காஸ்த்ரோவின் கூபாவும், லத்தீன் அமெரிக்க மார்க்சியமும் - நூல் அறிமுகம் | விமர்சனம்

அமர்ந்தாவின் காஸ்த்ரோவின் கூபாவும், லத்தீன் அமெரிக்க மார்க்சியமும் பற்றி அறிமுகமும் விமர்சனமும்...
Castro's Cuba and Latin American Marxism
காஸ்த்ரோவின் கூபாவும், லத்தீன் அமெரிக்க மார்க்சியமும்
Published on
Updated on
4 min read

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகள், கரீபியன் தீவு நாடுகள், வட அமெரிக்காவில் மெக்சிகோ, இரண்டு அமெரிக்கக் கண்டங்களையும் இணைக்கும் பகுதியில் அமைந்த மத்திய அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 29 நாடுகள் ‘லத்தீன் அமெரிக்க நாடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

ஸ்பெயின் நாட்டிலிருந்து தனது கடற்பயணத்தைத் தொடங்கிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ் 1498-இல் தென் அமெரிக்கக் கண்டத்தில் காலூன்றிய பிறகு, 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி 18-ஆம் நூற்றாண்டு இறுதி வரையிலும் இந்த நாடுகள் அனைத்தும் ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளின் காலனிகளாக இருந்துள்ளன. அனைத்து நாடுகளிலும் மக்கள் பேசும் மொழியாக லத்தீன்மொழி இருந்ததால், இவை லத்தீன் அமெரிக்க நாடுகள் என்று அடையாளப்படுத்தப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மற்ற கண்டங்களைப் பற்றி அறிந்திருக்கும் அளவிற்கு, பொதுவாக, தென் அமெரிக்கக் கண்டத்தைப் பற்றியும் அங்குள்ள நாடுகள் பற்றியும் மக்கள் அறிந்திருக்கவில்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள், அந்நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள், விடுதலைக்கானப் போராட்டங்களை முன்னெடுத்த விடுதலைப் போராளிகள், பொருளாதார வளர்ச்சி, அங்கு நிலவும் அரசியல் சூழல் போன்ற பல கூறுகளையும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருபவர் தோழர் அமரந்தா. அவர் 2024 ஜனவரியில் வெளியிட்ட இரண்டு நூல்களில் ஒன்றுதான், ‘காஸ்த்ரோவின் கூபாவும், லத்தீன் அமெரிக்க மார்க்சியமும்’ என்னும் இந்நூல்.

கூப விடுதலைப் போராட்டத்தின் முன்னத்தி ஏரான ஹொசே மார்த்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்வைத்து, 2003 ஜனவரியில் கூபாவுக்கு நேரில் செல்லும் வாய்ப்பும் அமரந்தாவிற்குக் கிட்டியிருக்கிறது. அதுசமயம் அவர் நேரில் கண்ட காட்சிகளையும், வாசித்து அறிந்த செய்திகளையும் இந்நூலின் வாயிலாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இந்நூலில் பெரிதும் கூபா பற்றிய செய்திகளே பரவலாகப் பேசப்படுகின்றது. என்றாலும், கூபா பற்றிப் பேசும்போது, மற்ற லத்தின் அமெரிக்க நாடுகளை, குறிப்பாக வெனிசுவேலா, சீலே, பெரு போன்ற நாடுகளையும், அங்கு விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்தவர்களையும், ஒருங்கிணைத்தவர்களையும் பேசாமல் கடந்துபோக முடியாது.

கரீபியன் கடலில் ஒரு சுண்டைக்காய்த் தீவு நாடான கூபா, எப்படி விடுதலைப் பெற்றது, விடுதலைப் பெற்ற பிறகும், உலக வல்லரக்கன் வட அமெரிக்காவால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள், பரப்பப்பட்ட பொய்ச் செய்திகளோடு தொற்று நோய்க் கிருமிகளையும், பொருளாதாரத் தடைகளையும் ஃபிதல் காஸ்த்ரோ தலைமையில் கூபா எப்படி எதிர்கொண்டு வெற்றி கண்டது உள்ளிட்ட பல அரசியல், சமூக, பொருளாதாரச் செய்திகள் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன.

