

‘சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மக்களுக்கான பொது நலன்களை விரிவாக்க, அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற பொது நன்மைகள் (Public Goods) மற்றும் பொதுச் சேவைகள்' (Public Services), 'பொதுச் சேவைகள்' என்ற சொற்கூட்டால் குறிப்பிடப்படுகின்றன (Wei Chen 2019).
தற்காலத்தில், இத்தகைய சேவைகள் குறிப்பாக, வருவாய், பாதுகாப்பு / காவல், சுகாதாரம், கல்வி, மின்சாரம் பொதுப் போக்குவரத்து, நுகர்பொருள்களின் விலைகள், சமூகப் பாதுகாப்பு, சேவைகளைப் பெற மக்களுக்குத் தேவைப்படும் ஆவணங்கள், சான்றிதழ்களை வழங்குதல் என மக்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய, பரந்த அளவிலான துறைகளில், தளங்களில் நிறைந்துள்ளன.
திறமையாக, தாமதங்களின்றி, முறைப்படுத்திப் பொதுச் சேவைகளை வழங்குதல் என்பது அரசாங்கத்தின் செயல்திறனுக்கு ஒரு நேர்மறையான வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. வழங்கப்படும் பொதுச் சேவைகளின் தரம், அளவு, விரைவு, குடிமக்களின் மகிழ்ச்சிக்கான காரணிகளில் ஒன்றாகும் என்று பல வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மக்களுக்கு விரைவாக, எளிதாகச் சிக்கல்களும் அதிகப் பொருள்செலவுகளும் இல்லாமல் அரசுச் சேவைகள் கிடைக்காத சூழல்களில் அதுவே அரசுகளின் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை, கசப்புணர்வை ஏற்படுத்தும் முதன்மைக் காரணமாகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ‘அரசாங்கத்தின் சேவைகளை காலக்கெடுவுக்குள் வழங்கல்’ என்ற விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருசில சமூக அமைப்புகளில் அரசுகள் மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்களைவிட, தாம் விரும்பும் பொதுச்சேவைகள் விரைவில் கிடைத்தாலே அதன் மூலம் மக்கள் எளிதில் திருப்திப்படுகிறார்கள் என்பதும் அறியப்பட்டுள்ளது. இவற்றையுணர்ந்துதான் பெரும்பாலான மக்களாட்சி அரசுகள் மக்களுக்குரிய சேவைகளைத் திறமையாக, விரைந்து வழங்க அக்கறை காட்டவே கருதுகின்றன.
இருப்பினும், செயல்படுத்தும் நிலையிலுள்ள அதிகாரத்துவத்தின் அக்கறையின்மை, தாமதங்கள்; ஊழல்; பாகுபாடு காட்டுதல்; செல்வாக்கு மிக்க நபர்களுக்குத் தேவையானதைச் செய்தல் அல்லது அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமெனில் பொது நன்மைகளைச் செய்யாமல்கூட இருத்தல்; சொந்த உறவினர்கள், நட்பினருக்கு முறைகடந்து உதவுதல்; சாதாரண மக்களிடம் அலட்சியமாக, மரியாதையற்று நடத்தல்; கடமையைப் புறக்கணித்தல்; இலக்குகளை அடைவதில் திறமையற்ற, சோடையான நிர்வாகம்; நிர்வாகத்திற்கு எதிரான குறைகளைக் கையாள்வதற்குப் போதிய செயல்திறனுள்ள நிர்வாக இயந்திரம் இல்லாமை; சரியாக வழிநடத்தக்கூடிய ஆற்றலும், எண்ணமும் கொண்ட அரசியல் தலைமை வறட்சி முதலிய காரணங்களால் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அரசுச் சேவைகள் / பொதுச் சேவைகள் வழங்குவது முறைப்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் முன்குறிப்பிட்ட ஆய்வுகள் விவரிக்கின்றன.
சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்கான அரசு வழங்கும் அனைத்து சேவைகளையும் அவரவரது பகுதியில் உள்ள பொது சேவை நிலையங்கள் மூலம் அணுகக்கூடியதாக ஏற்பாடு செய்தல்; சேவைகளை விரைந்து, குறைந்த பொருள்செலவில், அரசு மீது மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் வழங்குதல் என்ற எண்ணத்தின் முதற்படியாக 1910 காலகட்டத்தில் இங்கிலாந்தில் தொடங்கி, படிப்படியாக நாடுகள் பலவும், குடிமக்கள் சாசனங்களை (Citizens’ Charters) உருவாக்கி, நம் நாட்டிலும் (1997) பற்பல அரசுத் துறைகள் குடிமக்கள் சாசனங்களை உருவாக்கி அறிவித்தன. குடிமக்கள் சாசனம் என்பது ஒரு விழைவு. ஆனால், அதற்குச் சட்டப்பூர்வ நிலையில்லாததால், குடிமக்கள் சாசனத்தை நிறைவேற்றச் சட்டப்பூர்வமான, நீதிமன்றப் பரிகாரங்களை நாடிப் பெற முடியாது.
