

கும்பமேளா என்பதில், கும்பம் என்றால் அனைவரும் ஒன்றுகூடுதல் என்றும், மேளா என்றால் உற்சவம் (திருவிழா) என்றும் சொல்லப்படுகிறது. பல்வேறு தெய்வங்களும், பல்வேறு கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் ஒரே வேளையில் ஒன்றுசேரும் அந்த விசேஷமான அரிய நிகழ்வு 144 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. அவ்வாறு ஒன்றுசேரும் அந்த அரிய நிகழ்வை கும்பமேளா என்று புராண சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கும்பமேளா என்பது எல்லா பகுதிகளிலும் கொண்டாடப்படுவதில்லை, முக்கியமாக சில சிறப்பு வாய்ந்த நதிக்கரைகளில்தான் நடைபெறுகிறது. இதன் சிறப்புகள் பல்லாண்டுகால பெருமை வாய்ந்தவை.
மகா கும்பமேளா இந்தியாவில் நடைபெறும் மிகப் பிரம்மாண்ட விழாக்களில் முதன்மையானதாகும். உலகின் மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவாகவும், அதிகமான மக்கள் கூடும் விழாவாகவும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்து சமய மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு புனித திருவிழாவாகும்.
கங்கை, யமுனை, புராண நதியான சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஒன்றுகூடும் இடத்தில் பக்தர்கள் பல மைல் தூரம் நடந்துசென்று மூழ்கிக் குளிப்பதால் தங்களது முற்பிறவிப் பாவங்கள் தொலைவதாகவும், ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதாகவும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலையாகி முக்தி கிடைப்பதாகவும் காலங்காலமாகப் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது.
அப்பேர்பட்ட அரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா 2025-ல் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரையிலான 45 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பமேளாவில் ஹிந்துத் துறவிகள், சந்நியாசிகள், மடாதிபதிகள், மேனியெல்லாம் திருநீறுடன் காணப்படும் நாக சாதுக்கள், மண்டையோடுகள் கோர்த்த மாலையும், கையில் சூலாயுதம், வாள் ஏந்திய அகோரிகள் என உலகெங்கும் உள்ள மக்கள் மூன்று நதிகளின் சங்கமத்தில் நீராடுவது இதன் தனிச்சிறப்பாகும்.
கும்பமேளா தோன்றிய புராணக் கதை...
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளியேறிய அமுதம் ஒரு கும்பத்தில் சேகரிக்கப்பட்டதாகவும், அதைக் கைப்பற்ற நடந்த போட்டியில் அமுதத்தின் துளிகள் நான்கு இடங்களில் சிந்தியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு சிந்திய துளிகள்தான் பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய நான்கு நகரங்கள். இதன் நினைவாக இந்த நகரங்களில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அடுத்தடுத்துக் கொண்டாடப்படுவதே கும்பமேளாவாகும்.
கும்பமேளாவின் வகைகள்...
கும்பமேளா நான்கு வகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
1. பூர்ண கும்பமேளா (முழு கும்பமேளா)
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் பூர்ண கும்பமேளா, கும்பமேளாக்களிலேயே மிகவும் பிர்மாண்டமாக நடைபெறுவதொன்றாகும். இது 12 ஆண்டு சுழற்சியில் நடத்தப்படுவதால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை ஈர்க்கின்றது.
2. அர்த்த கும்பமேளா (அரை கும்பமேளா)
ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும், பூர்ண கும்பமேளாவின் 12 ஆண்டு சுழற்சியின் நடுவில், பிரயாக்ராஜ் மற்றும் ஹரித்வார் ஆகிய இரண்டு இடங்களில் அர்த்த கும்பமேளா நடத்தப்படுகிறது.
3. மகா கும்பமேளா (பெரும் கும்பமேளா)
ஒவ்வொரு 144 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இது பூர்ண கும்பமேளாவின் 12 ஆண்டு சுழற்சியின் முடிவைக் குறிக்கிறது. பிரயாக்ராஜில் 2025-ல் நடைபெற்ற மகா கும்பமேளா அனைவருக்குமே வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு அரிய நிகழ்வு.
4. மகா மேளா
மற்ற கும்ப மேளாக்களைப் போலல்லாமல், மகா மேளா ஒவ்வொரு ஆண்டும் பிரயாக்ராஜில் நடைபெறுகிறது. இது ஆன்மிக நாள்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தாலும், பூர்ண, மகா கும்ப மேளாக்களுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது.
மகா கும்பமேளா ஏன் சிறப்பு வாய்ந்தது?
நவகிரகங்களில் சில குறிப்பிட்ட சுபக் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஒரே நாளில் ஒரே நேர்க்கோட்டில் இணைந்த நாளிலும், தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகளின்படி 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாலும் இந்த மகா கும்பமேளா வெகு சிறப்பாக அமைந்தது.
பிரயாக்ராஜில் அமைக்கப்பட்ட இடைக்கால நகரம்..
