விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? எம்.ஜி.கே.நிஜாமுதீன்

மக்களுக்காகக் களத்தில் இறங்கி உழைக்காமலே, மக்களிடையே ஒருவரை பிரபலமாகக் காட்டுவது திரைத் துறைதான்.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on
Updated on
2 min read

எம்.ஜி.கே.நிஜாமுதீன்,

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்,

துணைத் தலைவர்,

உலகத் தமிழர் பேரமைப்பு.

மக்களுக்காகக் களத்தில் இறங்கி உழைக்காமலே, மக்களிடையே ஒருவரை பிரபலமாகக் காட்டுவது திரைத் துறைதான். இதனால் திரைத் துறையினர் எளிதாக அரசியலுக்கு வரமுடிகிறது. இவ்வாறு நிகழ்வது இந்தியாவில் மட்டுமல்ல; முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி என சர்வதேச உதாரணங்களையும் கூற முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ள விஜய்யிடம் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் சொல்வது சரியா, தவறா என்று சிந்தித்துப் பார்க்காமல் செயலாற்ற ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். அதை விஜய் பயன்படுத்திக் கொள்கிறார். தவெக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அக் கட்சியின் 2-ஆவது மாநாடு நடைபெற்று முடிந்து, இரண்டு வாரங்கள் கடந்தும்கூட, அது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருப்பது விஜய்க்கு கிடைத்த வெற்றிதான்.

"தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவேன்' என்று விஜய் கூறுவதில் வியப்பில்லை. புதிதாக கட்சியைத் தொடங்குபவர்கள், அப்படிக் கூறினால்தான் அரசியல் நடத்த முடியும். தமிழகத்தில் உள்ள இளைஞர்களிடம் விஜய் ஏற்கெனவே சென்றடைந்துவிட்டார். தன்னை நிலைநிறுத்திக்கொள்ளக் கடுமையாக உழைத்து வருகிறார். ஆகவே, அவரைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், ஆட்சி மாற்றம் என்ற அவரது இலக்கை அடைய முடியுமா என்பதே இப்போதைய கேள்வி.

ஆளுங்கட்சியாக யார் இருந்தாலும், ஆட்சியை நிறைவு செய்து அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும்போது அதிருப்தி அலை தோன்றுவது இயல்பானது. அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் நிலையில் எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும். ஆனால், அதிமுக அத்தகைய நிலையில் இல்லை என்றே தோன்றுகிறது. அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆளுங்கட்சியான திமுகவுக்கு நேரடிப் போட்டி என தவெகவை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் வியூகம் வகுத்திருக்கிறார்.

வரும் 2026 பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தொண்டர்களை உற்சாகப்படுத்தி விஜய் பேசி வந்தாலும், முதல் தேர்தலிலேயே அது சாத்தியமாகாது என்பதை உணர்ந்ததாலேயே, திமுக வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். திமுக வெற்றி பெற்றால்தான் தனக்கு அரசியல் வாழ்வு உண்டு என்று கருதி காயை நகர்த்துகிறார் அவர்.

ஆகவேதான், அதிமுக தரப்பில் இருந்து, புதுவையில் தவெகவுக்கு முதல்வர் பதவி, தமிழகத்தில் துணை முதல்வர் பதவி கணிசமான தொகுதிகள் என்றெல்லாம் கூறி, கூட்டணிக்கு நெருங்கினாலும்கூட விஜய் அதை நிராகரித்துவிட்டார். அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால் அந்தக் கூட்டணி திமுகவுக்கு சவாலாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அப்படி இருந்தும் அதை அவர் நிராகரிப்பதற்கு காரணம் இருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் அதிமுக கூட்டணியை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி பலவீனப்படுத்தி இரண்டாவது இடத்துக்கு வரலாம் என்கிற அண்ணாமலை தலைமையிலான பாஜகவின் கடந்தகால வியூகத்தைத்தான் இப்போது விஜய்யும் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

திமுக வெற்றி பெற்றுவிட்டால், அதிமுக மேலும் பலவீனமடையும். அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்ததாலேயே அதிமுக கூட்டணியை விஜய் மறுத்துவிட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக வலுவிழக்கக் கூடும் என்ற கருத்து நிலவிய நிலையில், அதைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக முனைப்புக் காட்டியது பலனளிக்கவில்லை. இப்போது விஜய் வருகை, பாஜகவுக்கு மேலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

தனது தலைமையில் கூட்டணி என்ற வியூகத்தை விஜய் வகுத்துள்ளார். திமுக, அதிமுக என இரு கட்சிகளையும் பிடிக்காத வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். கடந்த காலங்களில் அதிருப்தி வாக்குகளை மதிமுக பெற்று வந்தது. பின்னர், தேமுதிகவுக்கு அந்த வாக்குகள் சென்றன. நாதக வந்த பிறகு, இளைஞர்களின் வாக்குகள் கணிசமாக அக் கட்சிக்கு கிடைத்தன. வருகிற தேர்தலில் அந்த வாக்குகள் தவெகவுக்கு செல்லும் என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், விஜய் தனித்துப் போட்டியிடுவது திமுக அணிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக, அதிருப்தி வாக்குகள் அதிமுக அணிக்குச் செல்வதைத் தடுத்துவிடுவதால், விஜய்யின் வியூகம் திமுக தரப்புக்குச் சாதகம்தான்.

திமுகவின் அதிருப்தி வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே விஜய்யால் பெற முடியும். இந்தத் தேர்தலில் திமுகவை வெல்ல முடியாது, ஆட்சி மாற்றமும் ஏற்படாது என்பது விஜய்க்கு தெரியும். ஆனாலும் திமுக என்ற யானையோடு மோதினோம் என்ற பெயரை உருவாக்க நினைக்கிறார்.

எந்தக் கட்சியும் தனித்துப் போட்டியிட முன்வராத நிலையில், மக்களிடம் தனக்குள்ள பிரபலத்தைப் பயன்படுத்தி எதிர்கால அரசியலுக்கு பலமான அஸ்திவாரத்தை அமைக்கவே தனித்துப் போட்டியிடும் முடிவை விஜய் எடுத்திருக்கிறார் என்று கருதத் தோன்றுகிறது.

நாளை

ஈ.ஆர்.ஈஸ்வரன்,

சட்டப்பேரவை உறுப்பினர்,

பொதுச் செயலர்,

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com