தேசிய கீதங்கள்: திருத்தங்கள், மாற்றங்கள், காரணங்கள்!

உலககில் பல நாடுகளின் தேசிய கீதங்களும் அவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களும் பற்றி...
National Anthems of Countries: Amendments, Changes, Reasons behind
கோப்புப்படம்ENS
Published on
Updated on
7 min read

தேசிய கீதங்கள் என்பது ஏதோ மற்ற பாடல்களின் வரிகளைப் போல வெறும் இசையுடன் கூடிய சாதாரணப் பாடல் வரிகள் அல்ல. தேசிய கீதங்களின் வரிகளும் அவற்றுடன் இணைந்த இசையும் அந்தந்த நாட்டின் வரலாறு, சுதந்திரத்திற்கான எழுச்சிகள், போராட்டக் களங்களில் உயிர்த் தியாகம் செய்த தீரர்களைப் போற்றுதல், தொடரும் அரசியல் மரபுகள், பண்பாடு, கலாசார பாரம்பரியம், ஒற்றுமை உணர்வு போன்ற பலவும் இணைந்ததொரு தேசிய அடையாளத்தின் (National Identity) அதிமுக்கிய அம்சமாகும். ஒரு நாட்டின் தேசிய கீதமானது, அந்நாட்டின் கடந்த காலத்தை மட்டுமல்ல, அதன் எதிர்காலத்திற்காக நாட்டு மக்களிடையே உள்ளார்ந்து கிளைத்திருக்கும் பொதுப்பெரு விழைவுகளையும் (Common aspirations) முன்னிலைப்படுத்தும் மிக முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.

தற்காலங்களில், ஒரு நாட்டின் தேசிய கீதம், கொடி, சின்னம் முதலியன அந்தந்த நாட்டின் இறையாண்மையின் (Identity of Sovereignty) அடையாளக் கூறுகளாகப் பிற நாடுகளும் மதிக்க வேண்டியதொரு புனிதமாக உயர்ந்துள்ளது. பல நாடுகள் தேசிய கீதங்களைப் பாட, இசைக்க நடத்தை விதிகளை (Code of Conduct) அறிவிப்பு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, இந்திய தேசிய கீதம் (ஜன கண மன) முழு கீதமாக பாடுவது / இசைப்பதெனில் 52 விநாடிகளுக்கு மிகாமலும் சுருக்க வடிவம் 20 விநாடிகளுக்குள்ளும் பாடி/ இசைத்துவிட வேண்டும்.

இந்த விசயத்தில் மற்றொரு எடுத்துக்காட்டாக, அமெரிக்க தேசிய கீதம் குறித்து (அமெரிக்க கோடு 301-இன்படி) விஸ்தாரமான நடத்தை முறைகள் வழங்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடலாம்.

(அ) கீத பதவி அறிவிப்பு: ‘ஸ்டார்-ஸ்பாங்க்ல்டுபேனர்'(Star-Spangled Banner) என்று உச்சரிக்கப்படும் சொற்கள் மற்றும் இசை ஆகியவற்றைக் கொண்ட பாடல் தேசிய கீதமாகும்.

(ஆ) இசைக்கும்போது நடத்தை:

தேசிய கீதம் பாடும்போது-

கொடி பறக்கும்போது-

(அ) சீருடையில் உள்ள நபர்கள் கீதத்தின் முதல் குறிப்பிலிருந்து (Note) ராணுவ வணக்கம் செலுத்த வேண்டும், கடைசி குறிப்பு வரை அந்த நிலையைப் பராமரிக்க வேண்டும்.

(ஆ) ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் சீருடையில் இல்லாத முன்னாள் வீரர்கள், சீருடையில் உள்ள தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட முறையில் ராணுவ வணக்கம் செலுத்தலாம்; மற்றும்

(இ) அங்குள்ள மற்ற அனைத்து நபர்களும் கொடியை எதிர்கொண்டு இதயத்தின் மீது வலது கையை வைத்து ‘கவனத்தில்’ (Attention) நிற்க வேண்டும், சீருடையில் இல்லாத ஆண்கள், தங்கள் தலை அணிகளை (அணிந்திருந்தால்) வலதுகையால் அகற்றி இடது தோள்பட்டையில் வைத்திருக்க வேண்டும், கை இதயத்தின் மீது இருக்கும்; மற்றும்

(2) கொடி காட்சியிலில்லாதபோது, அங்குள்ள அனைவரும் இசை ஒலிக்கும் திசையை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் கொடி பறக்கும்போது உள்ள அதே நடைமுறையில் செயல்பட வேண்டும்.

