உளவியலின் குரோமோசோம்... கிரேக்க இயக்குநர் யோர்கோஸ் லாந்திமோஸ்!

வித்தியாசமான படங்களை உருவாக்கியுள்ள கிரேக்க இயக்குநர் யோர்கோஸ் லாந்திமோஸ் குறித்து...
Yorgos Lanthimos Film posters.
யோர்கோஸ் லாந்திமோஸ் படங்களின் போஸ்டர்கள் ஒருங்கிணைப்பு. படங்கள்: இன்ஸ்டா, ஐம்டிபி.
Published on
Updated on
3 min read

ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்... என்ற புளித்துப்போன பெரும்பாலான திரைப்படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதில் உலாவரும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்தின் கோட்பாடுகளை யோர்கோஸ் லாந்திமோஸ் (Yorgos Lanthimos) விமர்சிக்கிறார்.

குறிப்பாக, மனிதர்களின் உளவியலை எல்லா இடங்களிலும் சோதித்துப் பார்க்கிறார்.

கலைப் படைப்பு என்ற பெயரில் ஆட்டோவை ஸ்டார்ட் செய்வதை ஐந்து நிமிடங்கள் காட்டுவது, டீ கிளாசில் ஈ பறந்துவந்து உட்காருவதை இரண்டு நிமிடம் காட்டுவது என்று எந்த மோசடியும் இல்லாமல், கலைநேர்த்தி, சுவாரசியம் குறையாமல் எடுத்து, திரைப்பட ரசிகர்கள் மத்தியில் தனது அழியாத கால்தடத்தை யோர்கோஸ் லாந்திமோஸ் பதிவு செய்துள்ளார்.

கிரேக்க நாட்டின் ஏதென்ஸில் பிறந்த இவர், தனது நண்பர்களுக்கு மட்டுமே பிடித்தால் போதுமென்று படத்தை இயக்கத் தொடங்கினார். பின்னர், பிரிட்டனுக்குக் குடியேறி உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.

இதுவரைக்கும் 10 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் முக்கியமான 6 திரைப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

1. Dogtooth (2009)

இந்தப் படத்தின் மூலம்தான் உலக திரைப்பட ரசிகர்களைத் தனது வித்தியாசமான கதைக் கருவினால் திக்குமுக்காட வைத்தார் லாந்திமோஸ். அப்படி என்ன செய்தார்?

ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் தனது குழந்தைகளை (இரண்டு பெண்கள், ஒரு ஆண்) வெளி உலகின் பழக்கமே இல்லாமலே வளர்த்து வருகின்றனர்.

அவர்களது உலகமே வேறு. அந்த உலகத்தில் புஸ்ஸி என்றால் மிகப் பெரிய விளக்கு, ஜோம்பிஸ் என்றால் மிகச் சிறிய மஞ்சள் நிறப் பூ.

இப்படியாக அந்த உலகத்தினை ஒரு குட்டி ஏதேன் தோட்டமாகவே கட்டமைத்து வருகிறார்கள்.

பதின் பருவத்தை அடைந்த அவர்களது குழந்தைகளின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய தனது தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் காவலாளியை வாரத்திற்கு / மாதத்திற்கு ஓரிரு முறை அழைத்து வருகிறார் தந்தை.

அந்தப் பெண்ணின் வருகைக்குப் பிறகு அவர்களது நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களில் தொடங்கி, அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்ற இடத்தில் படம் முடிகிறது.

தமிழில் பங்காளி எனும் படத்தில் சத்யராஜைத் தனியாக அடைத்து வளர்த்து வருவார்களே அதன் மேம்பட்ட, கலப்படமே இல்லாத வடிவம்தான் இந்தப் படம்.

இந்தப் படத்தைக் குடும்ப ஆதிக்கம், ஆணாதிக்கம் என்று மட்டுமே சுருக்க முடியாது. அதையும் தாண்டி இந்தப் படம் பலவிதமான அரசியலைப் பேசுகிறது.

கண் உள்ளவர்களுக்கு கடலில் தனிமை இல்லை என்பது போல இந்தப் படம் பலருக்கும் பல விதமான கருத்துகளைக் கொடுக்கும்.

