முன்பெல்லாம் இலக்கிய இதழ்களில் தவறாமல் சில சிறுகதைகள் இடம்பெறுவது உண்டு. காத்திரமான சிறுகதைகளை எழுதும் கதைசொல்லிகளும் இருந்தனர். காலப்போக்கில் சிறுகதைகளுக்கும் பஞ்சம் வந்துவிட்டது. பல இலக்கிய இதழ்களிலும் கட்டுரைகளே பெரிதும் இடம்பெறலாயின. கட்டுரைகளிலும் பெரிதும் அரசியல் கட்டுரைகள் அதிகம் இடம்பெறுவதும் வழமையாயிற்று. வாசகர்களும் அன்றாடம் நிகழும் அரசியல் அக்கப்போர்களை மையமாக வைத்து எழுதப்படும் கட்டுரைகளையே விரும்பும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.
அரசியல் இல்லாமல் இலக்கியமா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஆனாலும் அரசியல் மட்டுமே இலக்கியம் ஆகுமா என்னும் கேள்வியும் எழத்தான் செய்கிறது. இந்தச்சூழலில்தான் அய்யனார் ஈடாடியின் சிறுகதைத் தொகுப்பான ‘மூதூர்க் காதை’ நூல் கிடைத்தது. அதனை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். காரணம், கதைகளின் கரு, களம், களமாடும் மனிதர்கள், புளங்கும் மொழி என்று அனைத்துமே மதுரை மண்ணின் ஒரு சிற்றூராகவே (அய்யனார் ஈடாடியின் சொந்த ஊரான தானத்தவம்) இருக்கிறது. அதனால்தான் ‘மூதூர்க்காதை’ என்று நூலுக்குத் தலைப்பும் இடப்பட்டிருக்கிறது.
இத்தொகுப்பில் பதினான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன. அத்தனைக் கதைகளும் சிற்றூர்க் கதைகள், கதைகள், வாசிப்பதற்கு எளிமையாகவும், சிக்கல் எதுவும் இன்றியும் ஆற்றொழுக்காக நகர்கின்றன, நகர்த்தப்படுகின்றன. சிறுகதை என்று சொல்லிவிட்டு, சிலர் நெடுங்கதையாக எழுதுவர். ஆனால், இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் மூன்று பக்கங்களில் முடிந்துவிடுகிறது. ஒன்றிரெண்டு கதைகள் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் வரையிலும் நீள்கிறது.
சிற்றூர் என்றால் வயல்கள், தோப்புகள், குளங்கள், கிணறுகள், ஆடுகள், மாடுகள், மீன்கள், வாத்துகள், பாம்புகள், ஊர்த்திருவிழாக்கள், அவைசார்ந்த நம்பிக்கைகளும் சிக்கல்களும், அப்பாவி மக்கள், ஏமாற்றுக்காரர்கள் உள்ளிட்ட அனைத்தும் இத்தொகுப்பில் உள்ள கதைகளில் இடம் பெற்றுள்ளன.
ஒன்றிரெண்டு கதைகளில் திருப்புமுனைகள் இருந்தாலும், மற்ற கதைகள் சிற்றூரையும், அதில் வாழும் மனிதர்களையும், அவர்களுக்கிடையிலான நட்பு, வெறுப்பு, ஏமாற்று, துரோகம் போன்றவற்றையும் பேசிச்செல்கின்றன. கதைகளை வாசிக்கும்போது, அந்தக் காட்சிகள் நம் கண்முன் அப்படியே தோன்றுகின்றன. அதுதான் கதைசொல்லியின் வெற்றியும் ஆகும். அதற்குக் கைகொடுத்திருப்பது சிற்றூர் வட்டார வழக்குச் சொற்கள். அய்யனார் ஈடாடிக்குக் கதை சொல்வதற்கான எளிமையான மொழிநடை வாய்த்திருக்கிறது.
