நெப்போலியனை எரிச்சலூட்டிய கவிஞர் ஹெலன் மரியா வில்லியம்ஸ்! கவிதைதான் குற்றம் - 21

கவிதைகளால் சிறைப்பட்டவர்களின், துயருற்றவர்களின் தொடர் - கவிதைதான் குற்றம். கவிஞர் ஹெலன் மரியா வில்லியம்ஸ் பற்றி...
கவிஞர் ஹெலன் மரியா வில்லியம்ஸ், நெப்போலியன்
கவிஞர் ஹெலன் மரியா வில்லியம்ஸ், நெப்போலியன்
Published on
Updated on
8 min read

“கொற்கை வேந்தனை”-

“தென்னம் பொருப்பின் தலைவனை”-

“பழியொடு படராப் பஞ்சவனை”-

“வையங்காக்கும் பாண்டியனை”-

அழுதழிந்த கண்களொடும், அவிழ்ந்து சரிந்த கூந்தலொடும், “பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்” ஒருத்தி – கண்ட கணத்திலேயே - எரிதழலாய் அரிமா அரசன் முன்நின்று -“தேரா மன்னா” என்று சொல்லமிலம் வீசிச் சுட்டெரிக்க முடிந்தது தமிழ் நிலத்தில்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” (சிலம்பு, பதிகம் 55) என்ற அபாய எச்சரிக்கையைத் தம் முடித்தலையில் சுமந்து அரசாண்ட மன்னர்கள் இருந்தனரிங்கு. ”தன் நிலம் வாழ்நர் செந்நிழல் காணாது“, தம் “குளிர் வெண்குடை” காக்கக் கோலோச்சினர் தமிழ் மன்னர்கள்.

குடபுலவியனார் எனும் புலவர் (புறம் 18) பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை நோக்கி (காதைப்பிடித்துத் திருகி, “உட்கார்ந்து, ஒழுங்காக, நான் சொல்வதை இப்போது கேள்” - ‘தகுதி கேள்’- என்று சொல்கிற மாதிரி) சான்றோனே, உடலுக்கு நீர்தான் முதன்மை; அத்தகைய உடலுக்கு உண்டி கொடுத்தோரே உயிர் கொடுப்பவர்; உணவு உலகிற்குக் கிடைக்க, நீர் மிக அவசியம். அதுவே அமிழ்து. ஆதலால், நீ செரு பலவென்று சிறப்பதிலும், நிலைத்த புகழும், உன் குடிகளுக்கு நீடித்த பயனும் விளைய, முதற் பணியாக நீர்நிலைகளைப் பெருக்கு; பள்ளமான இடங்களிலெல்லாம் நீரைச் சேமித்துப் பெருக்கினால், பயன்தராத புன்செய் நிலங்களும் பயன்தருவனவாகி வளங்கூட்டும். “அடுபோர்ச் செழிய”, நான் சொன்னவாறு செய், நீர்நிலைகளைப் பெருக்கு, நிலைத்த புகழ் பெறு என அன்புக் கட்டளையாக –விளைச்சல் நிலங்களின் பரப்பைப் பெருக்கி, உணவு உற்பத்தி பெருக, உயிர் வாழ்வோர்க்குப் பசிப்பிணியென்றும் அண்டாத நிலை விளைய –வேளாண் / நீர்ப்பாசன / சமூகப் பொருளாதார வல்லுநரது ஆலோசனைக்கீடான அறிவுநிலையில் அரசுக்கு வழங்கும் திறனும் உரிமையும் திரண்டிருந்தன இம்மண்ணில்.

“மன்னா, குடிமக்களிடம் வரிவசூல் செய்யும்போது, முறையின்றிப் பொருளாசை கொண்டு கெடுபிடி வசூல் செய்யக்கூடாது; அப்படிக் கெடுபிடியாக வரி வசூலித்தால், அது ‘யானை புக்க புலம்போல’ (புறம் 184) ஆகிக் கவளமாகக் கிடைப்பதிலும், கரியின் காலடிபட்டே அதிகம் வீணாகும், புரிந்துகொள், திருந்து” எனப் பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார் நேரடியாக, நயமாகக், குட்டுவதுபோல அச்சமின்றி அறிவுரை கூற முடிந்தது. ஏனெனில், “இறை கடியன் என்ற இன்னாச்சொல்” (குறள் 564) தனைச் சூழ்ந்து, தன் மக்கள் “கோலஞ்சி வாழும் நிலை” (இனியவை நாற்பது, 32) ஏற்பட்டுவிடுமோ என்று பழியஞ்சிய மன்னர்கள் ஆண்டனர் இங்கு, அன்று.

