பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - சில ஆலோசனைகள்!

தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக...
chennai Highcourt
சென்னை உயர் நீதிமன்றம்
Published on
Updated on
5 min read

அண்மையில் 41 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய ''கரூர் பெருந்துயரைத்'' தொடர்ந்து தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள், ‘சாலை உலாக்கள்’ நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை - உயிரிழப்புகள் நடந்த அடுத்த நாளே - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்துக் கட்சியினரையும் கலந்தாலோசித்து விரைவில் உருவாக்கப்படும் என்று அறிவிப்புச் செய்தார். பின்னர், இவ்விஷயம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வில் பரிசீலனையாகி, பத்து நாள்களுக்குள் தமிழக அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தடாலடியாக அக்டோபர் 27 அமர்வில் வற்புறுத்தியது.

அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) அவசர கோலத்தில் செய்யக்கூடிய வேலையல்ல. இவ்விஷயம் அனைத்து அரசியல் கட்சியினர், அரசுத் துறைகள், சேவை அமைப்புகள், வல்லுநர்கள் உள்ளிட்ட பலதரப்பினரது விரிவான கருத்துக்களைப் பெற்று, உரியக் கால அவகாசமளிக்கப்பட்டுப் பொதுவெளியிலும் பலநிலைகளில் விவாதிக்கப்பட்டு, இவற்றின்வழி சேகரிக்கப்படும் கருத்துக்கள் அதன்பின் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட்டுத் தொகுக்கப்பட வேண்டியதாகும். இத்தகைய மிக முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளைப் பத்தே நாள்களில் வடிவமைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மாநில அரசை உயர்நீதிமன்றம் முதலில் வற்புறுத்தியது சரியேயல்ல.

என்றாலும், 10-11-2025 விசாரணை அமர்வில், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘வரைவு வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்காக பல்வேறு நிர்வாக நிலைகளில் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், நவம்பர் 6 ஆம் தேதி 20-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது என்றும், மேலும் 40-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குக் கருத்துக் கேட்டு SOP வரைவு நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும், தகவல் அளித்தார். கருத்துகளைச் சேகரிக்கவும், மேலும் ஆலோசனைகளை நடத்தி வரைவை இறுதி செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார். ஆனால், நியாயமான அக்கால அவகாசத்தை அளிக்காமல், நீதிமன்றம், மேலும் 10 நாள்கள் (நவம்பர் 20 வரை) மட்டுமே அவகாசம் அளித்தது.

தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் அமர்வில் (21 நவம்பர் 2025) , கூடுதல் அட்வகேட் ஜெனரல் 46 பக்கங்கள் கொண்ட எஸ்ஓபி-யின் இறுதி வரைவு நகலைச் சமர்ப்பித்தார் என்றும், பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை நிகழ்ச்சிகள், பல்வேறு பெரிய அளவிலான நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 16 விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சமர்ப்பிக்கப்பட்ட SOP விதிக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன. கிடைத்துள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமானால், தற்போது நீதிமன்றத்தின் முன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், ஒரு முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளாக அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. முதல் காரணம், இது நீதிமன்ற நிர்பந்தத்தால் அவசர கதியில் செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் அவலங்கள் நம் நாட்டில் மேலும் நடைபெறா வண்ணம் நம் நாட்டில் ஏற்கெனவே முயன்று வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு உருவாக்கிய பெருந்திரள் மக்கள் கூடும் இடங்களில் கூட்டங்களை நிர்வகிப்பது குறித்த (2014) வழிகாட்டுதல்கள்; தேசிய காவல் இயக்ககத்தின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ள ‘கூட்டக் கட்டுப்பாடு மற்றும் கூட்ட மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், 2025, பிற மாநிலங்களில் ( உ.பி., குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம்) உள்ள கூட்ட மேலாண்மை ஒழுங்காற்று விதிகள் ஆகியவற்றை நன்கு பரிசீலித்து, அவற்றின் சிறந்த கூறுகளைத் தெரிந்து, சேகரித்து வரைவு செய்யப் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் ( நவம்பர் 6, 2025) வழங்கப்பட்ட வரைவு நெறிமுறைகளை அக்கட்சிகள் தமது அமைப்புகளில் விவாதித்துக் கருத்துகளைத் திரட்டி வழங்கப் போதிய கால அவகாசம் ஏதும் வழங்கப்படவில்லை. நவம்பர் 6 கூட்டத்திற்குப்பின், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு வரைவு நெறிமுறைகளை அனுப்பிக் கருத்துக் கேட்கப்பட்டிருப்பதாக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட வரைவு நெறிமுறைகள் குறித்து எத்தனை கட்சிகளிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன என்பதும், பெறப்பட்ட கருத்துகளைச் சரிபார்த்துத் தொகுத்து வழங்கப் போதிய கால அவகாசம் இருந்திருக்குமா என்பதும் தெரியவில்லை.

