விஜய் வியூகம் வெற்றி பெறுமா ? துரை வைகோ எம்.பி.

ஜனநாயக நாட்டில் புதிய கட்சி தொடங்குவது என்பது அனைவருக்குமான உரிமை.
தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய்.
Published on
Updated on
2 min read

துரை வைகோ எம்.பி.

மதிமுக முதன்மைச் செயலர்

ஜனநாயக நாட்டில் புதிய கட்சி தொடங்குவது என்பது அனைவருக்குமான உரிமை. அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்சிகள் அவ்வப்போது தொடங்கப்படுகின்றன. அந்த வரிசையில், தமிழ்த் திரைத் துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியல் இயக்கத்துக்கு வந்துள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ளார்.

அரசியல் களத்தில் புதிய கட்சிகளின் வருகை என்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது. மிகவும் நல்லது. லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஒருவர் தமிழக அரசியல் களத்தில் புதிய உந்துதல் சக்தியாக வந்திருப்பது வரவேற்புக்குரியது. எனவே, விஜயின் அரசியல் வருகையை மதிமுகவும் வரவேற்கிறது.

தனது ரசிகர் பட்டாள சக்தியை அரசியலில் பயன்படுத்திக் கொள்ள அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்ததாலேயே எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் எனவும் கருத முடியாது. கடந்த காலத்தில் நடந்தவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்த் திரையுலகில் நடிப்புச் சக்கரவர்த்தியாக விளங்கியவரும், நடிகர் திலகம் எனப் புகழ் பெற்றவருமான சிவாஜி கணேசன் புதிய கட்சி தொடங்கினார். ஆனால், அவரால் தொடர்ந்து அரசியல் களத்தில் பயணிக்க முடியவில்லை. வெற்றியும் பெற முடியவில்லை. இதேபோல, கேரளத்தின் மார்க்கண்டேயன் என்று புகழப்பட்ட பிரேம் நசீரும் அரசியல் களத்தில் ஜொலிக்க முடியவில்லை.

ஆந்திர மாநிலத்தில் என்டிஆருக்கு பிறகு அதிக அளவு கூட்டத்தை திரட்டிக் காட்டியவர் நடிகர் சிரஞ்சீவி. 2008-இல் "பிரஜா ராஜ்யம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கி, தனது கட்சியின் பெயரை அறிவிக்கும் கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்டிக் காட்டினார். சிரஞ்சீவிக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து இந்திய அரசியல் களமே வியப்பில் ஆழ்ந்தது. கட்சி தொடங்கி 9 மாதங்களில் முதல்வரான என்டிஆரின் சாதனையை முறியடிக்கும் வகையில் இருப்பார் என அரசியல் ஆய்வாளர்களால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிரஞ்சீவியும் தோல்வியைத் தழுவினார். இப்போது கட்சியை கலைத்துவிட்டு வேறொரு இயக்கத்தில் இணைந்துவிட்டார்.

தமிழக அரசியல் களத்தில் திரைத் துறையிலிருந்து வந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு வேறு யாராலும் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. பல தமிழ்த் திரைப்பட நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கி கால ஓட்டத்தில் கரைந்துபோன வரலாற்றையே தமிழகம் கண்டுள்ளது.

திரை நட்சத்திரம் என்பதாலேயே வெற்றி வந்து சேர்ந்துவிடாது. கொள்கையும், செயல்பாடுகளும் முக்கியம். நடிகர் விஜய்யும் பெரியார், அண்ணா, எம்ஜிஆரை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மதவாத சக்திகளுக்கும், ஊழல் சக்திகளுக்கும் எதிரானவர் என பறைசாற்றிக் கொள்கிறார். அதனால் மட்டுமே வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ண முடியாது. தனது லட்சோப லட்ச ரசிகர் பலத்தை ஆக்கபூர்வமான முறையில் எப்படி பயன்படுத்தப் போகிறார். அவருடைய செயல்பாடுகள் என்ன?. நடப்பு அரசியல் நிகழ்வுகளில் அவரது பார்வை என்ன? என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.

மதுரை மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் புகைப்படங்களை வைத்திருந்ததாலேயே அவரது தொண்டர்களை ஈர்த்துவிடலாம், வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் ஈடேறாது. அரசியல் என்பது 100 மீ., 200 மீ. ஓட்டப் பந்தயம் கிடையாது. மாரத்தான் போன்று தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். சலிப்புத் தன்மையின்றி, தன்னை உணர்ந்து தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

1967-இல் அண்ணா தனித்து ஆட்சி அமைத்தது போன்றோ, 1977-இல் எம்ஜிஆர் தனித்து ஆட்சி அமைத்தது போன்றோ, 2026-இல் விஜய் ஆட்சி அமைக்க முடியாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. உச்சபட்ச சினிமா நட்சத்திரமாக இருந்தாலும் அந்த வாய்ப்பு 2026-இல் விஜய்க்கு இல்லை.

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. இதேநிலைதான், 2026 பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு கிடைத்திடும். தன்னுடன் சேரும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என அறிவித்து ஓராண்டாகியும் எந்த கட்சியும் தவெகவுடன் இணையவில்லையே!

தமிழக வெற்றிக் கழகத்துக்கு என்னுடைய அனுமானத்தின் மூலம் 12 சதவீத வாக்குகள் கிடைக்கலாம்.

2026-இல் தமிழக வெற்றிக் கழகத்தால் கட்டாயம் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தல் என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேயான போட்டிதான். விஜய் கூறுவதைப் போன்று தவெக - திமுகவுக்கு இடையேயான போட்டியில்லை.

நாளை

அர்ஜுன் சம்பத்,

தலைவர், இந்து மக்கள் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com