“கானக நாடனே, பெரும, உனக்கு ஒன்று சொல்கிறேன். உற்றுக்கேள். சேர்க்கை சரியாக இருக்க வேண்டும், குறிப்பாக மன்னர்களுக்கு. ‘சேர்க்கை’ கெடுத்துவிடும், செயல்களை. அருளும் அன்பும் வறண்ட வன்நெஞ்சர்களுடன் ஒருக்காலும் சேராதே, அது இழுக்குக்கு இட்டுச் சென்றுவிடும் உன்னை. நீ உன்நாட்டைக் குழந்தையைப்பேணி வளர்க்கும் தாய்போல் காயாக் கரிசனமாகக் காக்க வேண்டியவன். ஆகவே, தாயுள்ளம் கொண்டார் நேயமே கொள். (“குழவி கொள்பவரின் ஓம்புமதி”). இது கசப்பாகத் தோன்றினாலும் -வேம்பும் கடுவும் போல- மருந்தாகும் “வாயுறை வாழ்த்தாக”ச் சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு, புலவர் நரி வெரூஉத்தலையார் புகட்டும் அறிவாண்மை (புறம் 5) அன்று இருந்தது. அறிவுடையார் காட்டும் வழியில்தானே அரசு செல்லனும்? (“அறிவுடையார் ஆறு அரசும் செல்லும்”.) அப்படித்தான் அரசு சென்றது, அன்று.

“அரசே, மிகு தொலைவிலிருந்து காடு, மலை, ஆறெனக் கடுமையான வழிபல கடந்து, உனைக்காணும் வேட்கையில் ஏங்கிய “இரவலர் வருவர்” நலிந்து. நீ அவர்கள் முகக்குறிப்பறிந்து, தாமதமேதுமின்றி, அவர்களது வறுமையை அந்நொடியிலேயே அகற்றித் தீர்த்தல் செய்யும் வளமனம் வளர்த்திரு வழுதியே’ (புறம் 3), எனப் பாண்டியன், கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதிக்குத் தயக்கமேதுமின்றித் ‘தாராளமாக வழங்கு’ என இரும்பிடர்த்தலையார் எடுத்துச்சொல்ல முடிந்தது. “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை”  (குறள் 221) என்ற வள்ளுவ வழிகாட்டலிருப்பதை மன்னனும் புலவரும் மனதினில் நிறைத்து வைத்துச் “செல்வத்துப் பயனே ஈதல்” எனச் சிந்தைதாங்கிச் செயல்பட்ட பாரம்பரியம் நமது. “அன்புத் தொகை” அடையாறு  (அடையா ஆறு) போல அரசிடமிருந்து பரந்தது அன்று இரவலர்களுக்கு - ஆண், பெண் இருபாலருக்கும்!

“நெய்தலங்கானல் நெடியோய், பழிகூறுவோர் எவர்க்கும் எவ்வாய்ப்பும் எந்நாளும் அளிக்காமல், நீ உண்மையாக மனதால் ஆராய்ந்து, தீமை செய்துள்ளாரென யாரைக்கண்டாலும் (யாராக இருந்தாலும்) அவர்க்கு நீதி நூல்களிற் கண்டுள்ளபடி- குற்றத்திற்குரிய தண்டனையை - (“நீ மெய்கண்ட தீமை காணின் /ஒப்பநாடி அத்தக ஒறுத்தி”- புறம் 10) எனச் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிக்குச் சட்ட ஆலோசனையை வழங்கும் - தானே நியமித்துக்கொண்ட- ‘அரசு ஆலோசகராக’ நிமிர்ந்து நிற்க ஊன்பொதி பசுங்குடையார்க்கு உரிமையிருந்தது. “மெய் கண்ட தீமை காண” “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்” காணும் அறிவு இருக்கனும், வளர்க்கனும், ஆள்வோர். மிகைத் தண்டனையுங் கூடாது; குற்றத்திற்கொப்ப –“ஒப்ப நாடி” (as prescribed) - ஒறுத்தலும் நீதி வழங்கலுக்கான நெறிகளிலொன்று. வழங்கப்பட்டது ‘நீதி போதனையும்’.