நாடு எதுவாயினும், அந்தந்த மக்களிடையே தேசிய கீதங்களின் வரிகள் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு முறையும், அக்கீதங்கள் இசைக்கப்படும் ஒவ்வொரு தருணமும், வேற்றுமைகள் இருப்பினும் அவை இற்று, அற்று, ‘நாமனைவரும் ஒன்று’ என்ற உயரொற்றுமை உணர்வுகளை அந்தந்த நாட்டு மக்களின் உயிரோட்டத்தில் நிகழ்த்தும் வீரியம் உணரப்படும். நாட்டு மக்களின் உளம் வளர்த்து மதித்துப் போற்றப்படும் தேசிய மதிப்புகளைத் (National Values) தேர்ந்த சொற்களால் உணர்வூட்டும் இசைக்கோர்வையால் தேசிய கீதங்கள் அடையாளப்படுத்துகின்றன; பிரதிபலிக்கின்றன; அப்பிரதிபலிப்புகள் அம்மக்களிடையே சொல்லொணாப் பெருமிதங்களையும் ‘ஈர்க்கிடைப்புகாது இணைந்து நிற்கிறோம்’ எனும் மனமொன்றிய உணர்வையும் வளர்த்து அவ்வுணர்வுகள் நிலைத்துத் தொடர்வதற்கான உறுதிகளை ஊக்கப்படுத்தி விளைவிக்கும் ஆற்றல் கொண்டவை. மிகச் சுருக்கமாக எடுத்துரைப்பதெனில் ‘தேசிய கீதங்கள், மொழி - இசை விரவிய அந்தந்த நாடுகளின் உயிர்ப்பான அடையாளங்கள்.’

இரு நூறு ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள வரலாற்றின் மூலம் 1844 இல் அங்கீகரிக்கப்பட்ட முதல் தேசிய கீதமாக, டென்மார்க்கின் தேசிய கீதம் குறிப்பிடப்படுகிறது.

"டெர் எர் எட் யின்டிட் லேண்ட்"(I know a lovely land அவ்வளவு அழகான நாடு இருக்கிறது) என்ற டென்மார்க்கின் தேசிய கீதத்தின் வரிகள்(Lyrics) 1820 இல்டேனிஷ் கவிஞர் ஆடம் கோட்லாப் ஓஹ்லென்ஷ்லேகர் என்பவரால் எழுதப்பட்டது; 1823 இல் ஹான்ஸ் எர்ன்ஸ்ட் கிர்யர் என்பவரால் மெல்லிசை அளிக்கப்பட்டது. இதுவே, இன்றும் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய கீதமாகத் தொடர்கிறது.

மற்றொரு மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட கீதம், ஜப்பானின் கீதமான "கிமிகாயோ"("Kimigayo.")1869 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் தோற்றம் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜப்பானிய கவிதைப் படைப்பிலிருந்து தொடங்குகிறது என்பதால் உலகின் மிகப் பழமையான கீதங்களில் இது ஒன்று என தேசிய கீத ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது. நான்கே வரிகள் கொண்ட ஜப்பானின் தேசிய கீதம் உலகின் சுருக்கமான, ஆனால் மிக நீண்ட பாரம்பரியங்கொண்டதாகும்.