அரசு, மக்களுக்குச் சேவைகளை வழங்குதல் என்பது ஒரு சலுகையாகவோ, கொடையாகவோ அல்லது எப்போதாவது நிகழும் முகாம்கள் மூலமாகவோ (எடுத்துக்காட்டு: தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’) இருப்பதில் பலனில்லை. சேவைகள் யாவும் தொடர் நிகழ்வாக, மக்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில் எப்போதும் வழங்கப்படுவதாக - அரசின் சேவைகளைப் பெறுவது மக்களுக்கான சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும்.
இத்தகைய நிலைப்பாடு உலகளவில் வளரத் தொடங்கியதன் விளைவாக, குடிமக்கள் சாசனத்தின் அடுத்த கட்ட நகர்வாக, பொதுச் சேவைகளுக்கான குடிமக்கள் உரிமை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அவர்கள் அனுபவிக்கக் கிடைக்குமாறு வழங்குவது ஒரு முக்கிய நிர்வாக சீர்திருத்த முயற்சியாக இருக்கும் என்ற நோக்கில், கால நிர்ணயத்துடன் அரசுச் சேவைகளை மக்கள் பெறுவதற்கு ஏதுவாக, சேவை உரிமைச் சட்டம் (Right to Time-bound Public Services - RTPS) உருவாக்கப்பட ஆங்காங்கு முயற்சிகள் தொடங்கின.
இந்திய நிலை
‘பொதுச் சேவைக்கான உரிமை’ என்பது காந்திய தத்துவத்திலிருந்து அதன் தார்மிக அடிப்படையைப் பெறுகிறதெனலாம். தென்னாப்பிரிக்காவில் 1890 இல் காந்தியடிகள் நிகழ்த்திய ஒரு உரையில், "எங்கள் வளாகத்தில் ஒரு வாடிக்கையாளர் மிக முக்கியமானவர். அவர் நம்மைச் சார்ந்திருக்கவில்லை. நாம் அவரைச் சார்ந்திருக்கிறோம். அவர் எங்கள் வேலைக்கு குறுக்கீடு அல்ல. அவர்தான் நம் வேலையின் நோக்கம். ... அவருக்கு சேவை செய்வதன் மூலம் நாங்கள் அவருக்கு ஒரு உதவி செய்யவில்லை. அவ்வாறு செய்ய எங்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்தாம் எங்களுக்கு ஓர் உதவி செய்கிறார்’’ என்று கூறியதானது, அப்படியே அரசாங்கங்கள் குடிமக்களைப் பொருத்துப் பின்பற்றத் தகுந்த நெறிமுறைகளாகுமன்றோ?
இந்தியாவில் 1997 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமக்கள் சாசனம், படிப்படியாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலிருந்து மாநிலங்கள் மற்றும் அவற்றின் அமைப்புகளுக்குப் பரவின. ஆனாலும், முன்பே குறிப்பிட்டதுபோல, இத்தகைய சாசனங்கள் தன்னார்வத் தன்மை கொண்டவையாக இருந்ததால், அவை பெயரளவிலும், செயலற்றவைகளாகவுமே இருந்தன.
இதனையுணர்ந்த மத்திய அரசு, சேவை வழங்கலை மேம்படுத்தும் பொருட்டு 2005 ஆம் ஆண்டில் "சேவோத்தம்" என்ற சேவைத் திறன்மிகு மாதிரியைத் (Model Service Delivery) தொடங்கி குடிமக்கள் சாசனத்தை செயல்படுத்துவதற்கான ஒரு புதிய உந்துதலை வழங்கியது. இந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால், செயல்பாடுகளை உறுதி செய்ய ஒரு வலுவான மேற்பார்வைக் கட்டமைப்பு இல்லாத நிலையில், அம் முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி தரவில்லை.
எனவே, ‘உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையில் குடிமக்கள் சாசனத்தைச் சட்டபூர்வமாக்குவதும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சேவைகளைப் பெறுவதற்கான உரிமையை பொதுமக்களுக்கு வழங்குவதும் ஒரு விரிவான சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் நிறைவேற்றலாம்’ என மத்திய அரசு கருதியது [2011 சட்ட வரைவு, பத்தி 25.3].