இப்படித் தமிழ் மன்னர்கள் புலவர்களது (கவிஞர்களது) சொல்லைப் பொன்போல் போற்றியதும், அவர்தம் அறிவுரைகளைத் தலைமேல் ஏற்று, அதன்படி ஒழுகிய பண்பாட்டுச் செழுமையையும் சொல்லிக்கொண்டே போனால், இடம் எதுவும் மிஞ்சாது.

என்ன நடக்கிறது தற்கால நாகரீக உலகில்?

எண்ணத்தில் விளைகிறவற்றைப் பற்றிச் சுதந்திரமாகப் பேச, எழுதக் கருத்துக்கூற முடிகிறதா கவிஞர்களால் உலகின் பலநாடுகளில்?

·  “எதிர்த்து நில்லுங்கள் என்மக்களே அவர்களை எதிர்த்து நில்லுங்கள்” எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு சாதாரண 14 வரிக் கவிதைக்காக பாலஸ்தீன இளம் பெண் கவிஞர் டாரின் டட்டூர் 2015-ல் அக் 11 இல் கைது செய்ப்பட்டு இரண்டரையாண்டுச் சிறைவாசத்திற்கு உள்ளாக்கப்பட்டதறிந்து பதறினோம் முதலில்.

·  இருபத்து நான்கு வயது இளைஞன் - கவிஞர் மன்னாரமுது என அறியப்பட்டிருக்கும் - அஹ்னாப் ஜெசீம் 2017 இல் வெளியிட்ட ‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பில் ‘உருவாக்கு’ என்ற ஒரு தீங்கிலாக் கவிதைக்காக, இலங்கையில் பரிசளிக்கப்பட்டிருக்கிற, பத்தொன்பது மாதச் சித்திரவதைச் சிறைக் கொடுமை அறிந்தோம். (வழக்கு நிலுவையில் உள்ளது).

· 2022, செப்டம்பர் 25, இரவு, சுமார் இருபது பேர் மட்டுமே கூடியிருந்த கவிதை வாசிப்பு நிகழ்வில், ரஷியா, உக்ரைனுடன் நடத்திவரும் நியாயப்படுத்தவே முடியாத மற்ற போருக்கு எதிரான கருத்துப் பொதிவுள்ள ‘என்னைக் கொல்லுங்கள், ராணுவ வீரரே!” (‘Kill me, militiaman’) என்ற கவிதையைக் கவிஞர் ஆர்டெம் கமர்டின் ( Artem Kamardin, வயது 31) -வாசித்த குற்றத்திற்காக, ரஷியாவில் கவிஞர் கைதாகிப்பட்ட நிறை வதைகளுடன் அவருக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை என்பதும் அறிந்திருக்கிறோம்.

· ஈரானியப் பெண் கவிஞர் 23 வயது ஃபதேமே எக்தேசரி தனது முதல் கவிதைத் தொகுப்பு (Feminist discussions before cooking potatoes, 2010, உருளைக்கிழங்கு வேகும்போது ஒரு பெண்ணிய விவாதம்) வெளியிட்டதற்குப் பதினோராண்டுகள் ஆறுமாதம் (138 மாதங்கள்) சிறைத் தண்டனையும், கூடுதலாகப் பொதுவெளியில் நிறைவேற்ற வேண்டுமெனும் குறிப்புடன், 99 கசையடிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது அறிவோமல்லவா?.

· ரங்கூனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த வார இதழான ‘லவ்’ இதழில் ஜனவரி 1, 2008 இல், ‘’பிப்ரவரி 14 (காதலர் நாள்)‘’ (February, the Fourteenth) எனத் தலைப்பிட்டு கவிஞர் சா வின் (Saw Win). புனைபெயர் சா வாய் (Saw Wai) ஒரு எட்டுவரிப் பர்மிய மொழிக் கவிதைக்காகவே கவிஞர் சிறைப்பட்டதும் அவர் பட்டபாடும் அறிந்து வந்திருக்கிறோம்

· நம்நாடு 1947 இல் சுதந்திரம் பெற்றதும் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு, மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால், இங்கு பிரிட்டிஷ் கொடியை இறக்கிவிட்டுக் காமன்வெல்த் என்ற அமைப்பில், அதே பிரிட்டிஷ் கொடியின் கீழ் இந்தியா வணங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே என்பதால். பிரதமர் நேரு, துணைப் பிரதமர் சர்தார் படேல் போன்ற தலைவர்கள் எடுத்த - காமென்வெல்த்தில் இணைந்திருப்பது என்ற - முடிவைக் கம்யூனிஸ்ட்கள் முழுமூச்சாக எதிர்த்தபோது கவியாயுதம் எடுத்த மஜ்ரூஹ் சுல்தான்புரி கம்பிகளுக்குப் பின் அடைக்கப்பட்டாரே.