முன்குறிப்பிட்ட இரு நாடுகளுடன், (ஜப்பான், டென்மார்க்), நார்வே ( “ஜா, வி எல்ஸ்கர் டெட்லாண்டெட், Ja Vi Elsker Dette Landet, Yes, We Love This Land, ஆம், நாங்கள் இந்த நிலத்தை நேசிக்கிறோம்” 1864), ஸ்வீடன் (Du Gamla Du Fria (Thou Ancient, Thou Free,1844), பின்லாந்து,( Maamme Vart land, Our Land 1848), மெக்ஸிகோ (Himno Nacional Mexicano, National Anthem of Mexico,1854),கோஸ்டாரீக்கா( Himno Nacional Mexicano, National Anthem of Mexico,1852) போன்ற நாடுகளும் 18 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமது தேசிய கீதங்களை மாற்றாமல் இன்றளவும் போற்றி வைத்துக் கொண்டுள்ளன. ஆனாலும் பெருமைநிறை தேசிய கீதங்கள் காலப்போக்கில் எல்லா நாட்டிலும் மாறாது நிலைத்திருப்பதில்லை என்பதை நாடுகளின் தேசிய கீத வரலாறுகள் நமக்குச் சொல்லுகின்றன. (காண்க: கட்டுரை இறுதியில் பி.கு.)

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆப்கனிஸ்தான், ஈரான், ஈராக், உகாண்டா, தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, ரஷியா, ரொமேனியா, கம்போடியா, லிபியா, யுகோஸ்லோவாகியாவின் வாரிசு நாடுகள், செக் குடியரசின் வாரிசு நாடுகள், ஸ்லோவாகியா, போர்ச்சுகல், பெலிஜ், நேபாளம், நைஜீரியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா போன்ற பல நாடுகள் பல்வேறு காரணங்களுக்காகத் தங்கள் தேசிய கீதங்களைத் திருத்தியுள்ளன அல்லது மாற்றியுள்ளன.

தேசிய கீத மாற்றங்கள், காரணங்கள்

பெரும்பாலும், புரட்சிகள் அல்லது அரசாங்கங்களது வீழ்ச்சி, நாடுகள் பிளவுறுதல், வலுவான பிற காரணங்களால் நிகழும் அரசியல்/ஆட்சி மாற்றம் போன்றவை நாடுகளின் தேசிய கீதங்களை மாற்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகிறது. 1789 பிரெஞ்ச் புரட்சியின் விளைவாக லூயி மன்னரின் முடியாட்சி வீழ்ச்சிக்குப் பிறகு, புரட்சிகர சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக "மார்சேய்ஸை" தேசிய கீதமாக உருவாக்கிய பிரான்ஸ் இவ்வகை மாற்றத்திற்கு ஒரு முன்னுதாரணம். (பிரான்ஸின் தேசிய கீதம் உலகின் சிறந்த தேசிய கீதங்கள் வரிசையில் இன்றளவும் முதன்மையாக நிற்கிறது)

மற்ற எடுத்துக்காட்டுகளாக: ஜெர்மனியில் நாஜி ஆட்சியின் வீழ்ச்சி, இரண்டு ஜெர்மனிகளாகப் பிளவு, மறு ஒருங்கிணைப்பு முதலியவற்றால் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றம்; ரஷியாவில் சோவியத் சகாப்த காலத்தில் (1922–1944)

"தி இன்டர்நேஷனல்." அடுத்த (1944–1991) காலத்தில் ஸ்டாலினையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் புகழ்ந்து கீதம்; சோவியத் ஒன்றியச் சரிவிற்குப் பின் (1991-2000) க்ளிங்காவின் "தேச பக்த பாடல்" இசை (Instrument only, no lyrics) 2000இல் செர்ஜிமிகால்கோவின் புதிய தேசபக்தி பாடலின் சோவியத் மெல்லிசையை புடின் மீண்டும் நிறுவியுள்ளது வரை எனப் பல மாற்றங்கள்;

ஆப்கானிஸ்தானில் ‘மில்லி சுரூத்’ (Milli Surood) பாடல் வரிகளை பிரபல ஆப்கன் கவிஞரும் எழுத்தாளருமான அப்துல் பாரி ஜஹானி எழுதினார் (2006). இந்தப் பாடலுக்கு ஆப்கன் இசையமைப்பாளர் பாப்ராக் வாசா இசையமைத்தார். புதிய ஆப்கானிய அரசியலமைப்பு நாட்டின் இனக் குழுக்கள் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கை பற்றிய குறிப்புகளை உள்ளடக்கிய ஒரு புதிய தேசிய கீதத்தை உருவாக்குவதை விரும்பியதால் 2006இல் ‘மில்லி சுரூத்’ ஆப்கானிஸ்தானின் தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு முந்தைய கீதமான ‘இஸ்லாத்தின் கோட்டை, ஆசியாவின் இதயம்’ என்ற பாடல் நீக்கப்பட்டது. ஆட்சி தலிபான் கைகளில் வரும்போதெல்லாம் இசைக்கே தடை விதிக்கப்பட்டது(2021); இதில் எங்கே தேசிய கீதம் பாடுவது அல்லது இசைப்பது?