கூபப்புரட்சிக்கு முதல் விதையை ஊன்றிய ஹொசே மார்த்தி பற்றியதாக முதல் கட்டுரை அமைந்திருக்கிறது. கூபா என்று சொன்ன உடனேயே, ஃபிதல் காஸ்த்ரோ பெயர்தான் அனைவர் நினைவுக்கும் வரும். கூடவே சேகெவாரா பெயரும் நினைவுக்கு வரும். ஆனால், கூபாவின் ‘தேசத்தந்தை’ என்று போற்றப்படும் ஹொசே மார்த்தி, கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். கூபப்புரட்சிகர கட்சியை நிறுவி, போராளிகளை ஒருங்கிணைத்து, புரட்சிக்கான முன்னெடுப்புகளைக் கவனமாகவும், முறையாகவும் திட்டமிட்டவர் ஹொசே மார்த்தி. மாத்திரமல்ல, அனைத்து நடவடிக்கைகளையும் பின்வரும் சமூகத்திற்காக எழுத்தில் பதிவும் செய்திருக்கிறார். ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு. வட அமெரிக்காவின் போக்கு எப்படி இருக்கும் என்பதைச் சிந்தித்து, அதனை எப்படி முறியடிக்கவேண்டும் என்னும் வழிமுறைகளையும் கூறிச் சென்றிருக்கிறார்.

ஸ்பெயின் நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட ஹொசே மார்த்தி, 42-வது வயதில் மரணம் அடைகிறார். மரணத்திற்கு முதல்நாள் வரையிலும் இடைவிடாமல் எழுதிய எழுத்துக்களை, கூபப்புரட்சிக்குப் பிறகு, 27 தொகுதிகளாக வெளியிட்டு, மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்பானிய ஆட்சியாளர்களால் தேசவிரோதி என்று குற்றம்சாட்டப்பட்டு, கல்லுடைக்கும் தண்டனை வழங்கப்பட்டபோது, கொசே மார்த்திக்கு வயது 16 மட்டுமே. 1953, அவரது நூறாவது பிறந்தநாளில், சட்டம் பயின்றுகொண்டிருந்த மாணவர் ஃபிதல் காஸ்த்ரோ தலைமையில் ஆயிரக்கணக்கிலான மாணவர்கள், நள்ளிரவில் கைகளில் விளக்குடன், ஹொசே மார்த்தி கல்லுடைத்த இடத்திற்குப் பேரணியாகச்சென்று, கூபா விடுதலை பெறும் வரையிலும் ஓய்வதில்லை என்று சூளுரைத்திருக்கின்றனர்.

கூபா விடுதலைப்பெற்ற உடன் செய்த முதல் காரியம், அனைத்து நிலத்தையும் அரசுடைமை ஆக்கியது. கல்வியை அனைவருக்கும் இலவசம் ஆக்கியது. எங்கெல்லாம் படிக்கும் வயதில் குழந்தைகள் உண்டோ அங்கெல்லாம் பள்ளிகள் துவக்கப்பட்டன. மூன்றே ஆண்டுகளில் கூபாவை முழு எழுத்தறிவு பெற்ற நாடாக மாற்றியது, உலக சாதனை. கூபாவில் ஆரம்பப்பள்ளி தொடங்கி, பல்கலைக்கழகம் வரையிலும் மாணவர்கள் விவசாயத்தின் பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இப்படியாக மாணவர்களும், விவசாயிகளும் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்.