· அஸ்ஸாம் மாநிலம், ஜோர்ஹாட்டில் உள்ள தேவி சரண் பருவா மகளிர் கல்லூரியில் அறிவியல் பட்ட (கணிதம்) வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த, அந்த மாநிலத்தின் ஒரு சிறுகிராமத்துக் குறு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்துவரும் மாணவி பர்ஷாஸ்ரீ புராகோஹைன். 2022 இல், 18-லிருந்து 19 வயதுக்கு நகர்ந்த அம்மாணவி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இரண்டே இரண்டுவரிக் கவிதைக்காக மே 18, 2022 இல் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறை வைக்கப்பட்ட செய்தியும் கடந்து வந்திருக்கிறோம்.

· எகிப்தியக் கவிஞர் கலால் எல் - பெஹைரி, (Galalel-Behairy, 2018 மார்ச் மாதத்தில், வெளிநாட்டுப் பயணங்களிலிருந்து திரும்பியபோது, கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில்-எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள ராப் பாடகர் ராமி எசாம் (Ramy Essam) என்பவர் பாடி, யூடியூபில் பிப்ரவரி 26, 2018 இல் வெளியிடப்பட்ட ‘பலாஹா’ (Balaha)’என்ற பாடல் விடியோவுக்கான கவிதை வரிகளை எழுதியதற்காக- கைது செய்யப்பட்டதும் பின்னர் அவருக்கு சர்வாதிகாரி எல் - சிசியின் ஆட்சி வழங்கிய சொல்லொணாக் கொடுமைகளும் நாமறிந்துள்ளோம்.

· பாகிஸ்தானில் ‘வாழ்நாள் போராளி’யாக வாழ்ந்த கவிஞர் ஹபீப் ஜாலிப் (Habib Jalib). தன் கவிதைகளுக்காக எத்தனை முறை சிறைப்பட்டாரென்பதை எண்ணிக்கை காண்பதே கடினம் எனுமளவிற்கு அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து கவிதைகளுக்காகவே சிறைப்பட்டுள்ள ‘தீவிரப் புரட்சிக் கவிஞர்’ குறித்தும் தெரிந்து வந்திருக்கிறோம். (இன்னும் உள்ளனர் நாம் கண்டறிந்து வந்துள்ள கவிஞர்கள் பட்டியலில் இப்படிப் பிற நாடுகளில், கவிஞர்கள் கைது செய்யப்பட்டுக் கொடுமைப்படுத்தப்படுவதும் சிறைப்படுத்தப்படுவதும் இப்போதுதானா நடந்து வருகின்றன?

வரலாற்றுப் பாதையில் சற்றுப் பின்னோக்கிப் பயணித்தோமானால்- உலக மனித உரிமைக் கோட்பாடுகளின் மூல வளமாகக் கருதப்படும் பிரஞ்சுப் புரட்சி 1789 இல் பிறப்பித்த பிரகடனமான ‘தனிமனிதர், குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் (Declaration of the Rights of Man and of the Citizen’) பிறந்த பிரான்ஸ் தேசத்திலேயே - புரட்சியின் முழுச் சூடும் முற்றும் குளிர்வதற்குள்ளாகவே- 1802 ஆம்ஆண்டில் வெளியான கவிதை (Ode) ஒன்று அது வெளிவந்த இரண்டாண்டுகளுக்குப்பின் பேரரசராகிய  ஒருவரைத் துன்புறுத்தியுள்ளது.

