

தேவை மன ஒருமை!
யோகி ஒருவரின் உடலில் அம்பு பாய்ந்துவிட்டது. சொல்ல முடியாத வேதனையால் துடித்தார். அதைப் பிடுங்கினால் வேதனை அதிகரிக்கும்.
இந்த நிலையில் அவரது உடலில் இருந்த அம்பை எப்படிப் பிடுங்குவது? இன்றைய நவீன மருத்துவ உலகில் உள்ளது போல 'குளோரோபார்ம்' போன்றவை அந்தக் காலத்தில் கிடையாதே! மிகவும் இக்கட்டான நிலை.
யோகிக்கு அறிமுகமான சிலர் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அங்கு இருந்தவர்களிடம், அம்பை இப்போது இழுக்காதீர்கள். யோகி தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தியானத்தில் ஈடுபடுவார். பிரார்த்தனை செய்வார். அப்படி அவர் அமர்ந்திருக்கும்போது அம்பை எளிதாக எடுத்துவிடலாம் என்றனர்.
மாலையில் அவர் பிரார்த்தனையில் ஈடுபடும் நேரம் வந்தது. ஒரு கணத்தில் அவரது சித்தம் ஒருமுகப்பட்டதாகிவிட்டது. அப்போது அவரது உடலில் ஊடுருவி இருந்த அம்பைப் பிடுங்கி எடுத்துவிட்டனர். அவ்வாறு எடுத்தது அவருக்குத் தெரியவில்லை.
ஒருமுக சிந்தனைக்கு உள்ள வலிமை எவ்வளவு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உலக செயல்பாடுகளிலும் சரி, ஆன்மிக செயல்பாடுகளிலும் சரி, மனம் ஒருமுகப்படவில்லை என்றால் வெற்றி கிடைக்காது.
பழக்கத் தோஷம்
ஒரு தந்தைக்கு மிகவும் சோம்பேறியான மகன் ஒருவன் இருந்தான். அவனைத் திருத்த முடியாமல் அவனுக்கு ஜோடி மாடுகளும், எண்ணெய் ஆட்டுவதற்கு ஒரு செக்கும் வாங்கிக் கொடுத்து, தனியே எண்ணெய் ஆட்டிப் பிழைத்துக் கொள்ளச் செய்துவிட்டார். அந்த சோம்பேறி அப்போதும் திருந்தவில்லை. மாடுகளைச் செக்கில் கட்டியவுடன் அதன் கொம்புகளில் சலங்கையைக் கட்டினான்.
மாடு சுற்றும்போது சலங்கை சப்தம் கேட்கும். அது நின்றுவிட்டால் சப்தமும் நின்றுவிடும். அப்போது மட்டும் அதைக் கவனித்து ஓட்டினால் போதும். அதுவரை நிம்மதியாக வேறு இடத்தில் படுத்து இருக்கலாம் - இப்படி எண்ணி அவன் அப்படிச் செய்தான். கொஞ்ச நேரம் கழித்து எழுந்துவந்து கவனித்தான். செக்கில் அவன் போட்ட எள் அப்படியே இருந்தது. மாடு மட்டும் சுற்றிக் கொண்டிருந்தது.
இவ்வளவு நேரம் சலங்கை சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததே. ஆனால், எண்ணெய் ஆட்டப்படவில்லையே எனத் திகைத்து மறுபடியும் மறைவில் போய் நின்று கவனித்தான். இவன் போய் விட்டதைக் கண்ட மாடு, சுற்றுவதை நிறுத்திவிட்டு, ஒரே இடத்தில் நின்று கொம்பை மட்டும் ஆட்டி சலங்கை சப்தத்தை உண்டு பண்ணியது.
சோம்பேறியுடன் பழகிய மாடு அல்லவா அது!
மனிதன் இன்பமாக வாழவே பிறந்திருக்கின்றான். ஆனால், அவன் துன்பத்தில் தவழுகிறான். இது வருந்தத்தக்க விஷயம். ஆனந்தத்தின் ஆதாரம் மனிதனிடமே இருக்கிறது. நேர்மையான வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் என்று தனது கடமையின் மேல் பக்தி கலந்த ஒரு ஈடுபாடு, கடமையே கடவுள், வேலையே வழிபாடு.
வாழை மரத்தில் கட்டடமா?
அரண்மனை கட்டித் தருமாறு அரசன் ஒருவன் கட்டடக் கலை நிபுணரிடம் உத்தரவிட்டான். கட்டடத்துக்குப் பயன்படும் மரம் வழவழப்பாகவும், நேராகவும், கணுக்கள் ஒன்று கூட இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்.
