

“உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறிகாட்டிய புலவன்” எனப் புரட்சிக்கவிஞர் போற்றிய, எட்டையபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, இந்த பூமிப் பரப்பில், 39 ஆண்டுகளே (11-12-1882 – 11-9-1921) உயிர் வாழ்ந்த கவிச்சூரியன். தன்மீது விடாது படர்ந்து அப்பிக்கொண்டு அகலாது அடர்ந்துகிடந்த வறுமையினூடே, “நமக்குத்தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’’ என வாட்டும் வறுமையிலும் வதங்காதுகம்பீர முழக்கமிட்ட, கவிராஜன். “என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேண்டும்” எனச் செம்மாந்த கடமைப்பொறுப்பறுதி தலையேற்றுக்கொண்ட அவனது படைப்புக்காலம் (1904 முதல் 1921 வரை) பதினேழு ஆண்டுகள் மட்டுமே. இந்த மிகக்குறுகியகாலத்திற்குள் “சுவை புதிது; பொருள் புதிது; வளம் புதிது; சொற்புதிது; சோதிமிக்க நவகவிதை; எந்நாளும் அழியாத மாக்கவிதை’’ என இமையப் பெருமிதங்காட்டித் தமிழ்இலக்கியப் பொன்விடியலானவன், அவன். தமிழின் துறைகள்தோறும்பல்லோர் ஏத்தும் ‘படைப்புப் பலபடைத்து’ கலங்கரை விளக்காய் நின்றொளிர்ந்தவன். குறளாய்க் குறுகிய வாழ்ந்தகால, படைப்புக்கால ஆண்டுகள் பலகடந்து இன்று வரை புகழ்ப் பெருவாழ்வில் நிலைத்திருக்கும்‘ மகா கவிஞன் பாரதி.
‘தேசிய கவி’, ‘பாட்டுக்கொரு புலவன்’, ‘ புதுமைக் கவிஞன்’ என்றெல்லாம் அவனுக்குப் பலபடப் பட்டமளித்து நின்றுகொண்டோமேயன்றி - அந்தக் மா கவிஞனைப்பற்றி இன்றுவரை முழுமையாக ஆராய்ந்து அறிந்துளோமா நாம்?
எந்தவொரு வரலாற்று நூலுக்கும் தேவையான - நிகழ்வுகளின் ஆண்டு, நாள், இடம்; நிகழ்வுகளில் உடனிருந்தோர் விவரங்கள்; அவற்றுக்கான ஆதாரங்கள் போன்றவற்றை அளிக்காத - ஒரு கதைபோல, பாரதியார் வாழ்க்கையை, அதுவும் ‘முடிந்த கதையல்ல’ என அறிவித்து - வ.ரா வழங்கியது‘ பாரதி வரலாறு(1944). தொடர்புகளற்றுத் துண்டு துண்டான குறிப்புகளுடன், நெல்லை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் (1933), ஆக்கூர் அனந்தாச்சாரி (1936) ஆகியோரது படைப்புகள் நின்றன. ‘சுதேச கீதம்’ (1922) நூலின் ஒருபகுதியாக பாரதியின் பள்ளித் தோழர் நாவலர் சோமசுந்தர பாரதியார்; எழுதிய ‘சரித்திரச் சுருக்கம்’, அதேநூலின் மற்றொரு பகுதியாக சர்க்கரைச் செட்டியார் எழுதிய ‘சுப்பிரமணிய பாரதியின் அரசியல் வாழ்க்கை‘ ஆங்கிலக்கட்டுரை; தனது ‘பாரதி தமிழ்’ நூலின் ஒரு கட்டுரையாக - (பாரதியார் வாழ்க்கை வரலாறு) பெ.தூரன் (1983) என்பவற்றுடன், சிதறிய சில்லறை நினைவுக் குறிப்புகளாக யதுகிரி அம்மாள் (2002) ஆகியோர் பாரதி வாழ்வின் சில செய்திகளை வழங்கினர்.