அப்பேரரசர், கோர்சிகா தீவில் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 15 ஆகஸ்ட்1769-ல் பிறந்து, 1779 இல் பிரான்சின் பிரதான நிலப்பகுதிக்கு குடிபெயர்ந்து,1785 இல் ‘பிரெஞ்சு அரச ராணுவத்தில்’ (French Royal Army)ஆரம்ப நிலைப் பணியான இரண்டாம் லெப்டினென்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுப் 19 ஆண்டுகளில், டிசம்பர் 1804 இல், தனது 35 ஆவது வயதில் தன்னைப் பிரெஞ்சு பேரரசராக முடிசூட்டிக் கொண்ட நெப்போலியன் போனபார்ட் (Napoleone Buonaparte) எனப்படும் நெப்போலியன் - I

நெப்போலியன் போனபார்ட்
நெப்போலியன் போனபார்ட்

ஏன் கவிஞரைச் சிறைப்படுத்தினார் நெப்போலியன்?

1802 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே அமியான் என்ற இடத்தில் ஒரு அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது. அது பற்றிய ஒரு கவிதைக்காக (Ode on the Peace of Amiens) நெப்போலியன் அக்கவிஞரைச் அடையாளச் சிறைப்படுத்திய (Token imprisonment) செய்தியொன்று தேடலில் கிடைத்துள்ளது. கவிஞரது கவிதை பேரரசரைச் ‘சினமடையச் செய்ததாம்!’ (“Emperor, angered by the poem!”). வேந்தர்க்குச் சினம் வந்தால், சிரம் அறுப்பு அல்லது சிறைவைப்பு என்பதுதானே இலக்கணமாச்சு? நல்வாய்ப்பாக, இங்கே வேந்தர் சினம் ஒருநாளில் தணிந்தது.

பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டைச் சினமடையச் செய்த கவிஞர் யார்?

அவர், ஹெலன் மரியா வில்லியம்ஸ் (Helen Maria Williams) ஒரு பிரிட்டிஷ் கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். சுதந்திரம், பெண்ணுரிமை, அடிமை ஒழிப்பு முதலிய களங்களில் தீவிர கருத்தியல் நிலைப்பாடும், பிரெஞ்சு புரட்சியின் ஆதரவாளர் என்ற அடையாளமும் அவரை நன்கு அறியப்பட்டிருந்தவராக வைத்திருந்தது. (பொதுவாக இங்கிலாந்து, அதன் தலைவர்கள், முடியாட்சிக்கு எதிராக நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியை ஆதரிக்கவில்லை. எட்மண்ட் பர்க் வரிந்து கட்டிக்கொண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு எதிராக நிறையப் பேசினார், எழுதினார்.)

சார்லஸ் வில்லியம்ஸ் என்ற வெல்ஷ் வம்சாவளியைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் அவரது மனைவி ஹெலன் ஹே என்ற ஸ்காட்டிஷ் வழியினருக்கும் பிறந்த மூன்று மகள்களில் ஹெலன் மரியா வில்லியம்ஸும் ஒருவர். அவரது மற்ற இரு சகோதரிகள் சிசிலியா, பெர்சிஸ். மரியா வில்லியம்ஸ் பிறந்த ஆண்டு 1769, இல்லை, அது 1761 எனக் குழப்பங்கள் உள்ளன. அவரது தந்தை இறந்தது 1769 என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின் அவரும், அவரது தாயும் இரண்டு சகோதரிகளும் பெர்விக் -அப்-ஆன் - ட்வீடுக்கு குடிபெயர்ந்தனர். பிறகு அவர்கள் 1781 இல் லண்டனில் குடியேறினர். அங்கு அவர் தனது தாயால் தொடக்கக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார்,

தாயும் தந்தையும் வேறுவேறு இனவழியினராக இருந்தது; தந்தை, மரியா வில்லியம்ஸின் இளம் வயதிலேயே இயற்கையடைந்தது; உறவுகளேதும் உடனில்லாது என்பனவற்றால் அவர் ஆரம்பம் முதல் ‘பெண்களோடேயே (தாய், மற்ற இரு சகோதரிகள்) வளரும் சூழலைத் தந்தது .டாக்டர் ஆண்ட்ரூ கிப்பிஸ் என்ற மதபோதகர் மரியாவின் வழிகாட்டியானார். அவரது உதவியுடன் தனது முதல் படைப்பை (கவிதைகள், கட்டுரைகளை) வெளியிட்டார். பின்னர் தொடர்ந்து அவரது இலக்கியப் படைப்புகள் வளர்ந்து கொண்டேயிருந்தன.

