

ஸ்ரீவேணுகோபாலன்
எத்தனையோ அவதாரங்கள் நம் நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன. அந்த அவதாரங்கள் மறைந்துபோன பிறகுதான் நாம் அவர்களை இனம் கண்டு கொண்டிருக்கிறோம். நம்மிடையே இன்று வாழும் அவதாரமாகத் திகழ்கிறார் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா.
ஆந்திரத்தில் ஒரு குக்கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த பாபா 14 வயது வரைதான் பள்ளிக்குப் போயிருக்கிறார். எனினும், அவர் அளித்துள்ள கருத்துகள், உபதேசங்கள், அறிவுரைகள் எல்லாமே என்னை அசத்திவிட்டன.
கடவுள் தனது அருள் மயமான தெய்வ சக்தியை மனித உருவத்தில் தோன்றச் செய்து நம்மிடையே ஓர் அவதார புருஷனாக அவதரிப்பார் - இது ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாக்கு. இப்படித்தான் சத்ய சாயி பாபா நம்மிடையே அவதரித்துள்ளார். மிகச் சிறிய வயதிலேயே அவரது அருள் வெள்ளம் சுரக்க ஆரம்பித்துவிட்டது. ஏழை, எளியோர், பிச்சைக்காரர்கள் எல்லோர் மீதும் அவரது ஒப்பற்ற கருணை வழிந்தோடுகிறது.
1940-ம் ஆண்டிலிருந்தே சத்ய சாயி தம்மை சாய் பாபாவின் மறுபிறப்பு என்று கூறிக் கொண்டு வருகிறார். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் அவர் வாயிலிருந்து சிவராத்திரி நாளன்று சிவலிங்கங்கள் உற்பத்தியாகி வந்தன. இதுயாரும் கண்டிராத அதிசயம். லிங்கங்கள் ஒரே வடிவத்தில் அல்லாது வெவ்வேறு வடிவம் கொண்டவை. அவை வெறும் கல்லால் மட்டும் ஆனவை அல்ல. சிவ லிங்கங்கள் உலோகத்தால் ஆனவை.
ஒரு வருடம் ஒன்பது வெள்ளி லிங்கங்கள் வெளிவந்தன. பல வருடங்களில் ஐந்து அல்லது ஏழு லிங்கங்கள் வரிசையாக வந்திருக்கின்றன. இந்த சமயத்தில் இருபதிலிருந்து இருபத்தைந்தாயிரம் பக்தர்கள் ஆவலுடன் அந்நாளில் காத்திருப்பார்கள்.
சிவராத்திரியில் அந்த நாள்களில் பண்டிதர்கள் சமய இலக்கியங்களில் இருந்து உபன்யாசம் செய்து கொண்டிருப்பார்கள். பண்டிதர்கள் முடித்த பிறகு பாபா எழுந்திருப்பார். தமது இனிமையான குரலில் ஓர் இனிய உரையை நிகழ்த்துவார். அந்த உரையை முடிக்கும்போதே அல்லது அதை அடுத்த பஜனை செய்யும்போதே பாபாவுக்கு சிறு சிறு இருமல்கள் தோன்றிவிடும். அந்த விம்மல்கள்தான் லிங்கங்கள் வரப்போகின்றன என்பதற்கு அறிகுறி!
திடீரென்று சுவாசங்கள் வேகமாக வெளிவரும். மக்கள் எல்லோருமாகச் சேர்ந்து 'ஓம் நமச்சிவாய' என்று கோஷம் எழுப்புவார்கள். பாபாவின் அடிவயிற்றிலிருந்து வாய்க்கு அந்த லிங்கங்கள் நகர்ந்துவந்து சேரும். பிறகு வாய்வழியாக ஒரு வெள்ளித்தட்டில் ஒவ்வொன்றாக வந்துவிழும்.
பாபா அவற்றைக் கையால் தூக்கி எல்லோருக்கும் தெரியும்படி காட்டுவார். எல்லோரும் அதைப் பார்ப்பதற்காக இரவு முழுவதும் அந்த லிங்கங்களை வெளியில் வைத்திருப்பார்கள். காலையில் பாபா அவற்றைக் கையில் எடுத்து வரிசையாக உட்கார்ந்திருக்கும் பக்தர்களிடையே கொடுத்து அனுப்புவார். ஒவ்வொருவராக அவற்றைக் கையில் வாங்கிப் பார்த்து ரசித்து மற்றவருக்குக் கொடுப்பார்கள். இதுபோல லிங்கங்கள் சுற்றிச் சுழன்று திரும்பி வந்து சேரும்.