இவற்றுடன், வெவ்வேறு காலங்களில், தமக்குள் செய்திகள் அளிப்பதில் மாறுபாடுகள் உள்ளதே என்பதுணராது, பிறர் எழுதத் தாம் சொல்லும்போது, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தங்களுக்கு நினைவிற்கு வந்த - துணுக்குகள் போன்ற செய்திகளோடு - பாரதியின் மனைவி செல்லம்மாள், (பாரதியார் சரித்திரம்) மகள்கள் தங்கம்மா (பாரதியும் கவிதையும், 1947, அமரன் கதை), சகுந்தலா (என் தந்தை பாரதி) ஆகியோர், சிறு சிறு ஒளிக்கீற்றுகளாகப் பாரதிச் சூரியனின் வரலாறு குறித்த வண்ணங்களை வழங்க முற்பட்டனர்.
இந்நூல்களில் எதுவும், எல்லாமும் சேர்ந்தும் பாரதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை நமக்கு அறியத்தரும் வகையில் உள்ளனவா என்றால், ‘இல்லை’. ஆதார ஆவணங்களோடு – மகாகவி பாரதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று இன்றுவரை உருவாகி வெளிவரவில்லை என்பதே மறுத்துச் சொல்ல முடியாத வேதனையும் உண்மையுமாகும். இதனைப் பல அறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும், பாரதிநேயர்களும் இன்றுவரை வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். தொடர்கிறது இக்குறை.
ஆகவே, இன்றுவரை அறியாத பாரதியே - நம்மால் இன்னும் முழுதாக அறியப்படாத பாரதியே - நமக்குப் பரிச்சயமாகி நிற்கிறான் என்பது முரண்தான். அவன் பிறந்து 143 ஆண்டுகளாகியும் அவலமாக நிலவுகிற நிதர்சனம் இதுதான்.
முதலில், எந்தப் புகழ்ப்பெயரால் எட்டையபுரத்துச் சுப்பிரமணியன் தன் இளமைக்காலந்தொட்டு உலகெலாம் அறியப்பட்டு வருகிறானோ அந்தப் புகழ்ப்பட்டம் - ‘பாரதி’ என்ற பட்டம் - எப்போது, யாரால், எவ்வகையில் வழங்கப்பட்டது என்பது குறித்து விவரங்கள் எவ்வகையிலும் முழுமையில்லாமல், ஆளாளுக்கு ஆதாரங்களேதுமின்றிச் சொல்லப்பட்டுள்ள செய்திகளாக உள்ளனவேதவிரத் தெளிவாக இன்றுவரை நிறுவப்படவில்லையே.
‘பாரதி’யை அறிந்துளோமா நாம்?