மரியா வில்லியம்ஸின் முதல் படைப்புகளில் ஒன்றான அமைதி பற்றிய ஒரு (Ode) கவிதை, அமெரிக்கப் புரட்சியின் முடிவைக் கொண்டாடியது. 1784 ஆம் ஆண்டில், கிப்பிஸின் வழிகாட்டுதலின்கீழ், வில்லியம்ஸ் பெரு என்ற ஆறுகான்டோக்களில் ஒரு நீண்ட கவிதையை எழுதி வெளியிட்டார். இக்கவிதை தென் அமெரிக்காவின் பழங்குடி மக்கள் மீது ஸ்பானிஷ் காலனித்துவத்தின் விளைவுகளை உணர்வுப் பூர்வமாக விவரிக்கிறது. 1786 இல் வெளியிடப்பட்ட அவரது அடுத்த தொகுப்பு, கவிதைகள், மரியா வில்லியம்ஸை ஒரு காத்திரமான சமூக விமர்சகராகவும், பெண்ணிய உணர்திறனின் உண்மையான ஆதரவாளராகவும் அவரது கவிதைத் திறன்களையும் நிரூபணமாக்கியது.

போர், அடிமைத்தனம், மதம் மற்றும் ஸ்பானிய காலனித்துவ நடைமுறைகளை அவரது கவிதைகள் கடுமையாக எதிர்த்தன. பிரெஞ்சுப் புரட்சியை ஆதரிக்கும் மரியா வில்லியம்ஸின் நாவல், ஜூலியா, 1790 இல் வெளியிடப்பட்டது. பிரான்சின் கிரோண்டிஸ்டுகளுடன் தன்னைக் கருத்தியல் ரீதியாக மரியா இணைத்துக் கொண்டவரானார். அவர் பாரிஸுக்குச் சென்று, பிரான்சிலிருந்து கடிதங்கள், (Letters From France ), பிற உரைநடைப் படைப்புகளென எழுதிக் குவித்தார். ‘பெண்ணுரிமைப் பேரிகை’, மேரிவோல் ஸ்டோன்கிராஃப்ட் (ஆங்கிலப் புரட்சிக் கவிஞன் ஷெல்லியின் மாமியார்), பிரான்சிஸ் கோடிமிராண்டா, மனித உரிமைத் தத்துவத்தின் (Rights of Man) பிதாமகர்களில் ஒருவரான தாமஸ் பெயின் போன்ற பெரிதும் அறியப்பட்ட தத்துவவாதிகளுடன் மகிழ்விக்கும் சந்திப்புகளை, (salons) வரவேற்புக் கலந்துரையாடல்களை அடிக்கடி நடத்தினார். அவற்றின் வழி அவர் கருத்தியலும், கவிதைப்போக்கும் சீரடைந்தன; கூரடைந்தன.

அக்டோபர் 12, 1793, அதிகாலை 2 மணிக்கு, மரியா வில்லியம்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மாக்ஸிமிலியன் டிரோபஸ்பியரால் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அவர்கள் லக்சம்பர்க்கிற்கு அனுப்பப்பட்டனர். ஆண்களும் பெண்களும் பிரிக்கப்பட்டபிறகு, வில்லியம்ஸ் மற்றும் பல பெண்கள் ஆங்கில கருத்தாக்க உடன்படிக்கைக்கு அனுப்பப்பட்டனர். அந்த ஆண்டின் நவம்பர் பிற்பகுதியில் வில்லியம்ஸ் விடுவிக்கப்பட்டனர்,

பிரான்சின் கிராண்டிஸ்ட்டுகளோடு இணைந்திருந்த அவரது அரசியல் நம்பிக்கைகளுக்காகத்தான் குடும்பத்துடன் லக்சம்பேர்க் சிறையில் தள்ளப்பட்டார் மரியா வில்லியம்ஸ். அந்தச் சிறைவாசம், புதிய பல சானட்டுகளை எழுதவும், பிரெஞ்சு இலக்கியங்கள் பலவற்றைத் தொடர்ச்சியாக ஆங்கில மொழிபெயர்ப்புகள் செய்யும் பணிகளுக்கும் உதவியது. மரியாவை மாட்டி வைத்த சிறைச்சாலை பூட்டிவக்க முடியவில்லை அவரது படைப்புப் பிரவாகத்தை!