இந்நூலில் பதிவாகியிருக்கும் ஒரு சுவையான செய்தி. ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரின் மாத வருவாயைப்போல் இரண்டு மடங்கு ஒரு விவசாயியின் வருமானமாக இருக்கிறது. ஒருசிலர் இதனை ஒரு குறையாக ஃபிதல் காஸ்த்ரோவிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ‘ஏழை நாடுகளில் விவசாயிகள் ஒட்டியவயிறுடனும், கோவணத்துடனும் தான் இருக்கின்றனர். நம் நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகள் வசதியாக இருக்கட்டும். அதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்போவதில்லை’ என்று மறுமொழி கூறியிருக்கிறார் ஃபிதல் காஸ்த்ரோ.

“வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயர குடி உயரும்

குடி உயர கோல் உயரும்

கோல் உயர கோன் உயர்வான்”

என்னும் ஔவையின் பாடலைக் காஸ்த்ரோ படித்திருப்பாரோ!

ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் பெறும் ஊதியத்தில் ஒரு பகுதியை நாட்டிற்குத் திருப்பிச் செலுத்துகிறார்கள். அந்தப் பணம், மீண்டும் கல்விக்கும், உடல் நலத்திற்கும் செலவிடப்படுகிறது.

1959-ஆம் ஆண்டு புரட்சி வெற்றிபெற்றபோது இருந்த காட்டின் பரப்பு 13.4%. அதுவே 2000 ஆண்டில் 21% ஆகக்கூடியிருந்தது. (இந்தியாவும் சரி, தமிழ்நாடும் சரி காடுகளை அழித்து, அதன் பரப்பைத் தொடர்ந்து குறைத்துவரும் அரசுகளாக இருக்கின்றன என்னும் கசப்பான உண்மையையும் இங்கே சொல்ல வேண்டியுள்ளது).

கெனேடிய ஆய்வாளர் ஆர்னால்ட் ஆகஸ்ட், ‘Cuba and its neighbours; A democracy in motion’ என்று ஒரு நூலை 2013-இல் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஏழாண்டுக் காலம் கூபாவில் தங்கியும், 15 ஆண்டுக்காலம் ஆய்வு செய்தும் அந்நூலை எழுதியிருக்கிறார். அந்நூலில், “கூபாவின் மக்களிடம் ஜனநாயகக் கருத்தியல் ஆழமாக வேரூன்றியுள்ளது என்னும் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். வட அமெரிக்கா ஜனநாயக நாடு என்று சொல்லப்பட்டாலும், இரண்டு கட்சிகள் இருந்தாலும், அந்த இரண்டு கட்சிகளுமே கார்பொரேட் கைக்கூலிகளாகச் செயல்படுவதால் மக்களிடம் இறையாண்மை இல்லை. மாறாக, ஒரு கட்சி ஆட்சியே என்றாலும், கூபாவின் மக்களிடமே இறையாண்மை உள்ளது”

‘கூபாவின் மருத்துவ சர்வதேசியம்‘ என்னும் கட்டுரை எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் மருத்துவத்துறையில் கூபா எப்படியெல்லாம் சாதித்து வருகிறது என்னும் நீண்ட பட்டியலைத் தருகிறது. கூபாவின் மருத்துவத்துறையும், அங்குக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளும், அங்குப் பயின்ற மருத்துவர்களும் கூப நாட்டிற்கு மட்டுமே என்று இல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்குமானவையாக இருப்பதால் அத்தலைப்பு மிகவும் பொருத்தமுடையது.

திடீரெனப் பரவி உலகம் எங்கும் அச்சத்தை ஏற்படுத்திய கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் 67 உலக நாடுகளில், 37,000 கூப மருத்துவர்கள் மருத்துவ சேவையில் ஈடுபட்டு பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். பொலீவியாவில் மூன்று லட்சம் பேருக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்திருக்கின்றனர். 1960-ஆம் ஆண்டு சீலேவில் ஆற்றல் மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டபோது, கூப மருத்துவர்கள் அங்குச் சென்று மருத்துவம் செய்தார்கள். ஆப்பிரிக்காவில் மட்டுமே, இதுவரையிலும் 35 நாடுகளில் எட்டரை லட்சம் மக்களைக் கூப மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். 1999-ஆம் ஆண்டு ஹவானாவில் ‘லத்தின் அமெரிக்க மருத்துவப்பள்ளியை’ தொடங்கி மாணவர்களுக்குக் கல்வியை இலவசமாகக் கொடுத்து வருகின்றனர். தங்கும் இடம், உணவு, உடை அனைத்தையும் கூப அரசு ஏற்கிறது.

