

மனிதனால் உருவாக்கப்பட்டு, இன்று மனித குலத்துக்கே சவாலாக மாறி வரும் செய்யறிவு தளங்கள், இந்த 2025 ஆம் ஆண்டில் உச்சம்தொட்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் செய்யறிவு இயங்குதளங்களாக, டூல்களாக அதிக பயன்பாட்டுக்கு வந்தது எப்போது என கூகுளில் சென்று கேட்டால் அது 2025 என்று அடித்துச் சொல்லிவிடும்.
செய்யறிவில் இயங்கும் காமெட், சாட் ஜிபிடி, மிட்ஜர்னி, கிராமர்லி என ஏராளமானவை அறிமுகமாகி, பல வேலைகளை எளிதாக்கியதோடு, லட்சக்கணக்கான வேலைகளைக் காலியும் செய்திருக்கிறது.
எப்படியாகினும், வேலைகளை எளிதாக்குவதற்காக என்றே ஏஐ டூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சாதாரண மனிதர்களுக்கும் பயனுள்ள சில செய்யறிவு தொழில்நுட்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
காமெட் ஏஐ (Comet AI)
இந்தியருக்குச் சொந்தமான பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது காமெட் ஏஐ. செய்யறிவு தொழில்நுட்பச் சந்தையில் கோலோச்சிவரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனர் ஓர் இந்தியர், அரவிந்த் ஸ்ரீனிவாஸ். இவர் சென்னையில் பிறந்தவர். இந்த நிறுவனம், செய்யறிவுடன் இணைந்த காமெட் பிரவுசரை அறிமுகம் செய்திருக்கிறது.
ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் குரோம், ஃபயர்பாக்ஸ் போன்றவற்றுக்கு மாற்றாக இல்லாமல் அதைவிட பல வழிகளில் மேம்பட்ட பிரவுசராக இருப்பதோடு, இங்கு எதையும் தேடும் வகையில் ஒர்க்ஸ்பேஸ் அமைப்பு இடம்பெற்றுள்ளது. காமட்டின் சிறப்பே காமட் அசிஸ்டெண்ட். இதில் பயனர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது. எந்த வகையில் வேண்டுமோ அவ்வாறு.
பயனரின் பயன்பாட்டுக்கு ஏற்ப, டேப்களை தானாக மூடுவது, அடுத்தநாள் பணியைத் தொடங்கும்போது, முந்தைய பணிகளை நினைவூட்டுவது வரை மனிதர்களின் வேலையை பாதியாகக் குறைக்கிறது.
கேள்விகளைக் கேட்டுத் தகவல்களைப் பெறலாம், ஒரு இணையதளத்தை உருவாக்கித் தரச் சொல்லலாம், மின்னஞ்சல்களை நிர்வகிக்கலாம், அடுத்து வரும் தேர்வுக்குத் தயாராக, பாடங்களை அளித்து படிப்பதற்கான அட்டவணையை தயாரிக்குமாறு கோரலாம், ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று சொன்னால் போதும், அனைத்து இணையதளங்களிலும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டிய பொருள் எங்கே, எவ்வளவு விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதை தெரிவித்துவிடும். இப்படி ஒரே உலாவி, தனியாக செய்யறிவு டூல்களை நாட விடாமல் வளைத்துப் போட்டிருக்கிறது பயனர்களை.
இது பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கிறது. சில சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.
தரவு பகுப்பாய்வுக்கு ஜூலியஸ் ஏஐ (Julius)
தரவுகளை பகுப்பாய்வு செய்வதில் மிகச் சிறந்த செய்யறிவாக ஜூலியஸ் ஏஐ செயல்படுகிறது. ஒரு பயனர், எக்செல் அல்லது கோப்புகளாக இதில் பதிவேற்றும் தரவுகளை ஒன்றிணைக்கவும், சிறந்த இலக்கணத்துடன் அல்லாமல், சாதாரண ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெறவும் உதவுகிறது.
அது மட்டுமல்லாமல், கொடுத்த தரவுகளின் அடிப்படையில், ஒரு பயனருக்கு புள்ளிவிவரங்களாகவோ, அட்டவணைகளாகவோ, விளக்கப்படங்களாகவோ தேவையெனில் அதற்கும் தயாராக உள்ளது. பைத்தான் கோப்பை இணைத்தும் அதிலிருக்கும் தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது இலவசமாகவும், சில பிரிவுகளின் கீழ் கட்டணமாகவும் கிடைக்கிறது.
ஹேப்பென்ஸ்டன்ஸ் (Happenstance)
ஹேப்பென்ஸ்டன்ஸ் என்பது செய்யறிவால் இயங்கும் மனிதர்களைத் தேடிக் கண்டடைவதற்கான தளம். செய்யறிவுடன் இயங்குவதால், அண்மைக் காலமாக தொழில் முனைவோர்களிடையே அதிக பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது ஹேப்பென்ஸ்டன்ஸ். மற்ற சமூக வலைத்தளங்களைப் போல் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் நபர்களை தேடுவதற்கு அல்லது தன்னுடைய நிறுவனத்துக்கு ஆள்களை பணியமர்த்த, குறிப்பிட்ட சேவைக்காக பணம் திரட்ட, பல்வேறு தரப்பட்ட மக்களை ஒன்றிணைக்க என உயர்ந்த குறிக்கோள்களை எளிதாக அடைவதற்கான தளமாக உள்ளது.