ஏப்ரல் 16, 1794 அன்று, ரோபஸ்பியர் அனைத்து பிரபுக்களையும் வெளிநாட்டினரையும் பாரிஸைவிட்டு வெளியேற உத்தரவிட்டார். மரியா மற்றும் அவரது குடும்பத்தினர் பிரான்சிலிருந்து வெளியேறினர். மரியா வில்லியம்ஸ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். ஆனால், சில மாதங்களில் திரும்பினார்.

பிரான்சு திரும்பிய பின் அமியான் அமைதி ஒப்பந்தம் பற்றிய கவிதைக்காக நெப்போலியன் அவரைக் கைது செய்யும் வரை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். வில்லியம்ஸ் நெப்போலியனால் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஏனெனில் அவர் 1802 இல் எழுதிய Ode on the Peace of Amians என்ற கவிதை நெப்போலியனுக்கு எரிச்சலூட்டியது.

பல்வேறு தலைப்புகளில் கவிதைகள்: பிரான்சில் அறிவியல் மற்றும் இலக்கியத்தின் தற்போதைய நிலைகுறித்த அறிமுக குறிப்புகளுடன். லண்டன்: ஜி மற்றும் டபிள்யூ பிவிட்டேக்கர், 1823. (Poems on various subjects: with introductory remarks on the present state of science and literature in France. London: G. and W. B. Whittaker, 1823.) என்ற தனது நூலுக்கு மரியா வில்லியம்ஸ் எழுதியுள்ள நீண்ட முன்னுரையில் தனது அந்தக் கவிதை பற்றியும் நெப்போலியன் அக்கவிதையால் சினமுற்றதையும் இதோ அவரது சொற்களாலேயே அறியலாம்:

கவிஞர் ஹெலன் மரியா வில்லியம்ஸ்
கவிஞர் ஹெலன் மரியா வில்லியம்ஸ்

“இத்தொகுப்பில் நான்காவது கவிதை அரசியல் அடையாளங்கொண்டதாகும். 1801 ஆம் ஆண்டில் அமியான் என்னுமிடத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சமாதானம் பற்றிய பாடல் இது. அந்தச் சிறுகவிதையில் பொதிந்துள்ள உணர்வுகளுக்கோ கணிப்புகளுக்கோ நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. வாழ்க்கையின் பொதுவான கணக்கீடுகளில் தவறுகளைச் செய்வது மிகவும் வழக்கமானது, எளிதானது, ஒரு மாபெரும் புரட்சியின் பல காலகட்டங்களைக் குறிப்பதில் தவறு மன்னிக்கப்படலாம், நாம் "விதியின் புத்தகத்தைப் படித்து விட்டோம்" என்பதை மிகவும் தாமதமாக அது நம்மை உணர வைக்கிறது. போனபார்ட்டின் அதிருப்திக்கு ஆளானதே இந்த ஓட் (Ode) சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரே சம்பவம்.

இக்கவிதையை மார்னிங் கிரானிக்கிள் பத்திரிகையின் ஒரு மூலையில் அவர் அதைக்கண்டார். அவருடைய உத்தரவின்படி அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. "உனது அக அலைகளால் சூழப்பட்டுள்ள" என்ற சொற்றொடர் இங்கிலாந்துக்குப் பிரயோகிக்கப்பட்டதாகவும், அது பிரான்சுக்கு துரோகம் செய்வதாகவும் அவர் கருதி மிகவும் எரிச்சலடைந்ததாக அறியப்பட்டுள்ளது. ஆனால், எனக்குத் தெரிந்து அவர் உண்மையில் வெறுத்தது என்னவென்றால், அந்தக் கவிதையில் அவரது பெயர் ஒருமுறைகூட எழுதப்பட்டிருக்கவில்லை (உச்சரிக்கப்படவில்லை.). அதுதான் அவர் சினங்கொள்ளக் காரணமாக இருந்திருக்கும். இந்தக் கவிதைமேல் அவர் சிறிதளவேனும் கவனம் செலுத்தியிருப்பது எவ்வளவு தனித்துவமாகத் தோன்றினாலும், அது உண்மைதான். பேராசைக்காரர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் நேரம் ஒதுக்குகிறார்கள். அவர்கள் பெரிய விஷயங்களில் முழுமையாக மூழ்கியிருப்பதாகத் தோன்றினாலும், தங்கள் சொந்த அகங்காரத்துடன் தொடர்புடையதாக இருந்தால் மிக நுண்ணிய பார்வையை ஒருபோதும் இழக்கமாட்டார்கள்.’’

