
மதுரை உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் நடந்து முடிந்துள்ளது திமுகவின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம்-முதல்வர் வந்தார், துணை முதல்வர் பங்கேற்றார், அமைச்சர்கள் பேசினர் என்ற அளவில் சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடியதாக இல்லாமல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக முடிந்துள்ளது.
கட்சியின் எதிர்காலம் இளைஞர்களே என்பதை முதன்மையாக இந்தப் பொதுக்குழு ஆய்ந்து அறிந்துள்ளது. இளைஞர்களின் பார்வை புதிய கட்சிகளின் பக்கம் திரும்பியிருப்பதைத் தடுக்க வேண்டியது கட்சியின் நலனுக்கு அவசர அவசியம் என்பதை திமுக உணர்ந்துள்ளது என்பதை இந்தப் பொதுக் குழு வெளிப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்கள் ஏற்படுத்திவரும் தாக்கம், புதிய கட்சிகளின் வருகை ஆகியவற்றால் திமுக உள்ளிட்ட மூத்த கட்சிகளுக்கான இளைஞர்களின் வருகை கணிசமாகக் குறைகிறது அல்லது சிதறுகிறது என்பதை மறுக்க முடியாது. திமுகவில் உள்ள அனைத்து அணிகளிலும் காலியாக உள்ள பதவிகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்; இளைஞர்களின் வருகையால் மட்டுமே கட்சிக்கு புது ரத்தம் பாயும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.
30 அமைச்சர்கள், 150 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள், 76 மாவட்டச் செயலர்கள், 21 மாநகரச் செயலர்கள், 160 நகரச் செயலர்கள், 490 பேரூர் செயலர்கள், 936 ஒன்றியச் செயலர்கள், 236 பகுதிச் செயலர்கள், 1,505 பகுதி வார்டு செயலர்கள், 3,876 நகர வார்டு செயலர்கள், 7,629 பேரூர் வார்டு செயலர்கள்,12,525 ஊராட்சி செயலர்கள், 79,962 கிளை செயலர்கள், 68,467 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், ஆயிரக்கணக்கான சார்பு அணி நிர்வாகிகளைக் கொண்டது திமுக. எனினும், கட்சியின் தாய் அமைப்பிலும் அணிகளின் பொறுப்பிலும் இருப்பவர்களில் பலரும் 50 வயதைக் கடந்தவர்கள்.
திமுக என்ற இயக்கம் தொடங்கும்போது, அண்ணாவுக்கு 40 வயது, பேராசிரியர் க. அன்பழகனுக்கு 27 வயது, கருணாநிதிக்கு 25 வயது. நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரும் அப்போது இளைஞர்கள்தான். அவர்கள்தான் அரசியல் களத்திலும், போராட்டக் களத்திலும் முதன்மையாக நின்று இளைஞர்களை ஈர்த்தனர். திமுகவை ஆட்சிக்கும் கொண்டு வந்தனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக, கட்சியின் வளர்ச்சிக்காக இளைஞரணி என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்ட முதல் அரசியல் இயக்கமாக திமுக கருதப்படுகிறது. அதன் முதல் மாநிலச் செயலராக இருந்தவர்தான் மு.க. ஸ்டாலின். அந்த வகையில், திமுகவில் இளைஞர்களுக்கு மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்கும் முன்னெடுப்புகளை முதல்வர் தொடங்கியிருப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு வலிமை சேர்க்கக்கூடும் என கருதப்படுகிறது.
கட்சி நிர்வாகி யாரேனும் விபத்தில் அல்லது வேறு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால், அவரது குடும்பத்துக்கு கட்சித் தலைமை சார்பில் நிதி உதவி வழங்கப்படும். எனினும், இது அரிதாகவே நடைபெறும். பெரும்பாலும், அந்த நிகழ்வுக்குக் கிடைக்கும் ஊடக வெளிச்சத்தைப் பொருத்தே இந்த உதவி இருக்கும். பல நேரத்தில் குறிப்பாக சாதாரண கட்சித் தொண்டரின் மறைவுச் செய்திகள், கட்சித் தலைமையின் கவனத்தை எட்டாமலேயே சென்றுவிடும். அவர்களின் குடும்பத்துக்கு உதவி கிடைப்பதும் அரிதினும் அரிதே.
இந்த நிலையில், திமுக உறுப்பினர்கள் யாரேனும் விபத்தில் உயிரிழந்தால், அவரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால், இறந்தவரின் குடும்பத்துக்கு திமுக தலைமை சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டிருப்பது, கடைநிலைத் தொண்டருக்கும் கட்சியில் பாதுகாப்பு உண்டு என்பதை உறுதி செய்யக்கூடிய அம்சமாகக் கருதப்படுகிறது.
திமுகவின் தொடர் வெற்றிக்கு கூட்டணி பலம் ஒரு முக்கியக் காரணம் என முதல்வர் வெளிப்படையாகத் தெரிவித்தது, கூட்டணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்பதன் மறைபொருளாகவே கருத வேண்டியுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நான் மதிப்பளித்து செயல்படுவது போலவே திமுக நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சியினருடன் நட்பு பாராட்ட வேண்டும், திமுகவினர் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியிருப்பது, திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும், ஒற்றுமையைப் பலப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
திமுக அரசின் நலத் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்பத்தவர்களும் ஏதேனும் ஒரு வகையில் பயன் பெறும் நிலையில், அவர்களை திமுக நிர்வாகிகள் அணுகி, அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய உத்தி வகுத்துள்ளது கட்சித் தலைமை. அந்த மக்களை திமுகவில் உறுப்பினராக்கும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை தொடங்க பொதுக் குழு முடிவெடுத்திருப்பது, மற்ற அரசியல் கட்சிகள் சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடிய விஷயமல்ல.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக்க வேண்டும் என்பது பொதுக்குழுவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு. இது சாத்தியம் பெற்றால் திமுகவின் பொதுக் குழு வியூகம் உரிய பலனைக்கொடுக்கக்கூடும் என்பது கள எதார்த்தம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.