2. Alps (2011)

நால்வர் சேர்ந்த ஒரு குழுவினர் ஒரு சேவையை அளித்து வருகிறார்கள். அது என்னவென்றால், யாராவது இறந்துவிட்டால் அவர்களின் சுற்றத்தார், அந்தச் சோகத்தில் இருந்து வெளிவரும் வரை, இறந்தவர் கதாபாத்திரத்தில் நடிப்பது.

கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? இதில் ஒரு பெண் செவிலியராக இருக்கிறார்.‌ கூடுதலாக இந்த வேலையைச் செய்கிறார்.

ஓர் இளம் டென்னிஸ் வீராங்கனை விபத்தில் இறக்க, அவரது கதாபாத்திரத்தில் நடிக்க இந்தச் செவிலியர் விரும்புகிறாள். இதெல்லாம் புரியும்போதே பாதி படம் கடந்துவிட்டிருக்கும்.

இந்தப் படம் மனிதர்களின் உளவியல் குறித்து நேரடியாகவே விமர்சிக்கிறது.

இந்தப் படத்தில் ஒரு காட்சி - ஓர் ஆண் தனது காதலியுடன் படுக்கையில் இருக்கும்போது, "சொர்க்கம் போல இருக்கிறது" என்று அந்தப் பெண் உச்சரிக்க வேண்டும். இந்த இடத்தில் நடிக்கும்போது நாயகிக்கு சிரிப்பு வரும்.

இதுபோல பல கதாபாத்திரங்கள் உடன் வரும் நிகழ்வுகள் நமக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறுவதில்லை.

நினைவுகள் ஒரு சிறைதான் அல்லவா?!

3. Lobster (2015)

பல ஆண்டுகளாகத் தனியாக இருக்கும் ஆண்கள், பெண்கள் விலங்குகளாக மாற்றம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்குக் கடைசியாக 45 நாள்கள் அளித்து தங்களது இணையைக் கண்டறிய வாய்ப்பு வழங்கப்படுகிறது, அதிலும் தவறிவிட்டால் விலங்காக மாற்றப்படுவார்கள் என்பது அந்த நாட்டின் சட்டம்!

இதுவும் கற்பனையான உலகம்தான். 40 வயதான நாயகன் அந்த 45 நாள்களுக்கான விடுதியில் அடைக்கப்படுகிறார். அவர் மனிதனாகவே வாழ்ந்தாரா இல்லை, தனக்குப் பிடித்த லாப்ஸ்டர் மிருகமாக மாற்றப்பட்டாரா என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் அரசாங்கம், சமூகம், காதல், உறவுகள் குறித்து தனது அங்கதத்தை விமர்சனமாக வைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்த மாதிரி ஓர் உலகத்தை மிகுந்த லாஜிக்குடன் உருவாக்குவது மிகவும் கடினம்.

இந்தப் படம் எந்த ஒரு படைப்பாளிக்கும் "நாம் என்ன கழற்றிக் கொண்டிருக்கிறோம்..?" என்ற மிகுந்த பொறாமையையும் குற்ற உணர்வையும் தரும் அளவுக்குச் சிறப்பாக இருக்கும்.

4. The Killing of a Sacred Deer (2017)

கிரேக்க மன்னன் ஒருவன் தவறுதலாக புனிதமான ஒரு மானைக் கொன்றதால், போரின்போது தனது மகளைப் பலிகொடுக்க வேண்டி இருக்கிறது. இது இபிஜீனியா என்ற புராணக் கதையில் வருகிறது.

இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் தி கில்லிங் ஆஃப் எ சேக்ரட் டீர் என்ற இந்தப் படம்.

இந்தப் படத்தில் ஒரு மருத்துவர் செய்த தவறுக்கு இறந்தவரின் மகன் பழிவாங்குவதுதான் கதை.