ஈராக்கில், சதாம் ஹுசைனின் வீழ்ச்சி (2003)க்குப் பின், அவர் காலத்து பாதிஸ்ட் கீதத்திற்குப் ("Ardulfuratain" இரண்டு நதிகளின் நிலம்) பதிலாகப் பாலஸ்தீனத்திலிருந்து வந்த ஒரு பான்-அரபு கீதமான "மாவ்தினி" (எனது தாயகம்), 2004இல் தேசிய கீதமாகியது. லிபியாவில் புரட்சி (2011)மூலம் கடாபி ஆட்சி அகற்றப்பட்ட பின், கடாபி ஆட்சிக் காலத்திலிருந்த "அல்லாஹுஅக்பர்" நீக்கப்பட்டு அதற்கு முன் இருந்த தேசிய கீதமான ‘லிபியா, லிபியா, லிபியா’ மீண்டும் தேசிய கீதமாகியுள்ளது. பாகிஸ்தான் பிளவுபட்டு-முன்னாள் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த- பங்களாதேஷ் தனி நாடாக, 1971இல் விடுதலை வென்ற பின் பாகிஸ்தானின் தேசிய கீதத்தை அகற்றி விட்டு ரவீந்திரநாத் தாகூரின்‘ அமர் ஷோனார் பங்களா’வைத் தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது.

காலனித்துவ ஆட்சியிலிருந்து புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகள் பெரும்பாலும் தங்கள் இறையாண்மை, கலாசார பெருமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய தேசிய கீதங்களை ஏற்றுக்கொள்கின்றன. இவ்வகையில் அக்காலத்தில் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளின் காலனிகளாக இருந்த பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் அவற்றின் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களுக்கெனப் புதிய தேசிய கீதங்களை உருவாக்கிக் கொண்டன. பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, காலனித்துவ சின்னங்களைக் கைவிட்டு தேசத்திற்கு 1950 ஆம் ஆண்டு ஒரு புதிய சின்னத்தை நிறுவிக்கொண்டு ரவீந்திரநாத் தாகூரின் "ஜன கண மன" என்ற பாடலைத் தேசிய கீதமாக ஏற்றுக்கொண்ட இந்தியா இவ்வகைக்கு ஒரு உதாரணம்.

மேலும் எ.கா.: ஜிம்பாப்வே தனது விடுதலைக்குப் பின் முதலில், ‘இஷே கொம்போரேரா ஆப்பிரிக்கா’ என்ற கீதத்தை ஏற்றுக்கொண்டிருந்தது. பின்னர் அதற்குப் பதிலாக 1994 இல் புதிய தேசிய கீதத்திற்காக நாடு தழுவிய போட்டி நடத்தி பேராசிரியர் சாலமன் எம். முட்ஸ்வைரோ எழுதி ஃப்ரெட் லெக்சூர் சாங்குண்டேகா இசையமைத்த ‘சிமுட்சாய்முரேசா’வை தேசிய கீதமாக்கிக் கொண்டது.

நவீன சூழல்களில் பாலினம் மற்றும் மக்களின் பன்முகத்தன்மையைச் சுற்றி வளர்ந்து வரும் மதிப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில், தேசிய கீதத்தின் உள்ளடக்கத்தில் பாலின சமத்துவத்தை இணைத்தல், பன்முகத்தன்மையை உட்கொணர்தல் போன்ற காரணங்களுக்காகத் தேசிய கீதங்கள் திருத்தப்படுகின்றன அல்லது மாற்றப்படுகின்றன.