“பாரில் அதிசயம் பாரதி“ என வியந்தேத்திய சுத்தானந்தபாரதி,“பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்ல ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதியைவிடத் தகுதியானவர்கள் இருக்க முடியாது” என்று மதிப்பிட்டிருந்தாலும் - ‘படிப்பறிவு மிகக் குறைவாகப் பெற்றிருந்த ஓர் எளிய கிராமத்து பெண் ”– தன் ஏழு வயதில், பதினாலு வயதுப் பாரதிக்கு மனைவியாகி - 25 ஆண்டுகள் “அவன் காரியம் யாவினும் கைகொடுத்து” - வாழ்ந்த செல்லம்மாளுக்குப்பாரதி இறந்தபின்னரும்கூட, தன் கணவன் சுப்பிரமணியன் எப்போது பாரதியானான் என்ற விசயத்தில், “பால்யத்திலேயே “பாரதிப் பட்டம்” எதிர்பாராமலேயே அவருக்குக் கிடைத்தது” என்பதற்குமேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை, பாவம். (பாரதியார் சரித்திரம்,1928)
பாரதியின் இளைய சகோதரர், பி.ஏ., எல்.டி., பட்டங்கள் பெற்று உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்த சி விஸ்வநாதன்‘ எழுதிய, ‘பாரதி அண்ட் வொர்க்ஸ்’ (1929) என்ற மெலிந்த ஆங்கிலநூலில், “ஒரு முறை 13 வயது பள்ளி சிறுவனாக அவர் இருந்த போது பாரதி ஓர் இள வயது அதிமேதை என்பதைக் கேள்விப்பட்ட தமிழ்ப் பண்டிதர் ஒருவர் அறைகூவல் ஒன்றை அவருக்கு விடுத்தார். சவால் இதுதான்: வாழை, கமுகு இரண்டையும் சிலேடையாக இணைத்து வர்ணிக்கும் செய்யுள் ஒன்றை பாரதி இயற்ற வேண்டும். பாரதிக்கோ இது மிக மிக எளிது! மின்வெட்டு போன்று திகைப்பூட்டும் வேகத்தில் பாரதி கவிதை அடிகளைப் பொழிந்தார். பண்டிதர் சிறுவனைக் கட்டித்தழுவி “பாரதி” எனும் பட்டம் உனக்கு நிச்சயமாக பொருந்துவது தான் என்று உணர்ச்சி மீதூர ஆர்த்துரைத்தார்’’ என்று எழுதிவிட்டுத் தொடர்கிறார்.
“இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரைப் போற்றியவர்களும் ஊர்வாசிகள் சிலரும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர் அதில் “பாரதி” எனுமிப்பட்டத்தைப் பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு அவர்கள் வழங்கினர்” என்று மொட்டையாக,முழுமையான விவரங்கள் தராது எழுதிச்சென்றுள்ளார்.
மேற்கண்டவாறு கூறியிருக்கும் பாரதியின் தம்பிவிஸ்வநாதன், செல்லம்மாளைப்போலக் கல்வியறிவு குறைந்தவரல்ல; பட்டம் பெற்ற ஆசிரியர்! தனது சொந்த மண்ணில், தன் சகோதரனுக்கு ஒரு சிறப்பான நிகழ்வில், வாழ்நாளெல்லாம் சிறப்பளித்து- வாழ்ந்த பின்னரும் விளங்கிக்கொண்டிருக்கும் - “பாரதி பட்டம்” எந்த ஆண்டு, எந்த நாளில், யார், யார் முன்னிலையில் நடந்தது என்பது பற்றிக் குறிப்பிட்டு எதுவும் விளக்கிச் சொல்லாமல், யாருக்கோ, எப்போதோ ஏதோ பூர்வகாலத்திற்கு முன்னரே நிகழ்ந்ததுபோல, பாரதியின் 13 வயதுக்குச் “சில ஆண்டுகளுக்கு முன்னர்” என்றும், பொத்தாம் பொதுவாக “அவரைப் போற்றியவர்களும் ஊர்வாசிகள் சிலரும்” என்றும் பட்டும்படாமல், பாரதி பட்டம் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்டிருப்பது கலையா வேதனையல்லவா?.
விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ள இந்தப் பண்டிதர் நிகழ்ச்சியை மகாகவி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த, அவரது குடும்பத்துடன் தொடர்பிலிருந்த ‘சுப்ரமண்ய பாரதி சரிதம்’ (1936) எழுதிய ஆக்கூர் அனந்தாச்சாரியும் தனது நூலில் (1936) பதிவு செய்துள்ளார். அதில் அவர், அப்பண்டிதர் ‘பாரதியின் தமிழ்ப் பண்டிதர்’ என்றும், நிகழ்வு, பாரதி “ பள்ளிச் சிறுவனாயிருந்தபோது“ என்றும் குறிப்பிட்டு, பாரதி உடனே கவிசெய்து காட்டியதால் “மிகவும் சந்தோஷமடைந்து, உன்னைப் பாரதி என்று அழைக்காமல் என்னென்றழைப்பது! அதற்கு வேண்டிய சகல அம்சங்களும் உன்னிடம் சம்பூர்ணமாக இருக்கின்றன” என வாழ்த்தியதாக எழுதியுள்ளார்.