1966-ம் ஆண்டு சிவராத்திரியன்று லிங்க வைபவம் நடந்தது. 20 நிமிடங்களுக்குப் பாபாவின் உடல் தாமாக ஆடிக் கொண்டிருந்தது. அவ்வப்போது விம்மல்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இருமல்களும் படீரென வெடித்தன. தொடர்ந்து ஒரு மரகத லிங்கம் வெளிவந்தது. அதன் உயரம் 3 அங்குலம், ஒரு 5 அங்குல பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு சேர்ந்துதான் அவரது வாய் வழியே வெளியே வந்தன. அதைப் பார்த்தவுடன் கூடியிருந்த மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி தாங்காமல் ஆரவாரம் செய்தார்கள்.
ஒரு முறை கோவாவுக்கு காரில் பயணமானார் பாபா. பாதை கரடுமுரடாக இருந்தது. பாபா வலியால் அவதிப்படுவது அவரது முகபாவத்தில் இருந்து தெரிந்தது. எப்போதும் இல்லாதவகையில் கார் ஓட்டுநரை பாபா கடிந்துகொண்டார்.
கோவா சென்றதும், துணை நிலை ஆளுநர் நகுல் சென்னின் இல்லத்தில் பாபாவும், அவருடன் சென்றவர்களும் தங்கினர். வழக்கமாக காலையில் சீக்கிரம் எழுந்துவிடும் பாபா மறுநாள் காலை 8 மணி வரை எழுந்திருக்கவில்லை. உடன் சென்றவர்களும், நகுல் சென்னும் கவலை அடைந்தனர்.
முதல் நாள் இரவு முழுவதும் பாபா தூங்கவில்லை. எனினும் மற்றவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக வலி குறித்து யாரிடமும் இரவில் தெரிவிக்கவில்லை. அடுத்த நாள் வலி அதிகமாகவே நகுல் சென், பிரபலமான மருத்துவர்களை வரவழைத்தார். பாபாவுக்கு குடல் வால் பருத்து கீழ் பிடித்திருக்கிறது எனவும், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினார். எனினும், பாபா அதற்கு சம்மதிக்கவில்லை.
பாபா உடல் நலம் சரியில்லாத செய்தி உலகம் முழுவதும் பரவியது. பாபா பக்தர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். ஓரிரு நாள்களுக்குப் பின் பாபாவை பரிசோதித்த மருத்துவர்கள் குடல்வால் உடைந்து ரத்தத்தில் சீழ் கலந்துவிட்டது. இது விரைவில் மரணத்திற்குக் கொண்டு சென்று விடும் என்றனர்.
இருப்பினும் பாபா கவலைப்படவில்லை. இதனிடையே ஒரு நாள் பாபா பஜனையில் கலந்துகொள்கிறார் எனச் செய்தி பரவியது. இதையடுத்து பாபாவும் பஜனைக்கு ஒப்புக் கொண்டார். பாபாவாவது, பேசுவதாவது என ஒரு சிலர் நினைத்திருந்த வேளையில் பஜனைக்குப் பின் பாபா சுமார் 40 நிமிடங்கள் பேசினார்.
எனது பக்தர் ஒருவரின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவரது வேதனையை நான் வாங்கிக் கொண்டு அவரை குணப்படுத்தினேன். இது அற்புதம் என நீங்கள் நினைக்கலாம். அப்படிப் பார்த்தால் மூச்சு விடுவது கூட அற்புதம்தான். இதுவே கடவுளின் சக்திக்குச் சான்று என்றார்.
பாபா பேசுவதற்கு முன், பாபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அசந்து விட்டனர். குடல்வால் பருத்து வெடித்தது மறைந்து சாதாரணமாக ஆகியிருந்தது.
[ஸ்ரீ சத்ய சாயி அவதார நாள் - நவ. 23, 1926]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.