மேலும் SOP குறித்து அரசியல் கட்சிகளிடம் மட்டும் ஆலோசனை பெற்றால் போதாது. பேரிடர் மேலாண்மை, கூட்ட மேலாண்மை வல்லுநர்கள், கூட்டங்களால் உயிர் இழப்புகளைச் சந்தித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நெரிசல்களிலிருந்து நல்வாய்ப்பாகத் தப்பித்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பொது வெளியில் விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் அடிப்படையிலும் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே நியாயமானது.

வழிகாட்டு நெறிமுறைகள் என்பது எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவே இருக்க வேண்டும் சமய நிகழ்ச்சிகளுக்கு விதிவிலக்கு அளித்திருப்பது சரியல்ல. ஹரித்துவார் கும்பமேளா 1820-இல் உயிரிழப்புகள் 430; அலாகாபாத் (உ.பி) கும்பமேளா 1954-இல் கூட்ட நெரிசல் மரணம் 500 - 800 பேர் வரை; 2005-இல் மகாராஷ்டிரம், மந்தேர் தேவி கோயில் நெரிசல் சாவு 291; 2008 (செப்டம்பர்) ராஜஸ்தான், சாமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசலில் 224 பேர் பலி; கடந்த ஆண்டில் (2024) உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் மதப் பிரசங்க நிகழ்வில் 121 பேர்கள் மரணத்தைச் சந்திக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது என்பதெல்லாம் பாடமாக இருக்க வேண்டும் அல்லவா?

ஐந்தாயிரம் பேருக்குக் குறைவான கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது என்பதும் ஒரு சரியான உத்தேசம் அல்ல. நடைமுறையிலுள்ள காவல் சட்டம் 1861 (பிரிவுகள் 30,31,32) கூட்ட மேலாண்மை குறித்த தெளிவான ஏற்பாடுகளை வரையறுப்பதாக இல்லை என்பது முன்பிருந்தே உணரப்பட்டுவரும் குறைபாடாகும்.

கூட்டம் எந்த அளவினது ஆயினும், அடிப்படை வசதிகள் (உணவு குடிநீர், கழிப்பறைகள், தீத்தடுப்பு, முதலுதவி) முதலிய ஏற்பாடுகளும் பாதுகாப்பு அம்சங்களும் எந்த வகையிலும் குறைவில்லாததாகவே இருக்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கர்ப்பிணிப் பெண்கள் உடல் திறன் மாறுபட்டவர்கள் முதியோர், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்புகள் ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும். காத்திருப்பு நேரம், நிகழ்வுகளின் மொத்த நேரம் குறித்த வரையறைகள், அவசரகால வெளியேற்ற வழிகள் என்பவை அனைத்துக் கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவே இருக்க வேண்டும்.