ஆனால், இதே ஆக்கூர் அனந்தாச்சாரியார் அந்நூலின் பிறிதொரு இடத்தில், பாரதி “ஏழு வயதில் கவிகளை வெகு விரைவாக யாதொரு கஷ்டமும் இன்றி இயற்றுவதைக் கண்டு தமிழ் வித்வான்கள் பெரிதும் ஆச்சரியமடைந்து ஆசி கூறினர். ஒன்பதாவது பிராயத்தில் தாமே கவி தொடுக்கவும் ஆரம்பித்தார். பெரிய புலவர் கூட்டம் இதைக் கண்டு பிரமித்தது. இவர் தமது 11 வது ஆண்டில், புலவர்கள் கூடிய பெரும் சபையினர் கொடுத்த அடிகளைக் கொண்டு கவிகளை அர்த்த புஷ்டியுள்ளனவாய் அழகுபெறப் பூர்த்தி செய்தார். படிப்பினால் மட்டும் ஒருவனுக்கு கவித்திறமை ஏற்படாது, பிறப்பிலேயே அது அமைந்திருக்க வேண்டும் என்று புலவர்கள் அறிந்து வழுவற்ற இவரது கவிகளைக் கண்டு பாரதியார் என்ற பட்டப் பெயரும் சூட்டி அழைக்க ஆரம்பித்தனர்” என்று எழுதியுள்ளார். என்ன குழப்பம் இது ?
பாரதியின் தம்பி, பள்ளி ஆசிரியரான விஸ்வநாதனோ, அந்தத் தமிழ்ப்பண்டிதர் யாரென்பதைக்கூடக் குறிப்பிடக் காணோம். மேலும், அனந்தாச்சாரியும் தாம் குறிப்பிடும் “புலவர்கள் கூடிய பெருஞ்சபையினர்” (யார், யார், எங்கு, எந்த நாளில் நிகழ்ந்தது?என்பன குறித்த எவ்விவரங்களும் தரவில்லையே. ‘பாரதி’யை அறிய உதவவில்லையே.
தொடர்ந்து பல்லாண்டுகளாக அரிதின் முயன்று, ‘கால வரிசையில் பாரதி படைப்புகள்’ என்ற பெருந்தொகுப்பைத் தமிழுலகிற்குக் கொடையளித்திருக்கும், மூத்த பாரதி ஆய்வாளர், சீனி.விசுவநாதன், பாரதிக்கு அப்பட்டம் கிடைத்தது பற்றி மாறுபட்ட புதுச்செய்தி தருகிறார். “1893ஆம் ஆண்டு சிறுவன் சுப்பிரமணியன் பதினோராவது வயதில் காலடி எடுத்து வைத்தான். அது போது குருகுஹதாஸப்பிள்ளை அவர்களால், சிவஞானயோகியாருக்குச் சுப்ரமணியன் அறிமுகப்படுத்தப்பட்டார். சின்னஞ்சிறு வயதிலேயே கவி பாடும் ஆற்றல் கைவரப்பெற்ற சுப்பிரமணியனின் திறமையை கண்டு யோகியார் மகிழ்ந்தார். சிறுவன் சுப்பிரமணியனின் கவிப்பெருக்கைப் பெரிதும் மகிழ்ந்து பாராட்டி சிவஞான யோகியார் சுவாமிகள் சிறுவனின் நாவில் கலைமகள் நடம் புரிவதைக் குறிப்பிட வேண்டி பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். யோகியார் சுவாமிகள் அளித்த பட்டமே சுப்பிரமணியன் பெயருக்கு அன்று முதல் மகுடமாக நிலைத்து விட்டது. அற்றை நாள் தொட்டுச் சுப்பிரமணியனை பாரதி என்றே பலரும் அழைக்கலாயினர்.” [கால வரிசையில் பாரதி படைப்புகள், (மகாகவி பாரதி வரலாறு), தொகுதி -1, மூன்றாம் பதிப்பு 2019, பக்.70].