அந்த நோக்கங்களோடு, ‘சேவைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவதற்கான குடிமக்களின் உரிமை மற்றும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் மசோதா’, மக்களவையில் 20 டிசம்பர் 2011-இல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2012 ஜனவரி 13-இல் நாடாளுமன்ற (பணியாளர், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான) நிலைக்குழு ஆய்வுக்காக மாநிலங்களவைத் தலைவரால் அனுப்பப்பட்டது. ஆனால், நிலைக்குழு அறிக்கை பரிசீலிக்கப்படும் முன்பே, மக்களவை 18 மே 2014-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் கலைக்கப்பட்டதால், அந்த மசோதா காலாவதியானது. பாதியில் விடப்பட்ட அம்முயற்சியை 2014 முதல் ஆட்சியிலுள்ள மத்திய அரசுகள் தொடரவேயில்லை.
ஆனால், கைவிடப்பட்ட மத்திய அரசின் முயற்சிக்கு முன்பே, ம.பி. அரசு நாட்டிலேயே முதலாவதாக, 2010 ஆகஸ்டில், "மத்தியப் பிரதேச லோக் சேவான் கே பிரதான் கி உத்தரவாத் அதினியம்" என்ற பெயரில் பொதுச் சேவை உத்தரவாதச் சட்டத்தை இயற்றியது. அதைத் தொடர்ந்து பிகார், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், கேரளம், உத்தரகண்ட், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, அசாம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பகுதிகளான கோவா, தில்லி ஆகியவற்றில் சேவை உரிமைச் சட்டங்கள் படிப்படியாக இயற்றப்பட்டன.
குடிமக்கள் தகவல்களைப் பெற உரிமை வழங்கப்பட்டுள்ள ‘தகவல் உரிமைச் சட்டம் 2005’ போலவே, அரசு, பொது நிறுவனங்களில் இருந்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் அரசுச் சேவைகளை மக்கள் உரிமையாகப் பெற வழிசெய்யப்பட்டுள்ள சேவை உரிமைச் சட்டங்கள், 2025 நிலவரப்படி 22 மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் சேவை உரிமைச் சட்டங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன எனக் கூறிவிட முடியாது. கேரள அரசு, 2012-இல் நிறைவேற்றப்பட்ட சேவை உரிமைச் சட்டம் சரியாகச் செயல்படாமலிருந்ததைத் தரவுகளின் மூலம் கண்டறிந்து மிக அண்மையில் (அக்டோபர் 10, 2025 இல்) வலிமையான புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. சில மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில்தான் துறைகள் சேவை வழங்கும் சட்டத்தில் இணைத்து அறிவிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் காலக்கெடு நீண்டதாக உள்ளது. சில மாநிலங்களில், நிர்ணயித்துக் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்கப்படாவிட்டால் என்ன தீர்வு எனத் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சில மாநிலங்களில் தவறு செய்யும் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க வழியுள்ளது. ஆனால் அது ‘எறும்பு கடித்தாற்போன்ற’ தண்டனையாகவே உள்ளது. இரண்டு முறையீடுகளுக்கு வழிசெய்யப்பட்டுள்ள மாநிலங்களில், முறையீட்டுத் தீர்வு விரைந்து கிடைக்க வழியில்லை. ஒட்டுமொத்த மேற்பார்வை சில மாநிலங்களில் இல்லை அல்லது சரியாகக் கட்டமைக்கப்படவில்லை.
இவற்றினிடையே, "பொது சேவைகளின் விநியோகத்தை மேம்படுத்துதல்" என்ற பிரிவின் கீழ், 2012 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாட்டு பொதுச் சேவை விருதுக்கான (யு.என்.பி.எஸ்.ஏ) தேர்வில், 73 நாடுகளின் சட்டங்களையும் செயல்பாடுகளையும் - உத்தரவாத இணைப்பில் உள்ளடக்கிய சேவைகள், துறைகளின் எண்ணிக்கை, சேவைகளை வழங்குவதற்கான காலக்கெடு, தவறுகளுக்கான அபராதம் போன்றவற்றின் அடிப்படையில்- ஒப்பிடும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பீட்டில், "ம.பி. லோக் சேவான் கே பிரதான் கி உத்தரவாத அதினியம்" திட்டம் உத்வேகத்துடன் செயல்படுத்தப்படுவதாக விருது பெற்றுள்ளது பெருமையுடன் குறிப்பிட உரியதாகும். பொதுச் சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வை செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் தனி ஒருங்கிணைப்புத் துறையைக் கொண்ட ஒரே மாநிலம் மத்தியப் பிரதேசம் மட்டுமே.
