரணி ஊதுகுழல்கள் ஒலித்தன, ஆணையிடப்படாத அதிகாரிகள் ரோல் கால் செய்தனர்: உள்ளூர் ஆள்கள் யாரும் காணவில்லை. “நாங்கள் ஓய்வெடுத்தோம், சாப்பிட்டோம், மகிழ்ச்சியான பாடல்கள் வெற்றியைக் கொண்டாடவில்லை. சிவப்பு சேறு தரையை மூடியது, அது 5,000 பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம்.’’
ஆண்ட்ரியா மிலா ஃபிகாரிவோ என்றும் அழைக்கப்படும் மன்னர் டோரா, மெனாபே பகுதியில் சகலவா மக்களின் மரியாதைக்குரிய தலைவராக இருந்தார். அவரது ஆட்சி மக்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கும் எடுக்கப்பட்ட தீரமிகு முயற்சிகளால் குறிப்பானதாகியது. அதுவே அவரைப் பிரெஞ்சு காலனித்துவப் படைகளுக்கு இலக்காகவும் ஆக்கியது, அவரை மேற்கு மடகாஸ்கரின் மீதான தங்கள் கட்டுப்பாட்டிற்கு ஒரு தடையாகப் பிரெஞ்ச் இராணுவத்தினர் கருதினர்.
மெனாபே பகுதியை "அமைதிப்படுத்த" (அதாவது அடிமைப்படுத்த) கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரெஞ்சு இராணுவ நடவடிக்கைகளின்போது- ஆகஸ்ட் 29 - 30, 1897 இரவில் – இரக்கமற்ற அம்பிகி படுகொலை நிகழ்ந்தது. மன்னர் டோரா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தும், அமைதிக்காக ஆயுதங்களைக் கீழே போட முடிவு செய்திருந்தும், அகஸ்டின் ஜெரார்டின் தலைமையில் பிரெஞ்சு துருப்புக்கள் அம்பிகி கிராமத்தின் மீது திடீர் தாக்குதலைத் தொடங்கின. இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல் படுகொடூரமானது. அதன் மூலம் மேற்கு மடகாஸ்கரில் உள்ள மெனாபே பகுதியின் கடைசி சுதந்திர ஆட்சியாளராக இருந்த மன்னர் டோராவின் ஆட்சியும் வாழ்வும் முடிந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட மன்னர், குரூரமாகத் தூக்கிலிடப்பட்டார். அவர் தலை தனியே துண்டிக்கப்பட்டது. அவரது மண்டை ஓடு ‘போர் வெற்றிக் கோப்பையாக’ பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பால் விக்னே டி'ஆக்டன் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000-க்கு மேல் என்று பதிவு செய்ததை அறிந்தோம். ஆனால், ஜெனரல் ஜோசப் கல்லீனியின் தலைமையிலான இராணுவத் தரப்பில் வெறும் 97 பேர் மட்டும் உயிரிழந்ததாகவும் 150 பேர் காயமுற்றதாகவும் அறிக்கை வழங்கியது.
கல்லீனியின் "மடகாஸ்கரை அமைதிப்படுத்துதல்" திட்டத்தின் முயற்சிகள், எதிர்ப்பை ஈவிரக்கமின்றி நசுக்குவதையும் அங்கு நிலவிவந்த பாரம்பரிய அதிகார அமைப்புகளை அடியோடு அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட மிருகத்தனமான இராணுவ தந்திரோபாயங்களால் வகைப்படுத்தப்பட்டதாகும்.
1897 ஆம் ஆண்டில், கல்லீனி மெரினா ராஜ்யத்தின் கடைசி இறையாண்மை கொண்ட ராணி ரணவலோனா III ஐ பதவி நீக்கம் செய்து, மலகாசி முடியாட்சியை ஒழித்து, தீவின் ஒரே அதிகாரம் பிரான்ஸ்தான் என அறிவித்தார். இந்த அடக்குமுறை காலத்தில் பரவலான வரலாற்றின் கொடூரமான வன்முறைகள் சர்வ சாதாரணமாகியது. அதிலொன்றுதான் மன்னர் டோரா மற்றும் அவரது சகலவா இனமக்களின் உயிர்களைக் கொத்தாகப் பறித்த அம்பிகி கொடுங்கொலையும்.