சுப்பிரமணியனாக இருந்த சிறுவனுக்கு இளமையிலேயே பாரதி பட்டம் கிடைத்தது குறித்து அவனது குடும்பஉறவுகளோ, அவனோடும் அவன் குடும்பத்தாருடன் பழகியவர்களோ, வகுப்புத் தோழரோ, சமகாலத்தவர்களோ சொல்லாத புதுச்செய்தி தரும் பிற்காலத்துப்பாரதி ஆய்வாளர் சீனி விசுவநாதன், 1882இல் பிறந்த சுப்பிரமணியனுக்கு 1893ஆம் ஆண்டில் 11 வயது என்று சொல்லியிருப்பது தவிர, சிவஞானயோகியார், சுப்பிரமணியனுக்குப் “பாரதி பட்டம்” வழங்கியத்திற்கான ஆதாரமோ, ஆவணமோ, பாரதி கவிதைகளில் உட்குறிப்போ, வேறெங்காவாவது கிடைக்கப்பெற்ற குறிப்புகளோ, மேற்கோள்களோ எதுவுமே தனது கூற்றுக்குத் துணைநிற்க, வளப்படுத்த உடனெடுத்துவந்து வழங்கவில்லையே!
சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்குச் சற்று குறைந்த கால அளவிற்குள்ளேவாழ்ந்த ஒரு மகாகவிஞனுக்கு, அவனது பெயர் மகுடமாக விளங்கும் பாரதிப் பட்டம் எப்படி, எக்காலத்தில், யாரால் வழங்கப்பட்டது என்ற அடிப்படையான விசயத்திலேயே இத்துனை மாறுபட்ட, ஆதாரங்களற்ற,குழப்பந்தரும் கூற்றுக்களா?
குழப்பம் தவிர்க்கும் மாற்றாகச் ‘சுப்பிரமணிய பாரதி’ என்பதே எட்டையபுரம் சின்னசாமி ஐயர் தன் மகனுக்கு இட்ட பெயர் என்று ஒருமனதாகச் சொல்லிவிட்டாலென்ன என எண்ணத் துணியச்செய்யும் விரக்தியுடன், பாரதியை முழுதாக அறிந்துளோமா நாம் என்ற வினாவும் கூட்டணி சேர்கிறதே.
செல்லம்மா, கண்ணம்மாவானது!
பாரதி குறித்த நூல்களில் மிகப்பெரும்பான்மையானவை பாரதியின் மறைவுக்குப்பின் (1921), திடீரெனக் கிளம்பிய பாரதி ஆர்வத்தில் வெளிச்சம் காண விரைந்து வந்தவையே. பாரதி விமர்சகர்களில் குறிப்பிடத் தக்கவர்களில் ஒருவராகிய தொ.மு.சி. ரகுநாதன், “பாரதி வரலாற்று ஆசிரியர்களும் பாரதி பற்றிய நூலாசிரியர்களும் கட்டுரையாளர்களும் மற்றும் பிறரும் காணத் தவறிவிட்ட அல்லது கண்ணை மூடிக்கொண்டுவிட்ட, சொல்லப்போனால் பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திரிக்கப்பட்ட திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வு” குறித்து தான் நொந்து நிற்பதைக் காட்டுகிறார். (பாரதி காலமும் கருத்தும், 1982). அவரது கவலை அற்றைநாள் முதலே ‘பாரதி’ குறித்துத் தொடர்ந்து நிலவிவரும் நிலவரத்தின் பிரதிபலிப்பே.