‘நொண்டி வாத்து’ கதையில் ‘ராவுத்தக்குடும்பன்’, ‘எதிர்ப்பு’ கதையில் ‘பட்டாணிக்குடும்பன்’ என்னும் பெயர்கள் இடம்பெறுவது கொஞ்சம் புதுமையாகவும், புதிராகவும் உள்ளது. நான் முதன்முதலாக இப்படிப்பட்ட பெயர்களைக் கேள்விப்படுகிறேன். “ராவுத்தக்குடும்பன் கூரமேல கெடந்த ஒலக்கைய எடுத்துப் போட்ட போடுல பெரிய கருப்பன் கால் முறிஞ்சிபோச்சு”. நொண்டி வாத்தைத் திருடியதற்காக, முத்துக்கருப்பனையும் நொண்டியாக்கிவிட்டானோ அவனது அப்பன் ராவுத்தக்குடும்பன் என்றுகூட நம் மனம் பதைபதைக்கிறது. நொண்டி வாத்துத் திரும்பிவந்துவிட்டதை ஊர்மக்கள் முன்னிலையில் அமச்சியும், ஆலமரத்தானும் தரையில் விழுந்து மன்னிப்புக் கேட்பது அவர்களது நேர்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவர்கள் நினைத்திருந்தால் அதனை மறைத்திருக்கலாம். ஆனாலும் முத்துக்கருப்பனின் கால் முறிக்கப்பட்டது சரிசெய்யமுடியாதது அல்லவா? அது மலையக் குடும்பனின் சதி என்றாலும், உணர்ச்சிவசப்படுவதும், முடிவெடுப்பதும் சிற்றூர் மக்களின் இயல்பாக இருந்ததே அதற்குக் காரணம் எனலாம்.
தூண்டில் கதையில் கிட்டுமணி முனி அடித்து இறந்தான் என்பதுபோல கதை முடிகிறது. ‘எதிர்ப்பு’ கதையிலும் “எட்டே நாள்ல அண்ணங்குதிரைக்கு எரு அடுக்கிட்டேன்” என்று மீனாத்திக் கெழவிமேல ஆதமத்தா எறங்கி வாக்குக் கொடுப்பதுபோலவே, எட்டாம் நாள் பொய்வாக்குச் சொன்ன கருப்புச்சாமியாடி இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஊர்ப்புறங்களில் இன்றளவும் நிலவும் (மூட) நம்பிக்கைகளைக் கதைசொல்லி ஈடாடி சொல்லிச் செல்கிறார் என்றுதான் நம்பவேண்டியுள்ளது.
அதே ‘எதிர்ப்பு’ கதையைப் படித்த உடன் எங்கள் ஊர்களில் கோயில்களில் சாமியாடுபவர்கள் நினைவுக்கு வந்தார்கள். ஒரு சாமியாடி இறந்தால், அவரது பிள்ளைகளில் ஒருவர்மீதுதான் அந்தச்சாமி வரும். அது எப்படி என்றெல்லாம் கேள்வி கேட்கமுடியாது. காலம்காலமாக இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. சாமியாடுதலும் சொத்துக்கு வாரிசுபோலத்தான்!
அந்தக் கதையில் சின்னப்பையன் ஈடாடிமேல ஆகமத்தா சாமி வந்த உடன் “பொம்பள சாமி ஆம்பளமேல எப்படி வரும்?” என்று கேலி செய்கின்றனர் ஊரார். ஆனாலும் ஆம்பள மேல பொம்பள சாமி வருவதும், பொம்பளமேல ஆம்பள சாமி வாரதும் இன்றளவும் நடக்கத்தான் செய்கிறது. அவர்கள் வாரிசுகளாகவே இருக்கின்றனர் என்பதுதான் பார்க்கவேண்டிய ஒன்றாக உள்ளது.