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இதற்காகவே ஓர் இடைக்கால நகரம் உருவாக்கப்பட்டது. கங்கை-யமுனை நதிக்கரையில் 4 ஆயிரம் ஹெக்டேர் (சுமார் 9,888 ஏக்கர்) பரப்பளவில் 25 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. மக்கள் குளிப்பதற்காக 12 படித்துறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்காக மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ. 2,100 கோடியையும், கோடிக்கணக்கான மக்களின் வருகையையொட்டி உத்தரப் பிரதேச அரசு கூடுதலாக ரூ. 7 ஆயிரம் கோடியிலும் கும்பமேளா பணிகளை மேற்கொண்டது.
மகா கும்ப நகரில் ஒரே நேரத்தில் ஒரு கோடி பக்தர்கள் வரை தங்கும் வகையில் 1.6 லட்சம் கூடாரங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகளுடன் கட்டப்பட்டன. திரிவேணி சங்கமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பக்தர்கள் எளிதில் செல்வதற்கு வசதியாக நதிகளின் குறுக்கே 30 மிதக்கும் பாலங்கள், 450 கி.மீ. நீள சாலைகள், தெருக்கள், அங்கு 67,000 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. படித்துறைகளின் நீளம் 12 கி லோ மீட்டராகவும், வாகன நிறுத்துமிடங்களின் பரப்பளவு 1,850 ஹெக்டேராகவும் இருந்தது.
மகா கும்பமேளா நடைபெற்ற ஜனவரி மாதத்தில் பிரயாக்ராஜில் கடும் குளிரும், அடர் பனிமூட்டமும் நிலவியது. இருப்பினும் அவையெல்லாம் ஒருபொருட்டாகக் கருதாமல் கும்பமேளாவில் புனித நீராடுவதுதான் ஒரே குறிக்கோளாகக் கருதி கும்பம் தொடங்கிய முதல் நாளிலேயே திரிவேணி சங்கமத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் புனித நீராடினர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்தும் புனித நீராட மக்கள் குவிந்தனர். புனித நீராடிய பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் ஜெய் ஸ்ரீ ராம், ஹர ஹர மகாதேவ், ஜெய் கங்கா மாதா போன்ற முழக்கங்கள் மகா கும்ப நகரின் அனைத்து திசைகளிலும் எதிரொலித்தன.
சிறப்புக்குரிய ஆறு நாள்கள்..
மகா கும்பமேளா காலகட்டத்தில் அனைத்து நாள்களிலும் நீராடுவது புனிதமானது என்றாலும் குறிப்பிட்ட சில தினங்களில் நீராடுவது முக்கியத்துவம் வாய்ந்த அமிருத ஸ்நானம் எனக் கருதப்படுகிறது. ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மகா கும்பத்தில் 6 நாள்கள் புனித நீராடுவது மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி, பௌஷ பௌர்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 9), மாகி பௌர்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) இந்த ஆறு நாள்களிலும் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி மகிழ்ந்தனர். இந்த ஆறு புனித நாள்களிலும் மௌனி அமாவாசை நாளே மிகவும் மங்களகரமானது. ஏனெனில் இது துறவிகளின் அமாவாசை என்றும், மௌனி அமாவாசை நாளில் பிரபஞ்சம் உருவானது என்றும், அன்றைய தினம் புனித நதிகளின் நீர் அமிர்தமாக மாறும் என்றும் நம்பப்படுகிறது. இந்த நாளில் பாரம்பரியமாகப் பக்தர்கள் மௌன விரதம் கடைப்பிடிக்கின்றனர். உலகளாவிய 120 கோடி ஹிந்துக்களில் 52 சதவீதத்தினர் சங்கமத்தில் புனித நீராடினர். இந்த எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையான 143 கோடியில் 44 சதவீதத்துக்கு மேல் மற்றும் சீனா தவிரப் பிற உலக நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகமாகும்.
புனித நீராடிய பிரபலங்கள்..
மகா கும்பமேளா நடைபெற்ற 45 நாள்களில் ஏறத்தாழ சுமார் 65 கோடி பேர் ஒரே இடத்தில் ஒன்றுகூடி புனித நீராடியுள்ளனர். பொதுமக்களுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் என நாட்டின் மூத்த தலைவர்கள், பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்பியால் வாங்கக் உள்ளிட்ட பல உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் அம்பானி, அதானி, பல்துறை பிரபலங்கள் ஆகியோரும் சங்கமத்தில் புனித நீராடினர்.
பாதுகாப்பு..
முக்கிய பிரமுகர்கள் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையினரும் கும்பமேளா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல்துறை சார்பில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதியுடன் சுமார் 2,700-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொதுமக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். மத்திய, மாநில அமைப்புகளுடன் இணைந்து பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கும்பமேளாவில் வருவாய் ஈட்டிய தொழில்கள்...
உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி வட மாநிலங்களைச் சேர்ந்த பலரும் பூஜைப்பொருள்கள், கங்கை நீர் பாட்டில்கள் விற்பனை, பை, செருப்பு தைத்தல், உணவுக் கடைகள், கைப்பேசி மின்னேற்றி நிலையங்கள் உள்ளிட்ட சிறு வியாபாரங்களின் மூலம் கணிசமான வருவாயை ஈட்டினர். இவர்களில் குறிப்பாக ம.பி.யை சேர்ந்த மோனலிசா போஸ்லே மேளா பகுதியில் குடும்பத்தினருடன் பூ மற்றும் ருத்ராட்ச மாலையை வியாபாரம் செய்தார். இவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு, இவருடன் புகைப்படம் எடுக்கப் பலரும் ஆர்வம் காட்டியதால், சொந்த ஊருக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இருப்பினும் கேரள நகைக்கடைத் திறப்பு, திரைப்பட வாய்ப்பு எனத் தேசிய பிரபலமாக உருவெடுத்தார். அதோடு, பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை விற்பனை செய்தவர்களும், படகு சேவையின் மூலம் பெரும் வருமானம் ஈட்டியவர்களும் பிரபலமடைந்தனர்.
ரூ. 3 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய மாநில அரசு...
மகா கும்பமேளா நிகழ்வால் உத்தரப் பிரதேச அரசு சுமார் ரூ. 3 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது. சங்கமத்தில் புனித நீராடுவதோடு, அயோத்தி ராமர் கோயில், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள பிற ஆன்மிக தலங்களுக்கும் சென்று பக்தர்கள் வழிபட்டனர். இது அந்த நகரிங்களிலும் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியது.
சிறப்புத் தபால் தலைகள்...
மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் 3 சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. இதேபோல், தில்லியில் நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் மகா கும்பமேளாவைக் காட்சிப்படுத்திய உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி முதல் பரிசை வென்றது.
மேளாவில் பிறந்த குழந்தைகள்...
கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்த நிலையில், அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கும்பமேளா தொடர்புடைய பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர்.
பிரதமர் மோடி பெருமிதம்...
சனாதனத்தின் பெருமையான மகா கும்பமேளா வேற்றுமையில் ஒற்றுமை எனும் மகத்தான செய்தியை வழங்குவதாகவும், கலாசாரங்கள் சங்கமிக்கும் இடத்தில் நம்பிக்கை சங்கமிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவரின் பதிவில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகா கும்பத்தின் அரிய நிகழ்வில் 77 நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவுக்கான ஸ்லோவாக் தூதர் ராபர்ட் மாக்சியன் கூறுகையில், மகத்தான ஆன்மிக நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக அரசுக்கு வாழ்த்துகள். அமைதி, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி. நான் இந்தியாவின் ரசிகன். இந்தியாவின் வரலாறு, கலாசாரம், யோகா உள்ளிட்டவற்றை நான் நேசிக்கிறேன். இந்தியா எனது இரண்டாவது வீடு போன்றது என்று அவர் தெரிவித்தார்.
இந்த அரிய நிகழ்வில் முதியோர்களும் கலந்துகொள்ளும் வகையில் கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கும்பமேளா நீட்டிக்கவில்லை. குறித்த நாள்களில் சரியாக நடந்து முடிந்தது.
அடுத்த கும்பமேளா எங்கே? எப்போது?
அடுத்த கும்பமேளா கங்கை நதிக்கரையில் அமைந்த உத்தரகண்டின் ஹரித்வாரிலும், கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்த மகாராஷ்டிரத்தின் நாசிக் நகரிலும் 2027-ஆம் ஆண்டு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா எதிர்பார்க்கப்பட்டதை விட, பல கோடி எண்ணிக்கையிலான பக்தர்களை ஈர்த்தது. பல்வேறு சமூக, கலாசார மற்றும் பல்வேறு மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து சமூக ஒற்றுமையை வலுப்படுத்திய நிகழ்வாக மகா கும்பமேளா அமைந்தது. என்னதான் முறையாகத் திட்டமிட்டாலும், ஒருசில தவறுகள் நிகழ்வதை யாராலும் தவிர்க்க இயலாது. அந்தவகையில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமில்லாமல் மகா கும்பமேளா இனிதே நிறைவடைந்தது. மிகப்பெரிய திட்டமிடுதலுடன் இவ்வளவு பெரிய கூட்டத்தை நிர்வகிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல என்றாலும் முழு பொறுப்பையும் உ.பி. அரசு ஏற்றது. அதோடு 45 நாள்களும் காவல்துறை, மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பும் அளப்பரியது.
கும்பமேளாவின் மூன்று நதிகளின் சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து புனித நீராடி பக்தி எனும் உணர்வால் நிறைந்தனர். பலர் இதை வாழ்நாளில் தனக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதினர். மகா கும்பமேளா நடந்த போது, நாம் இந்த மண்ணில் வாழ்ந்தோம் என்பதே பெரும்பேறு என்கிறார்கள் முன்னோர்கள். அடுத்த மகா கும்பமேளாவைக் காண இன்னமும் 144 வருடங்கள் ஆகும். அதுவரை 2025ஆம் ஆண்டின் மகா கும்பமேளா நினைவுகள் பங்கேற்றவர்களின் மனங்களில் பசுமையாக ஓடிக்கொண்டிருக்கும் கங்கை, யமுனை, சரஸ்வதி போல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.