எ.கா.: கனடா தனது தேசிய கீதமான ‘’ஓகனடா”வில்(2018இல்) "உங்கள் மகன்களை"(“in all thy sons’’) என்ற சொல்லை "எங்களில்" (‘’in all of us command”) என மாற்றியது. விநோதமான முறையில், தேசிய கீதம் போக, கனடாவில் அரச கீதமாக (Royal Anthem), ‘காட் சேவ் த க்வீன்’ இன்றும் உள்ளது. அரசி எலிசபெத்திற்குப் பின், சார்லஸ் இங்கிலாந்து மன்னராகியிருப்பதால், 2022 இல் கனடாவின் அரச கீதம் ‘‘காட் சேவ் த கிங்’ என மாற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவும் தனது தேசிய கீதத்தில், பாலின சமத்துவத்தை உறுதி செய்ய 2012 இல் “சிறந்த மகன்கள்” (“great sons”) என்ற சொல்லுக்குப் பதிலாக “சிறந்த மகள்களும் மகன்களும்” (“great daughters and sons”) என மாற்றம் நிகழ்த்தியது.

ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் முதலில், “காட் சேவ் த க்வீன்” என்றிருந்தற்குப் பதிலாக,1984 இல், "அட்வான்ஸ் ஆஸ்திரேலியா ஃபேர்" என்ற தேசிய கீதம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. "அட்வான்ஸ் ஆஸ்திரேலியா ஃபேர்", ஜனவரி 1, 2021 அன்று குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்தது. கீதத்தின் இரண்டாவது வரி, "நாங்கள் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம்"(Young and Free)  என்பதற்குப் பதிலாக, "நாங்கள் ஒன்று, மற்றும் சுதந்திரமானவர்கள்"(One and Free )என்று மாற்றப்பட்டது. இது வெறும் மொழியியல் சரிசெய்தல் மட்டுமல்ல; ஆழமான கலாசார தாக்கங்களைக் கொண்டதாகும். இந்த மாற்றத்தின் நோக்கம், பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் நீண்ட வரலாற்றையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய குடியேறிகள் ஆஸ்திரேலியாவிற்கு வந்தனர் என்பதையும் உள்ளடக்கிய (Inclusive) விரிவை உணர்த்தி அங்கீகாரம் அளிப்பதாகும்.

இன அல்லது மொழியியல் நல்லிணக்கம் பகிரப்படும் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதங்கள் திருத்தம் பெறுகின்றன. தென்னாப்பிரிக்காவின் தேசிய கீத மாற்றம், இன வெறியிலிருந்து ஜனநாயகம் வரையிலான அந்நாட்டின் பயணத்தை மிகச்சரியாகப் படம் பிடிக்கிறது எனலாம். நிறவெறி (Apartheid) காலத்திற்குப் பிந்தைய மக்கள் ஒற்றுமையைக் குறிக்க மாற்றப்பட்டிருக்கும் தென்னாப்பிரிக்காவின் தேசிய கீதம் தனித்துவமானது. அந்நாட்டில் வழங்கப்படும் பல்வேறு மொழிகள் அவற்றிலுள்ள பாடல்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை இணைத்து 'என்கோசி சிகெலெல்' ஐஆஃப்ரிகா'("Nkosi Sikelel' iAfrika" என்ற) பாடலும்,1994 க்கு முந்தைய 'டை ஸ்டெம் வான் சூயிட்-ஆஃப்ரிகா’("Die Stem van Suid-Afrika") என்ற கீதத்தின் ஒரு பகுதியும் புதிய கீதத்தில் இணைந்துள்ளது. கூடுதலாகச் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடப்படும் அனைத்து மொழிகளின் சரியான உச்சரிப்பு மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்காக கீதத்தில் சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் தென்னாப்பிரிக்காவின் பன்முகத்தன்மை கொண்ட கலாசார நிலப்பரப்பையும் அதன் பல இன மக்களின் மொழியியல் பாரம்பரியத்தையும் மதிக்கும் அதன் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கின்றன.