கூட்டங்களில் ஏற்படும் இழப்புகள் (பொதுச்சொத்து, தனியார் சொத்துகளுக்கான சேதங்கள் உள்ளிட்டவை) குறித்து வழிகாட்டு நெறிமுறைகளில் நிகழ்வுகளுக்குப்பின் பெறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைச் செம்மையாகச் செயல்படுத்த , சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கரூர் நிகழ்வு தொடர்பான வழக்கொன்றில் குறிப்பிட்டதுபோல, கூட்டம் / நிகழ்வுக்கு அனுமதி பெறும்போதே ஒரு குறிப்பிட்ட அளவு, நியாயமான தொகையை - தேவை ஏற்படாவிட்டால் திரும்பப் பெறக்கூடியதான முன் பணமாக - வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் என நிர்ணயிப்பது கூட்ட ஏற்பாளர்களிடையே பொறுப்புணர்வை அதிகரிக்கும். கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் இழப்புகளுக்குப் பொறுப்பேற்கப் பிணைப்பத்திரம் பெறும் நடைமுறையும் இணைக்கப்பட வேண்டும்.

கூட்டம்/ நிகழ்வு நடத்த எவ்வளவு நாள் முன்பு அனுமதி கோரி விண்ணப்பம் வழங்கப்பட வேண்டும் என நிர்ணயித்திருப்பதுபோல, அனுமதி அளிக்கும் அலுவலர் எவ்வளவு நாள்களுக்குள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து - விதிக்கப்படும் நிபந்தனைகளைக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்ய ஏதுவாக உரிய கால அவகாசம் தரும்வகையில் – விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்க வேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட வேண்டும்.

கூட்டங்கள் நடத்த நிர்ணயிக்கப்பட்ட இடங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அடையாளம் காணும்போது, அது ஒருதலை பட்சமாக நிகழாமல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சியினர், சேவை அமைப்புகள் காவல்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல தரப்பினரையும் கலந்து ஆலோசித்து இசைவுடன் உரிய இடங்களாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

கூட்டம்/ நிகழ்வு நடந்த பின்னர் திடக்கழிவுகள் அகற்றுதல், நிகழ்விடத்தை முன்பிருந்த நிலைக்குச் சரிசெய்து அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாக வைக்கும் ஏற்பாடுகளுக்கான கட்டணம்/ தனியே முன் வைப்புத்தொகையாகச் செலுத்தப்பட வழிகாட்டு நெறிமுறைகளில் விதிக்கப்பட வேண்டும்.

உயிரிழப்புகள் ஏற்படாத நோக்கில் உரிய ஏற்பாடுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டாலும், ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் கூட்ட ஏற்பாளர்கள் பொறுப்பேற்பதை உறுதி செய்யும்வகையில், பொது, குழு காப்பீடு வாய்ப்புகளைக் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஆலோசித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அத்தகைய காப்பீடுகள் செய்ய அரசுத் தரப்பில் முன்னெடுப்புகள் வேண்டும்.

அடிப்படையில், தற்போது நீதிமன்றத்தின் முன் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் போதுமான அளவு விரிவாகப் பல நிலைகளில் கலந்து ஆலோசிக்கப்பட வாய்ப்பில்லாமல் – உயர்நீதிமன்றம் நிர்ணயித்த மிகக் குறைந்த காலத்திற்குள்- நீதிமன்ற நிர்ணயத்திற்கு மதிப்பளித்து- அவசரமாக வரைவு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றமே வரைவு SOPஐ பொது வெளியில் தக்கவாறு விவாதித்துக் கருத்துகள் பெற்று இதனைச் செம்மைப்படுத்த ஏதுவான ஆணைகள் பிறப்பிப்பது மிகவும் வரவேற்க உரியதாகும்.

அனைத்துத் தரப்பிலும் விரிவாகக் கருத்துகள் பெற்று வடிவமைக்கப்படும் SOP எதிர்ப்புகளின்றி எளிதாகச் செயல்படுத்தப்படும் வாய்ப்புகள் பெருகும். கூட்ட நெரிசல்களில் மனித உயிர்கள் இழப்பு என்பது பழங்கதையாக வேண்டும்.