இத்தகு கருஞ்சூழல் கலையாத நிலையில், அறிந்துளோமா பாரதியை நாம் முழுதாக என்ற கேள்வியின் அர்த்தம் அடர்த்தியாகிறதல்லவா?. அறிந்துளோமா பாரதியை நாம்? என்று விகசிக்கும் வினாவுக்கான காரணிகளில், ‘பாரதி பட்டம்’ ஓர் ஆரம்பக்கூறுதான்.
பாரதி படைப்புகள் குறித்த சில உண்மைகளும் இவ்வாறு திரிக்கப்பட்டே நமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறதோ எனும் ஐயங்கள் விளைய வாய்பளிக்கும் ஒரு நாற்றங்காலாக – ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்றவகையில் - கவிதாபாரதியின் காதல்பாடல்களில் அவரது மனைவி செல்லம்மாவின் பெயர் ஏனோ நீக்கப்பட்டு, ‘கண்ணம்மா’ நுழைக்கப்பட்டு, நிலைத்துள்ளதே. அறிவோமா?
பாரதியின் மறைவுக்குப்பின் அவரது படைப்புகள் எழுத்துப் பிரதிகளாய் இருந்தபோதே செல்லம்மாளிடமிருந்து, அவரது மூத்த சகோதரர் அப்பாத்துரை ஐயர், பிறகு அவர் மூலம் பாரதியாரின் சகோதரர் சி. விஸ்வநாதன், பின்னர் அவரிடமிருந்து ‘தமிழறியார், தகுதியற்றார்’ எனப் பலர் கரங்களிற் சிக்கிச் சின்னாபின்னமான சோகமெல்லாம் சொல்லிமாளாது. (மேலதிகக் கவலைகளறியக் காண்க: கட்டுரையாளரின், முகப்பு, ‘பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்’, 2021’).
அறிந்துளோமா பாரதியை நாம் முழுதாக இன்றுவரை? கிளர்ந்தெழும் இவ் வினாவிற்கான மற்றொரு காரணம் பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் பல கைகள் மாறியதால் ஏற்பட்ட வினை.
ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டாகப் பாரதியின் இருமகள்களுமே (தங்கம்மாள், சகுந்தலா) கவலை தெரிவித்திருக்கும் விசயம் ஒன்றுள்ளது. அதற்கு ஆவணச் சான்று தற்போதுகிடைத்துள்ளது.
இருவருமே தங்கள் தாய்மாமன் (தங்கள் தாயாரின் மூத்த சகோதரர்) அப்பாத்துரை ஐயர், பாரதியின் செல்லம்மா பாடல்களில்– குறிப்பாக, ‘நின்னையே ரதியென்று...’எனத் தொடங்கும் பாடலில் – ‘செல்லம்மா’ எனப் பாரதி தன் கையால் எழுதியிருப்பதைத்தன்னிச்சையாக அடித்துவிட்டுக் ‘கண்ணம்மா’ என அடாவடித்திருத்தம் செய்து விட்டார்.இதன்மூலம் தங்கள் தாயார் பெயர், மகாகவியான தங்கள் தந்தையாரின் கவிதைகளில் சாசுவதம் பெறுவதை அறியாத, அற்ப காரணங்களுக்காகத் தடுத்து விட்டார். மேலும் தங்கள் தந்தை ( பாரதி), அவரது மனைவிமேல் கொண்டிருந்த மாளாக்காதலை மக்களறியாமற் செய்தும் விட்டார் என்று சோகம்பாடியுள்ளார்கள். (‘பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்’, 2021’ பக்.12-14).
பாரதி தன் மனைவி செல்லம்மாள்மீது மாறா வளரன்பு கொண்டிருந்தவர் என அவரது மகள்கள் - தங்கம்மாள் சகுந்தலா– ஆகியோர் கூறும் கூற்றுக்கு ஒரு ருசிகரமானபுறச் சான்று (External evidence) பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடம் இருந்தும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாவேந்தரின் “பட்டினி நோன்பு” என்ற ஒரு கட்டுரையில், இவ்விசயம் பற்றிய செய்தியுள்ளது.
“எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் உணவை சுவைத்துச் சாப்பிடவும், நாளடைவில் வெறுப்பை உண்டாக்காமல் இருக்கவும் வேண்டி, ஒரு நாள் பட்டினியாக இருக்கப் போவதாக” பாரதியார் தன் மனைவியிடம் கூறினாராம். அக்கட்டுரையில் பாவேந்தர் மேலும் கூறியிருப்பது: ‘‘உங்கள் உடம்பிற்கு பட்டினி ஒத்துக் கொள்ளும் என்று தோன்றினால் சரி’’ என்று செல்லமா, பதில் சொன்னாராம்.. உடனே பாரதி, “காந்தி பல நாள் பட்டினி இருக்கிறார். ஒரு நாளாவது செத்ததுண்டா, செல்லம்மா? நான் ஒரே ஒரு நாள் பட்டினி இருந்தால் செத்துப் போக மாட்டேன். இன்றைக்கு நான் பட்டினி இருந்தால் நாளைக்கு எனக்கு கீரைத்தண்டு குழம்பும் மேற்படி கீரை கடைசலும் அமிர்தம்” என்று பதில் தந்தாராம். அதற்கு, செல்லம்மா, “அப்படியானால் நானும் பட்டினி இருந்து விடுகிறேன். அதற்கு காரணம் இரண்டு. ஒருநாள் செலவு மிச்சம் ஒரு நாள் சமையல் வேலை மிச்சம்” என்று எதிர்பாராத வகையில் பதில் அளித்தாராம்.
உடனிருந்த பாவேந்தர் பாரதிதாசன் அந்தச் சமயத்தில் குறுக்கிட்டு“இவ்வளவு தொல்லை ஏன்? நாள்தோறும் உண்டாலும் வெறுப்பு தராத கறிவகையைக் கண்டுபிடித்து விட்டால்...” என்றாராம். அதற்குப் பாரதி, “நாள்தோறும் உண்டாலும் தெவிட்டாத கறிவகை கிடையவே ‘கிடையாது. உண்ண உண்ணத் தெவிட்டாதது, ஞானிகட்கு – பெரியோர்கட்கு – துறவிகட்கு – கடவுள் நினைவுதான் என்பார்கள். ஆனால், எனக்குத் தெவிட்டாத ஒருத்தி செல்லம்மாள் தான்” என்று பாரதியிடம் இருந்து பதில் வந்ததாம்.
அக்காட்சியை மேலும் விவரிக்கும் பாவேந்தர் சொல்கிறார்:“அம்மா (நாணத்துடன்) விரைந்து சென்று விட்டார்கள்”. பாரதி, மாடிப்படியேறிக்கொண்டிருந்த தன் காதல் மனைவியை நோக்கி, “செல்லம்மா பட்டினித்திருநாள் எப்படி?” என்று வினா வீசினாராம். “கொடி கட்டியாயிற்று” என்று அம்மா மாடிப்படியில் இருந்து பதில் கூறினார்கள்’’ என்று இந்த நயமான காட்சியை - பாரதி தன் மனைவிமேல் கொண்டிருந்த மாளாப்பிரியத்தை - நிகழ்வில் உடனிருந்த பாவேந்தரே ஆவணப்படுத்தியுள்ளார். [இந்தச் செய்தியை, சீனி விசுவநாதன் தொகுத்தளித்துள்ள தமிழகம் தந்த மகாகவி என்ற நூலிலும் காணலாம். மேலும் “வறுமையிற் செம்மை பாரதி’ என்ற கட்டுரையில், (மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் 1982) மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய சி என் கிருஷ்ணபாரதியும், குறிப்பிட்டுள்ளார்.]