இந்த சமூக வலைத்தளம், ஜிமெயில், லிங்ட்இன், எக்ஸ் உள்ளிட்ட வலைத்தளங்களை ஒன்றிணைத்து தேடுதல் பணியை மேற்கொள்வதால் இதன் சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளதாக பயனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் குறிப்பிட்டத் துறை பொறியாளர்கள், ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள், குறிப்பிட்ட துறையில் பட்டம் பயில்பவர்கள் என தங்களது எளிமையான ஆங்கிலத்தில் யார் ஒருவரும் தேவையான நபர்களை மிக எளிதாக தேடிக் கண்டடைய உதவுகிறது.
இதனைப் பயன்படுத்த கட்டணம் ஏதுமில்லை. சில ப்ரீமியம் வசதிகள் கட்டணத்துடன் கிடைக்கின்றன.
கிரானோலா நோட்பேட் (Granola Notepad)
அடுத்தடுத்து அலுவலக மீட்டிங் மற்றும் குழு ஆலோசனை போன்றவற்றில் பல மணி நேலம் செலவிடுபவர்களுக்காகவே வந்திருப்பதுதான் கிரானோலா ஏஐ நோட்பேட்.
இதுவரை நோட்பேட் என்றால் எழுதியதை பத்திரமாக வைத்துக் கொள்ளும். அவ்வளவுதான். சில ஆப்பிள் நோட்பேட்கள் சிறப்பம்சங்கள் கொண்டதாகவே இருக்கும். ஆனால், கிரானோலா எனப்படும் செய்யறிவில் இயங்கும் நோட்பேட் பல முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
அலுவலக சந்திப்புகளில் பேசப்படும் விவரங்களின் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் பதிவிட்டால் போதும், அல்லது மீட்டிங்கில் பேசப்படுவதை குரல் பதிவு செய்து பதிவேற்றினால் போதும், அதை அப்படியே எழுத்து வடிவில் மாற்றிக் கொடுத்து விடுகிறது.
அது மட்டுமா, ஒருவர் கணினி மூலம் சந்திப்புகளில் பங்கேற்கும்போதும், கிரானோலா நோட்பேட், ஆடியோவை நேரடியாகப் பதிவு செய்து எழுத்து வடிவில் மாற்றிக் கொடுத்துவிடும். அதற்காக எந்த செயலியோ கூடுதல் வசதியோ தேவையேயில்லை.
மேலும், சந்திப்பின் வகைக்கு ஏற்ப, குறிப்புகள் எடுக்கும் விதம் மாறுபடுகிறது. அலுவலகக் கூட்டங்களில் பங்கேற்கும்போது, உங்கள் கருத்துகளையும் கூட எளிதாக பரிமாறலாம். அண்மைக் காலமாக தொழில் நிமித்தமாக ஒரு நாளில் அதிக அலுவலக சந்திப்புகளில் பங்கேற்போரின் உற்றத் தோழனாக மாறிவருகிறது என்கிறார்கள்.
சாட்ஜிபிடி (ChatGPT)
சாட்ஜிபிடிக்கு அதிக விளக்கங்கள் தேவையில்லை. ஓபன் ஏஐ அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடியை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அது அறிமுகமானது முதலே பலராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. சாதாரண எளிய மொழியில் கேட்கப்படும் கேள்விகளைக்கூட மனிதர்களைப் போல புரிந்துகொண்டு பதிலளிக்கிறது. ஒருவருக்கு தேவையான கட்டுரைகளைக் கூட உருவாக்கிக் கொடுக்கிறது.
மாணவர்களுக்கு அசைன்மென்டுகளை தயாரிக்கிறது. கடந்த ஆண்டு வினாத்தாள்களைக் கொடுத்தால் அடுத்து வரும் தேர்வுக்கான வினாத்தாளைக் கொடுக்கும், ஒரு புகைப்படத்தைக் கொடுத்து தங்களுக்கு எப்படி அதை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் போதும், உடனே வந்துவிடுகிறது அந்த புகைப்படங்கள் கேட்டதுபோலவே.
வில்லோ (Willow)
வேகமாக டைப் செய்ய முடியாது, டைப் செய்ய அதிக நேரம் செலவாகிறது, அதிலும் எழுத்துப் பிழைகளை வேறு சரி செய்ய வேண்டும். இவ்வாறு எண்ணற்ற மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டும் என நேரமின்மையால் சிக்கித் தவிப்பவர்களுக்காகவே உருவானதுதான் வில்லோ ஏஐ. ஒருவர் கணினியில் நீங்கள் சொல்ல சொல்ல டைப் செய்தால் அதுவும் அசுர வேகத்தில் டைப் செய்தால் எப்படி இருக்கும். அதைத்தான் வில்லோ செய்யும். மின்னஞ்சலை திறந்து நீங்கள் டைப் செய்ய வேண்டியதை சொல்லி முடித்தால் அங்கு மின்னஞ்சல் தயாராக இருக்கும். அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்.
மீட்டிங் நடக்கும்போது அதில் பேசப்படும் குறிப்புகளையும் எழுத்து வடிவில் மாற்றிக் கொடுத்துவிடும். மென்பொருள் பொறியாளர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது வில்லோ ஏஐ.
இவையன்றி, மேலும் பல எண்ணற்ற செய்யறிவு டூல்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்த செய்யறிவுகளைக் கொண்டு நமது வேலைகளை எவ்வாறு இன்னும் சிறப்பாக்குவது என்பதைக் கற்று, அதில் ஒரு புரட்சியை படைப்பதே வரும் 2026 ஆம் ஆண்டு மனிதர்களுக்கு முன்னுள்ள சவால். அந்த சவாலை, மற்ற எவரையும்விட இந்தியர்கள் மிக சாதுர்யமாக எதிர்கொண்டு வெல்வார்கள் எனலாம். எனவே, செய்யறிவை வசப்படுத்துவோம். 2026 ஆம் ஆண்டும் வசப்படும்.
About the proliferation of literacy tools to the point of declaring 2025 as the Year of Literacy..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.