* * *

பேரணிகள் அல்லது சாலை உலாக்களுக்கு அனுமதி வழங்கும்போது தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கக்கூடாது என்றும், குறைந்தது 15 நாள்களுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஐந்து முதல் ஏழு நாள்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். முக்கிய கட்சிகளின் கருத்துக்களை அரசாங்கம் ஏற்கெனவே பெற்றுள்ளதைக் கவனித்த அமர்வு, வரைவு வழிகாட்டுதல்கள் குறித்த தங்கள் பரிந்துரைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) மற்றும் பிறருக்கு உத்தரவிட்டது.

பொதுக் கூட்டங்களுக்கான இறுதி வரைவு SOP-யை தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.

சென்னை, தமிழகத்தில் பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கான நிலையான இயக்க நடைமுறையின் இறுதி வரைவின் நகலை தமிழக அரசு வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்த மனுவும், அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியவற்றின் மனுக்களும் நவம்பர் 21 அன்று விசாரணைக்கு வந்தபோது, ​​கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே. ரவீந்திரன், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் 46 பக்கங்கள் கொண்ட எஸ்ஓபி-யின் இறுதி வரைவு நகலை சமர்ப்பித்தார். செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக கட்சி நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுதாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மனுதாரர்களுக்கு SOP நகலை வழங்க AAG-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை நிகழ்ச்சிகள், பல்வேறு பெரிய அளவிலான நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 16 விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை SOP விதிக்கிறது.

அனுமதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள கால அவகாசத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் அடங்கும். சாலை நிகழ்ச்சிகள் பொதுவாக 3 மணி நேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும். விண்ணப்பம் மற்றும் அனுமதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச கூட்ட அளவைப் பொறுத்து அனுமதி வழங்கப்பட்டது.

விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தின் அளவைவிட உண்மையான கூட்டத்தின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருந்தால், அது கடுமையான மீறலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பார்வையாளர்களை 2 மணி நேரத்திற்கு மேல் தேவையில்லாமல் முன்கூட்டியே கூடச் செய்யக் கூடாது என்று SOP கூறுகிறது. நீண்ட காத்திருப்பு காலங்களைத் தவிர்க்க, பங்கேற்பாளர்களுக்குச் சரியான அட்டவணை தெரிவிக்கப்படுவதை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கூட்டப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை, மேடைகள், தடுப்புகள், பந்தல்கள் ஆகியவற்றின் கட்டமைப்பு பாதுகாப்பு, அனைத்து தற்காலிக கட்டமைப்புகள், விளக்கு மற்றும் ஒலி அமைப்புகள், மின் பொருத்துதல்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறுவது உள்பட அனைத்து தொடர்புடைய அம்சங்களுக்கும் ஏற்பாட்டாளரே முழுப் பொறுப்பாவார்.

நிகழ்வின் காலம் முழுவதும் அவசர கால மீட்பு வாகனங்கள் இலவசமாக செல்வதை ஏற்பாட்டாளர் உறுதி செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய நபர்கள் பாதுகாக்கப்படுவதை ஏற்பாட்டாளர் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒரு தனி உறை வழங்கப்படும், மேலும் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்குத் தனி தன்னார்வலர்கள் ஒதுக்கப்படுவார்கள்.

ஒரு ஊர்வலம் நடந்தால், சாலையின் ஒரு பாதிக்கு மேல் ஊர்வலத்தால் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை ஏற்பாட்டாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும், மற்ற பாதி சாலையைப் பொது போக்குவரத்துக்கு இலவசமாக விட்டுவிட வேண்டும் என்றும், இதனால் சாதாரண வாகன இயக்கத்திற்கு இடையூறு ஏற்படாது என்றும் SOP கூறுகிறது.

(செய்தி நிறுவனத் தகவல்களின் உதவியுடன்)

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Summary

Standard guidelines and advice for holding public meetings in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com