தொ.மு.சி. ரகுநாதன் (1982) கவலை தெரிவித்துள்ளபடி - பாரதியின் உண்மையான மன நிலையை உலகறியவிடாமல் - பாரதியின் படைப்புகள் ‘திரிக்கப்பட்டு, திரையிட்டு மூடப்பட்டதாக’ கிடைத்திருக்கும் சூழலில் அறிந்துளோமா பாரதியை முழுதாக நாம், இன்றுவரை?
இதோ, பாரதியேயறியாமல் அவனது ‘செல்லம்மாபாட்டு’ திரிக்கப்பட்டுள்ளதற்கான ஓர் எடுத்துக்காட்டாக ஆவணச்சான்று. (நன்றி: தமிழ் இணைய நூலகம்).
கூர்ந்த பார்வையில், இந்த ஆவணத்தில், பாடலின் தலைப்பு, செல்லம்மா பாட்டு என்றிருக்கப் பாடலில் மட்டும் ‘செல்லம்மா’ எனவருகிற மூன்று இடங்களில் அப்பெயர் அடிக்கப்பட்டு வேறுவண்ணமையில், பாரதியின் கையெழுத்துக்கு மாறுபட்ட கையெழுத்தில் ‘கண்ணம்மா’ என மாற்றப்பட்டுள்ளதைக் காணமுடியும்.
கவிஞனின் காதல் மனங்காட்டிக் காற்றெல்லாம், காலமெல்லாம் செல்லம்மா எனப் பெயர் பரவி இனிப்பதற்குப் பதிலாகக் கண்ணம்மா அன்றோ காதுகளில் நிறைந்துளாள் இன்று?எப்பேற்பட்ட மாற்றம் இது?
ஆக, காதல் கசிய ‘’நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி செல்லம்மா” எனப் பாட்டெழுதிய பாரதியே அறியாத,
’நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா” எனப் பாட வைக்கப்பட்டுள்ள பாரதியே நமக்கு இன்றுவரை பரிச்சயம்.
என்ன கொடுமை இது?
இன்னுமுள மேலும், இதுபோல்.
எடுத்து நிறுத்தலாம் அணியணியாக வருங்காலத்தே.
இனியாவது அறிய முற்படுவோமா நன்றாக, முழுமையாக, அவனை, பாரதியை?.
*
[வேண்டுதல் இணைந்த பின்குறிப்பு இது: பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டில் (1982) அப்போதைய முதல்வர் மாண்புமிகு திரு எம். ஜி. ராமச்சந்திரன், மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் தயாரித்து வெளியிடும் பணியை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், பாரதியாரின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து ஆய்வுப் பதிப்பாக வெளியிடும் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும், மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை, நன்கு ஆராய்ந்து, ஆதாரங்களுடன் ஒரு முழுமையான வரலாற்று நூல் கொண்டு வரும் பணியைச் சென்னை பல்கலைக்கழகத்திற்கும் வழங்கினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகமும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் தமக்கிட்ட பாரதி நூற்றாண்டு விழாப் பணிகளை நிறைவு செய்து விட்டன.
ஆனால், சென்னை பல்கலைக்கழகம் மட்டும் பாரதியின் முழுமையான வரலாற்றை ஆய்வு செய்து தக்கதொரு நூலாக வெளிக்கொணரும் பணியைக் கடலிற் போட்டுவிட்டதுபோலும்.
1982க்குப் பிறகு யாருமே இதனை கண்டு கொண்டு இதுவரை உரிய தீர்வுக்கு வழிசெய்யவில்லையே. வழிவகை செய்ய தமிழ்நாடு அரசுக்கும், சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் வேண்டுகோள். வரலாறு - பாரதி வரலாறு - முக்கியம் அல்லவா? ]
**
[டிச. 11 - பாரதியார் பிறந்த நாள்]
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.