இங்கு குறிப்பிட உரியது என்னவென்றால் 1994-க்கு முன்பு பயன்படுத்திய 'டை ஸ்டெம் வான் சூயிட்-ஆஃப்ரிகா' என்ற கீதம், ஆப்பிரிக்க மொழியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பாடப்பட்டது. நிறவெறி முடிவுக்கு வந்த பிறகு உருவான புதிய தற்போதைய கீதத்தின் பதிப்பு ஐந்து வெவ்வேறு மொழிகளில் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலக நாடுகளிடையே ஐந்து வெவ்வேறு மொழிகளில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதமுள்ள தனித்துவத்தைத் தென் ஆப்பிரிக்க தேசிய கீதம் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அரசாங்கம்1977 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி கெஜட்டின் பதிப்பின் ஒரு இணைப்பாக, நாட்டில் இரண்டு அதிகாரப்பூர்வ தேசிய கீதங்கள் இருக்கும் என்று அறிவித்தது. இந்தப் பாடல்கள் "God Save the Queen" என்ற பாடலாகவும், "God Defend New Zealand" என்ற வசனமாகவும் இருந்தன. அந்த தருணத்திலிருந்து இரண்டு தேசிய கீதங்களும் நாட்டின் அதிகாரப்பூர்வ கீதங்களாக ஒரே அந்தஸ்தைப் பெற்றுள்ளன. செப்டம்பர் 2022-இல், மன்னர் மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறிய பிறகு, புதிய மன்னரைப் பிரதிபலிக்கும் வகையில் “காட் சேவ் தி குயின்” என்ற சொற்றொடர் “காட் சேவ் தி கிங்” என மாற்றப்பட்டுள்ளது.

எங்குமுள்ள மொழிச் சிக்கல்களை இயன்றவாறு தவிர்க்கச் சில நாடுகள் இப்போதைக்கு இசையை மட்டுமே பேச விட முடிவு செய்துள்ளன. உலகெங்கிலும் உள்ள நான்கு நாடுகளின் கீதங்களுக்கு  (ஸ்பெயின், கொசாவோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, சான் மரினோ) அங்கீகரிக்கப்பட்ட பாடல் வரிகள் இல்லை.

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் 1999 ஆம் ஆண்டு ஒரு புதிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆனால் பாடல் வரிகள் எழுதப்பட்டு ஒப்புக் கொள்ளப்படும்வரை அது முதலில் வார்த்தைகள் இல்லாமல்தான் இருந்தது. இசைக்கு ‘இன்டர்மெக்கோ’ என்று பெயரிடப்பட்டது. ஆனால் கீதம் ‘ட்ரஜாவ்னா ஹிம்னா போஸ்னே ஐ ஹெர்சகோவின்’ (போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் தேசிய கீதம்) என்று அழைக்கப்படுகிறது. இக்கீதத்தில் நாட்டிலுள்ள எந்த இனப் பிரிவுகளின் மொழிச்சார்பையும் தவிர்க்கும் நோக்கில் மொழியை விடுத்து இசைக்கருவி மட்டுமே அளிக்கும் கீதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதும் நல்லிணக்க நோக்கம் கொண்டதெனலாம்.

சர்ச்சைக்குரியவற்றைத் தவிர்த்தல் என்ற வகையில் சில நாடுகள் வேதனையான, பிளவுபடுத்தும் வரலாறுகளை, நினைவுகளைத் தூண்டும் பாடல் வரிகள் அல்லது மெல்லிசைகளை அகற்றுகின்றன. ஸ்பெயின் கொடுங்கோல் மன்னரான பிராங்கோ சகாப்த பாடல் வரிகளை முற்றிலும் கைவிட்டது; சர்வாதிகாரி காலத்தில் 'மார்ச்சா கிரனாடெரா' என்ற பழைய கீதம் ‘மார்ச்சாரியல்’ ஆக மாற்றப்பட்டிருந்தது. தற்போது அது சொற்களற்ற இசையொலியாக மட்டும் உள்ளது.

அதுபோலவே கொசோவோ அரசாங்கம் நாட்டிலுள்ள ஒரு மொழி அல்லது இனக் குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை விரும்பாததால்- இன, மொழி நடுநிலை காட்டத்- தனது தேசிய கீதத்தை (‘’ஐரோப்பா’’)  2008 இல் பாடல் இல்லாத இசைக் கீதமாக ஏற்றுக் கொண்டது. சான்மரினோ அரசு, பல ஆண்டுகளாக தேசபக்தி நிகழ்வுகளில் ஒரு அதிகாரப்பூர்வமற்ற கீதமாக – ஒரு இராணுவ அணிவகுப்பு இசையைப் பயன்படுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வ பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் ஜியோசுயே கார்டுசி எழுதிய அதிகாரப்பூர்வமற்ற பாடல் வரிகள் அந்த இசையில் உள்ளன. தனது நடுநிலையான தன்மையை வெளிப்படுத்த இந்நாடு, 1894 முதல் கருவி கீதத்தையே வைத்துக் கொண்டிருக்கிறது.