தோப்புக்காவல் கதையில் , இரவில் இளநீர்கள் களவாடப்படுவது மையப்படுத்தப்படுகிறது. அது அன்று அத்தனை ஊர்களிலும் நிகழ்ந்தவைதான். இளநீர்க்களவு என்பது இளைஞர்களின் தாகம் தீர்ப்பதாகவும், இளம் வயது சாகசமாகவுமே இருந்தது. ஆனால் முற்றிய தேங்காய்களைத் திருடுபவர்கள், பணம் ஈட்டும் கொள்ளைக்காரர்களே.
விரும்புகிற ஆணும் பெண்னும் சேர்ந்திருப்பதற்குப் பெரியளவில் எதிர்ப்புகள் இருந்ததில்லை என்பதைத் ‘தெம்பு’ என்னும் கதை வெளிப்படுத்துகிறது. அச்சிறுகதையில் , தான் கூடிய வெள்ளையம்மாள் என்ற பெண்ணைத் தாலிகட்டி மனைவி ஆக்காமல் ஏமாற்றுகிறான் வெளங்குடியான். வேறு ஒரு பெண்ணையும் மனைவியாக்கிக் கொள்கிறான். வெள்ளையம்மாள் இரட்டைப் பெண் பிள்ளைகளைப் பெறுகிறாள். ‘ஆண் குழந்தைகள் என்றால் மனைவியாக்கியிருப்பேன்’ என்று வெளங்குடியான் சொல்வதில் ஆணாதிக்கம் வெளிப்படுகிறது. அந்த இரண்டுப் பெண் குழந்தைகளையும் வளர்த்து, ஆளாக்கி, இருவரையுமே டீச்சராக்கிவிட்டாள் வெள்ளையம்மாள். பிள்ளை கொடுப்பதற்குப் பெரிய அளவில் ‘தெம்பு’ தேவை இல்லை. பிறந்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதே உண்மையான ‘தெம்பு’ ஆகும். அந்தவிதத்தில் ஆண்களை விடவும், பெண்களே தெம்புடையவர்கள் என்பதை ‘தெம்பு’ சிறுகதைச் சொல்லாமல் சொல்கிறது.
அதே கதையில், வெளங்குடியனால் கைவிடப்பட்ட பிறகு அரளிப்பிஞ்சுகளை அரைத்துத் தற்கொலை செய்துகொள்ள முற்படும்போது பாலுக்குக் குழந்தை அழுகிறது. உடனடியாக அரளிப்பிஞ்சை தூர எறிந்துவிட்டு வந்துப் பிள்ளைக்குப் பசி அமர்த்துகிறாள், வெள்ளையம்மாள் . அதுதான் தாய்மை. இது என்றுமே ஆண்களுக்கு வாய்ப்பதில்லை. கதையின் போக்கை முடிவு செய்யும் இடமும் அதுவாகவே உள்ளது.
‘வண்டித்தடம்’ சிறுகதையில், "ஏலே செல்லையா மருளாயிகூட பொளங்குராயாம்ல. அவ புருஷன் இல்லாதவடா, ஒண்ணுக்குள்ள ஒண்னு வேற” என்று பெரியவர் வேலு கேட்க," அழிஞ்ச கண்மாய்ல யாரு மீன்பிடித்தால் என்ன?" என்று மறுமொழி சொல்கிறான், செல்லையா. இதனைப் படித்த உடன் எங்கள் ஊர்களில் புளங்கிய சொலவடைகள் எனது நினைவுக்கு வந்தன. “மண் தின்பதை மனிதன் தின்றால் என்ன?” என்றும் “வைக்கப் படப்பா, பிடுங்கப் பிடுங்க கொறஞ்சு போறதுக்கு?” என்றும் கள்ள உறவு வைத்திருக்கும் ஆண்கள் கேட்பது உண்டு. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வடிவம் மாறாமல் அனைத்து ஊர்களிலும் இருந்திருக்கிறது (இப்போதும்கூட இருக்கத்தான் செய்கிறது).