அமைதியான மக்கள் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் செயல் அம்பிகி கொடுங்கொலை. அப்போதைய பிரெஞ்சு அதிகாரிகள் மன்னர் டோராவை ஒரு கொடுங்கோலராகவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் பொய்யாகச் சித்தரித்து தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயன்றனர். இருப்பினும், சகலவா இனமக்களுக்கு, அவர் மக்கள் எதிர்ப்பின் அடையாளமாகவும், மரியாதைக்குரிய முன்னவராகவும் இருந்தார். மன்னரது மண்டை ஓடு ‘வெற்றிக்கோப்பை’யாகப் பாரிஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ‘இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில்’ இதுநாள்வரை வைத்திருந்த செயல், மடகாஸ்கர் மக்களுக்கு மன்னர் டோராவின் மரணத்தின் அதிர்ச்சியை ஆறாக்காயமாகவே உணரச்செய்து வந்தது.
ஃபிதம்போஹா விழா
மன்னர் டோராவின் மரபு, சகலவா மக்களின் கலாசார, ஆன்மிக மரபுகளுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. ஃபிதம்போஹா அல்லது "அரச நினைவுச் சின்னங்களைக் குளிப்பாட்டுதல்" என்பது மெனாபே பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு புனித விழாவாகும். இந்த சடங்கின்போது, இறந்த சகலவா மன்னர்களின் எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு எண்ணெய் மற்றும் தேனால் அபிஷேகம் செய்யப்படுகின்றன, இது மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவதையும், உயிருள்ளவர்களின் வாழ்க்கையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதையும் குறிக்கிறது. ஆனால், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட டோரா மன்னரின் மண்டை ஓடு இல்லாதது ஃபிதம்போஹா விழாக்களில் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக மடகாஸ்கர் மக்கள் மனதில் திறந்த புண்ணாக இருந்து வருத்தியது. மேலும், அது காலனித்துவத்தின் அநீதிகளை நினைவழியாமல் வைத்து மக்களை உறுத்திக் கொண்டிருந்தது.
சமீபத்திய ஆண்டுகளில் அவரது எச்சங்களைக் கண்டுபிடித்துத் திரும்பப்பெறும் முயற்சிகள் வேகம் பெற்றுவந்தன. அவரது வழித்தோன்றல்களான காமாமி குடும்பத்தினர் இதுதொடர்பான முனைப்புகளில் முன்நின்றனர். 2024 ஆம் ஆண்டில், டோரா மன்னரின் கொள்ளுப் பேத்திகள் அவரது மண்டை ஓட்டை திருப்பித் தருமாறு பிரெஞ்சு அரசை முறைப்படியாகக் கோரினர். இதற்கிடையில், கடந்த கால காலனித்துவ வன்முறைகளுக்கு, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சமரசப்போக்கைப் பிரான்ஸ் வெளிப்படுத்தி வருகிறது. 2017 ஆம் ஆண்டு பிரான்ஸின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆப்பிரிக்காவில் கடந்த காலங்களில் நடைபெற்ற பிரெஞ்சு துஷ்பிரயோகங்களைத் தயங்காமல், வருத்தமுடன், ஒப்புக்கொண்டுள்ளார்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலான காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு 1960 இல் சுதந்திர நாடாகத் தன்னை அறிவித்தது மடகாஸ்கர். அண்மையில் அந்நாட்டின் தலைநகர் அன்டனனரிவோவிற்கு விஜயம் செய்தபோது அதிபர் மக்ரோன், மடகாஸ்கரில் பிரான்சின் "இரத்தக்களரி மற்றும் சோகமான" காலனித்துவத்திற்கு "மன்னிப்பு" கோருவதாகப் பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