முத்தாய்ப்பாக, 1985-ஆம் ஆண்டு செர்னோபில் அணு உலை விபத்தில் பாதிக்கப்பட்ட 25,000 உக்ரேனியக் குழந்தைகளைக் கூபாவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கு மருத்துவம் செய்திருக்கின்றனர். இப்படி ஒரு மனித நேயத்தை வேறு எந்த ஒரு நாட்டிலும் காண முடியாது. மொரோக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு அகதிகளாக வந்த ஒரு லட்சம் யூதக்குழந்தைகளை, சோதனை எலிகள் போல் கூண்டுகளில் அடைத்துக் கப்பல்களில் ஏற்றி அமெரிக்காவிற்குக் கொண்டு சென்று அணுக்கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்தினர் என்னும் மனிதாபிமானமற்ற அமெரிக்காவின் செயலை நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே, கூப அரசின் மனிதாபிமானமும், சேவை உள்ளமும் உங்களுக்குப் புரியும்.

‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்”

என்னும் குறளுக்கு ஏற்ப அத்தனைவிதமான ஒடுக்குமுறைகளையும் தங்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் கெத்ரினா புயலால் பாதிக்கப்பட்டபோது, கூபா நட்புக்கரம் நீட்டியது. ஆனால், வெட்கப்பட்ட அமெரிக்க அதிபர் புஷ் அக்கரங்களைப் பற்றிக்கொள்ள மறுத்துவிட்டார். உலகில் உள்ள எந்த ஒரு நாட்டில் பேரவலம் நிகழும்போதும், தனது மருத்துவக்குழுவை அனுப்பிவைக்கிறது கூப அரசு. அந்தவிதத்தில், அம்மருத்துவக் குழுவிற்கு, ‘சர்வ தேச மருத்துவ குழு’ என்னும் பெயரிடல் முற்றிலும் பொருத்தமே. அதுமட்டுமின்றி, கூப ஆய்வாளர்கள் டெங்கு, கரோனா, தோல் புற்று, எயிட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

கூபா, இன்றளவும் தனித்தன்மையோடு நிலைத்து நிற்பதற்கு, அந்நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக, கூப கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிப்பாதுகாப்பு மக்கள்மன்றங்கள், தேசிய ஆயுதப்படை, கூபப்பெண்களின் கூட்டமைப்பு ஆகியவை விளங்குகின்றன.

கூபப்பெண்களில் 65 % பேர் தொழில்நுட்பக்கல்வி பெற்றவர்கள், விஞ்ஞானிகள், இராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், அரசின் உயர்பதவி வகிப்பவர்கள். 21.5 % பெண்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர். திருமணம், குழந்தை பெறுதல், குடும்பப்பராமரிப்பு ஆகியவை பெண்களின் கல்விக்கும், வேலைக்கும் குறுக்கே நிற்காத வகையில் தேவையான சமூக அமைப்புகள் உள்ளன.

சில செய்திகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் அது தவிர்க்கமுடியாதது. கூபாவைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இந்நூல் பெரிதும் பயனுடையதாக இருக்கும்.

காஸ்த்ரோவின் கூபாவும், லத்தீன் அமெரிக்க மார்க்சியமும் - அமர்ந்தா, வெளியீடு - பன்மைவெளி, பக்கங்கள் - 260, விலை ரூ 250.

இதையும் படிக்க: உயிர்சுருட்டி: நூல் அறிமுகம் | விமர்சனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com