என்று தனக்கு இடர் வரும்போதும் நகையாடியிருக்கிறார், பேரரசர் நெப்போலியனை, எள்ளலோடு. பிரெஞ்சுப் புரட்சியின் அதிஉன்னதக் முக்கோட்பாடுகளான ‘சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்’ என்பனவற்றை அழித்துச் சிதைக்க வந்த கரையானாக– பிற ஐரோப்பிய நாடுகளின் சுதந்திரத்தை அபகரிக்க முற்பட்ட- நெப்போலியனின் ஏகாதிபத்திய அபிலாசைகள், பிரெஞ்சுப் புரட்சியின் மிகு தீவிர ஆதரவாளராக இருந்துவந்த மரியா வில்லியம்ஸை மனத்தொந்தரவு அடையவைத்தது.

வெளிப்படையான தாராளவாதிகளும் நெப்போலியனின் சகிப்புத்தன்மையற்ற போக்கின் சாட்டையடியை உணர்ந்தனர். தாராளவாத அறிவுஜீவிகளின் மீதான தனது அதிருப்தியை நெப்போலியன் பல வழிகளில் வெளிப்படுத்தினார். மிகவும் மதிக்கப்பட்டிருந்த கொள்கை ரீதியான தாராளவாதிகளில் ஒருவரான மேடம் டுஸ்டேல், நெப்போலியன் தர்பார் விதித்த “சுயதணிக்கையை” (Self -Censorship of writings) ஏற்றுக்கொண்டு தன் படைப்புகளைத் தளையிடுவதற்குப் பதிலாகத்தானே நாட்டை விட்டு வெளியேறுவது என்பதைத் தேர்ந்தெடுத்தார். இதற்கிடையில்,“சகித்துக்கொள்ளப்பட்ட செய்தித்தாள்கள்” மட்டுமே கடுமையாக தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்தன. எடுத்துக்காட்டாக, புரூமேர் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த நேரத்தில் பாரிஸில் 70-க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் இருந்தன; 1811 வாக்கில் 4 ‘அதிகாரபூர்வ’ செய்தித் தாள்கள் மட்டுமே தப்பிப் பிழைத்தன. செய்தி, பிரசாரம் என்பது நெப்போலியனின் ‘புத்திசாலித்தனமான’ விருப்பத்திற்கு, அவனது நிர்வாகத்திற்கு இணையாக இருந்தால்தான் வெளிவரும்.

கருத்துக்கூறும் சுதந்திரத்தின் கொடியை உயர்த்திப்பிடித்து, உன்னதப் புரட்சி கண்ட பிரான்சில் கருத்துக்கூறும் உரிமைக் குரல்வளையை நெப்போலியன் நெரித்து வைத்துக் கொண்டிருந்த சூழல்களில் “எழுதுவதில் மகிழ்வில்லை” (‘No writing sans the pleasure of penning letters’), ‘கொடுங்கோலரசின் கீழ் வாழ்தலின்னா’ எனக் கருதி மரியா வில்லியம்ஸ் தன் எழுதுகோலை இறுகமூடிக் கீழே வைத்தார்.

காலம் நெப்போலியனது வீழ்ச்சியைக் காட்டியபின், “இனிச் சுதந்திரமாக எழுதலாம்” என மகிழ்ந்த மரியா, 1815 இல் மீண்டும் தனது பேனாவைத் திறந்து இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கினார். 1827 இல் மரியா வில்லியம்ஸ் இறக்கும் வரையிலும் கவிதைகள், கடிதங்கள், ஓவியங்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் எனக் கலைப்பரப்பின் பல வடிவங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தார் ஹெலன் மரியா வில்லியம்ஸ்.

ஆணவ ஆட்சியும், நெப்போலியனும் அவரால் சிறைப்பட்ட மரியா வில்லியம்ஸ் காலத்திலேயே மக்கிப்போயின; மரியா வில்லியம்ஸ் கவிதைகள் நிலைத்துள்ளன, காலத்தை வென்று.

**

[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்] (wcciprojectdirector.hre@gmail.com)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com