சிறந்த ஏற்பாடுகளாகப் பிகார், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள் சட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக சுயாதீனமான "சேவை உரிமை ஆணையம்" அமைக்க ஏற்பாடு செய்துள்ளன. தில்லி அரசு, குடிமக்களின் வீட்டுவாசலில் சேவைகளை வழங்குவதற்கான மிகவும் புதுமையான யோசனையை அறிமுகப்படுத்திப் பரிசோதித்து வருகிறது. இந்த ஏற்பாட்டில், குடிமக்கள் '1076' என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து ‘மொபைல் சஹாயக்’குடன் சந்திப்பை முன்பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் அந்த சஹாயக் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை தேடுபவர்களின் வீட்டிற்குச் சென்று தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து உரிய குறைந்தபட்சக் கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட துறைக்கு சமர்ப்பிக்கிறார். சஹாயக்கே துறைகளிடமிருந்து ஆவணங்களைப் பெற்று குடிமகனின் வீட்டு வாசலில் அதை மீண்டும் வழங்குகிறார் (Anand, 2019).
விரிவான துறைகள், சேவைகள் வழங்குவதில் கர்நாடக சட்டம் (62 துறைகளின் 729 சேவைகள்) முதலிடத்திலுள்ளது. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரம் (39 துறைகளின் 372 சேவைகள்); தில்லி (22 துறைகளின் 361 சேவைகள்); பஞ்சாப் (29 துறைகளின் 351 சேவைகள்) உள்ளன. இந்தவகையில் முதன்முதலில் சட்டம் இயற்றிய ம.பி. 10 வது இடத்தில்தான் உள்ளது. குறைந்தபட்ச காலக்கெடுவைப் பொருத்தவரை 7 நாள்கள் முதல் 30 நாள்கள் வரை பரந்த மாறுபாடு உள்ளது. சத்தீஸ்கரில் காலக்கெடு 30 நாள்கள், ராஜஸ்தானில் அதே சேவைக்கு 7 நாள்கள்!
சில மாநிலச் சட்டங்களில், அலுவலர்களுக்குப் பொறுப்புணர்வை உணர்த்தும் நோக்கில், சேவைகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்குக் காரணமான அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதிகபட்ச அபராதம் குஜராத்தில் ரூ. 10,000 வரை விதிக்கப்படுகிறது. ‘நியமிக்கப்பட்ட அதிகாரிகளில்’ (Designated Official) சரியான நேரத்தில் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் வெகுமதி வழங்கப்பட வகை செய்துள்ள ஒரே மாநிலம் மேற்கு வங்கம் ஆகும். பாராட்டுச் சான்றிதழுடன் ஒரு நிதியாண்டில் ரூ.1,000/- வரை வெகுமதி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு
சலுகையாகவோ, வெகுமதியாகவோ இல்லாமல், உரிமையாக மக்களுக்குச் சேவை வழங்க 22 மாநிலங்கள் தனிச் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்திவரும் நிலையில், இன்னும் தமிழ்நாடு அந்தப் பட்டியலில் இணையவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்தச் சட்டத்தின் அவசியத்தை உணர்ந்துதான், தற்போதைய ஆளுங்கட்சி 2021க்கான தனது தேர்தல் அறிக்கையில் (வரிசை எண்: 19.) ‘’சாதிச் சான்றிதழ், பிறப்பு / இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ஓய்வூதியப் பயன்கள் உள்ளிட்ட பொது விநியோக சேவைகளை ஒழுங்குபடுத்த சேவை உரிமைச் சட்டம் இயற்றப்படும்’’ என்று வாக்குறுதி அளித்திருந்தது.
மேலும் ஆட்சியின் முதலாண்டு (2021) ஆளுநர் உரையிலேயே “அரசு முகமைகள் பல்வேறு பொது சேவைகளை வழங்குவதை ஒழுங்குபடுத்தும் பொருட்டு சேவை உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்’’ (ஆளுநர் உரை, 2021, பக் 17-18, பத்தி 23) என்ற அறிவிப்பும் சட்டப்பேரவையில் செய்யப்பட்டது.
நமது நாட்டிலுள்ள மாநிலங்களில், சேவை உரிமைச் சட்டங்களின் நல்ல முன்மாதிரிகள் உள்ளன. குறிப்பிட உரிய நல்அம்சங்கள் கொண்ட மாநிலச் சட்டங்களின் விவரங்களும் இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் வெகு விரைவில், தமிழக அரசு மாநில சேவை உரிமைச் சட்ட முன்வடிவை உருவாக்கலாம். பலதரப்பினரிடம் இருந்து கருத்துகளைப் பெறும் வகையில் அச்சட்டத்தின் முன்வடிவைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் சட்ட முன்வடிவை இறுதிப்படுத்தி, அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் - இதுவரை தாமதமாகியிருந்தாலும் - நாட்டிலேயே முன்மாதிரியான சிறப்பு அம்சங்கள் கொண்ட தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டத்தை இயற்றி வழங்கலாம். மக்கள் பயன்பெருக்கும் இம்முன்னெடுப்பு பாராட்டும் வரவேற்பும் பெறும்; ஆட்சியாளர்களுக்குச் சொன்னதைச் செய்த பெருமையுங் கூடும்.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.