நாட்டின் அனைத்துப் பகுதியில் தேடியும் கட்டடக் கலை நிபுணருக்கு மன்னர் சொன்ன மாதிரி மரம் அகப்படவில்லை. கடைசியாக வாழை மரங்களைக் கண்டார். மன்னர் விரும்பியபடி அடிமரம் இருப்பது கண்டு அகமகிழ்ந்தார். உடனே அவற்றை வெட்டி எடுத்துக் கொண்டு மன்னரிடம் சென்றார்.
நீர் கொண்டு வந்த மரம் உண்மையிலேயே வழவழப்பானது என்பது உண்மைதான். ஆனால் தேவையான அளவு வலிமை உடையதாக இல்லையே? இதைக் கொண்டு கட்டடம் கட்டுவது சாத்தியமில்லை என்றார் மன்னர்.
புறத்தோற்றம் என்பது முக்கியமன்று. அகப் பண்பே - உள் வலிமையையும் அதன் தகுதியையும் தீர்மானிக்கிறது.
ஆட்டை அவிழ்த்து விடு!
ஏழை யூதர் ஒருவர் தன் மத குருவிடம் சென்று, குருவே வீட்டில் கூட்டம் தாங்க முடியவில்லை. நான், என் மனைவி 5 குழந்தைகள், என் பெற்றோர் என 9 பேர் ஒரு சின்ன அறையில் வசிக்கிறோம் என்றார்.
அதற்கு மத குரு, இவர்களோடு உன் ஆட்டையும் அந்த அறையில் கட்டி வை என்றார்.
ஆலோசனை கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை, மத குருவின் வாக்கு ஆயிற்றே தட்ட முடியுமா? எனவே, ஆட்டையும் தனது வீட்டின் அறையில் கட்டிவைத்தார். அவதி மேலும் அதிகமாக ஆகிவிட்டது.
பத்து நாள்களாயிற்று, யூதர் மீண்டும் மத குருவைக் காண வந்தார். என் வீட்டில் வசிக்கவே முடியவில்லை தாங்கள் தான் ஏதாவது ஒரு வழி கூறவேண்டும் என்று வேண்டினார்.
உடனே மத குரு ஆட்டை அவிழ்த்துவிடு என்றார். அவ்வளவுதான். யூதர் தன் வீட்டுக்கு உடனே ஓடிச் சென்று ஆட்டை அவிழ்த்து, வெளியே விட்டார். அதற்குப் பின்பு அவர் மனம் மகிழ்ச்சியுற்றது.
ஆஹா! ஆடுபோன பின் வாழ்க்கை எத்தனை இன்பமாக இருக்கிறது. குருவின் யோசனையே யோசனை என்று குருவைப் புகழ்ந்தார்.
இன்று மனிதன் கவலையின் கைதியாக இருக்கிறான். மன நிறைவின்மையே கவலைக்குக் காரணம். ஆனந்தத்தின் ஆதாரம் அவனிடமே இருக்கிறது.
வேரா? கயிறா?
அரசன் ஒருவன் வேட்டையாடச் சென்றபோது கால் இடறி ஆழமான பாழும் கிணற்றில் விழுந்துவிட்டான். அதிர்ஷ்டவசமாகக் கிணற்றின் பக்கச் சுவரில் தனியாகத் தொங்கிக் கொண்டிருந்த மரம் ஒன்றின் வேரினைக் கைகளால் கெட்டியாகப் பற்றிக் கொண்டதால் சாவிலிருந்து தப்பித் தொங்கிக் கொண்டிருந்தான். அவ்வழியாகச் சென்ற முனிவர் அரசரின் முனகல் சப்தத்தைக் கேட்டு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். மன்னர் நிலை கண்டு பதறி ஒரு கயிற்றைப் போட்டு, அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்படி கூறினார்.
கிணற்றுக்குள் கயிறு தொங்கிய நிலையில் வேரா, கயிறா என்ற கேள்வி மன்னனிடம் எழுந்தது. வேரானது அவன் உயிர் பிழைக்க உதவியது என்பது உண்மைதான். ஆனால் கயிறு போடப்படும் வரையில்தான் அதற்கு மதிப்பு. கயிறு அவனைக் காப்பாற்றத் தயாரான பிறகும் அவன் அந்த வேரையே பற்றிக் கொண்டு இருப்பது முட்டாள்தனமானது அல்லாமல் வேறு என்ன?
உலக வாழ்க்கை வேர் போன்றது. கயிறு என்பது விடுதலைப் பேறு. முக்திபெறும் வழி. இறைவன் உண்மையை மின்னல்போல் பளிச்சென காட்டுவான். கயிறாக அதைப் பிடித்துக் கொண்டால் நாம் முக்தி அடையலாம்.
[ஸ்ரீ சத்ய சாயி அவதார நாள் - நவ. 23, 1926]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.