வரலாற்று அடையாளத்தை மீட்டெடுத்தல் என்ற நோக்கில் சில நாடுகள் அடிப்படை விழுமியங்கள் அல்லது தேசியப் பெருமையை மீட்டெடுக்கப் பழைய கீதங்களுக்கு மீண்டும் திரும்புகின்றன. எடுத்துக்காட்டாக, 'எழுந்திரு, ஓ தோழர்களே' என்பது நைஜீரியா தேசிய கீதமாக மாறிக் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, மே 29, 2024இல் ஜனாதிபதி போலா டினுபு 'நைஜீரியா, நாங்கள் உன்னை வாழ்த்துகிறோம்' என்ற (1960) பாடலை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்டத்தில் 2024இல் கையெழுத்திட்டார். அதன்படி,  நைஜீரியா தனது பழைய1960 கீதத்தை மீண்டும் அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது. இந்தக் கீத மாற்றத்திற்கான முதன்மையான உந்துதல் தனது கடந்த காலத்துடன் நைஜீரியா கொண்டுள்ள உணர்வுப்பூர்வமான பிணைப்பாகும். முந்தைய கீதத்திற்குத் திரும்புவதன் மூலம், நைஜீரியா அதன் வரலாற்று அடையாளத்தின் ஒரு பகுதியைப் பெருமிதமாக ஒப்புக்கொள்கிறது.

இவ்வாறாக, வரலாறு முழுவதும் அரசியல் எழுச்சிகள், சுதந்திர இயக்கங்கள், சமூக மாற்றங்கள், பாலின சமத்துவம், பழங்குடிகளை உள்ளிணைத்தல் (Inclusive) போன்ற புதிய விழைவுகளை, யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நோக்கங்கள் முதலிய பல காரணங்களில் ஏதாவது ஒன்றோ பலவோ  நாடுகளின் தேசிய கீதங்களுக்கு மாற்று அல்லது இருக்கும் கீதங்களில் திருத்தம் (சொல் நீக்கம், சேர்த்தல், மாற்றியமைத்தல்) போன்ற செயல்பாடுகளைத் தூண்டியுள்ளன. ‘ஜன கண மன’ இந்திய தேசிய கீதமாக ஏற்கப்படும் முன்பும், ஏற்கப்பட்ட பின்னரும் சில தாக்குதல்களுக்கு உள்ளாகி 75 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் வரலாற்றைப் பிறகு பார்க்கலாம். அரசியல் புனிதமெனக் கருதப்படும் தேசிய கீதங்களும் திருத்தப்பட உரியவைதான் எனும் நிதர்சனத்தைத் தற்காலத்தில் உணர்கிறோம்.

[பி.கு.:உலக நாடுகளின் தேசிய கீதங்கள் குறித்த மிக விரிவான மேலதிகத் தகவல்களுக்கு: ‘உலகின் தேசிய கீதங்கள்’, எடிட். மார்ட்டின் ஷா & ஹென்றி கோல்மேன், பிட்மேன் பப்ளிஷிங் கார்ப்பரேஷன் லண்டன், நியூயார்க், டொராண்டோ 1960; ‘தேசிய கீதங்களின் கலைக்களஞ்சியம்’ எடிட். ஜிங்ஹாங், திஸ்கேர்க்ரோபிரஸ், இன்க். லான்ஹாம், மேரிலாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு 2003; ‘உலகின் தேசிய கீதங்கள்’, (பதினொன்றாவதுபதிப்பு) மைக்கேல் ஜேமிசன் பிரிஸ்டோ, வீடன் ஃபீல்ட் & நிக்கோல்சன், 2006 ஆல் திருத்தப்பட்டது].  

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Summary

Amendments, Changes, Reasons behind National anthems of many countries in the world

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com