ஆதாளை, செந்தட்டி, வெளிக்கு இருத்தல், தண்ணீர் விலகல், வாமடை போன்று கதைகளில் இடம்பெறும் சொற்கள் நெல்லையிலும் முன்பு வழக்குச்சொற்களாக இருந்தன. மதுரையும், நெல்லையும் பாண்டி நாடுதானே! அத்தனைக் கதைகளிலும் இடம்பெறும் நிகழ்வுகள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அநேகமாக அனைத்துச் சிற்றூர்களிலும் வழக்கில் இருந்தவைதான்.
இச்சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகளில் பேய் பிடித்தல், பிசாசு விரட்டல், முனி, கோயில் விழா இடம்பெறுகின்றன. இன்றைய காலத்தில், சிற்றூர், பேரூர், நகரம் என்றெல்லாம் வேறுபாடுகள் இல்லை. சொல்லப்போனால் உலகமே சுருங்கி உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வேளாண்மை மாறிவிட்டது. மக்களின் வாழ்வுமுறையும் மாறிவிட்டது. என்றாலும் கடவுள் நம்பிக்கை, அதுசார்ந்த சடங்குகள் இன்னமும் உயிர்ப்புடன்தான் இருந்துவருகின்றன என்பதையும் சொல்லவேண்டியுள்ளது. அந்த வகையில் இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் நம்மை ஈர்ப்பதுடன், அவரவர் வாழ்ந்த பழங்காலத்திற்கும் அழைத்துச் செல்கின்றன.
இந்நூலின் ‘என்னுரையிலிருந்து’ ஒரு தகவல் நமக்குக் கிட்டுகிறது. அறுவடைக் காலத்தில், கதிர் அறுத்து, அடித்துத் தூற்றி அளக்கும் முதல் மரக்கால் ‘ஆதிகிழவிக்கு’ என்று சொல்கிறார், அய்யனார் ஈடாடி. தானமாகக் கிடைக்கும் நெல்மணிகளை அரிசியாக்கி ஒரே பொங்கலாக ஊர்கூடி மகிழும் ஊர்ப்பொங்கல் இன்றும் உயிர்ப்போடிருக்கிறது என்று பதிவு செய்கிறார். இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் ஊர்கூடி ஒரே பொங்கல் வைக்கும் பழக்கம் உண்மையிலேயே நம்மை வியக்கவைக்கிறது.
வா.மு.கோமு, மு.முருகேஷ் ‘மூதூர்க்காதை’ நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளனர். சோ. தர்மன் அணிந்துரை வழங்கியுள்ளார். நூல் ஆசிரியர் அய்யனார் ஈடாடி பற்றியும் சொல்ல வேண்டும். பொதுவாக சிற்றூர்களில், எளிய குடும்பங்களில் பிறந்து, படித்துப் பட்டம் பெற்று, பணிக்காகப் பெருநகரங்களுக்குப் புலம்பெயரும் இளைஞர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை மறந்து, பெருநகரங்களின் புதிய பண்பாட்டிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுகிறார்கள். இந்தச்சூழலில், பி.டெக். படித்திருந்தபோதும், தொழில்முனைவராக மாறியபோதும் நூலாசிரியர் அய்யனார் ஈடாடி, தான் பிறந்துவளர்ந்த ‘தானத்தவம்’ ஊரை மறக்காமல் அவரது இளமைக்காலத்தில் சுற்றித் திரிந்த மண்ணை ஈரம் காயாமல் இச்சிறுகதைகள் வழியாக அப்படியே உயிர்ப்புடன் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
‘மூதூர்க்காதை’ நூலில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளையும் பத்மா அமர்நாத் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, Madurai Stories (A short stories of Agrarian Literature) என்னும் தலைப்பில் ‘யாப்பு ‘ வெளியீடாக வந்துள்ளது.
மூதூர்க்காதை – சிறுகதைகள் - அய்யனார் ஈடாடி, விலை ரூ. 90, வெளியீடு யாப்பு, சென்னை - 600 076, தொலைபேசி: 9080514506
Madurai Stories – ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - பத்மா அமர்நாத், விலை ரூ. 100.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.