மிகவும் சாதாரணமான ஒரு பழிவாங்கல் கதையில் ஆன்மிகத்தை நுழைத்து, புராணத்துடன் ஒப்பிட்டு காஸ்மிக் பனிஷ்மென்ட் - கடவுளின் தண்டனை என்பதை மிகவும் நம்பும்படியாக எடுத்திருப்பார். அறிவியலின் போதாக்குறையைச் சரியாகப் பயன்படுத்தி இருப்பார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கும். குறிப்பாக, பின்னணி இசைக்கு எவ்வளவு விருதுகள் வேண்டுமானாலும் தரலாம். சில கிளாசிக் இசைத் துண்டுகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

5. Poor Things (2023)

கருவுற்றிருக்கும் பெண் ஒருத்தி லண்டன் பாலத்தில் இருந்து குதிக்கிறாள். ஏன் குதித்தாள் என்று படத்தின் பிற்பாதியில் தெரியவரும். அவளை மீட்ட ஒரு மருத்துவர், அவளது மூளையை எடுத்துவிட்டுக் கருவின் மூளையை மாற்றி வைக்கிறார்.

இந்த வளர்ந்த பெண் உடலில் குழந்தையின் மூளையின் வளர்ச்சியை உற்று நோக்குகிறார்கள் (மீண்டும் வியக்க வைக்கும் கதைக் கரு இல்லையா! )

பெண்ணியம், மனித வளர்ச்சி, பாலியல் சுதந்திரம் என்று படம் பல வகைகளில் விரிவடைகிறது.

Hulk - ஹல்க் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான மார்க் ரூஃபாலோ இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓரிடத்தில் இவர் உடைந்து அழுவது ஒட்டுமொத்த சராசரி ஆண்களின் அழுகையாகவே இருக்கிறது.

இயற்கை அளித்த ஆண்களின் பலவீனம், பெண்களின் பலம் குறித்து வரும் இடங்கள் எல்லாம் கவனிக்கத் தக்கவை.

இந்தப் படத்தில் குழந்தைத்தனமான நடிப்பிற்காக நடிகை எம்மா ஸ்டோனுக்கு பல விருதுகள் கிடைத்தன.‌

6. Kinds of kindness (2024)

மூன்று வித்தியாசமான குறுங்கதைகளில் ஒரே நடிகர்கள், நடிகைகள் நடித்திருப்பார்கள். இந்த மூன்று கதைகளிலும் ஒரு ஒரே கதாபாத்திரம் மட்டுமே பொதுவாக அமைந்திருக்கும்.

சில படங்களை ஒருமுறை பார்த்தால் புரியாது. மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று இருக்கும் அல்லவா? அந்தமாதிரி வகை.

மூன்று கதைகளிலும் பொதுவான கருத்துகளாக இருப்பது காதல், தியாகம் , அதிகாரம்.

தங்களது காதலை நிரூபிக்க மனிதர்கள் எந்த எல்லைக்குச் செல்கிறார்கள் என்பது பற்றியது.

ஏன் இவ்வளவு குழப்பமாக எடுக்கிறீர்கள் என்று இயக்குநரை கேட்டபோது, " திரைப்படம் என்பது நகரும் புகைப்படங்கள். அதில் பலருக்கும் பலவிதமான கருத்துகள் தோன்றும். அதைக் குறுக்கி இதுதான் என்று ஏன் மட்டுப்படுத்த வேண்டும். கலையின் நோக்கமே அது பலருக்கும் பலவிதமான கருத்து்களை உண்டாக்கும் என்பதே " என்று பதில் அளித்தார்.

இவரது படங்களில் வருவது எல்லாம் ஒரு பிரச்னை குறித்து மட்டுமே அல்ல. அது ஒரு உவமை, உருவகம் போன்றது.

பலவற்றைக் குறிக்கும் ஒரு சிறிய குரோமோசோம். அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.‌

மனித மனங்களின் குறிப்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன வளர்ச்சியை ஆராயும் ஒரு குரோமோசோம்தான் இவரது படங்களின் அடிநாதமாக இருக்கிறது.

சலிப்பைத் தரும் வழக்கமான படங்களுக்கு மாற்றாக, ஏதேனும் புதியதாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்கள் இவரது படங்களை முயற்சித்துப் பார்க்கலாம்!

[செப். 23 - இயக்குநர் யார்கோஸ் லாந்திமோஸ் பிறந்த நாள்]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com