பாரிஸின் மியூசி டி எல்'ஹோம் அருங்காட்சியகத்தில் உள்ள 30,000 மாதிரிகளில் மூன்றில் ஒருபங்கு மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகளே. கடந்த காலங்களில் பிரான்ஸ் பிரதிநிதிகளால் காலனி நாடுகளில் அநியாயமாகக் கைப்பற்றி, கொள்ளையடிக்கப்பட்டு, திருடப்பட்டு, தன் நாட்டின் அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருள்களாக வைக்கப்பட்டிருக்கும், பொருள்களை - குறிப்பாகத் தன்னிடமுள்ள மனித எச்சங்களைத் - தொடர்புடைய நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்யும் 2023 ஆம் ஆண்டு பிரெஞ்சுச் சட்டத்தைத் தொடர்ந்து, பிரான்ஸிலும் சாதகமான சட்டச்சூழல்கள் தோன்றியுள்ளன. பாரம்பரிய சடங்குகள் மற்றும் மூதாதையர் வழிபாட்டிற்கான முக்கியத்துவத்தைப் பிரெஞ்சு அரசு உணர்ந்திருப்பதுடன், காலனித்துவ காலங்களில் தமது நாட்டால் அநீதி இழைக்கப்பட்ட மக்களிடம் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மன்னிப்பு கோரியுள்ள பெருந்தன்மையும் வெளிப்பாடாகியுள்ளது.
அந்த வகையில்தான் 19 ஆம் நூற்றாண்டின் கொடூரப்படுகொலையின்போது-1897 ஆம் ஆண்டு பிரெஞ்சு படைகளால் தலை துண்டிக்கப்பட்ட மலகாசி மன்னர் டோராவின் மண்டை ஓடு மற்றும் பிற எச்சங்களுடன், சகலவா இனக்குழுவைச் சேர்ந்த மற்ற இருவரது மண்டை ஓடுகளும், 128 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டொரு நாள்களுக்கு முன் (27 ஆகஸ்ட், 2025), மடகாஸ்கருக்கு திரும்ப வழங்கியுள்ளது பிரான்ஸ். அடையாளமாக, டோராவின் நேரடி வம்சாவளியும், பாரம்பரிய சகலவா மன்னருமான ஜார்ஜஸ் ஹரியா கமாமி, தனது மூதாதையரின் எச்சங்கள் அடங்கிய சிவப்பு பட்டுத்துணி மூடிய பெட்டியை தனிப்பட்ட முறையில் கையில் ஏந்தி எடுத்துச் சென்றார். மண்டை ஓடுகள் ஓரிரு நாள்களில் இந்தியப் பெருங்கடல் தீவு மடகாஸ்கருக்குத் திரும்ப உள்ளன, அங்கு அவை போற்றத்தக்க அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
மடகாஸ்கர் தலைவரது எச்சங்களை ஒப்படைக்கும் நிகழ்வில், மடகாஸ்கர் பிரதிநிதியான கலாசார அமைச்சர் வோலமிராண்டி டோனா மாரா, "தியாக மன்னர் டோரா மற்றும் அவரது தியாகச் சகாக்களது எச்சங்கள் எங்களிடம் இல்லாதது, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக 128 ஆண்டுகளாக எங்கள் தீவின் மக்கள் உள்ளத்தில் ஒரு திறந்த காயமாகவே இருந்து வந்தது," என்றும், இந்த ஒப்படைப்பை "மிகவும் குறிப்பிடத்தக்க சைகை" என்றும் பாராட்டியுள்ளார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் தமது மூதாதையர் எச்சங்களை மீட்டெடுப்பதற்கான தங்கள் கோரிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளன என்றறிகிறோம். 'இரத்தம் தோய்ந்த, துயரமான' பழைய காலனித்துவ ஆண்டுகளின் குற்ற வரலாற்றுச் சுமைகளிலிருந்து கண்ணியமாக பிரான்ஸ் விடுபட முயன்று வருவது வரவேற்கத்தக்கதே.
ஆக. 30, 1897 - அம்பிகி கொடுங்கொலை 128 ஆவது நினைவு நாள் இன்று.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.