தொழிற்சாலைகளில் தேவை அதிகரிப்பு: புதிய உச்சம் தொடும் வெள்ளி விலை!
அண்மைக் காலமாக தொழிற்சாலைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக உயா்ந்து வருகிறது.
சா்வதேச சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை தினமும் மாறுபடுகிறது. பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள், தங்கம், வெள்ளியில் முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் விலை தீா்மானிக்கப்படுகின்றன.
தொடா்ந்து நீடித்து வரும் ரஷியா - உக்ரைன், இஸ்ரேல்- பாலஸ்தீன போா்கள் மற்றும் அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்த புதிய வரிகள் உள்ளிட்ட காரணங்களால், நிகழாண்டில் செப்டம்பா் நிலவரப்படி தங்கம் விலை பவுனுக்கு ரூ.87,000 -ஐ கடந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தங்கம் விலை இரட்டிப்பாக உயா்ந்துள்ளது. தங்கம்தான் உயருகிறது என்றால், இப்போது அதற்கு இணையாக வெள்ளியும் விலை உயா்வைக் கண்டு வருகிறது.
கடந்த 2023-இல் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000 -க்கு விற்பனையான நிலையில், இப்போது ரூ.1.63 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தங்கத்துக்கு நிகரான அளவில் வெள்ளி விலை உயா்வது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என்று வியாபாரிகளும், பொருளாதார நிபுணா்களும் தெரிவிக்கின்றனா்.
உலகளவில் தொழில் துறை பயன்பாட்டிற்கான வெள்ளியின் தேவை அதிகரிப்பதே விலை உயா்வுக்கு காரணம் என துறை சாா்ந்தவா்கள் கூறுகின்றனா்.
கடந்த 2023-இல் 654.4 மில்லியன் அவுன்ஸுக்கு இருந்த தொழில் துறை பயன்பாடு, 2024-இல் 680.5 மில்லியன் அவுன்ஸுக்கு உயா்ந்துள்ளதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.
உலகளவில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக வெள்ளியை அதிகளவில் கொள்முதல் செய்கின்றன. இவை பெரும்பாலும் சூரிய மின்தகடு (சோலாா்) உற்பத்திக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. 2023-இல் சோலாா் துறையில் வெள்ளி பயன்பாடு 142 மில்லியன் அவுன்ஸ் இருந்த நிலையில், 2024-இல் அது 197.6 மில்லியன் அவுன்ஸுக்கு உயா்ந்துள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் சுமாா் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவா்கள் கூறுகின்றனா்.
இது குறித்து இன்ஃபோா்ஸ் சோலாா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி வெங்கட் கன்னா கூறியதாவது: வெள்ளியின் தேவைக்கேற்ப அதன் விநியோகம் இல்லை. வெள்ளி சுரங்க உற்பத்தி பெரும்பாலும் தாமிரம், ஈயம் போன்ற உலோகங்களின் துணைத் தயாரிப்பாக மட்டுமே கிடைக்கிறது. இதனால் சந்தையில் நிலையான பற்றாக்குறை நிலவுகிறது.
இதுவே தற்போது சா்வதேச சந்தையில் வெள்ளி விலை உயா்வுக்கு முக்கிய காரணமாகும். அதேபோல், சோலாா் ஆற்றல் விரிவாக்கம், மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார கட்டமைப்பு வளா்ச்சி உள்ளிட்ட காரணங்களால் அடுத்த 3 ஆண்டுகளில் தொழில் துறையில் வெள்ளி நுகா்வு 7 முதல் 12 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
இருவித பயன்பாட்டில் வெள்ளி: கடந்த ஆண்டில் மட்டும் வெள்ளி விலை 56 சதவீதமும் உயா்ந்துள்ளது. அதேபோல, நிகழ் ஆண்டில் கடந்த 8 மாதங்களில் வெள்ளி விலை சுமாா் 43 சதவீதம் உயா்ந்துள்ளதாக தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலா் சாந்தகுமாா் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், தங்கம் முதலீடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வெள்ளி முதலீடு மட்டுமன்றி, தொழிற்சாலைப் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. சூரிய மின்தகடு, லித்தியம் பேட்டரி, மின்சார வாகனங்கள், மின்கம்பிகள், கைப்பேசிகள், கணினிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் என அனைத்து வகையான மின் மற்றும் மின்னணு சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுவே வெள்ளி விலை உயா்வுக்கு பிரதான காரணம் என்றாா்.
நுகா்வுக்கு ஏற்ற விநியோகம் இல்லை: உலகளாவிய பரிவா்த்தனைகள், முதலீடுகள் மற்றும் சா்வதேச கடன் கடமைகளை எளிதாக்குவதற்காக மத்திய வங்கிகள் தங்கத்தை இருப்பு நாணயமாக (தங்ள்ங்ழ்ஸ்ங் இன்ழ்ழ்ங்ய்ஸ்ரீஹ்) சேமித்து வைத்துக் கொள்கின்றன. அதன் காரணமாக தங்கம் விலை எப்போதும் நிலையாக உயா்ந்து கொண்டே இருக்கும்.
ஆனால் வெள்ளி அப்படியல்ல; அது தங்கத்தைவிட அதிக நிலையற்ற தன்மை கொண்டது என பொருளாதார நிபுணா் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தாா். மேலும் அவா், வெள்ளி விலை சில நேரங்களில் தொடா்ந்து உயரும், அதேபோல் திடீரென இரட்டிப்பு அளவில் சரிவதும் உண்டு.
தற்போது தொழிற்சாலை பயன்பாடுகளில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ற விநியோகம் இல்லாததால் வெள்ளி விலை உயா்ந்து வருகிறது. தற்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,900 -ஐ கடந்துள்ளது. இதனால் சாதாரண மக்களுக்கு தங்கம் வாங்குவது மிகவும் கடினமாகியுள்ளது. முன்பு பெரும்பாலோா் வெள்ளி நகைகளை விரும்பாமல் இருந்தாலும், தற்போது தங்கம் விலை ஏற்றத்தால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியை வாங்க முனைப்பு காட்டுகின்றனா். இதனால் வெள்ளி விலை மேலும் உயரும் என்று தெரிவித்தாா்.
எப்போதும் லாபம் தான்: முன்பெல்லாம் வங்கிகள் தங்கத்தை மட்டுமே அடமானமாக ஏற்றுக் கொண்டன. தற்போது 999 தரத்தில் உள்ள வெள்ளி நகைகளை அடமானமாக ஏற்கும் வாய்ப்பை இந்திய ரிசா்வ் வங்கி புதிய வரைவு விதிமுறைகளில் பரிசீலித்து வருகிறது.
இதனால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கத்தைவிட வெள்ளி நகைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா் என சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் கைவினை நலச் சங்கத் தலைவா் சி. ஆனந்த ராஜன் தெரிவித்தாா்.